வெய்யோனின் கர்ணன்

கட்டற்ற தன்மை கொண்ட கணிக்க இயலாத அனைத்திலும் புலன் அறியாத ஒற்றை மையம் இருக்கவே செய்கிறது.மகாபாரதத்தின் மையம் என்று நாம் எதை சொல்லலாம்.??அதன் மானுடர்களா?இல்லை அவர்களின் விழைவுகள் மீது காலம் நின்றாடும் நிகழ்வுகளா??கணிக்கயியலாத வாழ்வின் ஆட்டம் அல்லவா அது.

பாரதம் நீர் போல் எவரது வாழ்வின் பெரும் பாத்திரத்தில் விட்டு நிறைத்தாலும் அதில் பொருந்தி நிறைந்து ஒரு வடிவங்கொண்டு விடும்.பாரதத்தை ஒற்றை கதையென முழுதுணர முடியாது. நம் நம் எண்ணங்களுக்கு ஏற்ப அதன் மானுடர்களை நாம் செதுக்கிக் கொள்கிறோம். ஒவ்வொருவர் நினைவிலும் பாரதம் வெவ்வேறு வடிவில் எழுந்தமைகிறது.

வெண்முரசு பாரத கதைகளை கோர்த்து செய்யப்பட்ட மற்றோரு முத்தாரம்.அதில் வெய்யோன் கர்ணனுக்கான பகுதி. மானுடரில் சிறந்தவனின் உருவகமாக பாரதத்தில் முன்னிறுத்தப்படுபவன் கர்ணன்.அத்தகையவர்களுக்கு என்று ஒரு சாபம் உண்டு. அவர்கள் எத்தனை சிறப்பானவர்கள் என்று ஒரு சாரரால் ண்டாடப்படுகிறார்களோ அதற்கு இணையாக அவர்களின் நல்லியில்புகளுக்காகவே மற்றொரு சாரரால் சிறுமைப்படுத்தப்படுகிறார்கள்.மானுடருக்குள் மையம் கொண்டிருக்கும் நன்மை தீமையின் பகடையாட்டம் அது.

வெய்யோன் கர்ணனின் ஆழ்மன உணர்ச்சிகளின் தொகுப்பு. தாழொலிக்கதவு என்னும் அதன் இரண்டாம் பகுதி நாம் அதிகம் அறியாத கர்ணனின் மண வாழ்வின் நிகழ்வுகளை தொட்டுச் செல்வது. இங்கு கர்ணன் மாவீரனாக மன்னனாக நண்பனாக முன் வைக்கப்படுவதை விடுத்து இரு பெண்களின் அன்பிற்கும் அவர்களின் சுயநலத்திற்கும் இடையே ஊசலாடும் ஒரு கணவனாக மட்டுமே காட்சிப்படுத்தப்படுகிறான்.

தன் நலம் விடுத்து பிறர் நலம் விரும்பும் அன்பு நிறைந்த பாசாங்கற்ற எளியவனாக வருகிறான்.கர்ணன் தன் தந்தை அதிரதன் விருப்பப்படி தன் குலத்து பெண்ணான விருஷாலியை முதல் மணம் புரிகிறான். கர்ணனின் பேரழகும் பெருவீரமும் அவளை கவர்ந்து பெருமிதமும் மகிழ்ச்சியும் கொள்ள வைப்பதற்கு மாறாக அவளை அச்சப்படும்படி செய்கிறது. தன் நிலைக்கு சற்றும் பொருத்தமில்லாத கணவன் அவன் என்று அவனை கண்ட கணம் உணரும் அவள் அதன் வழி பெருகும் மனச் சஞ்சலங்களோடும் சிறுமைகளோடும் அவற்றை வெல்ல முயன்று தன் உரிமைகளை தக்கவைத்துக் கொள்ளும் தவிப்பு நிறைந்த பெண்ணாக வருகிறாள்.

மாறாக கர்ணனின் இரண்டாம் மனைவியாகவும் குல உயர்வு காரணமாக பட்டத்தரசியாகவும் உள்ள சுப்ரியை அவன் குல சிறுமை காரணமாக கசப்பான மனதுடனே அவனை அணுகுகிறாள். அவனின் வீரமும் ஆண்மையும் கருணையும் அவளை கவரவில்லை. மாறாக அதைக் கொண்டு பிறப்பால் உயர்குடி சார்ந்த தன்னை வென்றெடுத்த அவன் செயலை அவள் மன்னிக்கவேயில்லை. அந்த கசப்பு அவள் சார்ந்த அனைவரிடமும் கர்ணன் மீதான அவமதிப்பாய் வெளிப்படுகிறது.

