மனுஷு,சமசு,அரசு

அன்புள்ள ஜெ,

சமீபத்தில் கவனித்த ஒரு விவாதம். அதை அனுப்புகிறேன். இது ஒரு வெறும் வம்பு அல்ல. இதில் இதழியல் சம்பந்தமான ஒரு அடிப்படையான கேள்வி இருக்கிறது. அது இன்றையச் சூழலில் முக்கியமானது. அதைப்பற்றி பேசவேண்டும், அந்த விவாதம் நிரந்தரமாகப் பதிவாகவேண்டும் என விரும்புகிறேன். ஏனென்றால் முகநூல் மிகவும் peripheral ஆனது. ஆகவே இதை எழுதுகிறேன்

பத்திரிகையாளர் சமஸ் ஓரு பதிவை  வெளியிட்டிருந்தார். ஓர் காணொளியிலும் பேசியிருந்தார். இவற்றில் அரசுக்கும் அவருக்குமான உறவைப்பற்றி சொல்லியிருந்தார். அதற்கு மனுஷ்யபுத்திரன் அளித்த பதில் இது

பத்திரிகையாளர் சமஸின் அதீத ஆர்வம்

மனுஷ்யபுத்திரன்

சில தினங்களுக்கு முன்பு ‘ தலைமைச் செயலகத்தில் இருந்து ஒரு அழைப்பு ‘ என சமஸ் ஒரு குறிப்பு எழுதியிருந்தார். என்னமோ ஏதோ என்று போய் படித்தால் தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு சமஸின் இணைய தளத்தில் வெளி வந்த ஒரு கட்டுரை பற்றிய தன் கருத்துகளை பகிர்ந்துகொண்டிருந்திருக்கிறார். அவ்வளவுதான். அது சமஸிற்கு கொடுத்த பேட்டி அல்ல. எந்த அடிப்படையில் அரசின் உயர் அதிகாரி ஒருவர் தனிப்பட்ட முறையில் பகிர்ந்துகொள்ளும் கருத்துகளை தன் பத்திரிகைக்கு விளம்பரமாக பயன்படுத்துகிறார் என்று புரியவில்லை.

பொதுவாக அரசியல் தலைவர்களும் பத்திரிகையாளர்களும் பல கருத்துகளை தனிப்பட்ட முறையில் உரையாடுவார்கள். மன ஓட்டங்களை பகிர்ந்துகொள்வார்கள். ஆனால் அவர்கள் அவை மேற்கோள் காட்டப்படுவதை ஒருபோதும் விரும்பமாட்டார்கள். எனது நீண்டகாலமாக ஊடகம், எழுத்து, அரசியல் சார்ந்த எத்தனையோ உயர்மட்ட உரையாடல்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றை தனிப்பட்ட பேச்சுகளில்கூட நான் மேற்கோள் காட்டியதில்லை. எனக்குத் தெரிந்து பெரும்பாலான பத்திரிகையாளர்கள் அப்படித்தான். ஆனால் சமஸ், இறையன்பு அரசின் கொள்கைத்திட்டங்கள் பற்றி தன்னிடம் உரையாடி தன் பத்திரிகைக் கட்டுரையின் ஆலோசனைகளை கேட்டு செயல்படுத்துவதுபோன்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறார். இது தலைமைச் செயலாளருக்கு சங்கடங்களை உருவாக்கக்கூடியது.

