சிறகு- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

சிறகு சிறுகதையை வாசித்தேன். எளிமையான கதையாகத் தோன்றியது. பெண் அடையும் சுதந்திரம் பற்றிய கதை என்று மட்டுமே நினைத்தேன். வழமை போல் கடிதங்களை வாசித்தேன்.வாசிக்கும் போது கதை என்னுள் கொஞ்சம் பறக்கத் தொடங்கியது.சிறகு என்ற குறியீட்டை ஆனந்தவல்லிக்கு மட்டுமல்ல குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தங்கள் எல்லையை உணர்ந்தது, எல்லையை கடக்கும் பயத்தை வென்று துணிவை பெற்றப்பின் பறக்கும் அனைவருக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

கதையை படிக்கும்போது சங்குமேல் கோவம் வந்தது, கதைசொல்லி மீது மதிப்பு வந்தது, ஆனந்தவல்லி மீது இரக்கம் வந்தது. ஆண்/ஆண்  சமூகம்  பெண்ணுக்கு இழைக்கும் அநீதி என்று மட்டும் பார்ப்பது குறுகிய ஒற்றை பார்வையென நினைக்கிறேன்.நான் சங்குவை அக்காலகட்ட நிலை மற்றும் அதன் அழுத்தம், ஆனந்தவல்லியை அழுத்தத்தை மாற்றும் விசையாகவும், கதைசொல்லியை ஒட்டுமொத்த வாழ்க்கையை அறியும் மற்றும் மதிப்பீடுகளை மதிப்பீடு செய்யும் ஒருவனாகவும் நினைத்துக்கொள்கிறேன்.

சங்கு வசதிக்குறைவான பெண்கள் பற்றி கொண்டுள்ள மதிப்பீட்டுக்கு யார் காரணம்? வசதியானவர்கள் மட்டுமா? வசதியானவர்களை தன்வசதிக்காக பயன்படுத்திக்கொள்ளும் அவர்களும்தானே? இது அக்காலகட்ட மனநிலை. சிலர் அந்த அழுத்தத்தின் பிடியில் சிக்குவதில்லை, சிலர் சிக்கிக்கொண்டதாக நடித்து வாழ்கிறார்கள், சிலர் அழுத்தத்தை உடைத்து வெளியே வருகிறார்கள்.

ஆனந்தவல்லி அக்காலகட்ட அழுத்தத்தால் சிக்கிக் கொண்டாலும் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ளும் போது  சங்குவின் மூலம் பெறும் உத்வேகம் அந்த அழுத்தத்தை வெல்லும் தைரியத்தை தருகிறது. இங்கு சைக்கிள் ஒரு அடையாளம் மட்டும்தான். சரவணன் சந்திரனின் அஜ்வா நாவலின் அட்டை வசனம் பயத்திலிருந்து எது விடுவிக்கிறதோ அதுதான் தெய்வம். ஆனந்தவல்லிக்கு எது தெய்வம்? சைக்கிளா ? சங்குவின் சொற்களா? நான் சொல்லென்றே நினைக்கிறேன். சங்கு சொன்ன “அப்பன் காலை உடைச்சிருவேன்னு என்ற சொல் பயத்தை உருவாக்குகிறது. அதே சங்குவின் “பயந்துட்டு கூட்டிலே இருந்தா சிறகு இருக்கான்னே தெரியாது. பூனை புடிச்சு பன்னு மாதிரி தின்னிரும்” என்ற சொல் அவள் பயத்தை விரட்டிவிட்டது. அவள் சைக்கிள் ஓட்டுவது தனக்கு சிறகு முளைத்துவிட்டதை சங்குவிற்கு காட்டும் ஒருசெயல்தான்.

ஆனந்தவல்லி பெரிய அதிகாரி ஆகி சங்கு அவளிடம் பெர்மிஷன்  விசயமா போகும்போது  பெர்மிசனை தாமதப்படுத்தி அவனை அலைய விட்டிருக்கலாம். அவள் ஏன் பழிவாங்கவில்லை? தன் பயத்தை போக்கிய சங்குவிற்கு அவளின் நன்றிக்கடன்.

பழங்கால மதிப்பீடுகளை கொண்டு புதிய  காலத்தில் வாழும் மனிதர்களை புதிய காலமனிதர்கள்புரிந்துகொள்ளவேண்டும்.அப்படி புரிந்துகொண்டவர்கள் தாம் அவர்களின் நீட்சியென்றும் மற்றும்  புதிய காலமதிப்பீடுகள் அவர்களின் தோள்மீது நின்றுகொண்டே புதிய உலகைப் பார்க்கிறது என்றும் அறிந்துகொள்வார்கள். இதைவிட மேம்பட்ட மதிப்பீடுகள் இவர்களின் தோள்மீது நிற்கும்.

அன்புடன்,

மோகன் நடராஜ்

***

விஷ்ணுபுரம் பதிப்பகம்

[email protected]

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307