திருப்பத்தூர் இலக்கிய விழா

திருப்பத்தூரில் புத்தகத் திருவிழா, நவீன இலக்கிய விழா என்பது உண்மையில் ஓர் அற்புதம். இத்தனைக்கும் இலக்கியம் இல்லாத ஊர் அல்ல. திருப்பத்தூர் வாணியம்பாடி, வேலூர் போன்ற ஊர்களில் மரபிலக்கியம் சார்ந்த அமைப்புகள் உண்டு.2002ல் வாணியம்பாடி தமிழ்ச்சங்கத்தில் நான் உரையாற்றியதுண்டு. வள்ளலார் மன்றங்கள் செயல்படுகின்றன.

ஆனால் நவீன இலக்கியம் சார்ந்த முன்னெடுப்புகள் குறைவு. சில ஆண்டுகளுக்கு முன்பு நாவலாசிரியரும் ஆய்வாளருமான மு.ராஜேந்திரன் மாவட்ட ஆட்சியராக இருக்கையில் இலக்கியவிழாக்களை ஒருங்கிணைத்திருக்கிறார். அவை தொடரவில்லை.

இலக்கியவிழாவையும் புத்தக் கண்காட்சியையும் தொடங்கிவைக்க என்னை அழைத்திருந்தார்கள். கேரளத்தில் பல இலக்கியவிழாக்களையும் கருத்தரங்குகளையும் தொடங்கிவைத்திருக்கிறேன். எனினும் தமிழகத்தில் இதுவே முதல்முறை.

நாகர்கோயிலில் இருந்து ஒன்றாம் தேதி மாலை கிளம்பி 2 ஆம்தேதி தர்மபுரி சென்றேன். அங்கே நண்பர் இளம்பரிதி வந்து என்னை அழைத்துச்சென்றார். திருப்பத்தூரில் விடுதியில் தங்கினேன். (நண்பர் இளம்பரிதி பரிதி பதிப்பகம் என்னும் வெளியீட்டகத்தை நடத்தி வருபவர். நண்பர் மணா எழுதிய நூல்களை வெளியிட்டிருக்கிறார்)

விழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கி.பார்த்திபராஜா நாடகக்கலைஞர். வீ.அரசுவின் மாணவராக முனைவ ர்பட்ட ஆய்வு செய்தவர். திருப்பத்தூரில் குறிப்பிடத்தக்க நாடகங்கள் நடத்தியிருக்கிறார். குறுகிய காலம் கா.சிவத்தம்பிக்கு உதவியாளராகச் செயலாற்றியிருக்கிறார். இருபத்தைந்து நூல்களுக்கு மேல் வெளியிட்டிருக்கிறார். அவற்றில் ‘இராமாயண ஒயில் நாடகம்’  என்னும் ஆய்வு நூல் குறிப்பிடத்தக்கது என்று ஆய்வாளராகிய நண்பர் சொன்னார்.

பார்த்திபராஜா  அவர் எழுதி இயக்கிய பாரியின் வீழ்ச்சி பற்றிய நாடகம் ஒன்றைப் பற்றிச் சொன்னார். மூவேந்தரால் வீழ்த்தப்பட்ட பாரியின் மகள்களும் சமகால சுரண்டல்களால் வீழ்த்தப்பட்டவர்களும் ஒரு காலாதீத இடத்தில் சந்தித்துக்கொள்வதை பற்றிய நாடகம் அது. சாமி என்ற பெயரில் சங்கரதாஸ் சாமிகள் பற்றிய நூல் ஒன்றை எழுதியிருக்கிறார்.

கைகட்டி நிற்பவர் இளம்பரிதி

எழுத்தாளர் நாராயணி கண்ணகி (சீரோ டிகிரி பதிப்பகம் நடத்திய நாவல் போட்டியில் அவருடைய வாதி நாவல் பரிசு பெற்றுள்ளது)யின் மகன் கோகிலன் அறைக்கு வந்திருந்தார். அவர் தேநீர் பதிப்பகம் நடத்துகிறார். அமிர்தம் சூரியாவின் உரைகளை தொகுத்து ஒலியின் பிரதிகள் என்னும் நூலை அவருடைய மனைவி தேவி கோகிலன் தொகுக்க அவர் வெளியிட்டிருக்கிறார்.

காலை ஒன்பது மணிமுதல் வெவ்வேறு நண்பர்கள் விடுதியறையில் வந்து சந்திக்க உரையாடல் நடந்துகொண்டே இருந்தது. திருப்பத்தூரில் இருந்து முத்தரசு, தர்மபுரியில் இருந்து ஜெயவேல், பெங்களூரில் இருந்து என பலர் வந்திருந்தனர். பன்னிரண்டு மணிக்கு ஈரோட்டிலிருந்து கிருஷ்ணன் தலைமையில் ஒரு கும்பல் வந்துவிட்டது.

மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்பகா

மதியம் இளம்பரிதி இல்லத்தில் இருந்து பிரியாணி வந்தது. சனிக்கிழமையாதலால் காளான் பிரியாணி. சூடாக சுவையாக இருந்தாலும் நான் உடனே சொற்பொழிவாற்ற வேண்டியிருந்ததை எண்ணி சிறிதே சாப்பிட்டேன். பின் சிறு தூக்கம். தூங்கி விழிக்கையில்தான் உரையை மனதுக்குள் கோத்துக் கொண்டேன். எது நினைவில் வருகிறதோ அதுவே தேவையானது என்னும் அளவுகோலின்படி அதை அமைத்தேன். உரையின் மையம் என்பது நவீன இலக்கியத்தை வாசிக்கவேண்டிய முறை எப்படி என்பதுதான்.

விழா நடக்கும் அரங்குக்கு மாலை மூன்று மணிக்குச் சென்றேன். மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்பகா கல்லூரி முதல்வர் மரிய அந்தோனி ஆகியோர் வாசலில் மலர் அளித்து வரவேற்றனர். விழா அரங்கை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தேன். உள்ளே அரங்குகளை ஒருமுறை பார்த்துவிட்டு விழாக்கூடத்திற்குச் சென்றேன்.

கி.பார்த்திபராஜா

குக்கூ நண்பர்கள் உட்பட என்னுடைய வாசகர்கள் நண்பர்கள் பலர் வந்திருந்தனர். அரங்கு நிறைந்திருந்தது. ஜோலார் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜு, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி.விஸ்வநாதன், திருப்பத்தூர் சட்டமன்ற ஏ.நல்லதம்பி, நகரச்செயலார் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிமன்றத் தலைவர் அ.சூரியகுமார் என திருப்பத்தூர் மாவட்ட மக்கள்பிரதிநிதிகள் அனைவருமே அரங்கில் இருந்தனர். அவர்கள் மிகச்சுருக்கமாக வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட ஆட்சியர் பேசியபின் நான் அரைமணிநேரம் பேசினேன்.

வழக்கமாக என் உரையில் அந்த ஊரின் இலக்கியவாதிகளை நினைவுகூர்வதும் முன்னிறுத்துவதும் வழக்கம். சிலர் அறியப்பட்டவர்களாக இருப்பார்கள். பலர் மறக்கப்பட்டிருப்பார்கள். அந்த உரையிலும் அப்படியே பேசினேன்.

விழாவில் இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. மருத்துவர் டி.ஆர்.செந்தில் ‘இறுதியாய் ஒரு வார்த்தை உங்களோடு’. சூழியல் குறித்த சுருக்கமான உரைவீச்சுக்கள் அடங்கிய நூல். எல்லா பக்கங்களும் வண்ணப்படங்கள் கொண்ட நூல். சிறுவர்கள் கையிலெடுத்தால் விடாமல் படித்துவிடுவார்கள். சூழியலை பற்றிய ஒரு முறையீடு, ஓர் அறைகூவல்.

இன்னொரு நூல் மருத்துவர் விக்ரம் குமார் எழுதிய ‘பழமிருக்க பயமேன்’. பழங்கள் சார்ந்த உணவுமுறையின் சிறப்பைச் சொல்லும் நூல். (சித்தமருத்துவர், நண்பரும் சித்தமருத்துவருமான கு.சிவராமனின் மாணவர்). இவ்வரங்கின் சிறப்பு என எனக்குப் பட்டது மக்கள் பிரதிநிதிகளின் இருப்புதான். அவர்களைப் போன்றவர்களாலேயே வாசிப்பை இயக்கமாக ஆக்க முடியும்.

ஐந்து மணிக்கு திறப்புவிழா அரங்கு முடிவுற்றது. அடுத்த அரங்கில் தேவேந்திரபூபதி, பெருமாள் முருகன், அழகியபெரியவன் ஆகியோர் பேசினார்கள்.

நான் வெளியே அரங்கில் என்னை சந்தித்தவர்களுடன் படம் எடுத்துக்கொண்டு, நூல்களில் கையெழுத்திட்டுக்கொண்டு ஒருமணிநேரம் இருந்தேன். எழுத்தாளர் நாராயணி கண்ணகியைச் சந்தித்தேன். மகனை விட இளமையாக இருக்கிறார். குக்கூ நண்பர்கள் வந்திருந்தனர். ஆறு மணிக்கு என் அறைக்குச் சென்றேன். நண்பர்கள் வந்திருந்தனர். ஏழுமணி வரை பேசிக்கொண்டிருந்தேன்.

நண்பர்கள் ஏலகிரி மலைக்குச் செல்லலாம் என்று சொன்னார்கள். அமைப்பாளர் பாலாஜி ஏற்பாடுகள் செய்தார். எட்டரை மணிக்கு இரண்டு கார்களில் ஏலகிரி மலைக்கு சென்றோம். அகரமுதல்வன், கார்த்திக் புகழேந்தி உட்பட பன்னிரண்டுபேர். அங்கே ஏஜிகே விடுதியின் ஒரு வில்லாவில் தங்கினோம். மிகப்பிரம்மாண்டமான விடுதி. அறைகள் நட்சத்திர விடுதிகளுக்குரிய தரம். உணவும் மிகச்சிறப்பாக இருந்ததாக சொன்னார்கள் -நான் இரவுணவுக்கு பழங்கள்தான் சாப்பிட்டேன்.

