ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன – வாசிப்பனுபவம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் வாசித்த இ.பா அவர்களின் முதல் ஆக்கம் இது. எளிமையான மொழி நடையால் வாசிக்க மிகவும்இலகுவாகவும், உவகையாகவும் இருந்தது. சிக்கலான மனவோட்டங்களை, தத்துவார்த்த விசாரங்களைசிறகுகள் காற்றில் பறப்பது போன்ற மொழியில் எழுத முடியும் என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது.

ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்களுக்கிடையில் நடக்கும் உறவுச்சிக்கல்களை மையமாக கொண்டே கதைநகrகிறது. கதையின் நாயகன் அமிர்தம் டெல்லியில் மத்திய அரசாங்க அலுவலகத்தில் உயர் பதவிவகிக்கிறான். அவனது மனைவி திலகத்தின் வற்புறுத்தலின் பேரில் ஒரு நாடகம் பார்க்க செல்கிறான் அங்குபானுவை பார்க்கிறான். அவள் அவனது இளமை கால காதலி நித்யாவை போலவே இருக்கிறாள். நித்யாவுடனானகாதல் நாட்கள் நினைவேக்கமாக அவனுள் எழ ஆரம்பிக்கிறது. அங்கிருந்து அவன் மனதில் ஹெலிகாப்டர்கள்பறக்க தொடங்குகின்றன.

அவன் பானுவிடம் பழக ஆரம்பிக்கிறான் அதனால் அவனது மனைவிக்கும்அவனுக்கும் இடையில் பிரச்சனைகள் எழுகிறது. பானுவின் பேச்சு, நடவடிக்கைகள் அனைத்தும் அவனுக்குநித்யாவுடனான காதல் நாட்களை நினைவிலெழச் செய்கிறது. அவன் தனது இழந்த இளமையை பற்றிய கற்பனைகளிலேயே இருக்கிறான். அவன இளமை நாட்களின்துடிப்பை, ஆற்றலை பானுவுடன் பழகுவதின் மூலம் மீட்டு விடலாம் என்று கனவு காண்கிறான். ஆனால் அவனதுகனவுகளை சுமந்து பறந்த அந்த ஹெலிகாப்டர் ஒரு கட்டத்தில் கீழே இறங்குகிறது. அது என்றென்றைக்கும்கீழே இறங்கியதா அல்லது மீண்டும் பறந்திருக்குமா என்று வாசகர்கள் கற்பனை செய்து பார்க்ககூடிய ஒருநிகழ்வுடன் நாவல் முடிகிறது.

திலகம் கணவன் என்ற தனி மனிதனை விட, கணவன் என்ற ஸ்தானத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கிராமத்துபெண். நாவலில் அமிர்தம் சொல்வது போல ‘Established values’ ல் முரட்டுதனமான நம்பிக்கை வைத்துள்ளஅரைகுறை படிப்புள்ள பெண். அவர்கள் இருவரின் ரசனையும் ஒன்றுவதே இல்லை. அதனாலேயே அவனதுதிருமண வாழ்வு சலிப்புற்றதாகிறது. நித்யா நவீன விழுமியங்களை கொண்டிருக்கும் யதார்தமான, கூர்மையான பெண். திலகத்தின் அடுத்ததலைமுறைப் பெண். அவளை போன்ற பெண்ணையும் அவனால் கையாள முடிவதில்லை. அவளது சூட்சுமம், சமயோசிதம், பொறுமை அவனது ஈகோவை சீண்டி கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் அதுவே பிரிவில்முடிகிறது.

பானுவும், நித்யாவை போலவே நவீனப் பெண். இன்னும் இளமையானவள். இருவருக்கும் நிறைய பொதுவானவிஷயங்கள் இருக்கின்றன அதில் ஒன்று அவர்கள் இருவருக்கும் தந்தை இல்லை என்பது. தாயுடனேயேவளர்கிறார்கள். நித்யாவுக்கு அவள் தாயுடன் இருக்கும் நெருக்கம், பானுவுக்கும் அவளது தாய்க்கும் இல்லை. பானுவுக்கும் அவளது தாய்க்கும் இருக்கும் விரோதம் Electra complex க்கு கூறப்படும் கிரீக்க தொன்மத்தைஒட்டி சிந்திக்க தூண்டுகிறது (இ.பா வின் 1970 காலகட்ட எழுத்துகளில் இருத்தலியல் மற்றும் ப்ராய்டியதத்துவங்களின் தாக்கம் இருந்தது என்று ஜெமோ ஒரு பதிவில் குறிப்பிடுகிறார்). அவளுக்குள் ஒருநுண்மையான உள சிக்கல் இருப்பதை உணர முடிகிறது. தனது மகள் வயதிருக்கும் அவளுடன் பழகுவதில் அவனுக்கு தயக்கமும் அதே சமயம் இளமையாக உணர்கிறநிறைவும் இருக்கிறது. எனினும் பானுவும் அவனால் சமாளிக்க முடியாத பெண்ணாகவே இருக்கிறாள்.

