நமது பெருந்திருவிழாக்களைத் தக்க வைப்பது பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன். அவற்றை வெறும் வணிகப்பெருக்கமாக ஆக நாம் அனுமதிக்கலாகாது. அவற்றை அரசியலாக்கக் கூடாது. அவற்றில் சட்டம் ஒழுங்குப்பிரச்சினை வர, ரவுடிகள் ஊடாட அனுமதிக்கலாகாது. அவை நம்முடைய பெருந்திரள் அனுபவங்களாக, நம் கலாச்சாரத் தொல்நினைவுகள் எழும் ஒருவகை கூட்டான பித்துநிலையாக, வரலாறு மீண்டும் நிகழும் களங்களாக, இங்கே நீடிக்கவேண்டும்.
குமரித்துறைவி பற்றி எனக்கு வந்த கடிதங்கங்களில் கணிசமானவர்கள் “திருவிழாக்களில் எங்களுக்கு ஆர்வமில்லை, இருந்தாலும் இந்த நாவலில்…” என்று ஆரம்பிப்பதைப் பார்த்தேன். ஏராளமானவர்கள் திருவிழாக்களைப்பற்றி சலிப்புடனும் அவை ஒருவகையில் கலை இல்லாத களியாட்டங்கள் என்ற எண்ணத்துடனும் பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.
அதை உடனடியாக என்னால் புரிந்துகொள்ள முடிகிறது .ஏனென்றால் மிகக் குறுகிய காலம் நான் அந்த மனநிலையிலே இருந்திருக்கிறேன். என்னை அபாரமானவனாக, வேறுபட்டவனாக நான் எண்ணிக்கொள்ளும்போது வெறும் மக்கள்த்திரளில் ஒருவனாக இருப்பதென்பது ஒரு இழிவாக எனக்குத்தோன்றியது. எந்தக் கூட்டத்திலும் ஒன்ற முடியாதவனாக என்னை உணர்ந்தபோது உண்மையில் எனக்கு நானே சற்றுக்கூடுதல் மதிப்பெண் போட்டுக்கொண்டிருக்கிறேன் என்று இப்போது தோன்றுகிறது. அந்த மதிப்பெண் அன்று மிக உவப்பானதாக இருந்தது. ஆகவே இளம் வயதில் அத்தனை திருவிழாக்களிலும் களியாடிக்கூத்தாடிய நான் திடீரென்று அத்தனை திருவிழாக்களிலிருந்தும் அன்னியமானேன்.
எனது புனைவுக்களியாட்டுக் கதைகளைப் படிப்பவர்கள் திருவிழாக்களுக்கான பல்வேறு மனநிலைகள் அதில் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். திருவிழாக்களின் கொண்டாட்டம், திருவிழா முடிந்து மறுநாள் உருவாகும் வெறுமை, திருவிழா நிகழும் பகலில் தித்திக்கும் தூக்க மயக்கம், எனப் பல மனநிலைகள் புனைவுக்களியாட்டுக் கதைகளில் உள்ளன. பொலிவதும் கலைவதும், துளி, வனவாசம், தேவி,கேளி போன்ற கதைகள். இறுதியா ஒரு முத்தாய்ப்பாக குமரித்துறைவி.ஆனால் ஒரு மாபெரும் திருவிழாவில் முற்றிலும் தனியனாக விலகி அலைபவன் திசைகளின் நடுவே கதையில் தோன்றுகிறான். நான் அவ்வாறு மாறிய பிறகுதான் முதல் கதையை எழுதத் தொடங்கியிருக்கிறேன். திசைகளின் நடுவே கதையில் இருந்து குமரித்துறைவி வரை ஒரு பயணம் நிகழ்ந்திருக்கிறது.
