புதுமைப்பித்தன் மலிவுப்பதிப்பு -நற்றிணை யுகன் பேட்டி

புதுமைப்பித்தனின் கதைகளை மலிவு விலையில் வெளியிட வேண்டுமென்னும் எண்ணம் எப்படி உருவானது?

வணக்கம் . நற்றிணை பதிப்பித்த ரூ.100 விலை கொண்ட புதுமைப்பித்தன் கதைகள் தொடர்பாக, தாங்கள் வெகுவாகப் பாராட்டியது என்னைப் பெரும் மகிழ்ச்சி அடையச் செய்தது. அத்துடன் ஒரு நேர்காணலும் செய்வது நற்றிணை பதிப்பகத்தையும், என்னையும் ஒரு சேர பெருமைப்படுத்தியது ஆகும்.

புதுமைப்பித்தன் கதைகளைப் பதிப்பிப்பது என்பது எந்த ஒரு பதிப்பகத்திற்கும் போலவே இலக்கியப் பதிப்பகமான நற்றிணைக்கும் பெருங் கனவு. நற்றிணை பதிப்பகம் தொடங்கி 15 ஆண்டுகள் முடிந்துவிட்டன. நற்றிணையின் முதல் புத்தகம் நான் மொழிபெயர்த்த ‘சினிமா பாரடைசோ’ என்னும் இத்தாலியத் திரைப்படத்தின் திரைக்கதை தான். அப்புத்தகம் 2006இல் வெளிவந்தது. அப்போது நான் திரைப்படத் துறையில் உதவி இயக்குநராக இருந்தேன். அங்கே நிலை கொள்ள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தேன். ஐந்து வருட சினிமா முயற்சிக்குப் பின் வாழ்க்கை குறித்த பயம் தோன்ற பதிப்பகத்தைத் தீவிரமாக நடத்தலாம் என்று முடிவு செய்து 2011 முதல் முழுக் கவனத்தையும் பதிப்பகத்தில் செலுத்தத் தொடங்கினேன்.

அப்போதுமுதல் ஒவ்வொரு வருடமும் புதுமைப்பித்தன் கதைகளைப் பதிப்பிக்க வேண்டும் என்பது எங்கள் திட்டமாக இருக்கும். எப்படியோ அது தள்ளிப் போய்விடும். நற்றிணை தொடங்கி இந்தப் பதினைந்தாவது ஆண்டில் எப்படியாவது கொண்டு வந்துவிட வேண்டும் என்று பெரும் முனைப்புடன் செயல்பட்டோம். அப்போதுதான் விலை பற்றிப் பேச்சு வந்தது. நானும் என் மனைவியும் பதிப்பகம் தொடர்பாகப் பேசிக்கொள்ளும் போது சக்தி வை. கோவிந்தன் அந்த உரையாடலில் தவறாமல் இடம்பெற்று விடுவார். என் மனைவிதான் அவர் பெயரைச் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்களே,  அது போன்று மலிவுப் பதிப்பு கொண்டு வந்தால் என்ன என்றார். 1957இலேயே பாரதியார் கவிதைகளை வை.கோ என்றழைக்கப்பட்ட சக்தி வை. கோவிந்தன் ஒரு ரூபாய்க்கு வெளியிட்டார்.  ஒரே வாரத்தில் 1 லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தது. அதை அப்போதைய முதல்வர் பெருந்தலைவர் காமராசர்தான் வெளியிட்டார். நாமும் அதே போன்று செய்யலாமே என்ற எண்ணமும், புதுமைப்பித்தனுக்கும் எனக்கும் ஒரு ஆத்மார்த்தமான உறவு உண்டு என்ற வலுவான நம்பிக்கையின் அடிப்படையிலும் புதுமைப்பித்தனை நற்றிணை புதிதாக உருவாக்கிய வாசகர் எளிய விலை நூல் வரிசையில் வெளியிட்டோம்.

புதுமைப்பித்தனின் இன்றைய பொருத்தப்பாடு என்ன?

புதுமைப்பித்தன் 1906இல் பிறந்தவர். 1948இல் தன் இளம்வயதிலேயே மறைந்துபோனவர்.  12-15 ஆண்டுகள்தான் படைப்பு உருவாக்கத்தில் தீவிரமாக இயங்கினார். இந்தக் குறுகிய காலத்திலேயே சத்திய ஆவேசத்துடன் எழுதியிருக்கிறார் என்பதற்குச் சாட்சி எழுதப்பட்டு 80 ஆண்டுகள் கடந்தும் அவர்கள் கதைகள் இன்றும் மூப்படையாமல் சிரஞ்சீவித் தன்மையுடன் இருப்பதே ஆகும்.

