உரைத்தல்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் ஒரு ஆரம்ப நிலை வாசகன்.இது உங்களுக்கு என்னுடைய முதல் கடிதம்.

உங்களுடைய மேடைப்பேச்சாளனாவது (https://www.jeyamohan.in/164036/) பதிவை வாசித்தேன். அதைப் படிக்கும்போது,  நான் சமீபத்தில் படித்த  Tim Urban என்ற பதிவர் (ப்ளாகர்) உடைய மேடைப்பேச்சு பற்றிய பதிவு நினைவுக்கு வந்தது. Tim Urban வுடைய  “Inside the mind of a master procrastinator” TED கருத்தரங்க உரை மிகவும் பிரசித்தி பெற்றது. அதற்கு தயாரனதைப் பற்றிய அவருடைய பதிவு இது – Doing a TED Talk: The Full Story. இதை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கக்கூடும். எனக்கு இது நினைவுக்கு வந்ததால் உங்களுடன் பகிர்ந்து கொள்ள தோன்றியது.

இதில் பல்வேறு விதமாக உரைக்குத் தயாரவதைப் பற்றியும், அவற்றின் சாதக பாதகங்களையும் Tim அவருக்குரிய நகைச்சுவையுடனும் படங்களுடனும் விளக்கியிருப்பார்.

இந்தப் பதிவு, உங்களின் கட்டுரை பொன்றவற்றை வாசிக்கும்போது மேடைப்பேச்சுக்கு முன்தயாரிப்பு (preparation) எவ்வளவு முக்கியம் என்பது புரிகிறது. உங்களது உரைகள் மிகவம் கச்சிதமானவை மற்றும் தெளிவானவை. இன்று பலர் எந்தவித தாயரிப்பும் இல்லாமல் மேடைகளில் பேசுகிறார்கள். அது பார்வையாளர்களை அவமதிப்பதாக இருக்கிறது.

மேடை உரை என்று மட்டும் அல்ல, எந்தவொரு செயலையும் அக்கறையுடன் கூடிய தயாரிப்புடன் (Professional ஆக) எப்படிச் செய்வது என்பதை உங்களின் பதிவுகளில் இருந்து கற்றுக் கொள்ள முடிகிறது. மிக்க நன்றி !

*

என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள,

நான் சென்னையில் மென்பொருள் துறையில் 17 வருடங்களாக பணிபுரிகிறேன். பிறந்து வளர்ந்தது திருநெல்வேலி. திருநெல்வேலி அரசினர் பொறியியற் கல்லூரியில் 2004 ம் ஆண்டு B.E (Electronics and Communication) முடித்தேன்.

உங்களுடைய கன்னி நிலம், உலோகம், ஏழாம் உலகம் நாவல்கள், அறம் சிறுகதைத் தொகுப்பு, தன்மீட்சி போன்ற புத்தகங்களை படித்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்தவை. விஷ்ணுபுரம் நாவலையும் முக்கால் வாசி படித்தேன். அதை முழுமையாக உள்வாங்கும் அளவுக்கு எனக்கு இன்னும் இலக்கிய / வாசிப்பு பயிற்சி இல்லை.

சிறு வயதிலிருந்தே நிறைய தமிழ் புத்தகம் வாசிக்கும் பழக்கும் இருந்தாலும் (12 வது வரை தமிழ் மீடியம்), தீவிர இலக்கிய வாசிப்புக்கு நான் மிகவும் புதியவன். சுஜாதா கதைகளை பதின்பருவத்தில் வாசித்திருக்கிறேன். ஆனால், முப்பது வயதுக்குப் பிறகுதான் பாலகுமாரன் கதைகளை வாசித்தேன் (தற்போது வயது 38).  பிறகு, சமீப ஆண்டுகளில் (2 அல்லது 3 ஆண்டு இருக்கலாம்), உங்களுடைய சில நாவல்கள், பா. ராகவன், தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி,  அசோகமித்திரன் ஆகியோரின் சில படைப்புகளை வாசித்திருக்கிறேன். இன்னும் நிறைய தொடர்ந்து வாசித்த பிறகு விஷ்ணுபுரம், வெண்முரசு போன்றவற்றை வாசிக்க ஆவலாக இருக்கிறேன்.

உங்களுடைய தளத்தில் வெளியாகும் உங்களுடைய கட்டுரைகளையும், அதைத் தொடர்ந்த விவாதங்களையும் தொடர்ந்து வாசிக்கிறேன். எந்த ஒரு விஷயத்தையும் பல்வேறு கோணங்களில் இருந்து விரிவாக அணூகி சிந்த்திக்க கற்றுத்தருபவையாக அவை அமைந்திருக்கின்றன. மீண்டும் ஒருமுறை – மிக்க நன்றி !