விஷ்ணுபுரம் நாவலில் பல கதாபாத்திரங்கள் திசைகளின் நடுவே கதையில் வருபவனின் நீட்சிகள். திரளிலிருந்து முற்றிலும் விலகியவர்கள். ஏதோ ஒரு கட்டத்தில் மூளையை உடைத்து வீசிவிட்டு திரளில் இறங்கித் தன்னை கரைத்துக்கொள்ள முடியாதா என்று ஏங்கி அதற்கு முயன்று தோற்று பின்வாங்குபவர்கள் மூளைக்குள் ஒரு அனல் அடுப்பைச் சுமந்து அலைபவர்கள். இன்று விஷ்ணுபுரம் கதாபாத்திரங்களை பார்க்கையில் அவர்கள் அனைவருமே நவீன இலக்கியத்திற்குள் மட்டும் வாழ்பவர்களோ என்ற எண்ணம் வருகிறது. அல்லது நவீன இலக்கியம் அவர்களைப்பற்றி மட்டுமே எழுதியிருக்கிறது. அதில் தேடி நிறைவுற்றமைந்த பல கதாபாத்திரங்கள் உள்ளன. ஆனால் அவர்கள் எல்லாம் துணைக்கதாபாத்திரங்களாக தத்தளித்து தனித்து அலைபவர்களால் திரும்பிப் பார்க்கப்படுபவர்களாக மட்டுமே வருகிறார்கள். பாவகனும் சங்கர்ஷணனும் பிங்கலனும் அலைபவர்களே.
பின்னர் எப்போது திருவிழாக்களை நோக்கிச் சென்றேன்? உண்மையில் சிதறி அலையும் தேடல் கொண்ட இளைஞனாக இருந்த நான் என்னைத் தொகுத்துக்கொண்டு கூரிய அகத்தேடல் மட்டுமே கொண்டவனாக ஆக்க நித்ய சைதன்ய யதியால் முடிந்தது. அனைத்து திசைகளிலும் ததும்பிக்கொண்டிருந்த உள்ளம் ஒரு திசை நோக்கி விசை கொண்டது அவருடைய காலடியிலிருந்துதான்.
என் தேடல் என்ன என்று கூர்கொண்டபின் பிற அனைத்து களங்களிலும் நான் என்னை ஒருங்கிணைத்து கொண்டேன். எங்கும் நான் என்னை காட்டிக்கொள்ள வேண்டியதில்லை. வேறெந்த களத்திலும் எனக்கு அடையாளமோ வெற்றியோ தேவையில்லை. அவ்வறிதலுக்குப்பின் நான் என்னை மாறுபட்டவனாக உணர்வது நின்றது. என்னை இயல்பாக வைத்துக்கொள்ள முடிந்தது.
எல்லாக்காற்றுக்கும் நடனமாடும் மரத்தைப்போல அந்த விடுதலையை எழுத்தாளன் சிந்தனையில் அடையவேண்டும். அதை அடைந்த பின்னர் சட்டென்று அவன் உணர்வான், எந்த திரளிலும் அவன் அந்நியன் அல்ல. திரளில் அவன் எல்லைகள் கரைந்து போவதில்லை. திரள் அவனைக் கரைப்பதுமில்லை. திரளில் முழுமையாகத் தன்னை அழிக்கும்போதும் தனக்கென ஒரு சுடர் அவனில் எஞ்சியிருப்பதனால் பெருங்களியாட்டுகள் அவனை தன்னை மறக்கச் செய்கின்றன.
திருவிழாக்களை நான் இன்று விரும்புவதற்கு காரணம் எண்ணுகையில் தோன்றுவது இதுவே. நேற்று, முன்தினம், அதற்கு முன்தினம் என மடித்த மடித்த மடிப்பென பின்னால் மேலும் பின்னால் சென்று கொண்டிருக்கும் காலம் திடீரென்று விசிறியென தன்னை விரித்துக்கொண்டு, சூழலென மாறி, பரப்பென்று ஆகி நின்றிருப்பது போன்றது ஒரு திருவிழா என்பதுதான். அது எங்கோ எப்போதோ ஒரு சடங்கென, ஒரு கேளிக்கைத் துளியென தொடங்கப்பட்டதாக இருக்கும். அதன் வேர்களைத் தேடிச்சென்றால் அறிய முடியாத ஒரு பழங்குடிக் காலத்தை சென்றடைவோம். நிலப்பிரபுத்துவத்தினூடாக வெவ்வேறு யுகங்களினூடாகவும் அது வந்து சேர்ந்து நம்முன் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
பிரம்மாண்டமான ஒரு நாடகம் .பல்லாயிரக்கணக்கான் நடிகர்கள். அவர்களுக்கான திரைக்கதைகள் அவர்களுடைய நூறு தலைமுறை மூதாதையருக்கு முன்னரே எழுதப்பட்டுவிட்டன. அவர்கள் அனைவருக்கும் அவர்கள் அறியாமலே பண்பாடு வழியாக அவை கற்பிக்கப்பட்டுவிட்டன. என்ன பேசுவது, எப்படி அணிபுனைவது, எப்படி மகிழ்வது ,எதைச் செய்வதென்று ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கிறது.
