திருப்பத்தூரில் நான்…கடிதம்

ஏப்ரல் 2

மாலை 3 மணி முதல்

கரேஞோ அரங்கம் தூயநெஞ்சக் கல்லூரி

திருப்பத்தூர்

அன்பின் ஜெ! வணக்கம்…

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நிகழ இருக்கும் விழாவை தொடங்கி வைக்க 2-ந்தேதி தாங்கள் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. தீவிர தமிழ் இலக்கியத்தில் அவ்வளவாக பதிவாகாத நிலம் தமிழக வட எல்லை மாவட்டங்கள் என்று மிகச் சரியாக தாங்கள் வேறு பொதுவான விஷயங்களைப் பற்றி பேசிச் செல்லும் போது குறிப்பிட்டிருப்பீர்கள்.

குறிப்பாக பழைய வட / தென்னாற்காடு மாவட்டங்களைப் பற்றி கடந்த இருபது, இருபத்தி ஐந்து ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க செயல்பாடு என்பது மொத்தமே எட்டு, பத்துப் பேர்களாக அருகி நிற்கின்றனர். எடுத்துக்காட்டாக இந்த மாவட்டம் முழுக்க ஒவ்வொரு ஊரிலும் தமிழ் மன்றங்கள் கடந்த பல பத்தாண்டுகளாக பெரியளவில் நடந்து வருகிறது. முதல்வர்களுடன், அமைச்சர்களுடன் தொடர்பில் இருந்த மூத்த தமிழ்ப் பேராசிரியர் வழிநடத்திய அமைப்புகளின் இயல்பே இந்த வகையானதாகத்தான் இருந்திருக்கிறது.

இங்குள்ள தீவிர சிற்றிதழ் சூழலில் இயங்கக் கூடிய, தமிழக அளவில் கவனம் பெற்றவர்களை அழைத்து விழா மேடையில் மரியாதை செய்ய வேண்டும், ஒரு துண்டோ, மாலையோ அணிவிக்க வேண்டும். வெறும் பேச்சாளர்களை அழைத்து பெரும் பொருட் செலவில் நடத்தப்படும் இந்த விழாவின் பயன் மதிப்பு என்னவென்று தெரியவில்லை. அசட்டுத்தனமான பேச்சுக்கு எழும் கரவொலி, சிரிப்பலை, கூடிக் கலையும் சம்பிரதாயம், அவ்வளவே.

இங்கு தாங்கள் குலசேகரன் அவர்களை விசார்த்திருக்கிறீர்கள், அவர் இன்னமும் அதே வாணியம்பாடியில்தான் இருக்கிறார், அவ்வப்போது தன்னால் முடிந்தளவு தீவிர தளத்தில் இயங்கிக் கொண்டே இருக்கிறார். அவரை, ஸ்ரீநேசனை, கவிப்பித்தனை, அழகியபெரியவனை, யாழன் ஆதியை, ஜி.குப்புசாமியை, சுகிர்தராணியை, அ.வெண்ணிலாவை, இணைய இதழ் கனலியை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் விக்னேஸ்வரன் உட்பட எவர் ஒருவரையும், தமிழின் முதன்மை வாசகர் வேலூர் லிங்கம் அவர்கள் யாரென்பதும், அவர்களின் பங்களிப்பு என்னவென்பது இங்குள்ள பொதுப் போக்கு / போலிகளுக்கு தெரிவதே இல்லை. இத்தனைக்கும் இவர்களில் சிலர் தமிழின் மிக உயரிய விருதுகளை இந்திய அளவில், பன்னாட்டளவில் பெற்றவர்கள். இத்தனை சிறப்புக்குரிய ஆளுமைகளை உள்ளூரில் வெறும் வாத்தியார், முனிசிபாலிட்டியில் வேலை செய்யும் கிளார்க் என்றளவில்தான் புரிந்து வைத்திருக்கின்றனர்.

பொதுவாக பேராசிரியர்களும், தமிழாசிரியர்களும் இன்னமும் அரசர்கள் வாழ்ந்த காலத்தின் utopia மனநிலை கொண்டிருக்கின்றனர், நவீன இலக்கியம், அதன் செல்திசை, அச்சும், மின்னிதழ் தொழில்நுட்ப யுகத்தில் அரதப் பழைய, வழக்கொழிந்து போன, காலாவதியானவைகளை மறுபடியும் தூக்கிச் சுமக்கச் சொல்கின்றனர். இந்த நிலையில்திருப்பத்தூர் குறித்த தங்களின் மலரும் நினைவுகளுடன் விழா நேரத்தில் பழைய வட / தென்னாற்காட்டு இலக்கியவாதிகள் அனைவரையும் ஒருசேர பார்ப்பது மகிழ்ச்சி.

கொள்ளு நதீம்

***

முந்தைய கட்டுரைபனிமனிதன் மதிப்புரை- மகிழ்நிலா
அடுத்த கட்டுரைசந்தையில் சுவிசேஷம்