ஷௌகத்தின் ஹிமாலயம்

இனிய ஜெயம்

மே இறுதி வாரம் எங்கள் கூட்டு குடும்பத்தில் மற்றொரு விழா. எனவே சில லெளகீக பயணங்கள். இடையே அவற்றிலிருந்து துண்டித்துக்கொண்டு ஒரு இரண்டு நாட்கள் அருணைமலை சென்றுவிட்டேன். மொபைலை சைலண்ட்டில் போட்டு விட்டு ரமணர் தங்கிய விருபாக்ஷ குகை சென்று விட்டேன். இரவில் தனியே கிரிவலம். விடிந்த பிறகு ராமணாஸ்ரமம் தங்கிவிட்டு இரவு வீடு வந்தேன்.

என்னிலிருந்து எப்போதோ கிளம்பி விட்டேன். போய் சேர வேண்டிய எந்தை ரமணரின் இணையடியும் கண்களில் கண்டு விட்டேன். எனது கேதார்நாத் பயணத்தில் மலைப் பாதை அளிக்கும் விசித்திரம் ஒன்றை முதன் முதலாக கண்டேன். கண்ணால் ஒரு இடத்தை பார்த்து விடுவோம். ஆனால் அங்கே சென்று சேர, மலை பாதாளம் பாயும் கங்கை என்று நாள் முழுக்க கடந்து கடந்து சென்றுகொண்டே இருக்க வேண்டும். அதே நிலையில்தான் இப்போதும் இருக்கிறேன். எந்தை திருவடி கண்டுவிட்டேன். நோக்கி நடந்து கொண்டே இருக்கிறேன் ஜென்ம ஜென்மம் கடந்து.

இம்முறை அண்ணாமலையார் ஆலயத்துக்கு செல்லவில்லை. இரண்டு வருட ஊரடங்கில் அக்கோயில் எனது அல்லாத கோவில் என்றாகிவிட்டது.  பெருமதில் கடந்தால் அதன் உள்சுற்றில் வணிக உணவு அங்காடிகள், கழிப்பிடங்கள் வந்து விட்டது. ராஜ கோபுர வாசல் தொட்டு பின் கோபுர வாசல் வழியே வெளியேறும் வகையில் சுற்றி சுற்றி பின்னிச் செல்லும் இரும்பு கூண்டு வழியாக மட்டுமே கோயிலுக்குள் சுற்ற முடியும்.

இரண்டு வருடமாக கிரிவலம் தடை. இப்போது அந்த தடை முடிந்து விட்டது. அநேகமாக இந்த சித்ரா பௌர்ணமியில் மக்கள் வெள்ளத்தால் மலையும் கோயிலும் குலுங்கப் போகிறது. கண் முன்னால் எல்லாமே மாறிவிட்டது. கோயிலுக்குள் ரமணர் தவம் செய்த பாதாள லிங்க சந்நிதியில் ரமணர் போலவே சில நாட்கள் வாழ்ந்திருக்கிறேன். ஏன் என்று கேட்க கூட ஒருவரும் இருக்க மாட்டார்கள்.  இன்று அந்த சன்னதிக்கே கூண்டு வழிகளை பிளந்து போவது பகீரத பிரயத்தனம்.

பொதுவாக ரஜினிகாந்த் இளையராஜா போன்றவர்கள் அங்கே கிரி வலம் செய்ய வருவது வார பத்திரிகைகள் வழியே பிரபலம் ஆக, முதல் எழுச்சி துவங்கியது, பின்னர் குமுதம் பக்தி ஸ்பெஷல் போன்ற இதழ்களின் பெருக்கம், அதில் பாலகுமாரன் போன்ற எழுத்தாளர்கள் வீசிய வசிய வலை, ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரம் என்று இன்றைய பக்தர் கும்பலுக்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும், இவற்றுக்கெல்லாம் துவக்கம் என்பது இன்னும் பின்னால் நிகழ்ந்த ஒரு தொடர். எண்பதுகளின் துவக்கத்தில் பரணீதரன் என்பவர் எழுதிய அருணாச்சல மகிமை எனும் இரண்டு பாக நூல். சேஷாத்ரி ஸ்வாமிகள் நூற்றாண்டு ஜெயந்திக்கு அவர் குறித்த கட்டுரை ஒன்று எழுத அங்கே சென்று, அவரிலிருந்து ரமணர் பூண்டி ஸ்வாமிகள் என்று துவங்கி அருணை மலையை வந்து சேர்ந்த ஆத்மீக ஆளுமைகள் பெரும்பாலோனரை கதை போல அவர்கள் வாழ்வை சொல்லி, அந்த உயர் ஜீவன்களை தமிழக பொது மனதுக்கு அறிமுகம் செய்தார் பரணீதரன். இன்று தமிழில் வாசிக்கக் கிடைக்கும் ஒரு யோகியின் சுய சரிதம், இமயத்து ஆசான்கள் போன்ற நூலுக்கு எல்லாம் முன்னோடி அருணாசல மகிமை நூலே.

