அயல்நிதி-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். எஸ்.வி.ராஜதுரை வழக்கு முடிவுக்கு வந்தது படித்து மகிழ்ச்சியடைந்தேன்.

இதில் நீங்கள் குறிப்பிட்ட சில விஷயங்களில், எனது கருத்தைச் சொல்லலாம் எனக் கருதுகிறேன்.

முதலில் நீங்கள் குறிப்பிட்ட வரிகள்:

“நான் சொல்லவந்தது நாம் சிந்திக்கவேண்டிய வகை, வழி எல்லாம் வெளியே இருந்து வரும் நிதியால் வடிவமைக்கப் படுகின்றன என்பது மட்டும்தான். பொதுசூழலில் புழங்கும் பல அடிப்படை சிந்தனைப்போக்குகள் இப்படி உருவானவை. அவற்றை எதிர்த்து நிற்பது கடினம்”. எஸ்.வி.ராஜதுரை வழக்கின் முடிவு

”ஏனென்றால் ராஜதுரையும் வ.கீதாவும் இணைந்து எழுதிய பெரியார் பற்றிய நூலில் நிதிக்கொடை பற்றிய நன்றிக் குறிப்பு இருந்தது.”.

இந்த இடத்தில்,  கேன்வாஸை இன்னும் கொஞ்சம் விரிவாக வைத்து யோசிக்கலாம் எனக் கருதுகிறேன்.

இந்தியா விடுதலை அடைந்த காலத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் சதவீதம் மிகக் குறைவு 15-16% .

நமது விடுதலைப் போராட்டத்தை வழி நடத்திய பல தலைவ்ர்களும்  வெளிநாட்டுக் கல்வி முறையில், ஐரோப்பியச் சிந்தனையின் பாதிப்பில் உருவானவர்களே. அதன் வெளிப்பாடே விடுதலைக்குப் பின்னர் நாம் உருவாக்கிக் கொண்ட ஜனநாயகக் குடியரசு.

நமது அரசியல் சட்ட உருவாக்கத்தில், உலகின் பல ஜனநாயக அரசுகளின் அரசியலமைப்புச் சட்டங்களின் சுவடுகள் உள்ளன.

உலகின் மிகச் சிறந்த நவீனச் சிந்தனைகளை உள்வாங்கி, அதை நம் அரசியலமைப்புச் சட்டக் குழுவின் பல உறுப்பினர்களுடன் விவாதித்து, நாம் உருவாக்கிக் கொண்ட முறை.

இந்தியப் பொருளியல் அணுகுமுறையில் மேற்கத்திய தொழில்நுட்ப, மேலாண் வழிகள், திட்டமிடுதல் போன்றவை உள்ளே வந்தன. இந்தத் தளத்தில், தனித்துவமாகச் சிந்தனை செய்தவர்கள் காந்தியும், குமரப்பாவும்.  முதலாளித்துவத் தொழில் முறைக்கும், சோஷலிசத் தொழில்முறைக்கும் பெரிதான வேறுபாடுகள் இல்லை. இரண்டுமே, உற்பத்தியை இயந்திர மயமாக்கி, மூலதனத்தைக் குவிக்கும் முறைகளே. இதில் சோசலிச முறை உடைந்தால், அது உடனே, முதலாளித்துவமாகத் தான் உருமாறும் என்றார் குமரப்பா. ஆனால், அன்று பொருளாதார நிர்வாகிகளும், அரசியல் தலைவர்களும் அதைக் கேட்கவில்லை (இந்தப் புள்ளியை கடிதத்தின் இன்னொரு பகுதியில் மீண்டும் எழுதுகிறேன்)

இந்திய அரசியல் முறையில், வயது வந்தோருக்கான வாக்குரிமை என்னும் மிகப் பெரும் சமத்துவ நிலைச் சிந்தனையை நாம், ஐரோப்பாவில் இருந்தே கடன் வாங்கினோம். ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு இருந்த நம்மிடம் உள்ளாட்சி அமைப்புகள் இருந்தாலும், அவை ஒருவகையான ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டவைகளாக இருந்தன.

நேருவும், அம்பேட்கரும் முன்னெடுத்த இந்து சீர்திருத்தச் சட்டங்கள். பெண்களுக்கான சம உரிமை, குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், விதவைகள் மறுமணம், விவாகரத்து போன்ற சட்ட உருவாக்கத்தில் உலகின் சிந்தனைகளையும், நமக்கே நமக்கான புத்தாக்கம் வழியாகவும் உருவாக்கிக் கொண்டோம்.

விடுதலை பெற்ற காலத்தில், நம் நாட்டின் முக்கிய நோக்கங்களான உணவுத் தன்னிறைவு,  தொழில்நுட்பம், மேலாண்மைபோன்ற துறைகளில் பல்வேறு நிதி மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தங்களில் வழியே முன்னெடுத்தோம். உணவுத் தன்னிறைவில் ஃபோர்ட் ஃபவுண்டேஷன் ஆற்றிய பங்களிப்பும் பால் துறையில் யுன்செஃப், உணவு மற்றும் வேளாண் கழகம் போன்ற பன்னாட்டு அமைப்புகளின் பங்களிப்பும், இந்தியா என்னும் நாடு, பொருளாதாரத் தன்னிறைவை அடைய செய்தன  அந்த உதவிகள் மகத்தானவை.

