கலைஞனின் முழுமை

Shakespeare with children

தேவதேவன் ஒரு கவிதையில் திருவிழாக்களில் பலூன் விற்றுக்கொண்டு அலையும் ஒரு வியாபாரியாக குழந்தைகளும் கொண்டாட்டமும் சூழ வாழவேண்டுமென விரும்புவதாக தன் ’தந்தை’யிடம் கோருகிறார். நான் அதை வாசிக்கையில் புன்னகை செய்துகொண்டேன். அவர் உண்மையில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக, வாழ்நாள் முழுக்க குழந்தைகளுடன் இருந்தவர். ஆனாலும் அது பள்ளி. கல்வி எனும் சுமைகொண்ட குழந்தைகள் அவை. அவர் விரும்புவது சுதந்திரமான குழந்தைகளை. அவர்களுக்கு அவர் தரவிரும்புவது மண்ணில் திரட்டிய கல்வியை அல்ல. விண்ணில் அவர்களை தூக்கிக்கொண்டே இருக்கும் பலூன்களை.

நான் கலைஞனின் உன்னத நிலை என நினைப்பது என்றுமுள்ள கொண்டாட்டம் ஒன்றில் எப்போதுமிருப்பதைத்தான். பண்டாரங்கள் அப்படி இருப்பதை நான் திரும்பத்திரும்ப கண்டிருக்கிறேன். நம் காலகட்டத்தின் பெருங்கவிஞன் அப்படி திளைப்பு நிலையில் இருப்பதை சென்ற முப்பத்தைந்தாண்டுகளாகக் கண்டுகொண்டிருக்கிறேன்.

அதுவரை எனக்கு திரும்ப திரும்ப சொல்லப்பட்டது கலைஞன் என்பவன் தத்தளிப்பு கொண்டவன், முட்டிமோதிக்கொண்டிருப்பவன், அலைமோதுபவன், அங்குமிங்கும் பார்ப்பவன் என்று. ஜே.ஜே சில குறிப்புகளில் ஓர் இடம் வருகிறது. துறவியொருவர் ‘பாலுவிடம் அங்குமிங்கும் பார்க்காதே’ என்கிறார். பாலு பின்னர் பெருமிதத்துடன் சொல்லிக்கொள்கிறான் ‘அங்குமிங்கும் பார்த்து அழிவதற்கே பிறந்தவன் நான்’ என்று. ஏனென்றால் அவன் கலைஞன் என தன்னை உணர்கிறான்.

இருத்தலியல் காலகட்டத்தில்தான் கலைஞன் அவ்வாறு வரையறுக்கப்பட்டான். அன்று எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறுகளில், அவற்றை ஒட்டி எழுதப்பட்ட நாவல்களில் எல்லாம் எழுத்தாளன் என்பவன் சூளைச் செங்கல் குவியலிலே சரியும் தனிக்கல்லாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறான். எல்லா கலைஞர்களையும் அப்படிச் சித்தரித்து ஒரு கட்டத்தில் எல்லா கலைஞர்களும் அச்சித்தரிப்பை நோக்கி தங்கள் வாழ்க்கையைச் செலுத்தலானார்கள்.

அந்தச்சூழலிலிருந்து யோசிக்கும்போது அதுவே உண்மை என்றும் மற்றொன்று இல்லையென்றும் தோன்றும் ஆனால் உண்மையில் அது ஒரு காலகட்டத்தின் மனநிலை மட்டுமே. ஒரே ஒரு சாத்தியக்கூறு மட்டுமே. உலகவரலாற்றில் பெரும் இலக்கியங்களை எழுதியவர்கள் அனைவரும் அந்த ஒற்றை இயல்பு கொண்டவர்கள் அல்ல. அந்த ஒற்றை ஆளுமையாக படைப்பாளியை எவரும் வகுத்துவிட முடியாது.

கலைஞர்கள் பலவகையானவர்கள். அவர்களில் தன்னை வில்லாக்கி ஆத்மாவை இலக்கு நோக்கித் தொடுத்துவிட்ட யோகி நிகர்த்தவர்கள் உண்டு. உண்மையில் அவர்களே பேரிலக்கியங்களை எழுதியிருக்கிறார்கள். சிதைந்து அழிந்தவர்கள் தங்கள் சிதைவின் தடயத்தை மட்டுமே விட்டுச் சென்றிருக்கிறார்கள், அவ்வளவுதான். இங்கு பிறர் வாழும் வாழ்க்கையின் உயர்நிலையில் வாழ்பவனும் கீழ்நிலையில் வாழ்பவனும் அவர்கள் அறியாத உலகைச் சொல்லமுடியும். இருவகைக் கலைஞர்கள் என்றுமுள்ளனர்.

