உரை -கடிதங்கள்

திருப்பூரில் பேசுவது…

அன்புள்ள ஜெ

உங்கள் உரைகளை யூடியூபில் கேட்டுக்கேட்டு பழகிவிட்டிருக்கிறேன். ஆகவே உங்கள் பிரச்சினைகள் எனக்கு பெரிய சிக்கலாகத் தோன்றவில்லை. ஆனால் தொடர்ந்து சொற்களை நீங்கள் முடிக்காமல் விழுங்குவது நான் உங்கள் உரைகளைப் பரிந்துரை செய்த அனைவருக்குமே சிக்கலாகத்தான் இருந்தது. இந்த வயதுக்குமேல் இனிமேல் பயிற்சி எடுத்துக்கொண்டு மாறுவதெல்லாம் சாத்தியமே அல்ல. அதோடு பேச்சு உங்கள் துறையும் அல்ல. உங்களைக் கேட்க வருபவர்கள் ஆவேசமான பேச்சை கேட்க வரவில்லை. நீங்கள் சொல்வதுபோல ஒரு மூளைச்சீண்டலுக்காக, சொந்தமாக யோசிக்க ஒரு தொடக்கத்துக்காகத்தான் வருகிறார்கள். விவாதிக்கத்தான் வருகிறார்கள். ஆகவே இந்த உரைகளே முக்கியமானவை என நினைக்கிறேன்.

ஜெயகர் ஜான்

***

அன்புள்ள ஜெ

நான் உங்கள் உரைகளை கேட்கும்போது எனக்கு சுவாரசியமாக இருப்பதே உங்கள் தாவிச்செல்லும் போக்குதான். விஸ்தாரமாக ஆலாபனை செய்யலாம். ஆனால் என்போன்றவர்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். எனக்கு ஏன் மேடைப்பேச்சுகள் சலிப்பூட்டுகின்றன என்றால் அவை மிகமிக மெல்ல நகர்கின்றன. பேச்சாளர் பேசிக்கொண்டிருக்கையிலேயே நான் அவர் சொல்லவந்ததை ஊகித்து மேலே சென்றுவிடுவேன். ஆகவே அரைக்கவனமாகவே இருப்பேன்

அதோடு ஓர் உரை உரத்த குரலில் ஆணித்தரமாக காதில் விழுந்தால் உண்மையில் நம் கவனம் கம்மியாகிவிடுகிறது. உரையாடல் மாதிரி இருந்தால்தான் கூர்ந்து கவனிக்க முடிகிறது. உங்கள் உரையை நான் அப்படித்தான் பார்க்கிறேன். நீங்கள் சொல்ல வருவதென்ன என்று புரியவேண்டும் என்றால் ஒரு வரி விடாமல் கேட்கவேண்டும். நீங்கள் சொல்லிச் சொல்லி உருவாக்கும் ஸ்ட்ரக்சர் புரியவேண்டும். அது  எழுந்து வரும்போது நம் மண்டைக்குள் நிறைந்திருக்கும். நாம் சிந்திப்பதையெல்லாம் அப்படியே கலைத்துவிடும். நாம் யோசித்து யோசித்து அதை ஒன்றாக்கவேண்டும்

நெல்லை உரையில் ஒன்று சொல்கிறீர்கள். நம் மரபிலக்கியம் என்பதேகூட பத்தொன்பதாம் நூற்றாண்டில் நாம் கண்டுபிடித்து, தொகுத்து உருவாக்கிக் கொண்ட ஒன்றுதான் என்று. என்னை திகைக்கவைத்த பார்வை அது. ஒரு மாபெரும் கலெக்டிவ் ஃபிக்‌ஷன் அது என நினைக்கையில் மெய்சிலிர்க்கிறது. யோசிக்க யோசிக்க ஆச்சரியமாக விரிகிறது

ஜெயக்குமார் எம்

மேடைப்பேச்சாளனாவது…

முந்தைய கட்டுரைசைதன்யாவின் சிந்தனை மரபு- கடிதம்
அடுத்த கட்டுரைபுதுமைப்பித்தனின் பெண்கள்