திருவிழாக்களைப்போல இந்தக் காலகட்டத்தில் விந்தையான பிறிதொன்று இல்லை என்று திடீரென்று தோன்றுகிறது. ஒரு திருவிழாவை இன்று நம்மால் ஒருங்கிணைத்துவிட முடியுமா? ஒரு திருவிழாவை திட்டமிட்டு உருவாக்குவதென்றால் எத்தனை கோடி செல்வம் வேண்டும்!. எத்தனை ஆயிரம் பயிற்சிகள், எத்தனை கலைஞர்கள் வேண்டும்! எவரால் அந்த மாபெரும் நாடகத்தை எழுதி இயக்கி நடத்த முடியும்?
நம்முன் பெருகி வந்திருக்கும் இந்தப் பேராறு பல்லாயிரம் கோடி துளிகள் இணைந்த பெருக்கு. பல ஆயிரம் ஆண்டுகள் என திரண்டு எழுந்து வந்த பண்பாட்டு அடையாளம். பல லட்சம் ஆண்டுகள்: நிலவியலின் வெளிப்பாடு. ஒரு ஆறின் அழிவென்பது ஒரு பண்பாடு அழிவதுதான். ஒரு நிலவியல் வாய்ப்பின் முற்றழிவு அது. ஒரு திருவிழாவும் ஆறு போலத்தான். பல நூறு சுனைகளிலிருந்து திரண்டு சிற்றோடைகளாக வந்து இணைந்து நம்முன் பெருகி நின்றிருக்கிறது.
திருவிழாவில் சிறிய பலநூறு குறியீட்டு நிகழ்வுகள் இணைந்திணைந்து ஒற்றைப்பெரும் சடங்காகின்றன. அது காட்சியாக, செவிநுகர்வாக, உள திகழ்வாக நம்மை வந்தடைகிறது. திருவிழாவில் நாம் இன்னதுதான் அடையவேண்டுமென்பதில்லை. நம் அகவுள்ளத்தை அப்பெருந்திரளாடலுக்கு அளித்துவிட்டால் நமக்குள் எவை புகுகின்றனவோ அவைதான் நமக்குரியவை.
திருவிழாவை ஒரு பெருநாவல் என நான் எண்ணிக்கொள்வதுண்டு, எண்ணி எண்ணி நிறையாத மானுடர்கள். அறிந்ததை விட பலமடங்கு அறியமுடியா நிகழ்வுகள். இன்று எண்ணும்போது விஷ்ணுபுரம் நாவலின் முதல்பகுதி முழுக்க நிறைந்திருக்கும் மாபெரும் திருவிழாவே அதை செவ்வியல் நாவலாக்குகிறது என்று தோன்றுகிறது.அந்நாவல் அதில் கரையாதவர்களால் காட்சிப்படுத்தப்படுகிறது. குமரித்துறைவி அதிலொருவனால் நினைவுகூர்ந்து சொல்லப்படுகிறது.
திருவிழாவில் இணைந்துகொள்வதற்கு மிக உகந்த வழி என்பது முதலில் திருவிழாவிற்குச் செல்லவேண்டும் என்ற எண்ணத்தைத் திரட்டிக்கொள்வதுதான் நவீன மனிதனுக்கு முதலில் தோன்றுவது அது பயனற்றது என்பதுதான். எந்தத் தேவையும் இல்லாமல் திறனையும் பொழுதையும் வீணடிப்பது அது என்பது பலரின் எண்ணம். பன்மடங்கு ஆற்றலை வெவ்வேறு விளையாட்டுக்களில் அவர்கள் செலவழிக்கிறார்கள். அது அவர்களுக்கு தேவையானது என தோன்றுகிறது. ஏனென்றால் அங்கே போட்டி இருக்கிறது, வெற்றி கிடைக்கிறது. ஒரு திருவிழா போட்டி இல்லாத விளையாட்டு என தோன்றுகிறது. ஆமாம், மெய்தான், போட்டி இல்லா விளையாட்டு அது. ஆனால் அதில்தான் அனைவருமே வெல்கிறார்கள்
ஆரல்வாய்மொழி தம்புரான் விளையாட்டு திருவிழாவில் பலநூறு இளைஞர்கள் தசை தெறிக்க எடையைத் தூக்கி இரவெல்லாம் துள்ளி ஆடுவதைப்பார்க்கையில் அந்த தசை வல்லமையும் உள எழுச்சியும் சற்றும் பயனின்றி அங்கு சிதறி அழிவதாக ஒரு நவீன உள்ளத்துக்குத் தோன்றும். அவர்களின் ‘காட்டு மனநிலை’யுடன் இணையாமல் நாசூக்காக விலகி நிற்பவன் நான் என எண்ணிக்கொள்வான். அந்த மனநிலையை உடைப்பதுதான் முதலில் செய்ய வேண்டியது இங்கு வாழ்வது என்பது நுகர் பொருட்களைத் தேடிக்கொள்வதன் பொருட்டும், பைசா பைசாவாக சேர்த்து மிஞ்சியவற்றை மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டு செல்லும்பொருட்டும் மட்டும் அல்ல.