நடுத்தரவர்க்கத்து வாழ்வில் சிக்கி அதன் ஓயாத தறியோட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் எளிய வாசகனுக்கு வீழ்ந்துபட்ட, சிதைவுற்ற கலைஞன் மேல் ஒரு பரிதாபமும், அதன் விளைவான கரிசனமும் உருவாகிறது. சமீபத்தில்கூட பிரான்ஸிஸ் கிருபா மறைந்தபோது அந்த அனுதாப வெளிப்பாடு ஒரு கொண்டாட்டமாகவே வெளிப்பட்டது.

வென்றமைந்த கலைஞன், ஞானிக்கு நிகரானவன். அவன் இந்த நடுத்தரவர்க்க மனிதர்களுக்கு அளிக்கும் மிரட்சியையும் தாழ்வுணர்ச்சியையும் அர்த்தமின்மையுணர்ச்சியையும் சிதைந்தழியும் கலைஞன் அளிப்பதில்லை. சிதையும் கலைஞனை நோக்கி உள்ளூர ‘நல்லவேளை, நானெல்லாம் தப்பித்தேன்’ என சொல்லிக்கொண்டு அவன் அக்கலைஞனை நோக்கி ‘அய்யய்யோ, என்ன ஒரு கலைஞன்!” என வியக்கிறான்.

christ-with-children-christopher-santer

வீழ்ந்த கலைஞர்களைப் பற்றிப் பேசும்போது ‘உண்மையான கலைஞன்யா, குடிச்சே அழிஞ்சான்’ என்று சொல்பவர்களின் பாமரத்தனம் எரிச்சலை ஊட்டினாலும் அவர்களை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அவர்கள் பார்வையாளர்கள் என அமர்ந்திருக்கும் மேடையில் சிதையும் கலைஞனின் வேடம் புனைந்து நடிக்கும் அப்பாவிகள்தான் எரிச்சலூட்டுகிறார்கள்.

எழுத்தாளன் மீதான அனுதாபத்துடன் படிக்கப்படுகையில் எழுத்து தன் கம்பீரத்தையும் நிமிர்வையும் இழந்துவிடுகிறது. அக்கலைஞனை பார்க்கையில் ஏற்படும் மெல்லிய குற்றஉணர்வை அதைப்புகழ்வதினூடாகத் தீர்த்துக்கொள்கிறான் எளிய வாசகன். கற்பனை வழியாக அக்கலைஞன் வாழும் வாழ்க்கையில் தானும் i சிக்கிக்கொண்ட இன்பக்கிளுகிளுப்பையும் அடைகிறான்.இவையனைத்துமே பொய்யான உணர்வுகள். கலை என்பது உண்மையின் அரங்கே ஒழிய எழுதுபவனும் வாசிப்பவனும் சேர்ந்து ஆடும் பாவனைநாடகம் அல்ல. படைப்பாளனுக்கு முன் வாசகன் கொள்ள வேண்டிய உறவு இப்படி ஒற்றைப்படையானதும் அல்ல.

வீழ்ந்த பெருங்கலைஞர்கள் உண்டு என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் நான் ஓர் எழுத்தாளனை என் முன் சென்ற பாதத்தடமாகவே பார்க்கிறேன். அவ்வண்ணம் ஒரு அடியேனும் எனக்கு முன்னால் வைக்காதவர்கள் மீது தொடர்ந்த ஈடுபாடு எனக்கு இருப்பதும் இல்லை. முன்சென்றவர்கள் தொடர்பவர்களின் வழிகாட்டிகள், ஆசிரியர்கள் என்பதனால் இது ஒரு ஆசிரிய- மாணவ சரடும் கூடத்தான். ஆசிரியர் நமது அனுதாபத்துக்குரியவரல்ல. நமது மதிப்புக்கும் வழிபாட்டுக்கும் உரியவரே. காலம் என, வரலாறு என ,பண்பாடு என திரண்டு நம் முன் நின்றிருக்கும் ஆளுமை அவர்.

