வெண்முரசில் மரவுரி- கடிதங்கள்

வெண்முரசில் மரவுரி- லோகமாதேவி

அன்புள்ள ஐயா,

பேராசிரியர் லோகமாதேவி எழுதிய வெண்முரசின் மரவுரி ஆடைகள் கட்டுரை அருமையாக இருந்தது. வெண்முரசு வாசகர்கள் தாங்கள் வாசித்தவற்றை மீள ஞாபகப்படுத்திப் பார்த்துக் கொள்ள மிகவும் பயன்படும். ஒவ்வொரு பத்திக்கும் மனம் அந்தந்த அத்தியாயங்களை வாசித்த காலங்களில் சென்று நிறுத்தின.  மரவுரி பற்றி யோசிக்கும் போது,  மன்னர்களும் அரசிகளும் இளவரசுகளும் பொன்னாலும் வைரத்தாலும் இழைத்த ஆடைகள் அணிந்து வந்திருக்கும் அவையில், எந்த அணியும் செய்து கொள்ளாமல் பீஷ்மரோ, பலராமரோ, துரோணரோ, பால்கிகரோ, பீமனோ மிக மரவுரி மட்டும் அணிந்திருக்கும் காட்சி பல இடங்களில் வந்து கொண்டேயிருக்கும். மற்ற பாத்திரங்கள் அணிந்த ஆடைகளை ஆபரணங்களை விரிவாக விவரித்து விட்டு இவர்கள் வெறும் மரவுரி மட்டும் அணிந்தனர் என்று கூறும் போது அந்த காட்சியில் உருவாக்கும் contrast நன்றாக இருக்கும். ஒரு வேளை எளிமை தான் அழகு என்று தோன்ற வைக்கும் அந்தக் காட்சிகள்.

பீமன் மரவுரி அணிந்து கொண்டு இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு சமையலறையில் இருக்கும் காட்சியும், போருக்கு தயாராகையில் படைக்கலங்களை, உணவுப் பொருட்களை கப்பலில் ஏற்றி வைக்கும் வீரர்களுடன் இணைந்து நின்று வேலைசெய்து கொண்டிருக்கும் பீமனின் தோற்றம் தான் எப்போது பீமனை நினைத்தாலும் மனதில் எழும் காட்சிகள்.

நன்றி,

கே.கே.குமார்,

திருப்பூர்.

***

அன்புள்ள ஜெ

வெண்முரசில் மரவுரி ஆடைகள் கட்டுரை அற்புதமான ஒன்று. ஒரு சிறு பொருள் வழியாக உலகவரலாற்றின் ஒரு முழுப்பக்கத்தையே சுட்டிக்காட்டிவிட்டார். மரவுரிதான் மிகப்பழைய ஆடை. அதை உடுப்பது எதைக் குறிக்கிறது? நாகரீகத்தில் இருந்து விட்டுசெல்வதைத்தான். போதும் என்று பின்னால் செல்வதைத்தான். வெண்முரசில் மரவுரி வரும் இடத்தையெல்லாம் சுட்டிச்செல்லும்போது அந்த ஒரு முழுமைப்பார்வை வந்தது

ஆர்.கே.கிருஷ்ணராஜ்

முந்தைய கட்டுரைமேடைப்பேச்சாளனாவது…
அடுத்த கட்டுரைநீலத்தாவணி