மறுநாள் ஒரு நீண்ட நடை சென்று வந்தோம். பின்னர் ஏரிக்கரைக்குச் சென்று ஒரு சுற்று. மதிய உணவுக்குப்பின் கொஞ்சம் பேசிக்கொண்டிருந்துவிட்டு நான்கு மணிக்கு கிளம்பி நேராக தர்மபுரி. அங்கிருந்து நாகர்கோயில்.

இத்தகைய விழாவை ஒருங்கிணைப்பது எவ்வளவு பெரிய பணி என்பது விழாக்களை நிகழ்த்திக்கொண்டே இருப்பவன் என்ற முறையில் எனக்கு நன்கு தெரியும். ஒவ்வொன்றையும் எண்ணி எண்ணி ஒருங்கிணைக்கவேண்டும். செய்யச்செய்ய மனக்குறைகள் பெருகும், நமக்கும் பிறருக்கும்.

எழுத்தாளர் நாராயணி கண்ணகியுடன்

விஷ்ணுபுரம் விழா உட்பட இத்தகைய விழாக்களின் முதன்மைச் சிக்கல் இவை சிற்றிதழ் சார்ந்த விழாக்கள் அல்ல, ஆனால் நவீன இலக்கியத்தை முன்வைப்பவை என்பதே. சிற்றிதழ் சார்ந்த விழாவில் ஏற்கனவே சிற்றிதழ்சார்ந்த இலக்கியத்துக்கு அறிமுகமுள்ள வாசகர்கள் மட்டுமே இருப்பார்கள். அவர்களிடம் பேசுவது வேறு. இத்தகைய விழாக்களில் பேசுவது பொதுவாசகர்களுக்குரிய பேச்சு.

இத்தகைய நிகழ்வுக்கு நானே கூட சரியான தேர்வு அல்ல. என் உச்சரிப்பும் குரலும் பொதுவாகச் சென்று சேர்வதில்லை. இலக்கியவாதிகள் பெரும்பாலானவர்களுக்குப் பேசத்தெரிந்திருக்காது. பலர் எழுதிவைத்து வாசிப்பார்கள். சிற்றிதழ் மொழியில் பேசுவார்கள் பலர். பலர் கூட்டத்தையே நிமிர்ந்து பார்க்க மாட்டார்கள். பெரும்பாலானவர்கள் உரையாடலைப்போல பேசுவார்கள்

பொதுவாசகர்களுக்கு நவீன இலக்கியத்தைக் கொண்டுசெல்லும் இத்தகைய விழாக்களுக்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் சிற்றிதழ்ச்சூழலுக்கு அறிமுகமற்றவர்கள். அவர்களுக்கு நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்யவேண்டும்– ஆனால் ஏற்கனவே மேடைகளில் பேசிக்கொண்டிருக்கும் பிரபலப் பேச்சாளர்களை அழைக்கமுடியாது, அவர்கள் நவீன இலக்கியம் பற்றிப் பேசமாட்டார்கள், கதைகள் மற்றும் நகைச்சுவைகளுடன் வழக்கமான மேடைப்பேச்சை நிகழ்த்துவார்கள். நாம் முன்வைக்க விரும்புவது ஒரு மாற்றை.

ஆகவே நவீன இலக்கியமும் தெரிந்து மேடையிலும் பேசத்தெரிந்தவர்களை அழைக்கவேண்டும் அவர்கள் எண்ணிக்கையில் மிகமிகக்குறைவு. எண்ணி எண்ணிப் பார்த்தாலும் சிலரே. இதுதான் இன்றைய பெருஞ்சிக்கல்

விஷ்ணுபுரம் முதல் விழாவில் இருந்து இச்சிக்கலைச் சந்திக்கிறோம். இப்போது கொஞ்சம் சமாளித்துக் கொண்டுவிட்டோம். திருப்பத்தூரின் எல்லா அரங்குகளுமே மிகக்கவனமாக அமைக்கப்பட்டிருந்தன. அழைக்கப்பட்டிருப்பவர்களில் எல்லாருமே சிறந்த எழுத்தாளர்கள் – கூடவே நல்ல பேச்சாளர்கள். யோசித்து, எண்ணித்தான் இந்த பட்டியலை போட்டிருக்க முடியும். அமைப்பாளர்களுக்கு அதன்பொருட்டு தனிப் பாராட்டுக்கள். ஆர்வமும் தீவிரமும் கொண்ட மாவட்ட ஆட்சியருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் நன்றிகள்.

====================================================

கா.சிவத்தம்பி, தமிழ் விக்கி

கி.பார்த்திபராஜா பற்றி ஒரு கட்டுரை

ஒலியின் பிரதிகள்- பனுவல் 

பழமிருக்க பயமேன் பனுவல்

மருத்துவர் விக்ரம் குமார் இணையப்பக்கம்

முந்தைய கட்டுரைபின்தொடரும் நிழலின் குரல் விமர்சனங்கள்
அடுத்த கட்டுரைகண்மலர்தல் -கடிதம்