பேரன்புக்குரிய ஜெ அவர்களுக்கு,
தருமபுரி மாவட்டம் அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2005-ஆம் ஆண்டு கல்வியை முடித்து அதே ஊரிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை பட்டப்படிப்பை முடித்து, முதுகலை பட்டப்படிப்பிற்காக கோயம்புத்தூர் சென்று ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்து அதனையும் நன்முறையில் முடித்து வேலைக்காக சென்னை, பெங்களூர், சேலம் என பல ஊர்களைச் சுற்றிய பின்பு இன்றும் பள்ளி நாட்கள் மீதும், பள்ளிச் சூழலின் மீதான காதல் சிறிதளவும் மாறவில்லை.
அரசுப் பள்ளிகளில் அன்றைய கால கட்டத்தில் கட்டுப்பாடுகள் என பெரிதாக இருந்ததில்லை எனினும் சுய கட்டுப்பாட்டுடன் கல்விகற்று ஆசிரியர்களிடம் எவ்விதமான தனிப்பட்ட முரண்பாடுகளும் இல்லாமல் வெளி வந்த மாணவர்களில் நிச்சயம் நானும் ஒருவன் என்பதை இன்று நினைக்கையில் எனக்கு வியப்பாகவும் உவகையாகவும் உள்ளது.
ஆசிரியர் பணி அறப்பணி என்பதில் மிகுந்த நம்பிக்கை உண்டு எனக்கு. ஆசிரியர்கள் எப்போதும் கடவுளுக்கு நிகரானவர்கள் என்பதை நான் என் தந்தை வாயிலாக கற்றுக் கொண்ட பெரும் பாடம். அப்படி என் ஆசிரியர்கள் அப்போதும் இப்போதும் உயர்ந்த நிலையிலேயே என் மனதில் குடிகொண்டுள்ளனர். ஒருமுறை ஆசிரியரின் அறிவுரையை கேட்ட என்னை பிரிந்து சென்ற என் நண்பனை நினைவு கூர்கிறேன். சில மாதங்களுக்கு பின்னரே மீண்டும் என்னிடம் அவன் பேசினான்.
விடுமுறை நாட்களில், மகிழ்ச்சியான தருணங்களில், மனம் உளைச்சல் அடையும் சந்தர்ப்பங்களில் என நான் தேடிச் செல்லும் இடம் பள்ளி தான் . அங்கு சென்று மரத்தின் நிழலிலோ அல்லது மைதானத்திலோ அமர்ந்து கொண்டு சில மணி நேரம் இருக்கும் போது என்னை முழுமையாக மீட்டுக் கொடுக்கும் இடமாக-நிலமாக இருந்து வந்துள்ளது. இப்போது அதேபோன்ற உணர்வு குக்கூ காட்டுபள்ளி நிலத்தில் எனக்கு கிடைக்கின்றது.
கொரொனா அலைகள் தொடங்கி கிட்டத்திட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிக்கு சென்று பெரிதாக நேரம் செலவிடவில்லை. நேரமின்மை என்று சொல்லிவிட முடியாது ஆனாலும் வேறு வழியின்றி அதையே காரணமாக எண்ணிக்கொள்கிறேன்.
என் பள்ளி நாட்களில் தமிழ் வகுப்பை மட்டும் ஏனோ மர நிழலில் மண் தரையில் அமர்த்தியே பாடங்களை கற்றுக் கொடுக்கும் வழக்கத்தை எங்கள் தமிழ் ஆசிரியர்கள் பின்பற்றினர். அறுபது மாணவர்களுக்கும் மேலாக இருக்கும் எங்கள் வகுப்பு. மரக்குச்சிகளை வைத்து நிலத்தை ஆராய்வது, எறும்புகளை வதைப்பது, தும்பி பிடிப்பது, அத்தும்பிகளை சிறு சிறு கற்களை தூக்க வைத்து தண்டிப்பது, மண்ணில் ஓவியங்கள் வரைவது, புற்களை நிலத்தை விட்டுப் பிரித்து எடுப்பது, வார்த்தை விளையாட்டு, புத்தக கிரிக்கெட் விளையாடுவது என பாடத்தை தவிர மற்ற செயல்களில் தீவிர ஈடுபாட்டுடன் இருந்துள்ளேன்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று மீண்டும் பள்ளியில் சுற்றித் திரிந்துக் கொண்டிருந்தேன் உறக்கத்தில். உறங்கும் போது வரும் கனவுகள் கடினமான மனங்களை மிக எளிதாக ஆக்கி விடுவதை உணர முடிந்தது.
எப்படி ஆரம்பித்தது என்று தெரியவில்லை, தமிழாசிரியர் ஒரு போட்டி ஒன்றை அறிமுகம் செய்தார். ஒரு சொல்லை சொல்வார், அதற்கு இணையாக நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு சொல்லை கூறவேண்டும். (உண்மையில் பள்ளி காலத்தில் இப்படி ஒரு போட்டியோ விளையாட்டோ நடந்ததில்லை). முடிந்த வரை நேர்மறை எண்ணங்களை விதைக்கும் சொற்களாக இருக்க வேண்டும். மேலும் அச்சொல்லைப் பற்றிய எங்கள் பார்வையை அவருக்கு ஒரு கடிதமாகவோ இல்லை மின்னஞ்சலாகவோ எழுதி அனுப்ப கேட்டுக் கொண்டார்.
