திருப்பூர் உரை,ஒரு நாள்

திருப்பூர் கட்டண உரைக்கு ஒன்பதாம்தேதிதான் கிளம்பிச் சென்றேன். ஒருநாள் முன்னர் சென்றிருக்கலாம். ஆனால் பேசிப்பேசி உடைந்த தொண்டையுடன் மேடையேறவேண்டியிருக்கும் என்பது என் அனுபவம். ஏற்கனவே எனக்கு தொண்டை மிக உடைந்தது என்று சொல்வார்கள்.

காலையில் நண்பர் அழகுவேலும் ராஜமாணிக்கமும் வந்து ரயில்நிலையத்தில் இருந்து விடுதிக்குக் கூட்டிச்சென்றார்கள். ஏழுமணிக்குப் படுத்து ஒரு தூக்கம்போட்டேன். பதினொரு மணிக்கு ஈரோடு கிருஷ்ணன் கும்பலுடன் வந்துவிட்டார். அதன்பின் வந்தபடியே இருந்தனர்.

நண்பர்கள் கூடினாலே பேச்சு எழுந்துகொண்டே இருக்கும். ஏதாவது கேள்விகள், பிரச்சினைகள், வேடிக்கைகள். பேசாதே, தொண்டை பத்திரம் என்று சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும், நமக்கு நாமே. அப்படியும் பேசிவிடுவோம். இரண்டுமணி நேர உரை என்பது அவ்வளவு மூச்சு தேவைப்படுவது. நானெல்லாம் அறைகளுக்குள் ஐந்தாறுமணிநேரம் பேசுபவன். மேடையில் குரல் வேறொன்றாகிறது.

எனக்கு பாடுபவர்கள் மேல் எப்போதுமே ஆச்சரியம். மூன்றுமணிநேரம் எப்படி மேடையில் பாடுகிறார்கள்? அதிலும் கதகளி பாடகர்கள் ஆறேழுமணிநேரம் மேடையில் பாடுவார்கள். அங்கங்கே சொல்லியாட்டம் வழியாக கிடைக்கும் மூச்சிடைவெளிதான்.

முன்பு 2000 ல் சொல்புதிது இதழுக்காக இசை ஆய்வாளர் நா.மம்முதுவை பேட்டி எடுக்க நானும் வேதசகாயகுமாரும் சென்றிருந்தோம். அன்று அவர் அறியப்படாத ஆளுமை. அரசுப்பணியில் இருந்தார். அவர் இல்லத்தை தேடிப்பிடித்து சென்று நீண்ட பேட்டி எடுத்து சொல்புதிதில் வெளியிட்டோம். அவருடைய முதல் பேட்டி.தமிழ் அறிவுச்சூழலுக்கு அவரை அறிமுகம் செய்தது அந்த உரையாடல்தான்.

அப்போது நான் அவரிடம் வியந்து சொன்னேன். ‘இந்த பாடகர்கள் எப்டித்தான் மூணுமணிநேரம் பாடுறாங்களோ! நினைக்கவே ஆச்சரியமா இருக்கு’.

அவர் புன்னகைத்தார். ‘எந்தக் கலையும் அதைச்செய்றவங்களுக்கு ஈஸிதான்’

நான் ”ஆமாம்” என்றேன். நான் எழுதுவதுபோல இன்னொருவர் எழுதுவது கடினம்.

பேச்சுநடுவே மம்முது ஏதோ ராகம் கூற அது வரை அவர் அருகே அமர்ந்திருந்த ராஜா முகம்மது என்னும் குண்டான இளைஞர் உச்சஸ்தாயியில் அதை பாடினார். அறையே அந்த நாதத்தால் நிறைந்தது. மம்முது விளக்க விரும்பிய பழந்தமிழ்ப்பண், கர்நாடக சங்கீத ராகம், இந்துஸ்தானி இசை, கூத்துப்பாட்டு, சினிமாப்பாட்டு எல்லாவற்றையும் அவர் உடனே பாடினார். (பேட்டி முழுக்க ராஜா முகம்மது பாடிய செய்தியும் வரும். அவர் படமும் வெளியானது)

நான் ராஜா முகம்மது பற்றி விசாரித்தேன். அவர் தெருக்கூத்து கலைஞர். ராஜபார்ட். அவ்வட்டாரங்களில் மிகப்புகழ்பெற்றவர். ‘ஒரு தெருக்கூத்து எவ்ளவு நேரம் நடக்கும்?” என்றேன்.

“அது இருக்குமுங்க. சாயங்காலம் ஏழு ஏழரைக்கு ஆரம்பிச்சா மறுநாள் காலம்பற கோழி கூவுறது கணக்கு. அஞ்சு அஞ்சர…”

ஏறத்தாழ பத்து மணிநேரம். “உங்க ரோல் எவ்ளவு இருக்கும்?” என்றேன் மூச்சுத்திணறலுடன்

“முழுநேரமும் ஸ்டேஜ்லே இருக்கணும்…நான் ராஜபார்ட்ல?”

”அவ்ளவும் பாட்டுதான், வசனம் அனேகமா இருக்காது” என்றார் மம்முது

”எவ்ளவு பாட்டு, சுமாரா?” என்றேன்.

”ஒரு பாட்டு சராசரியா ஏழெட்டு நிமிஷம் இருக்கும்… ஒரு மணிநேரத்திலே அஞ்சுபாட்டுன்னாக்கூட அம்பது பாட்டு”

“அம்பதா?”

“சில கூத்திலே சின்னச்சின்னதா நூறுபாட்டுக்குமேல உண்டு” என்றார் மம்முது

“அவ்ளவையும் நீங்களே பாடுவீங்களா?”

“ஆமா, ஏன்?”