இம்முறை என் கையில் இருந்தது (ஷெளக்கத் எழுதி kv ஜெயஸ்ரீ மொழியாக்கம் செய்த வம்சி வெளியீடான) ஹிமாலயம் எனும் நூல். கோடை பற்றி எரியும் அருணையின் ரமண குகை வாயிலில் அமர்ந்து மீண்டும் வாசித்தேன். வெந்து தணியும் உடல் விடுத்து எழுந்து, கற்பனை வழியே எலும்புகளை குளிர் கொண்டு குடையும் ஹிமாலய மலைச் சரிவுகளில் சென்று இறங்கினேன்.

குரு நித்யாவின் மாணவர்களான ஷெளக்கத்தும் காயத்ரியும் குரு சமாதி எய்திய ஒன்றரை மாதத்துக்குப் பிறகு இமாயல பயணம் ஒன்று செய்ய முடிவு செய்கிறார்கள். சீன ஞான நூல் நிமித்தம் அனுமதி அளித்த வகையில் காயத்ரி தனது பயணத்தில் ஷெளக்கத்தையும் இணைத்துக் கொள்கிறார். இமயமலைத் தொடரில் ஹரித்துவார், ரிஷிகேஷ், யமுனோத்ரி, உத்ரகாசி, கங்கோத்ரி, தபோவனம், கேதார்நாத், பத்ரிநாத் என்று அவர்கள் நிகழ்த்திய  அந்தப் பயணம் குறித்த ஷெளக்கத் அவர்களின் அனுபவப் பகிர்வே இந்த ஹிமாலயம் நூல்.

சூழச்சூழ அகல் விளக்குகள் எரியும் குரு நித்யாவின் சமாதியில் துவங்கும் இந்த நூல், ஹிமாலயத்தின் சிகரங்கள் தொட்டு, நதிகள் தொடர்ந்து முழு நிலவு வரை வர்ணனைகள் வழியே அளிக்கும் அனுபவம் இதை ஐம்புலன் வழியே அனுபவிக்கிறோம் என்ற உணர்வை கிளர்த்தும் வகையில் அலாதியானது. அழகு அழகு அந்த நிலவெளியின் அழகு மொத்தத்தையும் சொல்லில் அள்ளிய அழகு. எங்கள் இமயப் பயணத்தில் எனது நண்பர் காரைக்குடி பிரபு பனி போர்த்திய கிராத மலை முடி கண்ட கணம் என் போலவே பரவசமாக இருந்தார். இரவு உரையாடலில் அவர் வசம் கேட்டேன் “இதைக் காட்டிலும் பல மடங்கு அழகு கொண்ட பனி மலைகள் கொண்டதுதானே அமெரிக்கா” என்று. அவர்  “பார்த்திருக்கிறேன். அவை எல்லாம் அழகுதான். ஆனால் ஸோ வாட் என்றுதான் தோன்றும். இதில் உள்ள ஒன்று அதில் இல்லை. ஒரு வேளை நான் இன்னும் இம்தியா காரனாகவே இருக்கிறேனோ என்னவோ” என்றார். பின்னர் யோசிக்கயில் ஒன்று புரிந்தது. பண்பாட்டால் ‘சாரம்’ ஏற்றப்படாத அழகு ‘வெறும்’ அழகாக, ஜிட்டு உரைகளில் வரும் அழகாக,  மட்டுமே இருக்க முடியும். சாரம் இல்லா உப்பு போல. இங்கே எங்கள் கண் முன் சிகரம் என கிராத நாதனாக எழுந்து நிற்பவவன் கங்கைவார் சடையன் அல்லவா? இந்த ஹிமாலயம் நூலில் தொழிற்படும் நிலமும் அதன் அழகும் இந்திய மதப் பண்பாட்டு சாரத்தில் ஊறிய ஒன்றே. சென்ற பாதை குறித்த துல்லியமான பயணக் கையேடாக விளங்கும் அதே சமயம் அந்த நிலம் கொண்டிருக்கும் புராண, ஐதீக, வரலாற்று, ஆத்மீக சாரம் குறித்த அறிமுகமாகவும் இந்நூல் விளங்குகிறது.