புதுமைப்பித்தன் கதைகளை வாசகனாக வாசித்ததைவிட, பதிப்பித்தற்காக வாசித்தது ஒரு பெரும் விருந்தாகவே இருந்தது. நற்றிணை பதிப்பித்த தலைசிறந்த புத்தகங்களில் ஒன்றாக புதுமைப்பித்தன் கதைகள் இருக்கும் என்பதே, ஊக்கத்துடன் உருவாக்கக் காரணமாக இருந்தது..

புதுமைப்பித்தனின் படைப்புகள் செவ்வியல் தன்மையை அடைந்துவிட்ட ஒன்று எந்த ஒரு தீவிர வாசகனும் உணர்ந்துகொள்வார். அவர் கதைகள் இன்னும் பல நூற்றாண்டுகள் கழித்தும் பொலிவு குன்றாமல் இருக்கும் என்பதே வாசகனாக என் எண்ணம். அதனால் நவீன இலக்கியம் வாசிக்க வரும் இளம் வாசகர்கள் புதுமைப்பித்தனிலிருந்து தங்கள் வாசிப்பைத் தொடங்க வேண்டும். அவர்கள் வாங்குவதற்கு விலை தடையாக இருக்கக் கூடாது என்பதும் இந்தப் பதிப்பின் இன்னொரு உபநோக்கமாகும்.

இந்த மலிவுவிலைப் பதிப்பால் என்ன நிகழுமென எதிர்பார்க்கிறீர்கள்?

இந்த மலிவு விலை பதிப்பால் உடனடியாக நிகழ்வது அதிகபட்ச புத்தக எண்ணிக்கை. மற்றொன்று பதிப்பித்த பதிப்பகத்திற்கு ஒரு நற்பெயர். இதனால் வணிக இலக்கிய நூல்கள் போல் நவீன இலக்கியங்கள் விற்காது என்ற எண்ணம் காலப்போக்கில் மறையும்.  ஆயிரக்கணக்கில் புத்தகங்களை அச்சிடுவதும் விற்பதும் ஒரு புதுக்கிளர்ச்சியையும் பெரும் மன உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறது என்பதைப் பதிவு செய்துதான் ஆகவேண்டும் மகிழ்ச்சி பாதி பலம் என்பார்கள். பதிப்பாளராக இப்புத்தகத்தால் நான் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்..

இலக்கிய முன்னோடிகளில் புதுமைப்பித்தனை நீங்கள் தெரிவுசெய்தமைக்குக் காரணம் உண்டா?

இந்த இடத்தில் புதுமைப்பித்தன் தொடர்பான என் வாழ்வின் முக்கியமான விசயத்தைச் சொல்வது  பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் புதுமைப்பித்தன் கதைகளை அடிக்கடி எடுத்து வாசித்துக் கொண்டிருப்பேன். அப்படி ஒரு நாள் ‘பொய்க் குதிரை’ என்னும் கதையை வாசிக்க நேரிட்டது.  அதில் ஒரு இடம் வரும். கதை நாயகனுக்கு அன்று சம்பளம் போட்டிருக்க மாட்டார்கள். அவர் மாலை மனச்சோர்வுடன் வீட்டுக்குத் திரும்பும் வழியில் சாலையோரத்தில் ஒரு பிச்சைக்காரன் தன் குழந்தையுடன் விளையாடுவதைப் பார்ப்பார். அப்போது அவர் மனதில் என்னைப் போல் தான் அவனும்,  ஆனால் அவனுக்கு குழந்தை இருக்கிறதே, கமலாவுக்கு குழந்தை இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பார். அந்த வரியை வாசித்ததும் என் மனதில் பெரும் அதிர்வு உண்டானது. எங்களுக்கும் திருமணமாகி 9 வருடங்களாக குழந்தை இல்லை. என் மனைவி பெயர் கோமளா. நான் உடனே கோமளாவுக்கு ஒரு குழந்தை இருந்தால் நன்றாக இருக்குமே என்று மாற்றி வாசித்தேன். இதை வாசித்த ஒரே மாதத்தில் என் மனைவி கருத்தரித்துவிட்டாள். அப்போது நாங்கள் சீரடி சாய்பாபாவைக் கும்பிட்டுக் கொண்டிருந்தோம். என் மனைவி சீரடி சாய்பாபா கொடுத்தது என்றாள். நான் புதுமைப்பித்தன் கொடுத்தது என்றேன். அந்த வகையில் நற்றிணையின் புதுமைப்பித்தன் கதைகள், நான் புதுமைப்பித்தனுக்கு செலுத்திய நேர்த்திக்கடன் தான்.