அவர் மேல் நமக்கு இருப்பது பரிதாபமெனில் நாம் எதைப்பார்த்து பரிதாபமும் அனுதாபமும் கொள்கிறோம்? ஒட்டு மொத்த மூதாதையர் மேலும் அனுதாபமும் இளக்காரமும் கொண்ட ஒருவனால் எதை உண்மையில் உணர்ந்துவிட முடியும்? வரலாறெனும் நீண்ட காலப்பரப்பிலிருந்து, பண்பாடெனும் சூழ்வெளியிலிருந்து அவன் பெற்றுகொண்டதுதான் என்ன? அவன் எதைச் சேர்க்க முடியும்? உருவாகி எழும் புதிய தலைமுறை அவனிடமிருந்து எதைக்கொள்ள முடியும்?

நவீனத்துவ எழுத்தாளனின் மிகப்பெரிய சிக்கல் என்னவெனில் அவன் தன்னில் தொடங்கி தன்னில் முடிகிறான் என்பதுதான். விந்தையான ஒரு மனநிலை அது. கண்மூடித்திறப்பதற்குள் இருபத்தைந்து ஆண்டுகள் கடந்து செல்கின்றன. இருபத்தைந்து ஆண்டுகளில் முழுமூச்சாக எழுதினால் கூட பத்துப்பன்னிரண்டு நாவல்கள் எழுதிவிட முடியும். அதற்குள் அடுத்த தலைமுறை வந்து வாசலைத் தட்டுகிறது. அவ்வளவுதானா என்று உள்ளம் துடிக்கிறது. கையிலிருப்பவற்றை கொடுத்துவிட்டு உனக்குரிய வரலாற்று இடத்தில் சென்று நின்றுகொள் என்று காலம் சொல்கிறது. அப்போதே நாம் உணரவேண்டும். இது ஒரு தொடர்பயணம் நாம் ஒரு கண்ணி மட்டும்தான் என.இயல்பாக அரங்கொழிய நம்மால் இயலவேண்டும்.

அதை உணர்வதில் நவீனத்துவ  எழுத்தாளர்களுக்கு இருக்கும் பெரும் துயரத்தையும் அலைக்கழிப்பையும் இன்று எண்ணிப்பார்க்கையில் திகைப்பு ஏற்படுகிறது. சுந்தர ராமசாமி காலம் தன்னைக்கடந்து செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாத பெருந்துயரத்தில் இறுதி ஆண்டுகளைக் கழித்து மறைந்தார். அது தெய்வத்தால் கூட மற்றொன்று எண்ணமுடியாத இயற்கையின் நெறியென ஏன் அவரால் உணர முடியவில்லை என நான் எண்ணி எண்ணி வியக்காத நாள் இல்லை.

எழுதியவற்றை கைவிட்டுவிட்டு ஜெயகாந்தன் விட்டு அமர்ந்திருந்தது போல் சுராவால் அமர்ந்திருக்க முடியவில்லை. ஏனெனில் அவர் நவீனத்துவர். ஜெயகாந்தன் தன்னை கைவிட்டுவிட்டு வள்ளலாரில், தாயுமானவரில் சென்றமைய முடிந்தது. கையில் ஒரு சிவமூலிச் சிலும்பியை ஏந்தி தன்னை ஒரு பண்டாரம் என உணர முடிந்தது.

நவீனத்துவரால் அது இயலாது. ஏனென்றால் அவன் உலகமே தன்னில் தொடங்கி தன்னில் சுழல்கிறது. தன் அறைவாசலை வந்து தட்டும் காலப்பெருக்கைக்கண்டு எப்போதும் அஞ்சுகிறது. என் அறைவாசலை சுண்டாதே தயவு செய்து என்று சுந்தர ராமசாமியின் கவிதை ஒன்று. அவர் வாசலில் எப்போதுமே காலம் சுண்டிக்கொண்டிருந்ததை கவிதைகள் காட்டுகின்றன. அந்தக்காலம் நேற்றைய காலம் அல்ல. சமகாலமும் அல்ல எதிர்காலம்.

எழுத்தாளன் சிதறிப் பரந்தாக வேண்டுமென்றில்லை. சரியான முறையில் ஓர் ஆசிரியர் அமைவாரென்றால் அவன் தன் தேடலை தெளிவாகத் தொகுத்துக்கொள்ள முடியும். பதில்களால் எவரும் தொகுக்கப்படுவதில்லை. ஏனெனில் அவை எய்தப்படுமிடத்திலேயே இருக்கின்றன. கேள்விகளால்தான் தேடல்கொண்டவன் தொகுக்கப்படுகிறான். தனது உசாவல் என்ன என்று தானே அறிந்துகொண்டு, அவற்றை தனக்கென வகுத்துக்கொள்பவனுக்கு சிதறல் இல்லை.

