கல்விக்கூட ஒழுங்கும் பஞ்சாயத்துக்களும்

அன்புள்ள ஜெ

உங்கள் கல்விக்கூடம் பற்றிய கட்டுரை, அதையொட்டி உருவான முகநூல் வம்பு எல்லாம் பார்த்திருக்கிறேன். (உங்களை கைதுசெய்யவேண்டும் என்றுகூட ஒரு முகநூல் அறிவுஜீவி அறைகூவியிருந்தார். பள்ளி ஆசிரியர்)

இந்தச்செய்தியை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். இதைச்சார்ந்து ஒரே எதிர்ப்புக்குரல் இணையத்தில். ஊராட்சித்தலைவர்களுக்கு என்ன அதிகாரம் இதற்கு, மயிர் என்ன பெரிய பிரச்சினையா என்றெல்லாம் எழுதித்தள்ளுகிறார்கள்.

கௌரிசங்கர்

***

அன்புள்ள கௌரிசங்கர்,

மயிர், ஆடை போன்றவை வெறும் தோற்றம் மட்டுமல்ல. அவை ஒருவகை அறிவிப்புகள், வெளிப்படுத்தல்கள். நான் இப்படியானவன், என் உளநிலை இப்படி என்னும் பிரகடனங்கள். ஆகவேதான் உலகம் முழுக்க உடை, தோற்றம் ஆகியவை சார்ந்த கட்டுப்பாடுகள் இல்லாத நிறுவனங்களே இல்லை. கல்விநிறுவனங்கள், தொழில்நிறுவனங்கள், பொதுநிறுவனங்கள் எங்கும் அதற்குரிய ஆடைக்கட்டுப்பாடுகள், நெறிகள் உண்டு.

அமெரிக்காவுக்குச் செல்கிறேன். அங்கே எந்தெந்த நிகழ்வுகளில் கோட் கண்டிப்பாக அணியவேண்டும் என்று தெளிவான வரையறை உள்ளது. கேட்டு தெரிந்துகொண்டு கோட் போட்டுக்கொண்டுதான் செல்கிறேன். இந்தியாவில் டிஷர்ட் போட்டுக்கொண்டு சில மேடைகளில் பேசியிருக்கிறேன். என் வெளிநாட்டு நண்பர்கள் சிலர் அது முறையல்ல என்று சொன்னதை ஒட்டி இப்போது மாற்றிக்கொண்டுவிட்டேன். ஏனென்றால் அது ஓய்வுநாளுக்குரிய உடை.

நான் தங்கும் சில நட்சத்திரவிடுதிகளில் வண்ணம்பூசப்பட்ட பங்கி தலைக்கு அனுமதி இல்லை. அப்படி முடிவைத்திருந்தால் கண்டிப்பாக தலையை தொப்பியால் மறைத்திருக்கவேண்டும். ஷூபோட்டாகவேண்டும் என்னும் நிபந்தனை கொண்ட விடுதிகள் உண்டு. காலர் இல்லாத டிஷர்ட் அனுமதிக்கப்படாத இடங்கள் உண்டு.

உடை என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை அல்ல. எங்கும் எப்போதும் அப்படி இருந்தது இல்லை. எவரும் தங்கள் வாழ்க்கையில் எந்நிலையிலும் அப்படி வாழ்வதுமில்லை. அப்படிச் சொல்பவன் சிந்திக்கும் பழக்கமில்லாதவன் மட்டுமே. உடை என்பது சமூக அடையாளம், சமூகத்துக்கு ஒரு தனிமனிதன் அளிக்கும் செய்தி.

இந்தியாவின் எல்லா அரசுநிறுவனத்திலும் உடைக்கட்டுப்பாடுகளும் வழிகாட்டுநெறிகளும் உண்டு. ஒருவர் மிகவும் தனித்துத் தெரியக்கூடாது, பொறுப்பற்றவராகத் தெரியக்கூடாது, அன்னியராகத் தெரியக்கூடாது என்பதே அந்த உடைக்கட்டுப்பாடுகளின் பொதுநெறி.

அதேபோல கல்விநிலையத்தில் ஒருவர் தன்னை தனித்து காட்டிக்கொள்ளக் கூடாது. கல்விநிலையம் அதற்கான இடமல்ல. அனைவரும் ஒன்றாக தெரியவேண்டிய இடம். அதற்காகவே சீருடைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அங்கே ஒருவர் தன்னை கல்விநிலையத்தின் நெறிகள், நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டவராக இருக்கவேண்டும். அவ்வாறுதான் தன்னை வெளிப்படுத்தவேண்டும்.