தான் பயனுள்ள முறையில் மட்டுமே தன் உழைப்பையும் பொழுதையும் செலவழிக்கிறேன் என்று எண்ணிக்கொள்பவர் சற்று திரும்பி தன் வாழ்க்கையை] பார்க்கட்டும். நாளென மணியென பொழுதென செலவிட்டு ஈட்டும் பொருளை வைத்து தான் என்ன செய்கிறோம் என கணக்கிடட்டும். ஒரு மாத காலம் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் வீதம் உழைப்பவன் அதில் கிடைக்கும் ஒன்றேகால் லட்ச ரூபாயில் ஒரு ஆப்பிள் செல்போன் வாங்குகிறான். அந்த கருவி அளிக்கும் மிக மெல்லிய மகிழ்ச்சி மற்றும் சிறு ஆணவநிறைவுக்காக அவன் அளிக்கும் உழைப்பு ஏறத்தாழ இருநூற்று ஐம்பது மணி நேரம். திருவிழாவில் களியாடும் ஓர் இளைஞனிடம் இதை இவ்வகையில் எடுத்துச்சொன்னால் அது அவனுக்கு முழுப் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றக்கூடும். நம் வாழ்வின் இந்த கிறுக்குத்தனம் நம் கண்ணுக்குப்படுவதில்லை.
இருபது ஆண்டுகள் எந்த மகிழ்வும் இல்லாமல் எல்லாப்பொழுதையும் வெற்று உழைப்பிலே செலவழிக்கும்போது அதன் விளைவாக ஓரிரு கோடிகளைச் சேர்த்து மைந்தர்களுக்கு விட்டுச்செல்லும்போது மிகப்பயனுறு முறையில் வாழ்கிறோம் என்று எண்ணிக்கொள்கிறோம் .நாம் மகிழ்ச்சியாக ஒருநாள் இருப்பது வீண் செலவென்றோ வீண் பொழுதென்றோ எண்ணுகிறோமென்றால் நமது மூளை எவ்வாறு எதன்பொருட்டு பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது? உண்மையில் இந்த அதீத முதலாளித்துவம் உழைப்பு பொருளீட்டல் அப்பொருளை நுகர்பொருளில் செலவழித்தல் ஆகிய மூன்றும் மட்டும் பயனுறு செயல் மற்ற அனைத்துமே வீணானதென்று நமக்கு சொல்கிறது.
நான் முதல் முறையாக திரைத்துறை பணிகளுக்காக நட்சத்திர விடுதிகளுக்குச் சென்று தங்கத்தொடங்கிய போது அடைந்த முதல் துணுக்குறலே அதுதான். திரும்பத்திரும்ப நடுத்தர வர்க்கத்திடமும் உயர்நடுத்தர வர்க்கத்திடமும் உழைத்துக்கொண்டே இருக்கவும், சிந்தாமல் சிதறாமல் பணம்சேர்த்து நுகர்பொருள் வாங்கி வாழவும், எஞ்சியவற்றை மைந்தர்களுக்குக் கொடுத்துவிட்டு செல்லவும் சொல்கிறார்கள். அது மட்டும் தான் வாழ்வின் ஒரே இலக்கும் சாரமும் என்று நம்மிடம் சொல்கிறார்கள். அப்படிச் சொல்லும் நவமுதலாளித்துவப் பண்பாட்டின் உச்சியில் அமர்ந்திருப்பவர்கள் தாங்கள் அதைச் செய்வதில்லை. அவர்கள் பெரும்பாலான நாட்களை களியாட்டுகளுக்கு செல்வழிக்கிறார்கள். கீழ்நிலைக் களியாட்டுகளிலிருந்து உயர்கலை சார்ந்த, உயர்இலக்கியம் சார்ந்த களியாட்டுகள் வரை திளைக்கிறார்கள். நம்மிடம் அவர்கள் சொல்வது அவர்களுக்கு பொருந்தும் விதி அல்ல என மெய்யாகவே நம்புகிறார்கள்.