எனவே இந்தியா என்னும் நாடு, நவீன அரசியல் சட்டம், சமூகச் சீர்திருத்தச் சட்டம், அரசியல் சமத்துவம், பொருளாதாரத் தன்னிறைவு போன்ற தளங்களில் நிகழ்த்திய பாய்ச்சல்களில் பின்ணணியில், உலக சிந்தனைகளின் பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாகும். விடுதலை பெற்ற காலத்தில் இது போன்ற முற்போக்குச் சிந்தனைகளின் மேலாதிக்கம் இல்லாமல் இருந்திருந்தால், இந்தியா பிற்போக்கான நாடுகளில் ஒன்றாகத்தான் மாறியிருக்கும்.

90 களுக்குப் பிறகு, இந்தியா உலகுடன் திறந்த பொருளாதாரமாகவும், தகவ்ல் தொழில்நுட்பம் வழியாக, தனி மனிதரின் அந்தரங்கம் உலகின் எந்த மூலையில் இருந்து பார்க்கவும் முடியும் ஒரு சாத்தியம் தொடங்கிய பிறகு, இன்று நிதி உதவி வழியேதான் சிந்தனைகளில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்னும் கட்டாயம் இல்லை.

எனவே, நாம் நம்முடைய சிந்தனை மரபுகளில், கலாச்சார விஷயங்களில் உயர் ஆராய்ச்சி நிறுவனங்களை ஏற்படுத்தி, உலகச் சிந்தனைகளினூடே உரையாடல்களை உருவாக்குவதே முன் செல்லும் வழி.

உங்கள் கட்டுரையில் நீங்கள் எழுதியுள்ளது போல, இதன் விளைவுகள் நுட்பமானவை. எளிமைப் படுத்துதல் குறைபட்ட வாதமாகப் போய் விடும். துரதிருஷ்டவசமாக, உங்கள் வாசகர்களில் பலரும் உங்களது கட்டுரைகளில் உள்ள அறிவார்ந்த வாதங்களை அப்படியே பொது வெளியில், பேசுகையில் பயன்படுத்துவதைக் கவனித்திருக்கிறேன். தனிப்பட்ட அனுபவங்களும் உண்டு. என் நண்பர்கள் நடத்தி வந்த ஒரு சமூக முன்னேற்றத் தன்னார்வல நிறுவனம் ஒன்றைப் பற்றிப் பேசுகையில், `அதெல்லாம் அந்நிய நிதி வாங்கும் கைக்கூலி நிறுவனங்கள்`, என்னும் வகையில் எதிர்வினைகள் வந்தன.

இதில் நீங்கள் முன்வைக்கும் ஒரு விதி ஒன்றும் இது போன்ற வாதங்களுக்குத் துணையாக இருக்கிறது. ` சுதந்திரசிந்தனைக்கு இந்த கவனிப்பு அவசியமானது. இதை இன்றைய சூழலில் முற்றிலும் சுதந்திரமாக, முழுக்கமுழுக்க வாசகர் பலத்தால்  நின்றிருக்கும் என்னைப்போன்ற ஒருவனே சொல்லமுடியும்`.  இது ஒரு வகையான வரட்டுத்தனமாக தூய்மை வாதம். நீங்கள் ஒருவர் இத்தளத்தில் இயங்குவதை, மொத்த இந்தியாவுக்கும் பொதுமைப் படுத்தி, அப்படித்தான் இருக்க வேண்டும் எனச் சொல்ல முடியாது. அந்த அலகில் பார்த்தால், நீங்கள் கூட தமிழ் வணிகச் சினிமாவை ஓரளவுக்கு மேலே விமரிசிக்க முடியாது

என்னைப் பொருத்தவரையில் இது தவறான அணுகுமுறை. இந்தியாவின் மிகப் பெரும் சமூக மேம்பாட்டுத்திட்டங்கள், சோனம் வாங்சுக்கின் லடாக் திட்டம், ராஜேந்திர்ச் சிங்கின் நீர் மேலாண்மைத் திட்டங்கள் என பல மேம்பாட்டுத்திட்டங்களுக்கு, வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் பெருமளவு உதவியுள்ளன. இந்திய வணிக நிறுவனங்களில், அசீம் ப்ரேம்ஜி தான் இன்று இதை முழுமனதுடன் செய்கிறார். டாட்டா நிறுவனங்கள் கூட, தங்கள் நிதி உதவிகளை வெகுவாகக் குறைத்துக் கொண்டு விட்டன. பெரிய உதவிகள் செய்பவர்கள் வேறு யாரும் இல்லை.

பாலசுப்ரமணியம் முத்துசாமி

அன்புள்ள பாலா

நான் சொன்னது மிக எளிமையான ஒரு வேறுபாட்டை. ஒரு நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கு, சமூகமுன்னேற்றத்திற்கு வரும் அயல்நிதிக்கும் அந்த மக்களின் பண்பாட்டுப்பார்வையையும் அரசியலையும் மாற்றியமைக்கும் பொருட்டு வரும் அயல்நிதிக்கும் மிகப்பெரிய வேறுபாடுண்டு. அப்பட்டமான வேறுபாடு அது. அதைப்பற்றிய குறைந்தபட்ச எச்சரிக்கையாவது ஒரு சூழலில் இருந்தாகவேண்டும் என்பதே என் எண்ணம்.

ஜெ
அன்னியநிதியும் போலிச்சிந்தனைச்சூழலும்
அன்னியநிதி – ஒரு வரைபடம் [மறுபிரசுரம்]
முந்தைய கட்டுரைவெய்யோனின் கர்ணன்
அடுத்த கட்டுரைபுனைவுலகில் ஜெயமோகன் – ஒரு நூல்