பெரும்பான்மைவாதமும் அறிவுஜீவிகளும்-கடிதம்
அன்புள்ள ஜெ,
காலிபங்கன் அகழ்வாய்வு தளத்திற்கும் அதன் அருகிலேயே அமைந்திருக்கும் அருங்காட்சியகத்திற்கும் நான் 2018 ல் நேரில் சென்றிருக்கிறேன். காலிபங்கன் ராஜஸ்தான் மாநிலத்தின் ஹனுமான்கர் மாவட்டத்தில் உள்ளது.
ஹரப்பா நாகரிகத்தின் தொடக்க காலம் மற்றும் முதிர்ந்த காலம் என இரு காலகட்டங்களைச் சேர்ந்த தொல்பொருட்கள் காலிபங்கனில் கிடைத்துள்ளன. அதாவது தொடக்க காலம் என்பது 3000-2700 BC. முதிர்ந்த காலம் 2600-1900 BC ஆகும்.
காலிபங்கன் புராதன சரஸ்வதி ஆற்றின் கரையில் அமைந்த நூற்றுக்கணக்கான ஊர்களில் ஒன்று. புராதன சரஸ்வதி கீழ் இமயமலைத் தொடரான சிவாலிக்கில் தொடங்கி ஹரியானா, ராஜஸ்தான் வழியாகச் சென்றது என்று சொல்லப்படுகிறது. சரஸ்வதியின் மூலம் இன்று ஆதி பத்ரி என்றழைக்கப்படும் ஊரில் உள்ளது. ஆதி பத்ரி ஹரியானாவின் யமுனா நகர் மாவட்டத்தில் அமைந்த ஊர்.
ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் நிலங்களில் விரிந்த ஒரு தொல் நாகரிகத்திற்கான மிக முக்கியமான சான்றுகளில் ஒன்று காலிபங்கன். இதுதான் அதன் முதல் சிறப்பம்சம். மேலும் காலிபங்கனில் ’உழவுப்பட்ட’ வயலுக்கான தொல்லியல் சான்று கிடைத்திருக்கிறது. மற்றும் சக்கரத்தைக் கொண்டு சுமார் 600 டிகிரி வெப்பத்தில் மட்பாண்டங்கள் செய்யப்பட்டன.
2700 BC வாக்கில் உண்டான நில நடுக்கத்தில் தொடக்க கால நகரம் கைவிடப்பட்டு 100 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மக்கள் குடியேறியதாக தொல்லியல் பலகை கூறுகிறது.
ரோபர், பனாவலி, ராக்கிகர்ரி, தோலவீரா, லோதல் என பல தொல்லியல் தளங்கள். நானே பல இடங்களுக்கு நேரில் சென்றிருக்கிறேன். சமீபத்தில் கூட ஹரியானாவில் உள்ள பிர்ரானா (Bhirrana) என்ற ஹரப்பா காலத்தைச் சேர்ந்த தொல்லியல் தளத்திற்கு சென்றுவிட்டு வந்தேன்.
இவை அனைத்தையும் கொஞ்சம் மெனக்கெட்டால் இன்று இணையம் வழியாக எளிதில் தெரிந்துகொள்ளலாம். வாய்ப்பிருப்பின் நேரில் சென்றும் வரலாம். மறுப்பவர்கள் வேறு ஏதோ கலாச்சாரத்தில் வாழ்கிறார்கள்.
அன்புடன்,
ராஜா
அன்புள்ள ராஜா,
ஓர் ‘அறிஞர்’ ஆவேசமாக எனக்கு ஒரு கடிதம் போட்டிருந்தார். ‘நீங்கள் சொல்லும் தொல்நகரங்கள் எல்லாம் ஏன் முன்னாலே சொல்லப்படவில்லை? கீழடி கண்டுபிடிக்கப்பட்டபிறகுதானே சொல்கிறீர்கள்?” நான் பரிதாபமாக அந்நகர்கள் கண்டுபிடிக்கப்பட்டு எத்தனை ஆண்டுகளாயின, என்னென்ன ஆய்வுகள் நடந்துள்ளன என்றெல்லாம் எழுதினேன். ஆனால் அவர் எதையும் வாசிக்கவில்லை. உடனே அடுத்த மின்னஞ்சல். அதெல்லாம் தமிழர் நாகரீகம் என்று.
உண்மையில் சென்ற ஐம்பதாண்டுக்காலத்தில் இங்கே பண்பாடு, வரலாறு பற்றிப் பேசுபவர்கள் எவரும் இதைப்பற்றி பொதுவெளியில் உரையாடியதே இல்லை. அனைவரும் பொதுச்சூழலில் இருக்கும் மனநிலைக்கு உகந்தபடி போலிப்பெருமித வரலாற்றை மட்டுமே சொல்லிச் செல்கிறார்கள்.
2012ல் நண்பர்களுடன் சென்ற அருகர்களின் பாதை பயணத்தில் லோத்தல், டோலவீரா, காலிஃபங்கன் சென்றிருந்தோம். அங்கிருக்கும் அகழ்நகரங்களில் காலத்தால் முந்தையது லோத்தல். ஹரப்பாவையும் விட முந்தையது என்கிறார்கள். காலிஃபங்கன் அண்மையது. ஆனால் அதனருகே உள்ள தொன்மையான பெரிய குப்பைமேடு தொன்மையானது என்றனர்.
இவை எல்லாம் வரலாற்றில் ஆர்வமுள்ள, அதற்கு கொஞ்சம் மெனக்கெடுகிற, கொஞ்சம் பயணம் செய்கிறவர்களின் உலகம். இதை சாதி, மத, இன வெறியுடன் வரலாற்றை அணுகுபவர்களிடம் விவாதிக்க முடியாது. நான் விவாதிப்பதுமில்லை. ஆனால் இந்த பொதுச்சூழல் புகைமூட்டத்தில் திணறும் ஆர்வமுள்ள இளைஞர்களிடம் தொல்லியல் என்றாலென்ன, அதன் முறைமைகள் எத்தகையவை என்று சொல்லவேண்டியிருக்கிறது. மிகச்சிலருக்கு அதைச் சார்ந்து ஆர்வம் பிறக்கும். தீவிரப்பாவனைகள் வழியாகவே இளமையை கடந்துசெல்பவர்களுக்கு சென்று சேராது. ஆனால் அந்த மிகச்சிலர் முக்கியமானவர்கள்.
ஜெ