மீண்டும் மீண்டும் தன்னை இழிவு நிலைகளுக்கு இட்டுச்செல்லும் பிறரது முடிவுகள் முன் அவன் மவுனித்து மட்டுமே இருக்கிறான். தான் சரி என்று கூறிச் செல்லும் ஒவ்வொரு சொல்லும் தன்னை எவ்விடம் கொண்டு செல்லும் என்பதை தெளிதென அறிந்திருந்தாலும் அவன் பிறருக்காக அப்பாரத்தினை ஏந்திக் கொள்கிறான். இரு மனைவிகளிடையையும் மிக பணிந்து செல்லும் கர்ணனிடம் அவன் அமைச்சர் தாங்கள் மிகவும் கீழிறங்குகிறீர்கள் அரசே என்பார். அதற்கு கர்ணன் கூறும் பதில் தான் அவன் உண்மையில் எத்தகையவன் என்பதற்கான பதில்

“உண்மை. களத்தில் அன்றி பிற இடங்களில் அனைத்தும் இறங்கிச் செல்வதே என் வழக்கம். எப்போதும் என் தரப்பு நியாயங்களைவிட அவர்களின் உணர்வுகளே எனக்கு முதன்மையாக தெரிகின்றன”

இதுவே இந்த பகுதியின் மையம்.

பிறருக்காக தன் கம்பீர நிலையிலிருந்து இறங்கிச் செல்லும் மனதுடையவர்களே அதிக மன சஞ்சலங்களுக்கு ஆட்படுகிறார்கள்.அவர்கள் உள்மனம் தங்கள் மேன்மையை அறிந்திருக்கும். ஆனால் அவர்களின் ஆழ்மனம் பிறரின் உணர்வுகளை கணக்கிட்டுக் கொண்டிருக்கும். இறுதியாக அவர்கள் ஆழ்மன வழிகாட்டுதல்படி பிறர் நலனையை தம்மை விடுத்து முன் வைக்கிறார்கள். அப்படி அவர்கள் எளிதாக அணுகக்கூடியவர்கள் ஆகும் நொடி எதிராளி அவர்களின் நல்லியில்புகளின் பெருமிதத்தை தன் சிறுமைப்படுத்துதலால் சுக்கு நூறாக்குகிறார்கள். தொடர்ந்த அவமதிப்புகளால் அவர்களை தங்கள் மேலேயே ஐயம் கொள்ளும்படி செய்கிறார்கள். இப்போது எளிய மனதுடைய கொடையாளி தன்னை தன் நல்லெண்ணத்தை நிரூபிப்பதற்கு ஒரேயொரு சந்தர்பத்திற்காக ஏங்கத் தொடங்கிவிடுவார்கள். அந்த ஏக்கத்தின் ஊற்றை அடைத்து பெருகும் எதிராளியின் வஞ்சம். இந்த வேட்டையில் வெளித்தெரியா ஆழ்ந்த காயத்துடன் வெளியேறி விடுவான் நல்மனதுடைய எளியவன்.

கர்ணன் தொடர்ந்து இவ்விதமே புண்பட்டு வீழ்கிறான்.வீழ்ந்து வீழ்ந்து மீள்வதே அவன் விதியென்றாகிறது. இப்படி அவன் அகம் அறிந்த உணர்வினை நாம் அறியும் வண்ணம் செய்ததாலே இந்நூல் சிறப்புடையதாகிறது. இங்கு வரும் கர்ணன் நம் அன்றாடங்களில் நம்மை கடந்து செல்லும் ஒரு அரிய ஆனால் பிறர் அக்கறைகள் சென்று தீண்டாத ஒரு கவனிக்கப்படாத சகோதரன் போல. உவமைகளையும் புகழுரைகளையும் விடுத்து உணர்ச்சிகளில் அடித்துச் செல்லப்படும் எளியவன். இப்படி அணுகக்கூடியவனாக அவனை அறிவதாலே வெய்யோனில் அவன் நம் கர்ணணாக ஆகிறான்.

திவ்யா சுகுமார்

முந்தைய கட்டுரைசந்தையில் சுவிசேஷம்
அடுத்த கட்டுரைஅயல்நிதி-கடிதம்