ஏன்? ஒரு கல்விநிலையத்தில் சில ஆயிரம் பேர் பயிலக்கூடும். சராசரியாக ஐம்பது பேருக்கு ஓர் ஆசிரியரே இங்கே சாத்தியம். ஐம்பது தனிநபர்களை ஆசிரியர் என்னும் தனிநபர் அணுகி ஆராய்ந்து, புரிந்துகொண்டு, மதிப்பிட்டு, ஒவ்வொருவருக்குமான நடைமுறையை வகுத்துக்கொண்டு பழக முடியாது. மாணவர்கள் என்பவர்கள் ஒன்றாக, ஒரு பொது அடையாளத்துடன் இருந்தால் மட்டுமே ஆசிரியர் கல்விகற்பிக்க முடியும். கல்விநிலையங்களின் இயங்குமுறையே அதுதான். ஆகவேதான் மாணவர்களை ஒரே திரளாக ஆக்கும் உடல்பயிற்சிகள், சீருடைகள் உலகமெங்கும் அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறையிலுள்ளன. இது எளிமையாக யோசித்தாலே புரியும் விஷயம்.

இதைச் சொல்பவர்களிடம் ஓர் ஆசிரியர் அப்படி பங்கிவண்ணத்தலை, குண்டலம், பல்வேறு ஊசிகள் மணிகள் கோக்கப்பட்ட முகம், கிழிந்து தொங்கும் பளிச்சிடும் ஆடைகள் என வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்று கேளுங்கள். மாணவர்கள் வரலாம், ஆசிரியர்கள் செல்லக்கூடாதா என்ன? பத்து நிமிடத்தில் அரசு நடவடிக்கை எடுக்கும், தெளிவான விதிகள் உள்ளன.

பங்கித்தலை அமெரிக்காவின் மோஸ்தர்களிலொன்று. ஆனால் அது தன்னை சமூக அன்னியனாகவும், கட்டற்றவனாகவும், முறைமைகளையும் மரபுகளையும் மீறிய வாழ்க்கை கொண்டவனாகவும் காட்டிக்கொள்வதற்குரியது.  எந்த நல்ல பள்ளியிலும் மாணவர்கள் அப்படி வர அனுமதிக்க மாட்டார்கள். தன் பையனுக்கு பார்பர் தவறுதலாக ஒரு கோடு தலையில் போட்டுவிட அதனால் பத்துநாள் அவன் பள்ளிக்குச் செல்லமுடியாமலிருந்ததைப் பற்றி நண்பர் சிவா கிருஷ்ணமூர்த்தி (லண்டன்) அண்மையில் எழுதியிருந்தார்.

உலகமறியாத நம்மூர் முதிரா அறிவுஜீவிகள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அனைவரும் பங்கித்தலையுடன் அலைகிறார்கள், அங்கெல்லாம் எவரும் எதையும் செய்ய அனுமதி உள்ளது, அதுதான் தனிமனித சுதந்திரம் என அசட்டுத்தனமாக நம்பி இங்கே முகநூலிலும் ஊடகங்களிலும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்கா என்றல்ல, எந்த நாகரீக நாடும் முதலில் கவனிப்பது பொதுநாகரீகத்தைத்தான். ஒருவன் தன் தனிப்பட்ட சுதந்திரத்தால் ஒரு பொது அமைப்பின் செயலை குலைப்பான் என்றால் அது பெரிய குற்றமாக கருதப்படும். சுற்றுலாத்தலங்களில் இங்கே இளைஞர்கள் வெறிகொண்டு கூச்சலிடுகிறார்கள். சுதந்திரமாக இருக்கிறார்களாமாம். அமெரிக்கா என்றால் சிறை உறுதி. அங்கே அமைதியாக ஒரு சுற்றுலா மையத்தில் இருக்க விரும்புபவர்களின் உரிமையை பாதுகாக்கவே அங்குள்ள அரசு முயலும்.

கிராமப்புறக் கல்விநிலையங்களில் கட்டுப்பாடின்மை பெருகி வருவதை நான் சொல்லியிருந்தேன். அது என் நேரடி அனுபவம், என் வாசகர்களின் நேரடி அனுபவம். மாணவர்களில் ஒரு சாராரின் நடவடிக்கைகளை ஆசிரியர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆசிரியர்கள் கேலியும் கிண்டலும் செய்யப்படுகிறார்கள். பள்ளிகளில் மது அருந்தும் வழக்கம் மிகுந்துள்ளது. விளைவாக அரசுப்பள்ளியில் படிக்கவரும் ஆர்வமுள்ள ஏழை மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதுதான் இன்றைய சூழல்.

