லோத்தல், தமிழரின் கடற்பயணம் – கடிதம்

சந்தையில் சுவிசேஷம்

பெரும்பான்மைவாதமும் அறிவுஜீவிகளும்-கடிதம்

ராஜஸ்தானின் புதைநகர்கள்- கடிதம்

அன்புள்ள ஜெ

நீங்கள் கீழடியின் காலம் பற்றி எழுதியிருந்ததை ஒட்டி நடக்கும் குமுறல்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நேற்று ராஜா காலிஃபங்கன் பற்றி எழுதியிருந்ததையும் படித்தேன்.

யுடியூப் வரலாற்றாய்வுகளை குறை சொல்கிறீர்கள். இன்று தமிழ் இந்து நாளிதழில் இந்த செய்தியை பார்த்தேன்.திரைகடலோடிய தொல் தமிழர்கள் துணுக்குற்றேன். ஒரு தரமான இதழில் இந்தக் கட்டுரை எப்படி வரும் என்றே புரியவில்லை. இதை எழுதியவர் தொல்லியல்துறையில் பேராசிரியர்.

கீழடி இந்தியாவிலேயே பழமையான நாகரீகம் என்கிறார்கள். இல்லை, லோத்தல் அதைவிர குறைந்தது மூவாயிரமாண்டு பழமையானது என்றால் அது பொய் என்று சொல்லி கேவலமாகத் திட்டுகிறார்கள். அவர்களில் ஒருவரே லோத்தல் ஐந்தாயிரமாண்டு பழமையானது, ஆனால் அது தமிழர் நாகரீகம் என்றால் ஆமாம் என்கிறார்கள். இதுதான் இங்குள்ள சரித்திர ஆய்வு.

ஐந்தாயிரமாண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் கடலோடினார்கள் என்று வாசித்தபோது நான் கீழே எழுதியவர் யார் என்று பார்த்தேன். தமிழ்ப்பண்பாடு சார்ந்து நமக்கு கீழடிக்கு முந்தைய சான்றுகள் என்றால் ஆதிச்சநல்லூர், கொடுமணல் போன்ற புதைகுழிகள்தானே. இவர் என்ன ஐந்தாயிரம் என்கிறார் என்று குழம்பினேன். ஆதாரங்களை வேறு படமாக அளிக்கிறார்.

ஆனால் எல்லாமே ராஜஸ்தானிலுள்ள லோத்தல் நாகரீகத்தின் சான்றுகள். கூடவே லோத்தல் தமிழர் நாகரீகம் என்கிறார். ஏனென்றால் ஹரப்பா தமிழர் நாகரீகமாம். ஹரப்பா ஏன் தமிழர் நாகரீகம் என்றால் அது ஆரியநாகரீகம் அல்ல என்று சொல்லப்படுகிறதாம்—இந்த வரலாற்றறிவுடன் இங்கே வரலாறு பேசப்படுகிறது.

அதன் கீழே ஒரு கமெண்ட்.”இந்தியாவிலேயே கடல்கடந்து வாணிபம் செய்தவனும், கடல்கடந்து வெற்றிகளை பெற்றவனும் தமிழன் மட்டுமே’.  இந்த மாஸ்ஹிஸ்டீரியாவுக்கு எதிராக இங்கேயுள்ள ’பகுத்தறிவாளர்கள்’ ‘மார்க்ஸியர்கள்’ எதுவுமே சொல்ல மாட்டார்கள். அவர்களும் இந்த மாஸ்ஹிஸ்டீரியாவை பயன்படுத்திக்கொள்பவர்கள் மட்டுமே.

இதே மூச்சில் மெசபடோமியா, எகிப்து எல்லாமே தமிழர் நாகரீகம் என்று சொல்லலாம். ஏற்கனவே அப்படி பலபேர் சொல்லி புத்தகமெல்லாம் எழுதியிருக்கிறார்கள். ’உலகத்திலேயே தமிழர் நாகரீகம் பழமையானது – ஏனென்றால் உலகத்தில் எது பழமையான நாகரீகமோ அது தமிழ்நாகரீகம்’ இதுதான் இவர்களின் சூத்திரம்.

சிந்து மாகாணம் முதல் ராஜஸ்தான் கட்ச் வரை பரந்து கிடக்கும் லோத்தல்- ஹரப்பன் நாகரீகம் பற்றி இன்னமும் எந்த முடிவும் ஆய்வாளர் நடுவே இல்லை. பல்வேறு ஊகங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அந்த சித்திர எழுத்துக்களையோ அங்குள்ள சிற்பங்களையோ தங்கள் வசதிப்படி பொருள்கொண்டு அடையும் வரலாற்று ஊகமாகவே அவை உள்ளன.

தெற்கே தமிழ்நாட்டில் அவை திராவிட நாகரீகம் என்றும், திராவிட நாகரீகம் என்றாலே அது தமிழ்நாகரீகம் மட்டுமே என்றும் சொல்கிறார்கள். ஆனால் வடக்கே இன்னும் பெரிய எண்ணிக்கையில், இன்னும் அதிகமான அறிஞர்கள் அவை முழுக்க வேதகால நாகரீகத்தின் முற்காலம்தான் என்று சொல்ல இதேபோல அரும்பாடுபடுகிறார்கள்.