மலிவுவிலை நூல்கள் வீணாகக்கூடும், தேவையற்றவர்கள் அவற்றை வாங்கிச் செல்வார்கள் என்று ஒரு பேச்சு உண்டே?

மலிவு விலை நூல்கள் வீணாகும் என்ற சிந்தனையில் எனக்கு உடன்பாடில்லை.  ஒரு முறை சென்னைப் புத்தகக் கண்காட்சியில் புகழ் பெற்ற ரஷ்ய நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்பை ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் விற்றபோது ஒரு மூட்டை நிறைய வாங்கி ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்குக் கொண்டு வந்தேன். அதில் செம்மணி வளையல், ஆண்டன் செக்காவ் கதைகள், டால்ஸ்டாய் கதைகள் அடங்கும்.  மலிவு விலை என்பதனாலேயே அதை வாங்கினேன். ஆனால் படைப்புகள் பொக்கிஷங்கள் என்பதைப் படித்ததும் அறிந்துகொண்டேன். ஒரு உண்மையான விசயம் விலை குறைவான புத்தகங்கள் தான் பெரும்பாலும் அதிகம் விற்கின்றன. குடோனில் விற்காமல் அடைந்து கொண்டிருக்கும் புத்தகங்களைப் பார்த்துச் சலிப்பதைவிட  விற்றுத் தீரும்  புத்தகங்களைப் பார்ப்பது பெரும் மகிழ்ச்சி தான்.  தொ.ப.வின் அறியப்படாத தமிழகத்தை நாங்கள் 20 ரூபாய்க்குக் கொடுத்ததன் மூலம் வாசகர்கள் அதை ஆயிரக்கணக்கில் வாங்கி பள்ளி, கல்லூரி, திருமண வீடுகள் எனப் பரிசுகளாக வழங்கினார்கள்.  நற்றிணையில் அதிகம் விற்ற புத்தகம் அறியப்படாத தமிழகம் தான். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் தமிழில் அதிகம் விற்ற புத்தகமாக அது மாறும் என்பது என் நம்பிக்கை.

ஒரு வாசகச் சமூகம் தயாராக இல்லாதபோது மலிவுவிலையில் பல்லாயிரம் பிரதிகள்  மக்களிடையே சென்றால் பயன் உருவாகாது என்று ஒரு தரப்பு உண்டு. 1972ல் ராணிமுத்து இதழ் புதுமைப்பித்தன் உட்ப தமிழின் நவீன இலக்கியவாதிகளின் படைப்புகளை ஒரு ரூபாய் விலைக்கு லட்சம் பிரதிகள் அச்சிட்டு விற்றது. ஆனால் அவை வாசிக்கப்படவே இல்லை எனப்படுகிறது.  

வாசிப்பில் நிறைவடையும் ஒரு வாசக சமூகம் தமிழ்நாட்டில் எப்போதும் இருந்தது இல்லை. நாம் சில முன்னெடுப்புகளைச் செய்யும் போது  நிச்சயமாக சிறிய மாற்றமாவது நிகழும். மலிவு விலைப் புத்தகங்கள் வீணானாலும் அது நிச்சயம் தேவையான முயற்சிதான். மகத்தான ஆளுமைகளின், மகத்தான படைப்புகளின் மலிவு விலைப் பதிப்புகள் நிச்சயம் நிறைய புதிய வாசகர்களை உருவாக்கும் என்பது எனது திடமான நம்பிக்கை. மலிவு விலை நூல்கள் நிச்சயம் விற்றுவிடும் என்பது இதன் பலம். லாபம் மிகக் குறைவு என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.  இனி நற்றிணையின் பெரும்பாலான நூல்கள் மலிவு விலை நூல்களாகத் தான் இருக்கும்.  மலிவு விலை நூல்கள் பதிப்பாளனுக்கு ஒரு புதிய அந்தஸ்தை ஏற்படுத்துகிறது. முகமற்ற அவனுக்கு அது மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதை நாமாகவே அறிந்து கொள்ளலாம்.  பதிப்புத் துறையில் தற்போது மிக முக்கியமான பிரச்சனை p.o.d. எனப்படும் print on desk புத்தகங்கள். குறைவான புத்தகங்கள் அடித்துக்கொள்ளலாம். முதலீடு குறைவு, புத்தகங்களை எப்பொழுதும் இருப்பில் வைத்துக் கொள்ளலாம் என்பது சில சாதகமான அம்சங்கள் தான். ஆனால் முக்கியமான பாதகம் மிக அதிக விலை. மிக அதிக விலை நிச்சயம் வாசகர்களின் பங்கேற்பைக் குறைக்கும்.