ஆக அவர்கள் உருவாக்கிய உலகுதான் நம்மிடம் சொல்கிறது உழைப்பு மட்டுமே வாழ்க்கையின் பொருள் என்று. அவ்வுழைப்பின் பணத்தால் அவர்கள் விற்பதை வாங்குவதே நாம் செய்யவேண்டியது என்று. அவர்கள் அவ்வாறு களியாட்டில் வாழும் பொருட்டு நாம் உழைக்கவேண்டும் என்கிறார்கள். பல்லக்குத்தூக்கிகளுக்கும் பல்லக்கில் அமர்ந்திருப்பவர்களுக்கும் வெவ்வேறு வாழ்க்கை நெறிகளையே நம் சமூகம் கூறுகிறது. பல்லக்கில் தூக்கி சுமப்பதே வாழ்வின் உயரிய இன்பம் என்று நம்மைச்சூழ்ந்திருப்போர் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அதை நம்பி அவ்வாழ்க்கையை அவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள்.
அதன்பின்னர் தான் நான் இதைச் சொல்ல ஆரம்பித்தேன். இந்த மொத்த அமைப்பையும் உங்களால் இப்போது மாற்ற முடியாது. இதில் நீங்கள் உங்கள் வழியை முழுமையாகச் செதுக்கிக்கொள்வதும் பெரும் சிக்கல். மக்களை உழைப்பிலேயே கட்டிப்போடும்பொருட்டு இங்கே பொருளியல்நிலையின்மையை ஒவ்வொருவருக்கும் உருவாக்கி அளித்திருக்கிறார்கள். எக்கணமும் நாம் நடுத்தெருவில் நிற்க நேரலாம். தலைக்குப்பின் கூர்வாள் என அந்த நிலையின்மை காத்திருக்கிறது. ஆகவே உழைப்பதும், ஈட்டுவதும், சேமிப்பதும் இன்றியமையாததே. ஒருபோதும் அதை தவிர்த்துவிடாதீர்கள். ஆனால் களியாட்டு என்பதும் மகிழ்வென்பதும் மிக முக்கியமானவை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவற்றை நோக்கிச் செல்லுங்கள்.
நான் கீழ்நிலைக் களியாட்டுகளை பரிந்துரைப்பதில்லை. இங்கே களியாட்டு என்றாலே இன்று குடிதான். கண்மண் தெரியாத குடி. அத்தகைய களியாட்டுகள் உங்கள் குற்ற உணர்வைத் தூண்டி மேலும் துயரை நோக்கி இட்டுச் செல்கின்றன. கீழ்நிலைக்களியாட்டுகள் என்பவை எவை? யார் அவற்றை கீழ்நிலைக்களியாட்டுகள் என்று சொல்ல முடியும்?. ஒரு வரையறையாக இவ்வாறு சொல்லலாம். எவை நமது நுண்ணுணர்வை அறிவுக்கூர்மையை மழுங்கடிக்கின்றனவோ அவை கீழ்நிலைக்களியாட்டுக்கள். எவை நம் நுண்ணுணர்வை நமது அறிவை கூர்மையாக்கி மகிழ்விக்கின்றனவோ அவை உயர்நிலைக்களியாட்டுகள். பயணங்கள், நூல்கள், பண்பாட்டு விழாக்கள், கலைநிகழ்ச்சிகள் ஆகியவற்றுடன் திருவிழாக்களும் உயர்நிலைக்களியாட்டுகள்தான்.