மெய்யான ஆசிரியன் என்பவன் மாணவனுக்கு விடைகளை அளிப்பவன் அல்ல. அவனுடைய கேள்விகளை அவனுக்கே தொகுத்து அளிப்பவன். இன்னும் சொல்லப்போனால் அவனுக்கு முன் சரியான ஆடி என நின்றிருப்பவன். அவன் தன்னைத்தானே பார்த்துக்கொள்ள உதவுபவன்.

ஆகவேதான் மெய்யான ஆசிரியன் தொடக்கத்தில் மாணவனுக்கு சீற்றத்தை அளிக்கிறான். ஏனெனில் மாணவனின் நடிப்புகளை, வீண் பற்றுகளை, இழிந்த ஆணவத்தை முதலில் ஆசிரியன் அவனுக்கு காட்டுகிறான். பின்னர் அவற்றை அவனே புரிந்துகொண்டு கடந்தானெனில் தனது மெய்யான தேடல் என்ன என்று கண்டுகொள்வான் ,அவ்வாறு கண்டுகொண்ட பின்னர் அவனுக்குத் தன் அடையாளத்தை தானே வகுத்துக்கொள்ளவேண்டிய தேவை எதுவுமே இல்லை. தன்னிச்சையாக அவன் வெளிப்படலாம். ,சூழ்ந்திருப்பவர்கள் தன்னைப் புரிந்துகொள்வதற்கென ஒரு புறத்தோற்றத்தை அவன் சமைக்க வேண்டியதில்லை. எக்கணத்திலும் இயல்பாக திகழலாம்.

தேவதேவனின் கவிதை

விரும்பினேன் என் தந்தையே

பேயோ தெய்வமோ
எந்த ஓர் அச்சம்
ஆட்டிப்படைத்தது உம்மை என் தந்தையே

நீ படித்தது போதும்
எல்லாரும் மேற்படிப்பு படித்தேகிவிட்டால்
இருக்கும் பிற வேலைகள் எல்லாம்
யார் செய்வார் என்றறைந்தீர்.
கடும் உழைப்பை அஞ்சினேனா ?
கூட்டாகப் புரியும் பணிகளிலே
இருக்க வேண்டிய தாளம்
இல்லாமை கண்டு அஞ்சினேனா ?

விரும்பினேன் நான் என் தந்தையே
விண்ணளவு பூமி விரிந்து நிற்கும் நிலங்களிலே
ஆடுகள் மேய்த்து புதர்நிழலில் களைத்து அமர்ந்து
அமைதி கொண்டு முடிவின்றி இப்புவியை
பார்த்துக்கொண்டு இருப்பதற்கும்

காலமெல்லாம் திருவிழாவும்
மழலைகளின் கொண்டாட்டமுமாய்
என் வாழ்வை இயற்றிடலாம் என்று எண்ணி
ஊர் ஊராய் சுற்றிவரும் பலூன் வியாபாரி ஆவதற்கும்

மொய்க்கும் குழந்தைகளின் நிர்மால்யம் தேடி
பள்ளிக்கூட வாசலிலே இனிப்பான
பெட்டிக்கடை வைத்து காத்துக் கிடப்பதற்கும்

விரும்பினேன் நான் என் தந்தையே
வியர்வை வழிந்தோட வீதியிலும் வெயிலிலும்
உழைப்போர் நடுவே
அடுப்பு கனலுகிற சுக்கு வெந்நீர் காரனாகி  நடமாடவும்

சாதி மதம் இனம் கடந்து அலைகிற
யாத்ரிகப் புன்னகைகள் அருந்தி என் உள்ளம் குளிர
வழிகாட்டி வேடம் தரிக்கவும்

விரும்பினேன் என் தந்தையே
அன்பர் குழுக்கள் நடுவே வாத்தியமிசைக்கவும்
பாடவும் நடமிடவும்
விரும்பினேன்

இன்று விரும்பியதெல்லாம் நான் அடைந்தேன்
இன்று நினைத்துப் பார்க்கிறேன் உம்மை என் தந்தையே
நம்மை ஆட்டிப் படைத்த மறைபொருளின் நோக்கையும்

தேவதேவன் கவிதைகள் வாங்க
முந்தைய கட்டுரைகதையியல் – கடலூர் சீனு
அடுத்த கட்டுரைசந்தையில் சுவிசேஷம்-கடிதங்கள்