இதைப்போல எல்லா நூல்களையும் பொதுவாகவே மலிவு விலையில் வெளியிட முடியுமா?

மலிவு விலை நூல்கள் என்பது தன்னை நிறுவிக்கொண்ட ஆளுமைகள் அல்லது தன்னை நிறுவிக் கொண்ட படைப்புகளுக்கு மட்டுமே  பொருந்தும். எல்லா நூல்களையும் மலிவு விலையில் வெளியிடுதல் சாத்தியமற்றது

என்னைப் பொறுத்தவரை மலிவு விலை நூல்களைப் பதிப்பிப்பது என் கடமை என்று கருதுகிறேன். என்னால் இயன்ற அளவில் தொடர்ந்து இதைச் செய்வேன். புதுமைப்பித்தன் கதைகளை அடுத்து, லியோ டால்ஸ்டாயின் ‘போரும் வாழ்வும்’ நாவலை, அதாவது 2224 பக்கங்கள் கொண்ட இந்நாவலை மூன்று கெட்டி அட்டைத் தொகுதிகளாக வெளியிட்டு 400 ரூபாய்க்குத் தர இருக்கிறோம். பேப்பர் பேக் 300 ரூபாய்க்குத் தரப் போகிறோம். 704 பக்கங்கள் என் சரித்திரம் 125 ரூபாய்க்குத் தரப்போகிறோம். ப. சிங்காரம் நாவல்கள் 416 பக்கங்கள் கெட்டி அட்டையில் ரூபாய் 100 விலைக்குத் தரப்போகிறோம். அடுத்த 10 வருடங்களில் குறைந்தது 200 புத்தகங்களாவது இது போன்ற எளிய விலையில் வெளியிட வேண்டுமென்பது என் விருப்பம். ஆனால் அச்சுக்குத் தேவையான பொருட்களின் விலை பதிப்புத் துறைக்குச் சாதகமாக இல்லை என்பதையும் நாங்கள் உணர்ந்துகொண்டுதான் இருக்கிறோம்.

இது புத்தகங்களை வாங்கி விற்பவர்களுக்கு கட்டுபடியாகாது. இது வினியோகச் சங்கிலியை இல்லாமலாக்குகிறதா?

மலிவு விலை நூல்களைப் பொறுத்த வரையில் பதிப்பாளர்களும் புத்தகக் கடைக்காரர்களும் புதிய உடன்பாட்டுக்கு வந்துதான் தீர வேண்டும். தற்போது விற்பனையாளர்களுக்கு 30 சதவிகித கழிவு தருகிறோம். மலிவு விலை நூல்களில் அதே சதவிகிதத்தை விற்பனையாளர்கள் நிச்சயமாக  எதிர்பார்க்க  முடியாது. விற்பனையாளர்கள் மலிவு விலைப் புத்தகங்களைக் FMCG என்று சொல்லப்படும் Fast moving consumer goods போன்று கருத வேண்டும்.  FMCG பொருட்களில் மிகக் குறைவான லாபம் தான் கிடைக்கும். ஆனால் அதிகம் விற்கும். பணம் புரண்டுகொண்டே இருக்கும். விற்பனையாளர்கள் இந்தப் புதிய மாற்றத்திற்கு தங்களை உட்படுத்திக் கொண்டால் மலிவு விலை நூல்கள்  இன்னும் பல மடங்கு விற்பனையாகும். வாசகர்களுக்கும் தபால் செலவு இல்லாமல் மலிவு விலையிலேயே புத்தகங்கள் கிடைக்கும்.  எப்படிப் பார்த்தாலும் கிண்டில். மின் நூல் இவற்றுடன் போட்டு போட்டுக் கொண்டு அச்சுப் புத்தகங்களை அதிகம் விற்க வேண்டுமென்றால் மலிவு விலை, அல்லது நடுத்தரமான விலை தான் சிறந்தது.

பேட்டி ஜெயமோகன்

முந்தைய கட்டுரைபனி உருகுவதில்லை, விமர்சன அரங்கு உரைகள்
அடுத்த கட்டுரைஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன – வாசிப்பனுபவம்