இந்த மூன்று பெண்களுக்குள்ளும் எந்த கேள்விகளோ, சிக்கல்கள்களோ இல்லை. அமிர்தம் பல்வேறுவினாக்களால் குழம்பி அலைக்கழிகிறான். அவனது குழப்பஙகளும் கேள்விகளுமே அவனைகோழையாக்குகிறது. அவனை எங்கும் தொடர்ந்து நிலைகொள்ள விடாமல் செய்கிறது. நாவலில் பானர்ஜி (அமிர்தத்தின் நண்பன்-பெண்களை வெறுக்கும் நிரூபனவாத அறிவியல் மீது நம்பிக்கைகொண்ட அறிவுஜீவி) அமிர்தத்தின் குழப்பங்கள், பிரச்சனைகளையெல்லாம் கேட்டுவிட்டு. உன்னுடைய பிரச்சனை நீதான், என்கிறான். உன்னுடைய் பலவீனங்களை சமாளிப்பதற்கு பல தத்துவ காரணங்களை உற்பத்தி செய்து கொள்கிறாய்என்கிறான். இறுதியாக எதை செய்தாலும் நாணயமாக செய். அதுவே பிரதியட்ச உண்மை என்கிறான்.

இந்த நாவலில் அமிர்தம்(ஆண்களின்) அடிப்படை பண்பான ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு தாவுவதற்கு பலதத்துவ, இருத்தலியல் காரணங்களை தானே உற்பத்தி செய்து கொண்டு முழுவதுமாக அந்த பலவீனத்தை ஏற்றுகொள்ளவும் முடியாமல், அதனை கடக்கவும் முடியாமல் அல்லாடும் சித்தரமே காண்பிக்க படுகிறது. நாவலின் பெண்கள் அவர்களது அடிப்படை இயல்பிலிருந்து பெரிதும் மாறுபடாமலே அனைத்தையும்எதிர்கொள்கிறார்கள். அவன் மனதில் பறந்த ஹெலிகாப்டர்கள் அனைத்துமே ஆண்கள் இங்கு பல ஆயிரம்தத்துவங்களாலும், கோட்பாடுகளாலும் ஏற்படுத்தி கொண்டிருக்கும் குழப்பங்களே. அது எதுவாக இருந்தாலும்அடிப்படை இச்சைகளிலிருந்து நாம் சில பறத்தல்களை மட்டுமே செய்துள்ளோம், அந்த ஹெலிகாப்டர்கள்இன்று வரை சிறிது பறந்து நம் அடிப்படைகளுக்கே திரும்பி வந்துகொண்டுதான் இருக்கிறது என்பதையேகாட்டுகிறது.

அசோகமித்ரனின் பிரயாணம் சிறுகதையை பற்றிய கட்டுரையில் அந்த சீடன் அடையும் அபத்த தரிசனத்தைபற்றி ஜெ கூறியிருப்பார். இந்த நாவல் வாசகர்களுக்கு அளிப்பதும் ஒரு அபத்த தரிசனத்தையே. நாம் எத்தனைஆயிரம் ஆண்டுகள், எத்தனை தடைகளை கடந்து இந்த பூமியின் உச்ச உயிரினமாக பரிணமித்திருக்கிறோம். ஹெலிகாப்டர்கள் எல்லாம் கண்டுபிடித்து விட்டோம். ஆனாலும் நம் அடிப்படை இச்சைகளே இன்னும் நம்மை ஆட்கொண்டிருக்கின்றன என்று எண்ணி பார்க்கையில்எத்தனை சிறுமையை அடையச் செய்கிறது அவ்வெண்ணம். அதனை இவ்வளவு எளிமையான மொழியில்இனிமையான வாசிப்பனுபவமாக அளிக்க முடிந்ததே இ.பா அவர்களின் இலக்கிய மேன்மைக்கு சான்றாகும்.

அன்புடன்,

வேலாயுதம் பெரியசாமி

https://www.commonfolks.in/books/d/helicoptergal-keezhe-irangivittana

முந்தைய கட்டுரைபுதுமைப்பித்தன் மலிவுப்பதிப்பு -நற்றிணை யுகன் பேட்டி
அடுத்த கட்டுரைஅறம் ஒரு கனவு