சுகுமார் ஆழிக்கோடு உபநிஷதங்கள் குறித்து  எழுதிய ஆய்வு நூலான தத்துவமசி நூலை ( தமிழில் சாகித்ய அகாடமி வெளியீடு) உபநிஷதங்கள் அனைத்தையும் இமயத்துக்கு நிகர் வைத்தே துவங்குவார். அதுபோல  ஷெளக்கத் தும் உபநிஷத்கள், காளிதாசனின் காவிய சொற்கள் ராம சரித மானசம், மாபாரதம் இவை போன்ற இன்ன பிற தெய்வீக கதைகள் இதனூடாகவே பக்தி பூர்வமாக இமயத்தைக் கண்டு அதில் திளைக்கிறார். குரு நித்தியாவின் மாணவர் என இவர் அறியப்பட்டும் ஆசிரமங்களில் எல்லாம் சத்சங்கங்களில் இவர் வசம் கேட்கப்படும் வினாக்களுக்கு எல்லாம் ஒரு அத்வைதியாக ஷெளக்கத் அளிக்கும் பதில்கள் இந்த நூலின் முக்கிய அலகுகளில் ஒன்று. குறிப்பாக பக்தி குறித்து, மாதா பிதா குரு தெய்வம் எனும் வைப்பு முறைக்கு, ப்ரமச்சர்யம், க்ரகஸ்தம், சன்யாசம் வானப்ரஸ்தம் போன்ற நிலைகளுக்கு, உருவ வழிபாட்டில் குறிப்பிட்ட படிமம் ஒன்றுக்கு என ஷெளக்கத் கொடுக்கும் இன்டர்ப்ரடேஷன். இவை போக இப்பயணத்தில் அவரைத் தொடும் எதையுமே கூடவோ குறையவோ இன்றி ‘சரியான’ எல்லைக்குள் வைத்து பார்க்க முயலும் அவரது பார்வைக்கோணம் என இந்த நூலைத் தொகுப்பதே குரு நித்யா வழியாக ஷெளக்கத்  பெற்ற அறிதல் பார்வையே.

அடுத்ததாக இந்த நூலின் சிறப்பம்சம் நூல் நெடுக பெருகிப் பெருகி வந்துகொண்டே இருக்கும் ஆளுமைகளின் குணாதிசயங்கள். ஒரு பாபா அந்த மலையில் காலமெல்லாம் வெறும் மர உரி கோவணம் தரித்து, சொந்தமாக பயிரிட்டு அதை மட்டுமே உண்டு வாழ்ந்து போகிறார். மற்றோரு பாபா லட்சங்களில் பணம் சேர்த்து பாதை இல்லா இடங்களில் பாதை சமைக்கிறார். எவரையும் பார்க்க விரும்பாத பாபா ஒருவர். அவரை தவறுதலாக சென்று பார்த்துவிட்ட ஒரு காவல் அதிகாரியை கல்லை கொண்டு அடித்து கொன்று விடுகிறார். ராணா என்பவர் ஷெளக்கத்தை கண்டதும் வந்து விட்டீர்களா குரு தேவரே நான்தான் விவேகானந்தர் போன பிறவியில், நீங்கள்தான் பரமஹம்சர் போன பிறவியில். இந்த பிறவியிலும் உங்களை கண்டு விட்டேன். வாருங்கள் போய் இந்தியாவை புரட்டி போடுவோம் என்று கூப்பிடுகிறார் உண்மையாகவே. இப்படி பலப்பல ஆளுமைகள் நூல் நெடுக தோன்றி வந்துகொண்டே இருக்கிறார்கள்.

இவை போக இந்த நூலின் மற்றொரு தனித்தன்மை நூல் நெடுக வந்துகொண்டே இருக்கும் ‘ஒன்றின் இரு முகங்கள்’. இமயத்தின் தூய்மை அளவே தூசி பறக்கும் குப்பை கூளங்களும் காட்சியாகிறது. குளிர் வெட்டும் யமுனை வருணிக்கப்பட்ட அடுத்த பக்கம் அதன் வெந்நீர் ஊற்றுக்கள் அறிமுகம் ஆகிறது. தனது சிறிய குகைக்குள் இருக்கும் இடத்தை இந்த இருவருடனும் எலிகளுடனும் பகிர்ந்து கொள்ளும் பாபா. வாய்ப்புகள் இருந்தும் தங்க இடம் தராமல் வெளியேற்றும் ஆசிரமம். பைத்தியக்காரன் போல தோற்றம் ஆனால் அனைவராலும் போஷிக்கப்படும் பாபா. பித்தனா சித்தனா என வகை பிரிக்க முடியாத செருப்படி வாங்கி அமைதியாக நடந்து செல்லும் ஒருவன். தாழ்த்தப்பட்டடோருக்கான தனி கிருஷ்ணன் கோயில். எல்லோருக்கும் எப்போதும் வாசல் திறந்தே கிடக்கும் குருத்துவாரா, வாழ்நாளெல்லாம் இருக்கும் இடம் விட்டு எங்குமே போகாத, தன் முன் உள்ள எந்த எழிலையும் காண விரும்பாமல் கண்களை அவித்துக் கொள்ளும் ஃபல்ஹரி பாபா. திருமணமே செய்து கொள்ளாமல் இமயத்தொடரையே தனது காதலியாகக் கொண்டு ஆயுள் பரியந்தமும் அதில் அலைந்து திரிந்து திளைக்கும் நரேஷ் உத்ராகாண்ட் நெடுக ராம காதை சொல்லி வாழும் பெண், சோம்பேறி கணவருக்கு குடும்பத்துக்கு என உழைத்து உழைத்தே சாகும் கார்வாலி பெண்கள் என இத்தகு இருமைகளின் ஆடல் மேடையாக திகழ்கிறது இந்த நூலின் ஹிமாலயம்.

