மு.க -ஒரு கடிதம்

மு.க -கூச்சல்களுக்கு அப்பால்

மு.க, தி.மு.க – இ.பா

மு.க – கடிதங்கள்

மு.க -கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் பற்றி எழுதிய குறிப்பு படித்த போது இதையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.அப்போது நடைபெற்ற சர்ச்சை மற்றும் கலைஞரின் கவிதை எல்லாம் தங்களது முக பற்றிய குறிப்பு படித்தபோது நினைவுக்கு வந்தது.

ஒருநாள் தமிழ் எழுத்தாளர்  ஒருவர் நான் செயலாற்றும் இடத்திற்கு  என்னை விசாரித்து வந்தார். அப்போது தாங்கள் அறம் கதைத் தொகுப்பு சமர்ப்பணம் செய்துள்ள  சட்டமன்ற உறுப்பினர் ஜே .ஹேமச்சந்திரன் அவர்களும் அலுவலகத்தில் இருந்தார். அவரிடம் வந்த இலக்கியவாதி (நானும் மதிப்பவர் தான்) என்னை விசாரித்தார்.நான் கூட்டத்தில் இருப்பதாக தெரிவித்து விட்டு அவரே என்னிடம் உங்களை விசாரித்து ஒருவர் வந்திருக்கிறார் என்று கூறினார்.

நான் எழுத்தாளர் இருந்த அறைக்கு வந்த போது வியப்பு ஏற்பட்டது எனக்கு. திடீரென வந்ததற்கு என்ன விஷயம் என்று அவரிடம்  விசாரித்தேன். அவர் விஷயத்தையத்தை  ஒளிவு மறைவு இன்றி தெரிவித்தார்

வேறு ஒன்றுமில்லை,ஒரு முக்கியமான விஷயத்தையும்  அதற்கான ஆதாரத்தையும்  பெறுவதற்காக நான் வந்திருக்கிறேன் என்றார்.

அவருக்கு எழுத்துக்கான ஆதாரத்தை தேடி வருவதற்கு முன்கூட்டியே தெரிவித்து இருக்கலாமே என்று நான் கூற, உங்களுக்கு அவசரம் என்பதால் உடனே ஒரு விஷயத்தை தெரிவிக்கிறேன் என்றார்.

அவர் விஷயத்தை உடனே தெரிவித்தார்.

அவர் கூறியது —

ஜெயமோகன் கருணாநிதியை பற்றி விமர்சனம் செய்தது மிகப் பெரிய தவறு. அதனால் எனக்கு ஒரு வேண்டுகோள் வந்திருக்கிறது. மலையாள நாளிதழான மாத்ருபூமி இணைப்பில் (ஞாயிறன்று வருவது)  நீங்கள் எழுதிவந்த  தொடர் கட்டுரையில் தமிழ்நாட்டு பெண்களைப் பற்றி விமர்சித்து எழுதியதாகவும் அந்த பத்திரிகை என்னிடமிருக்குமென்றும்   அதை தனக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

நான் மறுத்தேன்.

எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.நான் மதிக்கும் இவரா இப்படி செயல்படுகிறார்? என்று எனக்குள் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தேன்.

கலைஞரை திருப்தி படுத்த யார் யார் எப்படி எல்லாம் செயல்பட்டார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம் மட்டுமே.

அன்புடன்,

பொன்மனை வல்சகுமார்

***

அன்புள்ள வல்சகுமார்,

அன்றுமின்றும் அவர்களுக்கு ஒரே பார்வைதான். முக அல்லது திராவிட இயக்கம் பற்றி எந்த விமர்சனம் வந்தாலும் அது வஞ்சம், வன்மம், காழ்ப்பு மட்டுமாகவே இருக்கமுடியும். எப்படி ஆய்வுசார்ந்து சொன்னாலும், எப்படி மதிப்புடன் சொன்னாலும் அப்படித்தான் பொருள்கொள்வார்கள். ஆனால் அவர்கள் நவீன இலக்கிய முன்னோடிகளை நாயே பேயே என்றெல்லாம், ஆபாசமாக வசைபாடினாலும், சாதிக்காழ்ப்பை கொட்டினாலும் அதெல்லாம் ஜனநாயக அரசியல்.

முக அதை விரும்பினாரோ இல்லையோ இவர்கள் அவரை கவர கழைக்கூத்தாட்டம் போடுவார்கள். அன்று அவர் வட்டத்தில் அப்படி அவரைக் கவர ஆட்டம் போடாமலிருந்தவர் நானறிய இருவர். அப்துல் ரகுமான், வைரமுத்து. அவர்களுக்கு உண்மையாகவே அவரிடம் நெருக்கமிருந்தது.

நீங்கள் சொல்லும் எழுத்தாளர் பழைய சிந்தனை மரபைச் சேர்ந்தவர் என நினைக்கிறேன். ஒரு தரப்பு எடுத்து கொந்தளிக்க விரும்புகிறார். ஆனால் அதற்கு ஆதாரம் தேவை என நினைக்கிறார். தேடி கிடைக்காதபோது பேசாமலிருந்துவிடுகிறார்.

ஆனால் இன்றைய ‘அறிஞர்கள்’ அப்படி அல்ல. எதையாவது எடுத்து எப்படியெல்லாமோ விளக்கி அவர்களுக்கு தேவையான அர்த்தத்தை தருவித்து ‘இதை இப்படித்தான் படிக்கவேண்டும்’ என்று வாதிட்டு அவர்களைச் சார்ந்த கும்பலில் நிறுவிவிடுவார்கள். அங்கே தங்களைச் சூழ்ந்திருப்பவர்கள் அரைவேக்காடுகள் என நன்கறிந்திருக்கிறார்கள். அவர்களைக் கையாளக் கற்றிருக்கிறார்கள். இவர்கள் நிபுணர்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைகதைக்குரல்கள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைபுத்தகக் கண்காட்சியில் அரசியல்