கட்டுப்பாடில்லாத மாணவர்களின் தனிப்பட்ட சுதந்திரம் பற்றி இங்கே  ‘அறிவுஜீவிகள்’ பேசுகிறார்கள். படித்து வாழ்க்கையில் முன்னேற விரும்பும் ஏழை அடித்தள மாணவர்களின் கல்வியுரிமை பற்றி நான் பேசுகிறேன். அரசுப்பள்ளியையே நம்பியிருப்பவர்கள் ஏழை மாணவர்கள், அவர்களின் கல்வி மறுக்கப்படலாகாது என்று நான் சொல்கிறேன். அதற்கு கல்விக்கு தடையாக இருக்கும் மாணவர்கள் கட்டுப்படுத்தப்பட்டாகவேண்டும்.

அந்த களயதார்த்தம் பல ஊர்களில் பொதுவாகவே தெரிய வந்துள்ளது. கல்வித்துறையால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்பதை உணர்ந்த பின்னரே மக்கள்பிரதிநிதிகளும் மக்கள் அமைப்புகளும் களமிறங்குகிறார்கள். அது இன்னும் நிகழவேண்டும். தங்கள் ஊர்களில் கல்விநிலையங்கள் முறையாக நடக்கின்றனவா என ஊராட்சிமன்றங்கள் கண்காணிக்கவேண்டும். அது அவர்களின் கடமை, உரிமை.

பஞ்சாயத்து போன்ற அமைப்புகள் உருவாவதே உள்ளூர் நிலவரத்தை உணர்ந்து நிர்வாகம் செய்யத்தான். அங்குள்ள நிலைமை அவர்களுக்குத்தான் தெரியும். அவர்களின் பிள்ளைகள் அங்கே படிக்கிறார்கள். அதற்கு தேவையானவற்றை அவர்கள் செய்கிறார்கள்.

பிரச்சினை முடி அல்ல என எவருக்கும் தெரியும். பிரச்சினை கல்விநிலையங்களிலுள்ள கட்டுப்பாடின்மைதான். முடி அதன் அடையாளம். அதை வெட்டுவது என்பது அதற்கு எதிரான நடவடிக்கை. அதில் மக்கள் பிரதிநிதிகள் ஈடுபடுவது வரவேற்புக்குரியது. பல ஊர்களில் பள்ளிகளில் மது அருந்தும் மாணவர்களை பஞ்சாயத்துகள் பிடித்து நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளன.

கல்விநிலையங்களில் கட்டுப்பாடின்மை பற்றி நான் எழுதியபோது ‘ஏழை மாணவர்களை அவதூறு செய்கிறேன்’ என ஒரு கூட்டம் அயோக்கியர்கள் நெஞ்சறிந்தே பொய்க்கூச்சலிட்டனர். பொதுப்பேருந்தில் ஒரு கூட்டம் பள்ளிமாணவர்கள் குடிக்கும் செய்தி வந்தபோது ‘அது அவர்களின் உரிமை’ என அதேபோல மனசாட்சியே இல்லாமல் சொல்கிறார்கள்.

அவர்களில் ஒரு சாரார் மேட்டிமைவாதிகள். டையின் முடிச்சை சரியாகப் போடாமலிருந்தால் நடவடிக்கை எடுக்கும் உயர்தரப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்துவிட்டு, பல்லாயிரம் ரூபாய் அதற்காக கட்டணம் கட்டிவிட்டு, ஒவ்வொருநாளும் அவர்களின் மதிப்பெண்களை கண்காணிக்கும், அதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கும் கூட்டம். முகநூலில் பரந்த உள்ளம் கொண்ட முற்போக்கினர் என தங்களுக்கு ஓர் அடையாளத்தை ஈட்டுவது மட்டுமே இவர்களின் எண்ணம். ஏழைக்குழந்தைகள் எக்கேடு கெட்டால் என்ன என எண்ணுபவர்கள். அரசுப்பள்ளியை நம்பியே படிக்கவரும் குழந்தைக்கு படிக்கமுடியாத சூழல் இருந்தால் இவர்களுக்கு எந்த நட்டமும் இல்லை.