இவர்களுக்கு வரலாற்று ஊகத்துக்கும் வரலாற்று முடிவுக்கும் வேறுபாடு தெரியாது. ஒன்றை நம்பினால் அது உண்மை என்று சொல்கிறார்கள். அதை எவராவது சந்தேகப்பட்டால் எதிரி என்கிறார்கள். நான் டெல்லியில் இருக்கிறேன். இங்கே லோத்தல் நாகரீகம் வேதநாகரீகம் என்பதற்கு சான்றுகள் இல்லை என்றாலே அடிக்க வருகிறார்கள். “நீ இந்துதானே? நீ என்ன பாகிஸ்தானியா?”என்று ஓருவர் கேட்டார். என்னை மாதிரியே பட்டதாரி ஆசிரியர்.

சாதி, மதம் ,இனம், மொழி வெறி சார்ந்து வரலாற்றைப் பார்ப்பதன் விளைவு இதெல்லாம். எந்த வரலாற்று ஆய்வும் புறவயமான விவாதம் மூலம்தான் நடக்க முடியும். எந்த ஊகமும் வலுவாக மறுக்கப்படவேண்டும். அந்த மறுப்பாளர்களுக்கு வலுவான தொல்லியல் சான்றுகளும் விளக்கங்களும் அளிக்கப்படவேண்டும். ஆனால் இங்கே மறுப்பவன் மத எதிரி, மொழி எதிரி, பண்பாட்டு எதிரி.

கர்ஸன் பிரபு 1905 ல் கல்கத்தாவில் பேசும்போது இந்தியர்களால் புறவயமாக வரலாற்றை எழுதவே முடியாது என்று சொன்னார். அப்போது அதற்கு எதிராக கடுமையான விவாதம் எழுந்தது. இன்றைக்கு அது உண்மைதான் என்றே உணர்கிறேன்.

கொஞ்சபேராவது எல்லா பக்கமும் இருக்கும் இந்த கூட்ட ஹிஸ்டீரியாவுக்கு வெளியே சென்று வரலாறு என்றாலென்ன, அதன் முறைமைகள் என்ன என்று தெரிந்துகொண்டார்கள் என்றால் நல்லது என்னும் ஏக்கம் எழுந்தது. ஆனால் நம் இளைஞர்களுக்கு அறிவுபூர்வமாக இருப்பதில் திரில் இல்லை. ஆவேசமாக இருப்பதுதான் திரில் என நினைக்கிறார்கள். ஒருவன் எந்த அடிப்படையுமில்லாமல் அதீத உணர்ச்சிகரமாக பேசி கூச்சலிட்டால் அவன் அறிவுஜீவி என நினைக்கிறார்கள். அதுதான் சிக்கல்

எஸ்.சேதுமாதவன் 

அன்புள்ள சேதுமாதவன்,

அந்த நகைச்சுவைக் கட்டுரையை நானும் வாசித்தேன். தமிழில் தொல்லியலாய்வுகள் செய்யப்படும் தரமென்ன என்பதற்கு எழுத்துவடிவச் சான்று. இந்த புகைமூட்டத்தில் இருந்து ஒரு நாலைந்து இளம் மண்டைகளையாவது மீட்க முடியுமா என்பதுதான் என் முயற்சி.

அந்தக் கட்டுரையை வாசிப்பவர்கள் எஸ்.ஆர்.ராவ் தமிழர்கள் கடல்கடந்து சென்றனர் என்பதற்கு லோத்தலில் ஆதாரம் கண்டுபிடித்தார் என்று புரிந்துகொள்வார்கள். எஸ்.ஆர்.ராவ் புகழ்பெற்ற தொல்லியலாளர். லோத்தல் முதலிய ஹரப்பன் தொல்நகர்களை கண்டடைந்த பெருமைக்குரியவர். ஆனால் சிந்துசமவெளி பண்பாட்டை முன்வேதகால பண்பாடு என்று வாதிடுபவர்களில் ஒருவர். அவருக்கு சர்வதேச அளவில் ஓரளவு ஏற்பும் உள்ளது.

ராவ் சிந்து சமவெளி பண்பாடு அல்லது ஹரப்பன் நாகரீகத்தின் சித்திர எழுத்துக்களை அடையாளம் கண்டு வாசித்துவிட்டதாக விரிவான ஆய்வேடுகளை புகழ்பெற்ற சர்வதேச அரங்குகளில் முன்வைத்திருக்கிறார். அவற்றில் அவர் ஹரப்பன் (சிந்துசமவெளி) எழுத்துக்களின் வரைவடிவங்களுக்கும் சம்ஸ்கிருத எழுத்துக்களின் வரைவடிவங்களுக்கும் இடையேயான ஒற்றுமையை எடுத்துக் காட்டினார்.

அந்த ஆய்வின் சில கோணங்கள் பொதுவாக ஏற்கப்பட்டாலும் ராவ் அவற்றை வேதகால நாகரீகத்துடன் இணைப்பதை உலகளாவிய அறிஞர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ஹரப்பன் நாகரீகமும், அந்த எழுத்துக்களும் இன்னமும் அறுதியாக எந்த பண்பாட்டுடனும் இணைக்கப்பட முடியாதவையாக, பொருள்கொள்ளப்படாதவையாகவே உலகளாவிய தொல்லியல் அறிஞர்களால் கருதப்படுகின்றன.

ஜெ

முந்தைய கட்டுரைஇலங்கைப் பொருளியல் நெருக்கடி-கடிதம்
அடுத்த கட்டுரைமேடைப்பேச்சாளனாவது…