“ஒண்ணுமில்லை”

“கூடவே டான்ஸும் ஃபைட்டும் உண்டு” என்றார் மம்முது.

ஆனால் ராஜா முகமதுவுக்கு அது பெரிய விஷயமாகவே தெரியவில்லை. நான் வியப்படைவதைக் கண்டு வியப்படைந்துகொண்டிருந்தார்.

அதன்பின் அமெரிக்காவில் இசைநாடகத்தில் அதற்கிணையான ஆற்றல் கொண்ட நடிகர்களைப் பார்த்தேன். லெ மிசரபில் நாடகத்தில் ஜீன் வல்ஜீன் ஆக நடித்தவர் முப்பது பாட்டை பாடி முழுவேடத்தையும் நடித்தார்.

அவர்கள் கலைஞர்கள். எனக்கு மேடையை பார்த்தாலே கால்கள் உதறத் தொடங்கிவிடுகின்றன.

மதியம் உரையை ஒருமாதிரி தயாரித்துக்கொண்டேன். சென்னிமலை நண்பர் சிவகுருநாதன் கொண்டுவந்து பரிசளித்த ஜிப்பாவை அணிந்துகொண்டு மேடையேறினேன். (https://www.nurpu.in/)

இந்த மேடையுரைகளில் நான் கண்ட பிரச்சினை சுத்தமாக தயாரித்துக்கொள்ளாமல் மேடையேறினால் சமயங்களில் மேற்கொண்டு ஒன்றும் தோன்றாது. முழுக்கமுழுக்க தயாரித்துக்கொண்டு மேடையேறினால் நினைவுகூர்ந்து சொல்வதுபோல் ஆகிவிடும். அடிப்படைக் கட்டுமானம் ஒன்று மட்டும் கையில் இருந்து மேடையில் உரை தானாக நிகழ்ந்தால் அது நல்ல உரை.

இருநூறுபேர் அமரும் அரங்கு. நிறைய கூட்டம் வரவர முந்நூறு பேர் அமரும்படி இருக்கை போட்டு நெருக்கிவிட்டார்கள். அங்கே வந்து டிக்கெட் எடுக்கலாமென வந்த ஒரு இருபது பேர் வரை இடம் இல்லாமல் அனுப்பப்பட்டார்கள். அமைப்பாளர்கள் நம் நண்பர்கள். அதீத உற்சாகத்தில் நகரெங்கும் ஃப்ளெக்ஸ் வைத்து போஸ்டரும் அடித்துவிட்டதன் விளைவு. இடம் கிடைக்காத பலர் கோபம் கொண்டார்கள். ஆனால் உள்ளே உண்மையாகவே கொஞ்சம்கூட இடமில்லை. ஏசி அறை கதவுகளை திறக்க முடியாது.

திரண்டிருந்த முகங்கள் முன் நின்றபோது முதலில் கொஞ்சம் திகைப்பை உணர்ந்தேன். அதன்பின் அங்கே இருப்பவர்களின் உள்ளங்களில் இருக்கும் சிந்தனையின் இயல்பான பெருக்கை சற்றே திசைமாற்றுவது மட்டுமே என் பணி என உணர்ந்தேன். எதையும் அறிவுறுத்த நான் அங்கே நிற்கவில்லை. இப்படியும் சிந்தித்துப்பாருங்கள் என்று சொல்லவே முயன்றேன்.

விழாவில் வசூலான தொகையில் செலவு போக எஞ்சியதை எனக்கு மேடையில் அளித்தனர். அதை கன்யாகுமரி மாவட்டத்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும், இதய நோயுற்று சிகிச்சையில் இருப்பவருமான நண்பர் சிவசங்கரின் மருத்துவநிதிக்காக அளித்தேன்.

வீடு திரும்பினேன். தமிழகம் முழுக்கவே அக்னிநட்சத்திரம் கொஞ்சம் அணைந்து மென்மையான குளிர் வானிலிருந்து வந்துகொண்டிருந்தது. நாகர்கோயிலில் நான் கிளம்பிச் செல்லும்போதே பலநாட்களாக பலத்த மழை. திரும்பிவந்தால் ஜூன் தொடங்கிவிட்டதா என சந்தேகம் வரும்படி மரங்கள் புதியவையாக நின்றிருந்தன.

கூட்ட நிகழ்வுகளை அருண்மொழிக்குச் சொல்ல முயன்றேன். கேட்க அவள் தயாராக இல்லை. அவளுடைய கூட்ட நிகழ்வுகளைச் சொல்லி முடிக்கமுடியவில்லை. “அந்தப் பிள்ளை என்னமா பேசுது. பயங்கரக் கியூட். கொஞ்சலாம்போல இருந்திச்சு”

திருப்பூரில் அப்படி எந்தப் பிள்ளை? அது சென்னையில் பேசிய அருந்தமிழ் யாழினி. ”அ.வெண்ணிலா என்ன சொன்னாங்கன்னா…”

சரிதான். எழுத்தாளர்களுக்கு காதும் அவசியம். ஆனால் அதை நான் சொல்லமுடியாது.

பிகு: வெற்றிகரமான குடும்ப வாழ்க்கைக்கு சிறிய எளிய வழி. இரண்டுபேருமே எழுத்தாளர் ஆகி, அவரவர் எழுத்தைப் பற்றி மட்டுமே பேசி, மற்றவர் பேசுவதை முற்றிலும் கேட்காமலிருப்பது.

எஸ்.ஜே.சிவசங்கர் மருத்துவ நிலை

எழுத்தாளர் எஸ்.ஜே.சிவசங்கருக்கு உதவி

முந்தைய கட்டுரைகங்கைப்போர் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைநற்றிணை யுகன் -கடிதங்கள்