அடுத்ததாக பொது நூலகங்களுக்கு இதழ்கள் வாங்ககுவது தொடர்பாக அந்த தேர்வுக் கமிட்டியில் இடம்பெற்றிருந்த சமஸ் அது தொடர்பாக சர்ச்சைகளுக்கு ஒரு ஆவேசமான பேட்டி அளித்திருக்கிறார். அந்தக் கமிட்டியே அவர் தலைமையில் இயங்குவதுபோன்ற பாவனையில் பேசுகிறார். தான் அந்தக் கமிட்டியில் இடம்பெற்றால் எங்கே தன் பெயர் கெட்டுவிடுமோ என்று அஞ்சியதாகவும் பொது நூலகத்துறை இயக்குனர் இளம்பகவத் தன்னை வற்புறுத்தி கன்வின்ஸ் செய்து இடம்பெறச் செய்ததுபோன்றும் பேசுகிறார். அப்படியொரு உரையாடல் நடந்ததா இல்லையா என்பது ஒரு புறம் இருக்கட்டும், அதை ஏன் பொது வெளியில் சொல்கிறார்? அரசின் பலகுழுக்களில் வேலை செய்பவன் என்ற முறையில் சொல்கிறேன், ஒரு அரசுக் கமிட்டியின் செயல்பாடுகள் சிக்கலானவை, பல்வேறு நுட்பங்கள் சார்ந்தவை. உடனடியாக வெளிப்படுத்தக்கூடாதவை. அதை எல்லாம் அக்குழுவில் இடம்பெற்ற ஒருவர் தன் இஷ்டத்திற்கு பொதுவெளியில் பேசமுடியாது. ஏதேனும் பிரச்சினை வந்தால் அதற்கு பொறுப்பான அதிகாரிகளோ அமைச்சர்களோ விளக்கமளிப்பார்கள்.

அரசை பாராட்டுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, தன்னை முன்னிறுத்துவதற்காக மிகச்சிறந்த அதிகாரிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்த சமஸ் முனைகிறார். தமிழக அரசில் எத்தனையோ குழுக்கள் செயல்படுகின்றன. எந்த உறுப்பினரும் சமஸைபோல ஏதோ அரசாங்கமே தன் வழிகாட்டுதலில் நடப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது கிடையாது. ஏ.கே ராஜனோ ஜெயரஞ்சனோகூட இப்படி பேசிக்கேட்டதில்லை.

தன் முனைப்புக்கு ஒரு எல்லை வேண்டாமா? சமஸ் தன் எல்லைகளையும் இடத்தையும் பரிந்துகொள்வது நல்லது.

அதற்கு சமஸ் அளித்த பதில்.

பத்திரிகாதிபர் மனுஷ்யபுத்திரனின் மனச்சங்கடம்

ஆட்சியாளர்கள், உயரதிகாரிகள் – பத்திரிகையாளர்கள் இடையிலான சந்திப்புகள் சகஜம். மக்களோடு புழங்குபவர்கள் என்ற வகையில், பத்திரிகையாளர்களிடமிருந்து அபிப்ராயங்களையோ, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையோ அவர்கள் கேட்டுக்கொள்வதும் அப்படித்தான்.

சில நாட்களுக்கு முன் ‘தலைமைச் செயலகத்திலிருந்து ஓர் அழைப்பு’ என்று இங்கே நான் பகிர்ந்த செய்தியானது, ஏதோ இந்த அரசைப் பாராட்டி நான் எழுதிய ஒரு கட்டுரையைப் பார்த்துவிட்டு, தலைமைச் செயலர் தனிப்பட்ட வகையில் பகிர்ந்துகொண்ட பாராட்டை என் சுயபெருமைக்காக வெளிப்படுத்தியது அல்ல. மாறாக, அரசை விமர்சிக்கும் ஒரு கட்டுரை அது; இன்னும் சொல்லப்போனால், மாநிலத்தில் பிராந்தியரீதியாக நிலவும் ஏற்றத்தாழ்வுப் பிரச்சினையானது நெடுநாள் விவகாரம்; முந்தைய ஆட்சியாளர்களின் தவறுகளுக்கும் சேர்த்து இன்றைய ஆட்சியாளர்களைப் பரிகாரம் தேடச்சொல்லும் கட்டுரை.

அப்படி ஒரு கட்டுரையை வாசித்துவிட்டு, ஆக்கபூர்வமாக அந்த விமர்சனத்தைக் கவனத்தில் எடுத்துக்கொண்டதோடு, அன்றைய தினமே மேல்மட்ட அளவில் விவாதித்து, அடுத்தகட்டமாக அனைத்துத் துறைச் செயலர்கள் கூட்டத்திலும் அந்த விஷயத்தை மையப்படுத்தி விவாதித்து, இது தொடர்பில் ஒரு கொள்கை முடிவை எடுக்க ஒரு அரசாங்கம் தீர்மானிப்பது என்பது மிக முக்கியமான, ஆக்கபூர்வமான செயல்பாடு.