ஏனென்றால் திருவிழாக்கள் பிற களியாட்டுகள் உள்ளடக்கி எழுந்த மாபெரும் நிகழ்வுகள், இன்றும் தமிழகத்தில் பெரும் திருவிழாக்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றைப்பற்றி கற்றோர், சற்று மேம்பட்டவர் என்று தன்னை நினைத்துக்கொண்டிருப்பவர்கள் அறியாதிருக்கிறார்கள். அத்திருவிழாக்களை அறியும்போது, அவற்றுடன் உளம் கரைந்து மகிழும்போது மிகப்பெரிய களியாட்டொன்றை நாம் அடைகிறோம். அவற்றில் கலந்து கொள்ளும் உளநிலை தனக்கு இல்லை என்பதைப்போல் பொய் ஒன்றுமில்லை. அப்படியெல்லாம் எந்த அறிவுஜீவியும் இங்கே சார்த்ரும் ஹைடெக்கருமாக இருத்தலியல் துயரில் எரிந்துகொண்டிருக்கவில்லை.
அந்த உளநிலை இல்லாத எவருமில்லை. எவரும் தன்னுள் உள்ள சிறுவர்களை முற்றாக இழந்தவர்கள் அல்ல. ஆரல்வாய்மொழியில் நான் கலந்துகொண்ட விழாவில் எழுபதும் எண்பதும் வயதானவர்கள் தங்களை மறந்து களியாடுவதைக் கண்டேன். அவர்களின் உள்ளிருந்து அந்த சிறுவன் இயல்பாக வெளிவருகிறான். அவனை எவரும் முற்றாக இழப்பதில்லை. அவன் வெளிவருவதற்கான தடைகளென்ன என்று பாருங்கள் அந்த தடைகளை மட்டும் அடையாளம் கண்டுவிட்டாலே போதும்.
பெரும்பாலான தருணங்களில் அந்த விலக்கம் வெறும் எளிய அகங்காரம். சலிப்பூட்டும் சிறு பாவனை. அவ்விரண்டையும் களைந்து எனது அனைத்து தகுதிகளுடனும் நான் இங்கிருக்கும் பல்லாயிரம் பேரில் ஒருவன் மட்டுமே என்றும், இங்கு ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து திகழ்ந்து மறைந்த பல்லாயிரவர்களில் ஒருவன் மட்டுமே என்றும் ஆகும்போது நான் விடுதலை அடைகிறேன்.
ஆரல்வாய்மொழி என்னும் அந்த சிற்றூரை பார்த்துக் கொண்டிருக்கையில் எண்ணிக்கொண்டேன். இது இந்த பத்து நாள் ஒரு உயர்நிலையில் இருக்கும். அப்போது இங்கே அன்றாடத்தில் இருக்கும் ஆயிரம் கணக்குகள் இல்லை. சோர்வுகளும் கசப்புகளும் இல்லை. இந்தப்பத்து நாள் இங்கு எழுவது இதுவே உருவாக்கிக் கொண்ட வாழ்க்கையின் உச்சநிலை. மீண்டும் ஒரு அன்றாட வாழ்க்கையை நோக்கி இது செல்லும். மீண்டும் மாறாச் சுழறின், ஆனால் அப்போதும் ஆழத்தில் ஓர் எதிர்ப்பார்ப்பு இருந்து கொண்டிருக்கும், அடுத்த திருவிழா வரவிருக்கிறது.
கிராமங்களின் வாழ்க்கையே அங்கு நிகழும் திருவிழாக்களால் பகுக்கப்பட்டு, கால அடையாளங்களையே வெவ்வேறு திருவிழாக்களைக்கொண்டு நிகழ்வதைப் பார்க்கலாம். ஒருவர் தனது வாழ்க்கையையே வெவ்வேறு திருவிழாக்களைக்கொண்டு அடையாளப்படுத்துகிறார் என்றால் அவர் எத்தனை மகிழ்வுக்குரிய ஒரு வாழ்விலிருக்கிறார் என்று எண்ணி வியக்கிறேன். நேர்மாறாக சிலநாட்களுக்கு முன் ஒரு சென்னைவாழ் ஊழியரிடம் பேசிக்கொண்டிருந்தேன். மொத்த கடந்தகாலத்தையும் அவர் வெள்ளங்கள், போராட்டங்கள், தேர்தல்கள் போன்ற நெருக்கடிகளைக் கொண்டே பகுத்து நினைவுகூர்கிறார் என்பதை கண்டேன். ஊடகங்கள் உருவாக்கி அளித்த செய்திகளால் அவர் தன் வாழ்க்கையை நிறைத்திருந்தார்.
நான் என் வாழ்க்கையை திரும்ப எண்ணும்போது தித்திக்கும் நினைவுகளைக்கொண்டு முகந்து அள்ளவேண்டும் என எண்ணிக்கொள்கிறேன்.