செயல் தீவிரம் தந்த புத்தகங்கள் எண்ணிக்கை மிக குறைவுதான். படித்த புத்தகங்கள். பல நூறெல்லாம் கிடையாது. பாடமாக படித்ததே போதுமானதாகவோ, இன்னும் பயன்படுத்தாகவோ தான் இருக்கின்றன. 2021_2022 ஆண்டு பல மாச்சரியங்களை எனக்கு நானே நிகழ்த்திக்கொள்ளும் ஒர் மனநிலையை வழங்கிய புத்தகம். குமரித்துறைவி.
அதை தூரம் நான் இந்த வார்த்தைகளை உதிர்த்தே விட்டேன்..மதுரையின் ,அதன் பண்பாட்டின், இயங்குதலின்,வரலாற்றின் ,தொன்மத்தின் மேல் பொறாமை கொண்ட எழுத்தனின் எழுத்து. குமரித்துறைவி, இருப்பினும் நான் பரிந்துரைக்கிறேன்.மகள்களை பெற்ற அப்பன்களும்,தொன்மம் துலக்கி ஆகி கொள்பவர்களும் வாசித்து மகிழ்க. குமரித்துறைவி.
இனியவள் ,வெண்பா சார்பாக 12 குமரித்துறைவி நூல்கள் பெண் தொண்டர்களுக்கு வழங்கபட்டன.
குறித்த நேரத்தில் புத்தகம் அனுப்பிய விஷ்ணுபுரம் மீனாம்பிகைக்கும், எண்ணங்களை வண்ணங்களாக்கும் இளவரசிக்கும் நன்றி.
பொறாமை நல்லது.
மீனாட்சி திருகல்யாணம் முன்னாளில் புத்தகம் வாசித்து மறுநாள் பூப்பல்லக்கு நகர்வலம் பார்ப்பதாக திட்டம் தருகிறான் அருண்.
புத்தகம் வாசித்து கெட முடியுமா என்ன?குமரித்துறைவி வாசிப்புக்கு பின் என்பதாக இவ்வாண்டு முடிந்திருக்கிறது.
“நான் இப்போதெல்லாம் தனிமையிலிருக்கையில் எல்லாம் எண்ணி எண்ணி புன்னகைத்து கொண்டிருக்கிறேன். சிற்றாடை கட்டிய எந்த சிறுமியை கண்டாலும் மெய்ப்பு கொண்டு உள்ளத்தால் வணங்குகிறேன். கற்பனையால் முத்தமிட்டு முத்தமிட்டு பித்து கொள்கிறேன். பெண்ணழகென்று அல்லாமல் இங்கே பிரபஞ்ச சாரம் எப்படி வெளிப்பட முடியும் என்று எண்ணி நெஞ்சில் கை வைத்து விம்மி கண்ணீர் விடுகிறேன்”. (குமரித்துறைவி. பக்கம் 174)
கார்த்திக் பாரதி
***
அன்புள்ள ஜெ
நான் என்னை இப்படி அறிமுகம் செய்து கொள்கிறேன். உங்களை தமிழ்ப்பண்பாட்டுக்கு எதிரி, நீங்கள் மலையாளி என்று என்னிடம் பலர் சொன்னார்கள்.சத்தியமாக, நானும் கடுமையான காழ்ப்புடன் இருந்தேன். இணையத்தில் வாய்ப்பிருக்கும்போதெல்லாம் வசைபாடுவேன். பெரும்பாலும் எல்லா பதிவுகளிலும் வசை பின்னூட்டமும் இட்டிருக்கிறேன். ஏனென்றால் நான் என்னை தமிழன் என்றும் தமிழ்ப்பெருமிதம் கொண்டவன் என்றும் எண்ணிக்கொண்டிருந்தேன். நான் உங்களுடைய ஒரு சில கட்டுரைகள்,அதுவரை சில உரைப்பகுதிகள் வழியாகவே அறிமுகம் செய்துகொண்டிருந்தேன். பிறகு கொஞ்சம் படிக்க ஆரம்பித்தேன். என்னை அறியாமலேயே என் மொழிநடை மாறியது. என் எழுத்தும் மாறியது.
இரண்டுநாட்களுக்கு முன் குமரித்துறைவி வாசித்தேன். அதுதான் பிரேக்கிங் பாயிண்ட். என் நண்பர்களிடம் சொன்னேன், தமிழ்ப்பண்பாட்டில் கனிந்த படைப்பு இது. இதை எழுதும் ஒரு படைப்பாளியை எப்படி தமிழ்விரோதி என்கிறீர்கள்? நீங்கள் தமிழ்ப்பெருமிதம் பேசுபவர்களாக கொண்டாடுபவர்களுக்கு தமிழ்ப்பண்பாடு பற்றி அடிப்படையறிவே இல்லை என்று சொன்னேன். ஆனால் அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. நீங்கள் மலையாளி என்பதையே சொல்லிக்கொண்டிருந்தார்கள். நானும் விட்டுவிட்டேன். அவரவர் தருணங்களில் கண்டுகொள்ளவேண்டியதுதான்.
குமரித்துறைவிக்கு நன்றி
அருள் முருகானந்தம்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
https://www.vishnupurampublications.com/
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307