வான்நெசவு- வாசிப்பு

விஷ்ணுபுரம் பதிப்பகம்

[email protected]

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

வெகு தொலைவில் இருக்கும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு தகவல்களை பரிமாறிக்கொள்ளும் நிகழ்வுகள் தொலைத்தொடர்பு எனப்படுகின்றது. இந்த தொலைத்தொடர்பு ஆரம்ப காலகட்டங்களில் கடிதம் வழியாக நடைபெற்று வந்தது. அனலாக் தொலைபேசி முறையை கிரகாம்பெல் அவர்கள் கண்டுபிடித்த பின்பு ஒலி அலைகள் மின் அலைகளாக மாற்றி மின் கம்பிகள் வழியாக கடத்தி பிறகு மின் அலைகளை ஒலி அலைகளாக மாற்றி தகவல் பரிமாறப்பட்டு வந்தது. இது தொலைபேசி வாயிலாக சாத்தியமாகியது. இன்று ஊடகம் எதுவும் இன்றியே தொழில்நுட்பம் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் அளவு வளர்ச்சி பெற்றுள்ளது.

அனலாக் தொலைபேசி இருந்த காலகட்டத்தில் கம்பி வழியாக மின் அலைகள் கடத்தப்பட்டு தகவல் பரிமாறி வந்த நிகழ்வுகளின்போது தொலைத்தொடர்பு துறைகளில் பணியாற்றி வந்த ஊழியர்கள் எவ்வகையில் அங்கே பணியாற்றினார்கள். அங்கே என்னென்ன சம்பவங்கள் நிகழ்ந்து இருக்கும் என்பது யாரும் அறியாதவையாக உள்ளது.

அன்றைய காலகட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் அப்பணியில் இருந்து விடுபட்டு வந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு தொலைதொடர்பு என்ற சூழலை பின்னணியாகக் கொண்டு கதைகள் எழுதியுள்ளார்கள்.

வானில் உள்ள மின் அலைகளை பின்னிப்பின்னி நெசவு செய்து ஒருவரிடமிருந்து மற்றவருக்கு தகவல்கள் பரிமாறப்பட்டு வருவதை கொண்டும் தொலைத்தொடர்புத் துறையை பின்புலமாக கொண்டும் எழுதப்பட்டுள்ள கதைகள் என்பதனால் இந்த தொகுப்பிற்கு வான் நெசவு என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பது இத்தொகுப்பில் வரும் கதைகளை வாசிக்கையில் அறிகின்றோம்.

இந்த தொகுப்பில் உள்ள 10 கதைகளிலும் தொலைத்தொடர்பு என்ற சூழலில் நிகழும் சம்பங்களே கதையாக விரிக்கின்றது. கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் பரிவு, கருணை, நகைப்பு, அழுகை, காதல், தேடல், உழைப்பு, அரசியல், கோபம், இயலாமை, நேர்மை இன்னும் எண்ணற்ற மனித செயல்பாடுகள் மற்றும் உணர்வுகளை காட்டுகின்றன.

இக்கதைகள் அனைத்தும் நூலின் ஆசிரியர் அவர்கள் சொல்வதைப் போல இப்பிரபஞ்சத்தின் அறியாத நெறிகளை சொல்லிவிட முயல்கின்றன.

#அன்னம் சிறுகதையில் தொலைத்தொடர்பு ஊழியராக வருகின்ற கிருஷ்ண பட் குற்றம் ஒன்றிற்காக விசாரணை செய்யப்படுகின்றார். அதில் ஹாஜி என்பவரின் கருணை மற்றும் அவருக்காக செய்யப்படுகின்ற உதவி இவை அனைத்தையும் கிருஷ்ண பட் கூறிக்கொண்டே வரும்பொழுது சட்டம் என்பது சில மனித நேயங்களுக்காக வளைக்கப்படலாம் என்பதை விசாரணை அலுவலரும் அறிந்து கொள்கிறார். இக் கதையை வாசிக்கும் பொழுது கிருஷ்ண பட் கதாபாத்திரத்தின் இடத்தில் வாசகனாக என்னை பொருத்தி பார்க்கும் பொழுது அவர் சொன்ன அதே வாசகத்தை நானும் முன்மொழிகின்றேன் ‘அதனாலென்ன’

#குருவி என்ற சிறுகதையில் தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரியும், குடித்துவிட்டு பணியில் சிரத்தை இல்லாமல் திரியும், பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட மாடன் பிள்ளையை அந்தத் துறையே தேடுகிறது. நேர்த்தியாக பணிபுரியக்கூடிய அவனது பணியானது அவர்களுக்கு தேவையாக உள்ளது. அவனை தேடிக்கண்டறிந்து அவனிடம் இருந்து பெறப்படும் உரையாடல்கள் அனைத்தும் அவனது அகம் மற்றும் பணி இவற்றை யாரும் புரிந்து கொள்ளாது புறம் தள்ளிவிட்ட நிலையில் உள்ளதை வெளிக்காட்டுகிறது. சில பணிகளை தன்னால் மட்டுமே செய்ய முடியும் என்பதில் அவன் உறுதியாகவே இருக்கின்றான். அப்போது ஒயரில் செய்யப்பட்ட தூக்கணாங் குருவிக்கூடு ஒன்றை பார்த்து வியப்பும் ஆச்சரியமும் அடைகிறான். அதுவரையில் அந்த பணியை செய்யலாமா வேண்டாமா என்றும், பல கண்டிசன்களும் செய்து கொண்டிருந்தவன். யாரும் எதும் செய்ய வேண்டாம் தானே வேலையை செய்வதாக ஒப்பு கொள்கிறான்.

ஒரு தூக்கணாங்குருவி தனது கூட்டினை எவ்வளவு நேர்த்தியாக செய்திடுமோ அந்த அளவிற்கு நேர்த்தியாக தன் பணியை செய்யக்கூடிய ஊழியன் கிட்டதட்ட நீயும் ஒரு குருவி தான் என்று அவனது பணியை பற்றி கூறும் பொழுது அவன் அக்கணமே கண்ணீர் மல்கி புன்னகைப்பது, அவன் மீதும் அவன் பணியின் மீதும் அவர்கள் கொண்ட நம்பிக்கையே. மாடன் பிள்ளை எதிர்நோக்குவதும் அதையே.

#வானில்_அழைக்கின்றன_குரல்கள் என்ற சிறுகதையில் தொலைதொடர்பு துறையில் பணியாற்றி இறந்த தன் மனைவி சாந்தி என்பவரின் குரல் பதிவை தேடிவரும் நபருக்காக அவள் குரலை அந்த அலுவலகத்தில் எந்த பயனும் அற்றவராக கருதப்படும் சீனியர் ஊழியரான தோட்டான் என்பவரை கொண்டு தேட வைப்பதும், சாந்தியின் குரல் கிடைத்த பிறகும் தோட்டான் என்பவர் தொடர்ந்து குரல் தேடலில் இருப்பதும், குரல் கிடைத்த பின்பும் ஏன் தேடுகிறீர்கள் என்று ஊழியர்கள் கேட்கும் பொழுது ‘ரோஸியின் குரலை தேடுகிறேன்’ என்று தோட்டான் பதில் கூறுவதை கேட்டு மனம் நெகிழ்ந்தது இக்கதை கதாபாத்திரங்கள் மட்டுமல்ல வாசகனான நானும் தான்.

கலை கார்ல்மார்க்ஸ்

முந்தைய கட்டுரைஆயிரம் காந்திகள் விமர்சனம்- ராதாகிருஷ்ணன்
அடுத்த கட்டுரைநாளை திருப்பூர் உரை