இன்னொரு கூட்டம், ஆசிரியர்கள். இவர்கள் தங்களை மாணவர்கள் மேல் பெரும்பற்று கொண்ட, மனிதாபிமான ஆசிரியர்கள் என சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் வெறும் தொழிற்சங்கவாதிகள். பெரும்பாலான தொழிற்சங்கவாதிகள் போல தங்கள் கூட்டுச்சுயநலம் மட்டுமே இவர்களின் இலக்கு. கல்வித்துறையை ஆக்கபூர்வமாகச் செயல்படவைக்க அரசு முயன்றால் இவர்களுக்கு கொஞ்சம் பணிச்சுமையும், நெருக்கடிகளும் வரும். ஆகவே கூச்சலிடுகிறார்கள்.

(அரசுமாணவர்களின் சுதந்திரம் பற்றி பேசி என்னை கண்டித்த ஒருவர் பள்ளி ஆசிரியர், அவருடைய பெண் எங்கே படித்தாள் என விசாரித்தேன். உயர்தர கான்வெண்டில். கட்டுப்பாடுகளுக்குப் பெயர்போன நிறுவனத்தில். அவருடைய வருமானத்துக்கு அந்த பள்ளி மிகச் செலவேறியது. அவருடைய மகள் நல்ல கல்விநிலையை அடையவும் முடிந்தது. இவருக்கு இப்போது முற்போக்கு முகம் வேண்டும்)

ஏன் நான் சொல்வதற்கு மிகையான எதிர்வினை எழுகிறதென்றால் என் இணையதளம் ஒரு பெரிய ஊடகம், இது அதிகார மட்டங்களிலும் கவனிக்கப்படும் என்பதனால்தான். அது ஊழியர்களின் பதற்றம், அரசியல் பதற்றம். மற்றபடி அதற்கும் கல்விக்கும் சம்பந்தமில்லை.

வீடுதேடி கல்வி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டபோது (அதைப்பற்றி நான் முன்னரே எழுதினேன் என்பதனால்) அதை கடுமையாக எதிர்த்தனர் ஒரு சாரார். ஆர்.எஸ்.எஸின் திட்டம் அது என்றும் இந்துத்துவர் புகுந்துவிடுவார்கள் என்றும் கம்யூனிஸ்டு கட்சியே சொன்னது. நல்லவேளையாக அரசு அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.

இன்று அந்தத் திட்டம் மிகமிக வெற்றிகரமாகச் செயல்படுகிறது. இந்த அரசுக்கு நற்பெயர் வாங்கித்தரும் திட்டங்களில் ஒன்று. பிற மாநிலங்களும் அதை நகல் செய்கின்றன. நெல்லை, திருப்பத்தூர் புத்தகக் கண்காட்சிகளில் எல்லாம் அந்த திட்டத்தின் அரங்குகள் இருந்தன. மலைவாழ் மக்கள் நிறைந்த திருப்பத்தூரில் அந்த திட்டம் எப்படி மிகப்பெரிய அளவில் பங்காற்றியது என மாவட்ட ஆட்சியர் சொன்னார்.

ஆரம்பக் கல்வியில் பஞ்சாயத்துகளின் பொறுப்பு என்பது புதிய விஷயம் அல்ல. நம் ஆரம்பக்கல்வி முழுக்கமுழுக்க பஞ்சாயத்துக்களின் கட்டுப்பாட்டில் இருந்த காலம் இருந்தது. சென்ற இருபதாண்டுகளாகவே அந்தக் கண்காணிப்பு இல்லாமலாகியது. கல்விநிலைய ஒழுங்கு, சத்துணவு தரம் ஆகியவற்றில் பஞ்சாயத்தை ஆளும் மக்கள் பிரதிநிதிகள் நேரடியாக தலையிடவேண்டும். அது அவர்களின் கடமை.

கடைசியாக ஒன்று, அமெரிக்காவிலும் அப்படித்தான். ஆரம்பக் கல்வி அந்தந்த ஊர் கவுண்டிகளின் கண்காணிப்பிலேயே உள்ளது.

ஜெ

https://tamil.oneindia.com/news/thanjavur/school-students-attacked-teacher-near-kumabakonam-359060.html

முந்தைய கட்டுரைகங்கைநதிக்கான அகிம்சைப் போராட்டத்தின் முதல் சட்டவெற்றி
அடுத்த கட்டுரைசிறகு- கடிதம்