நாளை திருப்பூரில் உரையாற்றுகிறேன். வழக்கம்போல நிறைய நண்பர்கள் முன்பதிவுசெய்திருக்கிறார்கள். பலர் வெளியூரிலிருந்து வருகிறார்கள். எனக்கு உரையாற்றுவதன் பதற்றம் உருவாகிவிட்டது.
திருப்பூர் உரைநிகழ்வின்போது விஷ்ணுபுரம் நூல்கள் அரங்கில் கிடைக்கும்.
சில நண்பர்கள் என்னிடம் கேட்டனர், அருண்மொழி வரவில்லையா என்று. அருண்மொழிக்கு இன்று (9-4-2022)ல் சென்னையில் அவள் நூல் பற்றிய விமர்சனக் கூட்டம். இது முற்றிலும் வேறு குழுவினரால் அமைக்கப்படுகிறது. கிளம்பிச் சென்றிருக்கிறாள். நண்பர்களிடம் சொன்னேன், நண்பர்களே இரண்டு பாம்புகள் சேர்ந்து இரைதேடுவதில்லை (தேடினால் ஒன்றையொன்று விழுங்கிவிடும்)
இன்னொரு நண்பர் கேட்டார், வழக்கமான கேள்விதான். “எப்படி ஓர் உறையில் இரண்டு வாள்கள் இருக்க முடியும்?” எங்கள் வீடு வாளுறை அல்ல, வாள்கள் வைக்கப்படும் பக்கெட் என்று அதற்குப் பதில் சொன்னேன்.
உரையை தயாரித்தாகவேண்டும். ஆனால் ரொம்பவும் தயாரித்தால் ஒப்புவித்தலாக ஆகிவிடும். சட்டென்று உரையாற்றுவது பற்றிய பதற்றம் ஏற்பட்டு தேவையில்லையோ என்னும் மனநிலை. ஆனால் டிக்கெட் போட்டு ஜனங்கள் வாங்கிவிட்டார்கள். வேறுவழியில்லை. உரையாற்றியே ஆகவேண்டும்.
என் உரைகளை திரும்ப ஆங்காங்கே பார்த்தேன். ஏன் இப்படி கடைசி வார்த்தைகளை விழுங்குகிறேன், ஏன் குரல் இப்படி உடைந்திருக்கிறது, ஏன் முக்கியமான சொற்களைக்கூட குளறுபடியாக உச்சரிக்கிறேன்? திருத்திக்கொள்ளலாம் என நினைத்தேன். பிறகு கி.ராஜநாராயணன் கதை நினைவு வந்தது
பெரிய நாயக்கர் கோடீஸ்வரர், ஆனால் எப்போதும் அழுக்கு அரைத்துண்டுதான் ஆடை. கேட்டால் “தம்பி நம்மூரிலே நம்ம ஐவேஜு என்னன்னு எல்லாருக்கும் தெரியும். எதுக்கு வெள்ளவேட்டி?” என்பார். ஆனால் வெளியூரில் பார்த்தால் அப்போதும் அதே அழுக்குத்துண்டு. அதற்கு பதில் சொன்னார். “தம்பி, இந்தூர்ல நம்மள யாருக்கு தெரியும்?”
அதேதான். என்னால் நன்றாக எல்லாம் பேசமுடியாது. இந்தப்பேச்சுக்கு பழகியவர்கள் கொஞ்சபேர் உண்டு. அவர்களுக்கு என் ஐவேஜு தெரியும். தெரியாத கொஞ்சபேர் வந்து திகைத்து அமர்ந்திருப்பார்கள். அவர்களைப்பற்றி நமக்கென்ன கவலை?