நூலின் தலையாய தருணங்கள் பலவற்றில் முதலிரண்டு என நூலாசிரியர் மிக அருகே காணும் முழு நிலவின் அழகையும், தபோவனத்தில் குரு நித்யாவையே மீண்டும் கண்டது போல எழும் உள மயக்கு சித்திரத்தையும் சொல்வேன்.  தனிப்பட்ட முறையில் என்னை கட்டிப்போட்டது குரு கோவிந்த் சிங் தனது பிறவிகளில் ஒன்றில் தவம் செய்த ஹேம் குண்ட் எனும் இடத்தில் அமைந்த குருத்துவாராவில், சீக்கியர்களின் புனித நூலுக்கு அவர்கள் கைங்கர்யம் செய்யும் காட்சி. அவர்களின் புனித நூலை நாள் முழுதும் உயிருள்ள குரு போலவே நடத்துகிறார்கள்.  இரவில் போர்த்தி விசிறி வீசி தூங்க வைத்து சத்தமின்றி அந்த அறை கதவை மூடி, கைங்கர்யத்தை நிறைவு செய்கிறார்கள்.

இப்படி இமயத்தின் எல்லா இடங்களும் சென்று பக்தி கொண்டு வணங்கி அவ்வனுபவதை இந்நூல்வழி பகிர்ந்திருக்கும் ஷெளக்கத் அவர்கள் பிறப்பால் ஒரு முஸ்லீம். மதங்கள் போட்டுவைத்திருக்கும் மதில்களுக்குள் சிக்காமல், அதன் சாரமான எல்லைகளோ தடைகளோ வரயரயோ அற்ற மெய்யியல் வானில் சிறக்கடிக்க எழுந்துவிட்ட பறவை.

இந்த எல்லா அனுபவங்களும் கால் நூற்றாண்டு பழையது. இன்று இப்படி ஒரு கலாச்சார முஸ்லீம் என்பதோ, அப்படிப்பட்ட ஒருவரின் இப்படிப்பட்ட உத்ராகண்ட் பயணம் என்பதோ சாத்தியமா என்று தெரியவில்லை. சுதந்திர இந்தியா அதன் தந்தையர் கனவிலிருந்து கைநழுவி இந்துத்துவ மதவாத அதிகார அரசியலின் யதார்த்தத்தில் விழுந்து விட்டது. பாரதம் நெடுகிலும் மத அரசியலின் சுவர்கள் எழுப்பப்பட்டு, பல்வேறு பிரச்சார வெறிகள் வழியே அது பலப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இந்த வரலாற்றுப் பிழைக்கு நாம் அளிக்கப்போகும் விலை இனி ஒருபோதும் நம்மால் மீண்டும் ஈட்டிக்கொள்ள இயலா ஒன்றாகவே இருக்கும். ஆக இன்றும் இனி வரப்போகும் சூழல்களிலும் துருவ மீன் போல நாம் தேற வேண்டிய ‘நமது’  பண்பாட்டு நிலையின் சாட்சியங்களில் ஒன்று இந்த நூல். Kv ஜெயஸ்ரீ அவர்களின் பணியில் அவர் என்றும் பெருமிதம் கொள்ளத்தக்க பணி இந்த மொழியாக்கம். நாம் இன்று நிற்கும் அரசியல் மற்றும் இன்னபிற லௌகீக இருளில் இருந்து ஆத்மீக ஒளிக்கு செல்ல ஒரு திசைகாட்டியே இந்த ஹிமாலயம் நூல். ஷெளக்கத் அவர்களுக்கு அன்பும் வணக்கமும்.

கடலூர் சீனு

ஹிமாலயம் வாங்க

முந்தைய கட்டுரைநற்றிணை யுகன் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைதன்மீட்சி- கடிதம்