குறிப்பு: தமிழில் அதிகம் தட்டச்சு செய்யும் வாய்ப்பு இல்லாததால், தவறுகள் இருக்காலாம். மன்னிக்கவும்.

உங்கள்

சதீஷ்

அன்புள்ள சதீஷ்,

ஓர் உரை சிறப்பாக அமைய சிறந்த வழி அந்த உரையை பலமுறை திரும்பத்திரும்ப ஆற்றுவதுதான். பல பேச்சாளர்களின் முறை அதுவே. இங்கல்ல, உலகம் முழுக்க.

நண்பர் கே.பி.வினோத் ஒரு நிகழ்வைச் சொன்னார். விலயன்னூர் ராமச்சந்திரனின் ஓர் உரைக்கு அவர் சென்றிருந்தார். விலயன்னூர் ராமச்சந்திரன் பார்வையாளர்களை நோக்கி சில புதிர்களை போட்டார். உடனுக்குடன் கே.பி.வினோத் பதில் சொன்னார். ராமச்சந்திரன் திரும்பி “நீ என் பழைய உரைகளை கேட்டிருக்கிறாயா?” என்றார். “ஆமாம்” என்றார் வினோத். “அதே உரைதான் இதுவும்” என்று விலயன்னூர் ராமச்சந்திரன் சிரித்தார். அமெரிக்காவில் நிபுணர்கள் உரைவழியாகவே அதிகம் பொருளீட்டுகிறார்கள். ஓர் உரை எப்படியும் இருநூறுமுறை மேடையேறிவிடும். மேடைக்கொரு உரை சாத்தியமும் அல்ல.

திரும்பத்திரும்ப பேசும்போது உரையின் அமைப்பு, சொற்றொடர்கள் எல்லாமே அமைந்துவிடுகின்றன. சரளமாக ஒலிக்கின்றன. நாமே சிலமுறை பதிவுசெய்தவற்றைக் கேட்டு நம் குரலை, பாவனைகளை மேம்படுத்திக் கொள்ள முடிகிறது. வணிகச்சொற்பொழிவுகளில் இது இன்றியமையாததும்கூட. எல்லா நல்ல வெளிப்பாடுகளும் எதிர்வினைகள் வழியாக மேம்படுத்திக் கொள்ளப்படுபவைதான். பலபடிகளாக தொடர்ந்து செம்மையாக்கப்பட்டவையே மிகச்சிறந்த தொழில்முறை உரைகள்.

தொழில்முறை உரைகளின் சவால் என்னவென்றால் ‘கவனிக்கவைக்கும் பொறுப்பு’ ‘புரிந்துகொள்ளவைக்கும் பொறுப்பு’ இரண்டையும் பேச்சாளனே ஏற்றுக்கொள்கிறான். மறுபக்கம் இருப்பது பெரும்பாலும் ’அக்கறை அற்ற’ ’பயிற்சி அற்ற’ கேட்பவர் தரப்பு. பலவகையான மக்கள் அவர்கள். அவர்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களை முழுக்க கேட்கவைத்து, அவர்களின் நினைவிலும் நீடிக்கவேண்டும். அது சாதாரண வேலை அல்ல.

மெல்லமெல்ல நம் உலகத்தில் உரைகளுக்கு மிகமிக முக்கியமான இடம் உருவாகிவிட்டிருக்கிறது. இன்று தொழில், வணிகம், நிர்வாகம் எல்லாவற்றிலும் உரையாற்றும் திறன் அவசியமானது. கூரிய, செறிவான, சுவாரசியமான உரைகள் ஒருவரின் வெற்றியை தீர்மானிக்கின்றன. அதற்கு முறையான பயிற்சி இன்றியமையாதது.

ஆனால், சிந்தனை சார்ந்த உரைகளில் அத்தகைய பயிற்சியின் பயன் என்ன என்பதைப் பற்றி எனக்கு ஐயமாகவே இருக்கிறது. ஏனென்றால் எந்த ஒரு வெளிப்பாட்டு முறையும் பழகும்போது வெளிப்படும் விஷயத்தை தீர்மானிக்கும் ஆற்றல் பெறுகிறது. எழுத்திலும் அப்படித்தான். ஒரே வகையான சிறுகதை, கவிதை வடிவை எழுதுபவர்களின் சிந்தனை காலப்போக்கில் அதற்கேற்ப கட்டமைகிறது. ஆகவேதான் நான் என் எழுத்து வடிவங்களையும், மொழிநடையையும் ஒவ்வொரு முறையும் அடைந்ததுமே கைவிட்டு முன்னகர்கிறேன்.

