ஒரு பாடல் -கடிதம்

பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன்,

உங்கள் தளத்தில் கர்நாடக சங்கீதத்தை பற்றிய கட்டுரைகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் போது, அந்த தேடல் அப்படியே உங்களுக்கும் கர்நாடக சங்கீதப் பாடகர் சஞ்சய் சுப்பிரமணியம் அவர்களுக்கும் நடந்த கடிதப் பரிமாற்றங்களின் வழியே நடந்த உரையாடலுக்கு கொண்டு சேர்த்தது. “உங்கள் பல்லாயிரம் ரசிகர்களில் வரிசையில்கடைசிப் படிகளில் நிற்கக்கூடிய எளிய, தீவிர ரசிகன் நான்.” என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். புல்லரித்தது. அப்போதே போய் யூடியூபில் அவரது பாடல்களை அறிமுகப்படுத்திக்கொள்ள முயன்றேன். இதுவரையில் ‘துன்பம் நேர்கையில்’ பாடலை விட்டு வெளியே வரமுடியவில்லை. அந்த பாடல் மட்டும் என்னுள்ளே ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த பாடலின் பொருள்கூட தெரியாது. ஏனென்றால் நான் சொல்லில் கவனம் செலுத்தவில்லை என்பதை பின்புதான் அறிந்தேன். நிறைய பாடகர்கள் இப்பாடலைப்  பாடி இருந்தாலும் இவரது குரல் மட்டும் நம் கையை இறுகப் பிடித்து “இங்கேயே உக்காரு ” என்கிறது.

பின்பு, அக்கா மகன் பிறந்த போது பதினாறாம் நாள் பெயர் சூட்டு விழாவின் சடங்குகளை ஒளி வடிவில் ஆவணம் செய்ய வேண்டும் என்று பதிவு செய்தேன். அந்தக் காணொளிக்கு பின்னணியில் ஒலிக்கும் பாட்டாக சஞ்சய் சுப்பிரமணியம் அவர்களின் “துன்பம் நேர்கையில்” பாடலை உட்பொருத்தினேன். வேலை முடிந்ததும் காணொளியை பார்க்கத் தொடங்கினேன். அன்றுதான் அவரது குரல், வரிகள், வரிகளின் பொருள் அனைத்தையும் உணர்ந்தேன். அதற்கு பிறகு அதன் மேல் கைவைக்கவில்லை. முழுமை அடைந்துவிட்டது.

பிறகுதான் அந்த பாடலில் இருந்து வெளிவர தொடங்கியுள்ளேன்.

துன்பம் நேர்கையில் (Tunbam Nergaiyil – Desh) Sanjay Subrahmanyan

Arulmozhivarman Naming ceremony | 23.12.2021

நன்றி

கோ வெங்கடேஸ்வரன்.

முந்தைய கட்டுரைஇஸ்லாமியக் கடைகளுக்குத் தடை?
அடுத்த கட்டுரைஇலக்கியம்- கடிதங்கள்