இந்த விஷயங்களையெல்லாம் அழைத்து ஒரு தலைமைச் செயலர் பகிர்ந்துகொள்வதும், கூடவே, ‘முதல்வர் பிராந்தியரீதியிலான சமநிலையைக் கொண்டுவரும் இந்த விஷயத்தில் மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறார்’ என்று சொல்வதும் மிக முக்கியமான விஷயங்கள் மட்டும் இல்லை; அது மக்களிடம் அரசு பகிர்ந்துகொள்ள விரும்பும் செய்திகளும்கூட. அப்படிச் சொல்லப்பட்ட தகவலையே நான் பகிர்ந்தேன்.

இதில் என் பத்திரிகைக்கான பெருமை என்பதெல்லாம் மூன்றாவது பட்சம். விமர்சனங்களை இன்றைய முதல்வரும், அரசும் எப்படி ஆக்கபூர்வமாக அணுகுகிறார்கள் என்பதுகூட இரண்டாவது பட்சம்தான். ஒரு நெடுநாள் பிரச்சினை மீது இந்த அரசு கவனம் குவித்திருக்கிறது என்பதே முதல் பட்சம். மக்களிடம் இதில் ஒளித்து மறைக்க என்ன இருக்கிறது? மேலும், மக்களுக்காகப் பேசும் பத்திரிகையாளர்களுக்கு இதைவிட வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும்?

தன்முனைப்பிலேயே காலத்தைக் கழிப்பவர்களுக்கு, எல்லாமே தன்முனைப்பாகத்தான் தெரியும்.

ஒரு வெகுஜன பத்திரிகையில் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் இருந்தவனுக்கு எந்தெந்த உரையாடல்களைப் பொதுவெளியில் பகிர வேண்டும்; கூடாது என்று யாரும் வகுப்பு எடுக்க வேண்டியது இல்லை. அதேபோல, எது பொதுவெளியில் பகிரப்பட வேண்டும், எது பகிரப்படக் கூடாது என்ற குறிப்புணர்த்தலை வெளிப்படுத்த ஆட்சியாளர்கள் – அதிகாரிகளுக்கும் யாரும் வகுப்பு எடுக்க வேண்டியது இல்லை என்றே நினைக்கிறேன்.

பத்திரிகாதிபர் மனுஷ்யபுத்திரனுடைய உண்மையான ஆற்றாமையும், கோபமும் என்னவென்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அதையெல்லாம் பொதுவெளியில் பகிர நான் கற்ற பத்திரிகாதர்மம் தடுப்பதோடு, அவரைச் சங்கடத்துக்குள்ளாவதையும் தவிர்க்க விழைகிறேன். நல்லிரவு!

*

ஒரு விவாதத்திற்காக கேட்கிறேன். இதில் எந்தப்பக்கம் சரி இருக்கிறது? எனக்கு இரண்டுமே முதலில் படித்தபோது சரி என்றே தோன்றியது.

ஆனந்த்ராஜ்

அன்புள்ள ஆனந்த்,

இது தி.மு.க ஆதரவாளர்களான இரு ஊடகர்களுக்கு இடையே கட்சியில் அவர்களின் முக்கியத்துவம், அரசில் அவர்களின் இடம் பற்றிய பூசல். வெளிப்படையாகவே எவருக்கு இடம் மிகுதி எவர் புழுங்குகிறார் என தெரிகிறது. சமஸ் சுட்டிக்காட்டியுமிருக்கிறார்.

சமஸ் சொல்வதே சரி. தலைமைச்செயலாளர் போன்ற ஓர் அரசதிகாரி ஒன்றும் தெரியாமல் சும்மா அந்த நாற்காலியை அடையமுடியாது. பலவகையான அமிலச்சோதனைகள் அவருக்கு நடந்திருக்கும். அதில் முதன்மையானது வாயை எங்கே திறக்கவேண்டும், எங்கே மூடவேண்டும் என்னும் பயிற்சிதான். அவர்கள் இயல்பிலேயே ராஜதந்திரிகளாகவே இருப்பார்கள்.

