கண்மலர்தல் -கடிதம்

கண் மலர்தல்

அருண்மொழி அம்மாவின் கண்மலர்தல் கட்டுரையை வாசித்த போதும் அதற்கான எதிர்வினைகள் அவரது தளத்தில் வந்த போதும் என்னுள் ஒரு மனநிலை உருவாகியது. ஒரு பாடல் அறிமுக கட்டுரை, ஹரீஷ் சிவராமகிருஷ்ணன் என்னும் பாடகரை தமிழுக்கு அறிமுகம் செய்கிறார். அந்த கட்டுரையை சிறு சுயக்குறிப்புடன் அளிக்கிறார்.

யோசித்துப் பார்த்தால் ஒரு இசை அறிமுக கட்டுரை அது ஏன் இத்தனை வாசகரிடத்தில் இத்தனை எண்ணப்பாய்ச்சல்களை நிகழ்த்த வேண்டும்? நான் இக்கட்டுரையை வாசித்த பின் இக்கட்டுரை என்னுள் ஒரு வித உளத் தொந்தரவை ஏற்படுத்தியதை உணர்ந்தேன். அதனை ஒட்டி யோசித்துப் பார்க்கும் போது ஒன்று தோன்றியது. இக்கட்டுரை வெறும் பதின்பருவ நினைவு குறிப்பு அதனை ஒட்டி ஒருவரின் அறிமுகம் என நின்றுவிடவில்லை. அதற்கும் மேலே ஒரு நிலை சென்று முடிகிறது. அதனை அவர்களுக்கே உள்ள எளிமையான மொழியில் போகிற போக்கில் சாத்தியமாக்கிக் காட்டியிருக்கிறார்கள்.

எனக்கு அப்போது ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும், அம்மா ஊரான கடையம் சென்றிருந்தேன். எல்லோரும் நித்ய கல்யாணி அம்மன் கோவிலுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தோம். அப்போது அக்கோவிலைப் பற்றி சித்தி, “இந்த கோவில் பொதிகை மலைத் தொடருக்கு நடுவுல இருக்கு” என்றாள். எனக்கு அன்று வரை மனதில் மலைத் தொடர் பற்றிய சித்திரம் உருவாகவில்லை. நான் திரும்பி, “மலைத் தொடர்னா என்ன சித்தி” எனக் கேட்டேன்.

அதற்கு சித்தி சொன்ன, “மலைத் தொடர்னா நெறய மலை ஒன்னு பக்கத்துல இன்னொன்னு இருக்கும் அத்தன மலைக்கு கீழ இந்த கல்யாணி அம்மன் கோவில் இருக்கு” என்ற படிமத்தை அன்று கோவிலுக்கு செல்லும் வரைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அத்தனை மலை ஒரே இடத்தில் எப்படி சாத்தியம் அதற்கு நடுவில் ஒரு கோவில் இருப்பது எப்படி சாத்தியம் அன்று ஆட்டோவில் செல்லும் போது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, தூரத்தில் சித்தி மலையைச் சுட்டிக் காட்டினார். அதனை முதல் முறை அந்த பிரம்மாண்டத்தை கண்டதும் நான் பேச்சிழந்துவிட்டேன். அன்று வீடு திரும்பும் வரை அழுதுக் கொண்டே வந்தேன்.

இப்போது போன மாதம் சிக்கிம், சில்லாங் சென்ற போதும் மலைத் தொடரில் நான் கண்டது அதே மன எழுச்சியை தான். அன்று நிகழ்ந்த அந்த எழுச்சியை தான் அதன் பின் ஒவ்வொரு முறை மனம் வேறு வேறு வடிவில் பாவனை செய்துக் கொள்கிறது. இங்கிருந்து தொட்டுணர்ந்து அந்த குழந்தைமை நோக்கி காலம் தன் கையை விரிக்கிறது.

அருவியிலிருந்து கீழே விழுந்து நதியாய் போன நீரின் நினைவில் நின்றிருப்பது அது முதல் துளியாய் அருவியின் ஊற்று முகத்தில் ஜெனித்த நொடி தான் என எனக்குத் தோன்றும். அதன் பின் அந்த நொடியை அந்த நீர் வேறு வேறு வடிவில் பாவனை செய்துக் கொள்கிறது. அதே போல தான் நம் இளமைப் பருவ நினைவுகளும் அந்த சிறுவனின் மனதில் பதிந்த முதல் காட்சி அதனை அவன் கற்பனையில் விரித்துக் கொண்டது அதை நோக்கியே மனம் மீண்டும் மீண்டும் திரும்புவது.

