திருப்பத்தூர் இலக்கிய விழாவில் நான்

திருப்பத்தூர் இலக்கிய விழா வரும் ஏப்ரல் 2 அன்று தொடங்குகிறது. அனேகமாக தமிழகத்தில் நிகழும் மிகப்பெரிய இலக்கியவிழா இது என நினைக்கிறேன். 32 இலக்கிய ஆளுமைகள் உரையாற்றுகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இரண்டாம்நிலை நகர் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அங்கே வார இதழ்கள் ஏஜென்ஸி எடுத்திருக்கும் நண்பர் ஒருவர் சொன்னார். அந்நகரில் ஒட்டுமொத்தமாக தமிழ் வார இதழ்கள் விற்பனையாவதே சிலநூறுகளுக்குள்தான் என. இதழ்களின் விற்பனையில் 90 சதவீதமும் நான்கு பெருநகர்களுக்குள் முடிந்துவிடுகிறது என்றார்.

சிறுநகரங்கள் தமிழகத்தில் பொருளியலில் பெருத்து வருகின்றன. பல நகர்களை பத்தாண்டுகள் கழித்துச் சென்று பார்த்தால் அடையாளமே தெரியவில்லை. ஆனால் கலை, பண்பாட்டுச் செயல்பாடுகள் அவ்வண்ணம் வளரவில்லை. அதற்கு இந்த வகையான முன்னெடுப்புகள் மிகப்பெரிய அளவில் உதவக்கூடும்.

திருப்பத்தூர் இலக்கியவிழாவை 2- ஏப்ரல்-2022 அன்று நான் தொடங்கிவைத்து உரையாற்றுகிறேன்.

திருப்பத்தூர் 1991ல் நான் எட்டு மாதம் குடியிருந்த ஊர். அருண்மொழிக்கு முதன்முதலாக அங்கே தபால்நிலையத்தில் பணி கிடைத்தது. நான் ஒவ்வொரு நாளும் தர்மபுரிக்கு பேருந்தில் சென்று திரும்பிக்கொண்டிருந்தேன். தமிழக இடதுசாரி தீவிர அமைப்புகளின் பல நண்பர்கள் அறிமுகமானது அப்போதுதான். திருப்பத்தூரில் நண்பர் குலசேகரன் (சிறுகதை எழுத்தாளர்) அன்று அணுக்கமானவராக இருந்தார். அன்றைய முகங்கள் அங்குதான் இருக்கின்றனவா என்று தெரியவில்லை.

முந்தைய கட்டுரைமுதற்கனலில் தொடங்குதல்
அடுத்த கட்டுரைஅழகியல் விமர்சனமும் பிறரும் – கடிதம்