உரை,கடிதங்கள்

மேடைப்பேச்சாளனாவது…

அன்புள்ள ஜெ,

ஒரு முறை சுஜாதா ஒரு நிகழ்ச்சியில் பேசிய பேச்சாளர் குறித்து எழுதும் போது ‘அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை  என்று சொன்னால் கூட மக்கள் சிரிக்கும் அளவுக்கு நிராயுத பாணிகளாக இருந்தனர்’ என்று எழுதினார். மேடை பேச்சு தரம் தாழ்ந்து போனதைத்தான் அப்படி கூறினார். மேடைப்  பேச்சு ஒரு நிகழ்த்து கலை. எழுத்தாளர்களுக்கு கொஞ்சம் சவாலானதும் கூட .ஆனால் உங்கள் சமீபத்திய உரைகள் அனைத்தும் அருமை.

நீங்கள் கொஞ்சம் பதட்டப்படுவதாக கூறியுள்ளீர்கள். எனக்கு தெரிந்தவரை பல ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் சிங்கப்பூரில் பேசிய காணொளி பார்த்தேன் தற்போது அதைவிட நன்றாகவே பேசுகிறீர்கள். சொல்லவந்த செய்தியை பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்ப்பவனே நல்ல பேச்சாளன். வெறும் அருவருக்கத்தக்க நகைச்சுவை சொல்லி பேசுவது பார்வையாளர்களை அவமதிப்பது அன்றி வேறில்லை .சில தகவல்களை  மாற்றி சொல்வதுபெரிய பிழை அன்று. அது பேசுகிற எல்லோருக்கும் நேர்வதே. உங்களை போன்றவர்கள் இது போன்ற விழாக்களில் தரமான உரையை தந்தால் தான் பின்னால் வருபவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள முயல்வார்கள். பார்வையாளர்களும் ரசனையை மாற்ற முயல்வர். மேடை பேச்சுக்களின் நிலை மாற இன்னும் நிறைய பேசுங்கள். நிறைய உரைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

மாறா அன்புடன் ,

செல்வா

பட்டுக்கோட்டை

***

அன்புள்ள ஜெ

உரை பற்றிய உங்கள் கட்டுரை கண்டேன். பெரும்பாலான தேர்ந்த உரைகளில் தேர்ச்சி தெரியும். அந்த தேர்ச்சியே அதற்கு ஒரு செயற்கைத்தன்மையை அளிக்கும். எனக்கு மிகத்தேர்ந்த சொற்பொழிவாளராக தெரிபவர் வைரமுத்து, ஆனால் நாம் எதிர்பார்க்காத எதுவுமே அவரிடமிருந்து வெளிவராது.

உங்கள் உரையில் எப்போதும் புதிய ஒன்றைச் சொல்கிறீர்கள். பெரும்பாலான உரைகளில் சிந்திப்பதன் தத்தளிப்பு அவ்வப்போது வெளிப்படுகிறது. ஆனால் ஓர் எழுத்தாளன் நம் கண்முன் சிந்திப்பதைப் பார்ப்பதென்பது அபூர்வமான அனுபவம். அதற்காகவே உரைகள் முக்கியமானவை.

இப்போது உங்கள் உரைகளை யூ டியூபில் கேட்கிறேன். அவற்றிலுள்ள படிப்படியான விரிவும், கட்டுக்கோப்பும் ஆச்சரியப்படுத்துகின்றன. நம்முடிய பொதுப்பேச்சில் இப்போது இல்லாமலிருப்பது இந்த கட்டுக்கோப்புதான். பேச்சுக்கு ஓர் அமைப்பே இருப்பதில்லை.

ஆனால் உங்கள் பேச்சுக்களை பலர் வெட்டி வெட்டி துண்டுகளாக அவர்களே வலையேற்றுகிறார்கள் என நினைக்கிறேன். உரைகளை வலையேற்றுபவர்கள் இப்படி வெட்டிவெட்டி வலையேற்றுபவர்களை யூடியூபில் புகார் சொல்லி நிறுத்தவேண்டும். ஏனென்றால் அப்படி வெட்டி ஒட்டும்போது உங்கள் உரையில் இருக்கும் அந்த கட்டமைப்பு சிதைந்து விடுகிறது. உதிரிக்கருத்துக்களாக அவை ஆகிவிடுகின்றன

செல்வக்குமார்

திருப்பூரில் பேசுவது…

முந்தைய கட்டுரைநீலத்தாவணி
அடுத்த கட்டுரைகங்கைநதிக்கான அகிம்சைப் போராட்டத்தின் முதல் சட்டவெற்றி