இதனை ஒரு ஆன்மீக தரிசனம் என்றே கொள்கிறேன். கண் மலர்தல் கட்டுரையிலும் அருண்மொழி என்னும் பள்ளிப் பருவத்தில் கண்டடைந்தது அந்த அகத் தரிசனத்தை தான் என என்னைக் கொண்டு நான் ஊகிக்கிறேன். அந்த முதல் தரிசனம் எத்தனை தூய்மையானது. இந்தக் கட்டுரையில் சொல்லப்படும் அருண்மொழி அடைவது ஒரு பக்தி மனநிலை அல்ல. அது பெரியவர்களுக்கு உரியது. குழந்தையின் கண்கள் அந்த பக்திக்கு அப்பாற்பட்டு நிற்கும் ஓர் ஆன்மீக தரிசனத்தை தொடுகிறது. அதன் பெரும் திகைப்பு அந்த வயது அருண்மொழியை அலைகளிக்கச் செய்கிறது. பிரபஞ்சத்தின் அந்த பெருவிரிவை அதன் பேரிருப்பை அன்று நான் சொல்லத் தெரியாமல் நாள் முழுவதும் அழுதேன். அருண்மொழி அம்மா அன்று முழுவதும் கண் நிறைந்து அந்த தரிசனத்தையே கண்டுக் கொண்டுவருகிறார்.

கட்டுரையில் கோபுரத்தை வர்ணிக்கும் இடமொன்று வருகிறது. அந்த ஒரு வரியில் அம்மா அவர்களின் கூர்மையான அவதானிப்பை சொல்லிச் செல்கிறார். ”கோவிலை நெருங்கினோம். ராஜ கோபுரத்தின் உச்சி விளக்கொளியில்  எல்லா கோபுரங்களும் தனிமையில், ஒவ்வொரு மனநிலையில் தவம் செய்வதாக எனக்குத் தோன்றியது. இல்லை, அந்த அமைதி அப்படி தோன்றவைத்தது. கருநீல வானில் எக்கணமும் சாம்பல் ஒளி ஊடுருவும் போல் தோன்றியது.” இந்த காட்சியை ஒரு உணர்வோடு இணைத்துக் கொள்கிறார். குழந்தைகளுக்கே உரிய இயல்பது என நினைக்கிறேன். ஒரு குழந்தைக்கு ஒரு பொம்மைக் கூட உணர்வாக தான் கடத்தப்பட்டிருக்கும் அதே மனநிலையே இங்கே கோபுரத்தைப் பார்க்கும் போது ஏற்படுகிறது.

இக்கட்டுரையில் அவர் திரும்பி வரும் போது ஒரு இடம் வரும் ரங்கபுரத்தை கொள்ளிடமும், காவிரியும் சேர்த்து எடுத்துச் செல்லும் காட்சியில் தொடங்கி ஸ்ரீரங்கத்தின் மொத்த நெல் வயலும் பச்சை மாமலைப்போல் மேனியாக மாறி அந்த குழந்தையின் கண் நிறைந்திருக்கும். அன்று போகிற போக்கில் கேட்ட அந்த பாடல் நினைவின் ஓரத்தில் இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் எப்படி அத்தருணத்தை ஒருவரால் மீட்டெடுக்க முடிகிறது. அந்த ஒரு வரி, “பச்சை மாமலை மேனி” என்ற வரி ஏன் ஒருவருக்கு இத்தனை தொந்தரவு செய்ய வேண்டும்?.

இத்தனை ஆண்டுகள் கழித்து அன்று கேட்ட கவிதை வரி இசையோடு சேரும் போது அம்மாவிற்கு புது அனுபவமாக மாறுகிறது. அதுவே மொழியின் உச்சமும், அருவ மொழியின் உச்சமும் இணையும் போது ஏற்படும் மாயம் என்று நினைக்கிறேன்.

அந்த குழந்தை ஸ்ரீரங்கம் கிளம்பிச் செல்லும் போது அங்கே செல்ல வேண்டும் என்ற பிடிவாதம் மட்டுமே இருக்கிறது. இரவில் அங்கே உடனே செல்ல வேண்டும் என்ற உந்துதல் மட்டுமே இருக்கிறது. காலையில் பேருந்தில் செல்லும் போதும் அதே மனநிலை தான் ஆனால் கோவிலினுள் சென்று காலை விஷ்ணு தரிசனம் கண்டவுடன் அந்த பச்சை மாமலை மேனியனைக் கண்டவுடன் அவரது மனதை பொங்கச் செய்துவிடுகிறது. உங்கள் திருமுகப்பில் கதையில் காளிசரண் கண்டது எதை பத்துவருடம் கழித்து அனந்தன் அந்த கருமேனியில் கண்டது எதை? அதையே அருண்மொழி கண்டு திரும்புகிறார்.

ஆனால் இக்கட்டுரையில் அவர்களுக்கே உரிய ஒரு துடுக்குத்தனத்துடன், தன்முனைப்புடன் அதனைக் கடந்து செல்கிறார். அந்த தரிசனத்தைப் பற்றியே பெரிய விவரணைகள் எதுவும் கட்டுரையில் இல்லை. ஆனால் கட்டுரையின் பிற்பாதி முழுவதும் அதனையே சுட்டி நிற்கிறது. அந்த மனநிலையே கட்டுரை முழுவதும் கடத்தப்படுகிறது. அதனாலே இச்சிறிய கட்டுரை வாசகருக்கு பெரிதாக தொந்தரவு செய்கிறது. அந்த குழந்தையின் தரிசனத்தை ஒரு துளிக் கண்டுவிட்டதால் ஏற்படும் பரவசம் என நான் நினைக்கிறேன்.

நன்றி,

நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.

முந்தைய கட்டுரைதிருப்பத்தூர் இலக்கிய விழா
அடுத்த கட்டுரைஅமெரிக்காவில் மரபின்மைந்தன்