மேடைப்பேச்சுக்கு என பழகிய, திறன்மிக்க வெளிப்பாட்டு முறை சிந்தனையை அதற்கேற்ப கட்டுப்படுத்துகிறது. திறன்மிக்க மேடைப்பேச்சாளர்களின் உரைநடை மேடைப்பேச்சுத்தன்மை கொண்டுவிடுகிறது. மிகப்பெரும்பாலும் அவர்கள் குறிப்பிடத்தக்க அசல்சிந்தனைகளை உருவாக்குபவர்களாக ஆக முடிவதில்லை. தமிழகத்தின் மாபெரும் மேடைப்பேச்சாளர்கள் எவருமே நூலாசிரியர்களாக, சிந்தனையாளர்களாக முக்கியமானவர்கள் அல்ல. அதற்கு அவர்களின் மேடைப்பேச்சுமுறையின் பழக்கமே காரணம்.

(மறைமலையடிகள், சூளை சோமசுந்தர நாயகர், திரு.வி.க, ரா.பி.சேதுப்பிள்ளை, பொ.திரிகூடசுந்தரம், அ.ஸ்ரீனிவாசராகவன், நாவலர் சோமசுந்தர பாரதியார், சி.என்.அண்ணாத்துரை என ஒரு பெரிய பட்டியலே போடலாம்)

சுந்தர ராமசாமி இளமைநாளிலேயே என்னிடம் இதைச் சொன்னார். சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார். ஜெயகாந்தனின் நடையில் பின்னாளில் மேடைத்தன்மை ஓங்கி கலையழகு போயிற்று என்பார். அது ஓரளவு உண்மையும்கூட.

ஆகவே நான் முடிந்தவரை குறைவாக உரையாற்றவேண்டும் என்பதை ஓர் நெறியாக கொண்டிருக்கிறேன். எனக்கென நான் கொண்டுள்ள நிபந்தனைகள்.

  • தொழில்முறை உரைகள் ஆற்றுவதில்லை.
  • கலவையான பொதுவான வாசகர்கள் கொண்ட அரங்குகளில் உரையாற்றுவதில்லை.
  • என் தலைப்புகளை நானே தெரிவுசெய்தே உரையாற்றுவேன்.

இந்த முறை திருப்பூர் உரையில் முற்றிலும் இதுவரை கடைப்பிடிக்காத ஒரு முறையை கடைப்பிடித்தேன். அதனால் உரையில் முன்பிருந்த சில இல்லாமலாயின. உரையின் சமவீதத் தன்மை மறைந்தது. என் உரைகள் மிகச்சரியாக நேரம் கொண்டிருக்கும். திருப்பூர் உரை அரை மணிநேரம் கூடுதலாகியது. பேசிப்பேசிச் சென்று ஆங்காங்கே ஓர் எல்லையில் முட்டி நின்று கொஞ்சம் பின்வாங்கி மீண்டும் முன் ஓடியது. உதாரணமாகச் சொல்ல வந்த சில விஷயங்களை வரலாறு, அழகியல் சார்ந்து கொஞ்சம் கூடுதலாகவே விளக்க நேர்ந்தது.

ஆனால் எதிர்பாராதபடி ஒன்று நிகழ்ந்தது, கூடுதலான கவித்துவப் படிமங்கள் உரையில் இருந்தன. அவை நானே எதிர்பாராதவை. இறுதியில் இருபது நிமிடத்தில் ஆன்மிகக் களம் சார்ந்து பேசியவை அங்கே உருவாகி வந்தவை.இந்தப் புதிய விஷயங்கள் பேசும் கட்டமைப்பை மாற்றியதனால் உருவானவை. ஆனால் முன்பு பேசி ஈட்டிக்கொண்ட பயிற்சியை உதறாமல் இதை அடையமுடியவில்லை.

இந்த நான்கு கட்டண உரைகளுமே பண்பாடு சார்ந்தவை. பண்பாடு சார்ந்த பேச்சு அங்கே முடிந்து அடுத்து தொடங்கிவிட்டதென அப்போது உணர்ந்தேன். ஆகவே வழக்கம்போல பேசி முடித்தபின் தொகுப்பதை செய்யவில்லை. இறுதியில் நான் சொன்னவை இன்னொரு உரைவரிசையால் விரிவாக்கப்படவேண்டியவை.

ஜெ

சுஜாதா அறிமுகம்

முந்தைய கட்டுரைகவிதைகள் இணைய இதழ்
அடுத்த கட்டுரைவாசிப்புப் போட்டி பரிசு