நூலக இதழ்கள்- கடிதம்

மனுஷு,சமசு,அரசு

அன்புள்ள ஜெ..

நூலகங்களில் ஏற்கனவே வாங்கப்பட்டுக் கொண்டிருந்த பல நாளிதழ் / பருவ இதழ்களை நிறுத்தி , புதிதாக வாங்கப்படவுள்ள பட்டியல் வெளியிடப்பட்டது

நாளிதழ்களில் முரசொலி , தமிழ் முரசு , வார  இதழ்களில் குங்குமம்  , இனிய உதயம் , நக்கீரன் பெண்கள் இதழ்களில் குங்குமம் தோழி,  ஆங்கில இதழ்களில்  rising  sun ,இலக்கியப் பிரிவில் உயிர்மை என லாகவகமாக  அனைத்துப் பிரிவுகளிலும் ஆளும்கட்சி இதழ்கள் இருப்பதை கவனிப்பது சுவாரஸ்யமாக இருந்தது. ஆளும் கட்சியால் நேரடியாக நடத்தப்படாத ,  அவர்கள் ஆதரவாளர்களால் நடத்தப்படும் இதழ்களையும் அனைத்துப் பிரிவுகளிலும் பார்க்க முடிந்தது.

இதில் எனக்கு கருத்து ஏதும் இல்லை.   தமது ஆட்களை உள்ளே கொண்டுவருவது எல்லோரும் செய்வதுதானே என நினைத்தேன்  இந்த சூழலில் நூலக தேர்வுக்குழு உறுப்பினர் சமஸ் ஆவேசமாக அளித்த பேட்டி பார்வைக்கு வந்தது. முதல்வரும் ,  நூலகத்துறையும் நல்ல நோக்கத்துடன் செய்ய முனைந்த முயற்சி சிலரது புரியாமையால் உருப்படாமல் போனதை உணர முடிந்தது

500 இதழ்கள் வாங்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவற்றை கடைகளில் பார்க்கவே முடியாது. கடைகளில் இருபது இதழ்கள் தொங்கும்.  வீடுகளில் அதிக பட்சம் ஐந்து இதழ்களைத்தானே வாங்குவீர்கள்?  500 இதழ்களை வாங்க அரசு மட்டும் ஏன் வாங்க வேண்டும் ? எனவே அனைத்தையும் நிறுத்தினோம் என்கிறார் அவர்

கடைகளில் கிடைக்காத  , வீடுகளில் வாங்க முடியாத இதழ்களைப் படிப்பதற்குத்தான் நூலகம் செல்கிறோம் என்ற அடிப்படையே அவருக்குத் தெரியவில்லை. திமுக , அதிமுக ஆட்சி என எதுவானாலும் நூலகங்களில்  முரசொலி . நமது எம்ஜிஆர் , சங்கொலி என அனைத்தையும் படிக்க முடிந்திருக்கிறது.   இவற்றை ஒரு சராசரி தமிழன் வீடுகளில் வாங்கிப் படிக்க முடியாது.  அரசை விமர்சித்த / ஆதரித்த  பாக்யா , குங்குமம் ,  முத்தாரம் என  அனைத்தும் எந்தக்கட்சி ஆண்டாலும் கிடைத்தன

அதுபோல எத்தனையோ சிற்றிதழ்கள் , கவிதை இதழ்கள் நூலகங்களில் கிடைத்தன.  சாதாரண தாள்களில் அச்சிடப்பட்டு மெலிதாக வெளிவரும் இவற்றை கடைகளில் வாங்க முடியாது. இணையம் இல்லாத காலத்தில் அவற்றை எங்கு வாங்குவது என்றும் தெரியாது.

நூலகம் மூலம்தான் இவற்றைப்பற்றிய அறிமுகம் கிடைத்தது.    இவை அனைத்தையும் நிறுத்தி விட்டு , பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளது தேர்வுக்குழு.    ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசியாக சிலர் செயல்பட்டுள்ளனர்.

கண்டிப்பாக இது ஆளும்கட்சியின் நோக்கமாக இருக்காது.   காரணம் , நாளை வேறு கட்சிக்கு ஆட்சிக்கு வந்து இந்த முன்னுதாரணத்தை பயன்படுத்துவது ஜனநாயக விரோதமாகி விடும் என்பதை அறிவார்கள்.    கடந்த காலங்களில் இப்படி அவர்கள் செய்ததும் இல்லை

இதில் என்ன வேடிக்கை என்றால்  நடுநிலைமைக் காட்டுவதற்காக  ஆளும்கட்சிக்கூட்டணியில் இருக்கும் அப்பாவிக்கட்சிகளை புறக்கணித்து விட்டனர்.  எதிர்தரப்பில் வலுவான சிலருக்கு வாய்ப்பளித்துள்ளர்

வாசிப்புக்குறித்து எந்த அக்கறையும் இல்லாத ஆட்சிகளில்கூட நடக்காத சீரழிவு ,வாசிப்பு மீது அக்கறை கொண்ட முதல்வர் , அதிகாரிகள் இருக்கும் இச்சூழலில் நடந்திருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

அல்லது இது திருப்திகரமானதுதான் , குறை சொல்ல இடமில்லை என நினைக்கிறீர்களா?

என்றென்றும் அன்புடன்

பிச்சைக்காரன்

***

அன்புள்ள பிச்சைக்காரன்,

வாங்கப்பட்ட இதழ்களின் பட்டியலைப் பார்த்தேன். எல்லா வகை இதழ்களுக்கும் இடமளித்திருக்கிறார்கள் என்றே எனக்குப்பட்டது. நூலகத்துக்கு இதழ்கள் வாங்கும்போது பலவகையான சிக்கல்கள் உண்டு. பல இதழ்கள் நூலகத்துக்கென்றே நடத்தப்படும். ஒரே ஆள் ஏழெட்டு இதழ்களை நடத்துவதுண்டு.

ஆளுங்கட்சி இதழ்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக நான் நினைக்கவில்லை. மற்ற இதழ்களும் உள்ளன. ஒருபக்கம் உங்கள் குற்றச்சாட்டு மறுபக்கம் திராவிட இயக்க இதழ்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு.

சரிதான். அதிகாரமென்பது சும்மா இல்லை.

ஜெ

முந்தைய கட்டுரைஅரசியல் கட்டுரைகள் -கடிதம்
அடுத்த கட்டுரைபறவைகளின் வானம்