சமஸ் ஒன்றை எழுதக்கூடாது என்று தலைமைச்செயலர் எண்ணினால் அதைச் சொல்லாமல் ஓர் உரையாடலை முடிக்கவே மாட்டார். என்னிடமும் உயர் அரசதிகாரிகள், உயர்தர அரசியல்வாதிகள்  பேசியதுண்டு. பலவற்றை பகிர்ந்துகொண்டதுமுண்டு. அவர்களும் பேச்சு தனிப்பட்டது என்றால் ஒரு வார்த்தை சொல்வார்கள். சிலவற்றை பெயர் சொல்லாமல் எழுதும்படிச் சொல்வார்கள். சிலவற்றை எழுத அவர்கள் விரும்புவது தெரியும்.

தலைமைச்செயலர் சமஸிடம் சொன்னவை அவர் அதிகாரபூர்வமற்ற முறையில் வெளிப்படுத்த விரும்புபவை என்பது வெளிப்படை. அவை இந்த அரசுக்கு நற்பெயர் ஈட்டி அளிப்பவை. அவர் எதிர்பார்த்தது ஸ்டாலின் அரசுக்கு ஒரு பாராட்டைத்தான். சமஸ் அதை அளிக்கிறார். அவ்வாறல்ல எனில் சமஸுக்கு அது உடனே தெரியும். அந்த எழுதப்படா ஒப்பந்தம் மீறவே படாது. அதை ஒரு முறை மீறிவிட்டால் அதன்பின் சமஸின் நம்பகத்தன்மை குறையும், அவருடைய தொழிலே பாதிக்கப்படும்.

மனுஷ்யபுத்திரன் சிற்றிதழாளர், செய்தியிதழின் நெறிகள் அவரறிந்தவை அல்ல. அவர் கட்சிக்காரர். அவர்களுக்கான நெறிகள் முற்றிலும் வேறானவை.

ஆனால் சமஸ் திமுக அரசு அளித்த பொறுப்பில் இருப்பது என் பார்வையில் உகந்தது அல்ல. அது  இதழாளராக அவருடைய நம்பகத்தன்மையை குறைக்கும். எல்லா வகையிலும் இதழ் என்பது எதிர்க்கட்சிதான். அது ஒரு கண்காணிக்கும் தரப்புதான்.

அருஞ்சொல்லில் வரும் அரசியல் கட்டுரைகள் பலவும் மிக ஓரம்சாய்ந்தவையாக உள்ளன என்னும் எண்ணம் எனக்கு ஏற்படுகிறது. Scroll போன்று ஓர் அரசியல்தரப்பைப் பிரச்சாரம் செய்யும் இதழாகவே அருஞ்சொல் தன்னை முன்வைக்கிறது. அருஞ்சொல்லில் வரும் பல பொருளியல் கட்டுரைகளை, கட்சிக்காரர்கள் கொஞ்சம் கலைச்சொல் சேர்த்து எழுதும் பிரசங்கங்கள் என்றே எடுத்துக் கொள்கிறேன்.

பிகு. விரைவிலேயே சமஸ் “ஓண்ணுமே உருப்படாது. நாசமாப் போயிடும். கட்டமண்ணா போயிடும். அப்டியே போயிச் செத்துடுங்கோ” என்னும் அரிய பொருளியலாலோசனையை  பற்பல ஆண்டுகளாக தினமும் காலையில் தோன்றி கனிவுடன் வழங்கும் ஆனந்த சீனிவாசனின் தொடர் ஒன்றை வெளியிடலாம். சுவாரசியமான பகுதியாக இருக்கும்.

ஜெ

முந்தைய கட்டுரைநாளை திருப்பூர் உரை
அடுத்த கட்டுரைகுமரித்துறைவியை கண்டடைதல்