எல்லோரும் ஒத்துழைப்பு தருவதாக கைகளை உயர்த்தி சம்மதம் தெரிவிக்க போட்டி தொடங்கியது. ‘அறம்’ என்ற சொல் ஆசிரியரின் குரலில் ஒலித்தது. தன்னிலை மறந்து நான் சில நொடிகள் உள்ளூர புன்னகைத்துக் கொண்டேன். அதற்கு இணையான சொல்லை முதலில் கூறிவிடுவது என்று முடிவு செய்து கையை உயர்த்தி ஐயா “அறம்-” என்பதற்குள் அறம் – ஆனந்தம் என்றான் என் அருகில் இருந்த நண்பன்.
பந்திக்கு முந்து பரீட்சைக்கு பிந்து என்ற கொள்கையுடன் வாழும் பல சக மாணவர்கள் உடனடியாக பதில் கூற ஆரம்பித்ததைப் பார்த்து நான் சில நிமிடங்கள் வாயடைத்து போனேன். சற்று சுதாரித்துக் கொண்டு நான் பதில் சொல்ல முற்பட்ட ஒவ்வொரு முறையும் எனக்கு முன்பாக ஒரு குரல் ஒலித்தது. அறம்-அடையாளம் என்றான் ஒருவன், அறம் – அடைக்கலம் என்றான் மற்றவன், அறம் – கல்வி, அறம் – கொடை, அறம் – கணிவு, அறம் – தைரியம், இன்பம், இல்லாமை, ஈகை, உண்மை, உழைப்பு, உயிர், உயர்வு என அடுத்தடுத்து இணைச்சொற்களின் மழை பெய்யத் தொடங்கியது.
இப்படியே சென்றுக் கொண்டிருந்த போட்டியை பார்த்தபோது எங்கே நான் கூற நினைத்து வைத்திருக்கும் சொல்லை வேறு யாரும் சொல்லி விடுவார்களோ என பதட்டம் கொண்டேன். அறம் – பொறுமை, அறம் – செம்மை, அறம் – மேன்மை, அறம் – உச்சம், அறம் – ஊக்கம், நிதானம், நிதர்சனம், நாணயம், நம்பிக்கை, பணிவு, பாசம், செயல், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, துணிவு, அன்பு, அடக்கம், முயற்சி, தெளிவு என பட்டியல் நீண்டுக் கொண்டே செல்ல நான் ஒரு கட்டத்தில் சோர்வடைந்தேன்.
எனக்கான வாய்ப்பு கிடைக்குமா என்ற ஐயமும் நான் சொல்லும் போது ஆசிரியரின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் பெருகியவண்ணம் இருந்தது.
அறம் – கர்ஜனை என்று கம்பீரமாக ஒருவன் உரக்க கூற, அவனைக் கடந்து அறம் – ஜெயமோகன் என்றான் ஒருவன் மேலும் உயர்ந்த குரலில். அறம் – நயன்தாரா என்ற ஒருவனை ஆசிரியர் அதட்டினார், என் குரல் ஒலிக்கவே இல்லை என்பதை அப்போது தான் உணர்ந்தேன். என்னை அழைத்து ஆசிரியர் கேட்க மாட்டாரா என்ற ஏக்கத்துடன் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தேன். அவர் செவிகளை என் குரல் எட்டவில்லை என்பதும் அவர் பார்வையில் நான் விழவே இல்லை என்பதனையும் கண்டு கொண்டேன்.
அடப்போங்கடா என்று கட்டெறும்பு ஒன்றை சீண்டத் தொடங்க அறம் – கருணை என்று ஒரே நேரத்தில் இரண்டு குரல்கள், நான் மிரண்டு போனேன். சக மாணவர்களின் சொற்கள் அறம் – அர்ப்பணிப்பு, ஆற்றல், ஆக்கம், ஏற்றம், வெற்றி, வெளிச்சம், போராட்டம், ஒற்றுமை, தாகம், தவிப்பு, ஞானம், தாய்மை, ஒளி, கடவுள், வானவில், தேடல், நேர்மை, அற்புதம், தடம், யாகம், மருத்துவம், புன்னகை, அறம் – தர்மம் என ஒலித்துக் கொண்டே இருந்தது.
சட்டென்று கனவு கலைந்து எழுந்து அமர்ந்து கொண்டு அறம் என்ற சொல்லிற்கு இணைச் சொல்லை ஆசிரியரிடம் நான் பதிவு செய்யவில்லையே என்ற உணர்வுடன் கடிகாரத்தை பார்த்தேன், மணி அதிகாலை 3.55. அறம் – ஜெயமோகன் என்று ஒரு நண்பன் கூறியது நினைவிற்கு வந்தது.
வெண்முரசில் – போருக்கு செல்வதற்கு முன் வெற்றி சூழ்க என ஆசி கேட்கும் சகுனியிடம் ராஜமாதாவாக உறுதியாக உணர்ச்சி மிகுதியாக காந்தாரி சொல்லும் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.
“அறம் வெல்லும், அறம் வெல்லும், அறமே வெல்லும்”
“அறம் – பேரழகு”.
நன்றி கலந்த பேரன்புடன்
இரா.மகேஷ்