நேரு ஒரு புகைப்பட நூல்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

“இந்தியா சுதந்திரம் கிடைக்கும்போது பஞ்சப்பராரி நாடாக இருந்தது நண்பர்களே. 1943ல் தென்னகத்தில் வந்த பஞ்சத்தில் பல்லாயிரம்பேர் செத்தார்கள். மீண்டும் 1950களில் வடக்கே வந்த பஞ்சத்தில் பல்லாயிரம்பேர் தெருவுக்கு வந்தார்கள். ஆனால் அப்போது நேரு தலைமை தாங்கிய அரசாங்கம் இருந்தது. உலகம் முழுக்க கையேந்தி பிச்சை எடுத்து நம் தேசத்து மக்களைக் காப்பாற்றினார் நேரு.

நம் நாடு எப்படி முன்னேறியது? முதல் இருபது வருடம் உலகம் முழுக்க சென்று சமாதானக்கொடியை பறக்கவிட்டுக்கொண்டே இருந்தார் நேரு. கையிருப்பின் எல்லா செல்வத்தையும் செலவழித்து அணைகள் கட்டினார். இந்திய விளைநிலத்தின் அளவை நாற்பது சதவீதம் பெருக்கினார். அதன் விளைவாக பஞ்சம் அழிந்தது. இந்தியா உணவை உபரியாக உற்பத்தி செய்தது. பொதுத்துறையை நிறுவி மெல்ல மெல்ல இந்திய தொழில்களை உருவாக்கி வளர்த்தார்.”

மூதாதையர் குரல் எனும் கட்டுரையில் நேருவைப் பற்றி நீங்கள் நெகிழ்ந்து குறிப்பிடும் இந்த  மனச்சித்திரம் என்றுமே எங்கள் நினைவெஞ்சுவது. பஞ்சத்தில் பலியாகிக் கொண்டிருந்த இந்திய தேசத்தை மீட்பதற்காக, உலகின் பிற தேசங்களிடம் கையேந்திக் கையேந்திக் காப்பாற்றியவர் நேரு. ‘என் தேசத்தைக் காப்பாற்றுங்கள்’ என அவர் எழுதிய கடிதங்களை சில நாடுகளின் அருங்காட்சியகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மதுரையில் நிகழ்ந்த ‘தன்மீட்சி’ சந்திப்பில் நேரு குறித்து பேசுகையில் நீங்கள் கண்கலங்குவதைக் கண்டிருக்கிறோம்.

நேரு என்கிற தலைமைத்துவ மனிதரைக் குறித்து நாம் அறியநேர்கிற ஒவ்வொரு மெய்த்தகவலும் வரலாற்று ரீதியாக அவருடைய பெரும்பங்களிப்பு எத்தகையது என்பதைத் தெளிவாக்குகிறது. இந்தியா என்கிற தேசத்தைக் கட்டமைக்கையில், காந்தியச் சித்தாந்தத்தின் ஒருசிலக் கூறுகளை செயல்வடிவில் நடைமுறைப்படுத்தக் கூட அவர் எதிர்கொண்ட நிர்வாகத்தடைகள் ஏராளம். இறுதிவரை தனது ஆசிரியராக காந்தியை ஏந்தி, ஒருங்கிணைந்த ஒன்றியங்களின் நிலமாக இத்தேசத்தை கட்டியெழுப்பக் காரணமாகயிருந்த ஆளுமைகளுள் முதன்மையானவர் நேரு.

நேருவின் முழுமையான சுயசரிதப் புத்தகம் அண்மையில் ஆங்கில மொழியில் வெளியாகியுள்ளது. திரு. கோபண்ணா அவர்கள் இந்நூலைத் தொகுத்து பிரசுரித்துள்ளார். நேருவுடைய வரலாற்று வாழ்வின் ஒப்பற்ற பல தருணங்கள் கருப்பு-வெள்ளை ஒளிப்படங்களாக இந்நூலில் அச்சிடப்பட்டுள்ளன. நேருவின் வாழ்வு எத்தகைய படிநிலைகளால் கட்டமைந்தது என்ற உளச்சித்திரத்தை இப்படங்கள் நமக்களிக்கின்றன.

உண்மையில் மிகப்பெரும் உழைப்பு இது. மிக அற்புதமான வரலாற்று ஆவணத்தை நவ-இந்தியா பதிப்பகம் மிகத்தேர்ந்த பைண்டிங் தரத்தில் அச்சாக்கியுள்ளனர். அவ்வகையில், இந்நூலை சர்வதேச தரத்திலான உருவாக்கம் எனத் தயக்கமின்றிச் சொல்லலாம். ரூ 3000 மதிப்புள்ள இந்நூலை ரூ 2000க்கு விற்பனை செய்கிறார்கள்.

பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், நூலகங்கள் என நம்முடைய புத்தகத் தொகுப்புகளில் நிச்சயம் இந்த நூலும் இடங்கொள்வது அவசியமென மனதிற்குப்படுகிறது. ஓர் ஜனநாயக தேசமாக இந்தியா எவ்வாறு தன்னை நிலைநிறுத்திக் கொண்டது என்பதை நேருவின் சுயசரிதம் நமக்குத் தெளிவுற எடுத்துரைக்கிறது. பெருமுழைப்பும் அர்ப்பணிப்பும் கொண்டு இப்புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை புத்தகத்தைக் கையேந்தும் ஒவ்வொருவராலும் உணர முடியும். நிறைய மனங்களுக்குச் சென்றடைய வேண்டிய சலுகை விலையிலும் தருகிறார்கள்.

இப்புத்தகத்தின் ஒரு பிரதியை உங்களுக்கும் அனுப்பி வைத்திருக்கிறோம். உங்கள் தளத்தில் இப்புத்தகம் குறித்த தகவல் வெளியாகையில் நிச்சயம் அது பல வாசக மனங்களுக்கு உதவக்கூடும். ஆகவே, வாய்ப்புள்ள நண்பர்கள் இந்நூலை வாங்கிக்கொள்ள வேண்டுகிறோம். நேருவைப் பற்றி அறிவதினூடாக இத்தேசத்தின் வரலாறு குறித்து முழுமையான புரிதலை நாம் ஓரளவு உள்வாங்கிக் கொள்ள இயலும். நேரு கண்ட கனவுகள் அனைத்தும் பெருங்கனவுகள். செய்துமுடித்த செயல்கள் அனைத்தும் பெருஞ்செயல்கள். இப்புத்தகம் அந்த வரலாற்றுத்தடத்தை வெளிச்சப்படுத்தும் ஓர் அச்சு ஆவணம்.

நன்றிகளுடன்,

சிவராஜ்

குக்கூ காட்டுப்பள்ளி

முந்தைய கட்டுரைபெண்கள்,காதல்,கற்பனைகள்- கடிதம்
அடுத்த கட்டுரைபொன்முகக் கிண்கிணி ஆர்த்தல்- தாமரைக் கண்ணன்