பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ

பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ?

இனிய ஜெயம்

பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ (அ.கா. பெருமாள். Ncbh வெளியீடு) எனும் தலைப்பை நான் முதன் முதலாக வாசிக்க நேர்ந்தது, ஆயிரம் மணி நேர வாசிப்பு சவாலை நிறைவு செய்து அருண் மொழி நங்கை அக்கா அளித்திருந்த வாசிப்பு நூல் பட்டியலில்தான். அதற்கும் முன்பு எங்கோ என் ஆழுள்ளத்தில் இந்த சொற்றொடர் விழுந்திருக்கிறது. பட்டியலில் இந்த தலைப்பை கண்ட கணம் முதல் மனதில் இந்த சொற்றொடர் எழுந்து ஓசை நயத்துடன் அறம் பாடி சபிக்க ஒலித்த பாடல் ஒன்றின் வரிகள் போல உள்ளே மீண்டும் மீண்டும் சுழன்றுகொண்டு இருந்தது. நூலைத் தேடி வாசிக்கும் எண்ணம் ஏதும் இன்றி மீறி மீறி இந்த சொற்றொடர் ஓர் நாளில் ஏதோ ஒரு பொழுதில் எழுந்து உள்ளே மீண்டும் மீண்டும் ஓடத் துவங்கி விடும் கிறக்கத்தில் இருப்பேன்.

இவ்வருட புத்தக சந்தையில் அலைகயில் என் உடன் வந்த நண்பர் சார் உங்காளு எழுதிருகார் என்று இந்த நூலை எடுத்துக்காட்ட உடனே வாங்கி விட்டேன். தலைப்பை பேராசிரியர் கடலூர் பக்கம் திரௌபதியம்மன் கோயில் சடங்கில் பாடப்படும் வாய்மொழி பாரத கதைப்பாடலில் இருந்து எடுத்து வைத்திருக்கிறார்.

வெவ்வேறு அரங்குகளில் பேராசிரியர் அ.கா. பெருமாள் அவர்கள் முன்வைத்த 12 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். பேராசிரியரே குறிப்பிட்டது போல இதில் உத்தேசமாக முதல் நான்கு கட்டுரைகளை பொதுவான நாட்டாரியல் வழக்காறுகளை பேசும் கட்டுரைகள் என்றும், அடுத்த நான்கை நாட்டார் தெய்வங்கள் சடங்குகள் குறித்த ஆய்வுகள் என்றும், இறுதி நான்கை நாட்டார் கலைகள் குறித்தவை என்றும் வகைப்படுத்த இயலும்.

முதல் நான்கில் மானபங்கம் செய்யப்பட்டு அதனால் எரிபுகுந்த பெண்கள் தெய்வமாவது துவங்கி,  கெளரவக் கொலை செய்யப்படும் யுவன் யுவதிகள், நரபலி கொடுக்கப்படும் கன்னிப்பெண்கள், நிறைசூலிகள், ஆற்றில் குளத்தில் விழுந்து உயிர் துறப்பவர்கள், மன்னனுக்காக நவகண்டம் செய்து கொள்பவர்கள், மோட்சம் தேடி தேர் காலில் விழுந்து மறிப்பவர்கள், சதி ஏறுபவர்கள், நீதி கேட்டு கோபுரம் மீது ஏறி விழுபவர்கள், வடக்கிருந்து உயிர் துறப்பவர்கள் என்று இத்தகு விஷயங்ளின் இலக்கிய கல்வெட்டு சான்று தொட்டு வரலாற்று காலம் நெடுக்க இவை போல நிகழ்ந்தவை குறித்த நாட்டார் சொல் மரபை இணைத்து விவரிக்கிறார் அ.கா.பெருமாள்.

கொலை செய்யப்பட்ட பெண்களும் ஆண்களும் எவ்வாறு தெய்வங்கள் ஆகிறார்கள், அந்த தெய்வ கதைகள் முன்பே இங்கு இருக்கும் தொன்மை மரபுடன் இணைந்து எவ்வாறு அதன் சடங்குகள் தோற்றம் கொள்கிறது எனும் வகைமை குறித்தெல்லாம் பேசும் இக்கட்டுரைகள் சில புதிய பார்வைகளை திறக்கிறது. குறிப்பாக பெண் கொலை செய்த நன்னன் கதையை உதாரணம் சொல்லலாம். பொதுவாக நமக்கு தெரிந்தது பாதி கதை மட்டுமே. நாட்டார் மரபில் வாழும் மீதி கதை இன்னும் சுவாரஸ்யம். நன்னனால் கொலை செய்யப்பட்ட பெண் கோசர் எனும் குலத்தை சேர்ந்தவள். இந்த கொலைக்கு கோசர் குலம் நன்னனை பழி வாங்குகிறது. இந்த செயலில் நன்னன் எந்த பெண் கொலை பழியை ஈட்டிக் கொள்கிறானோ அதே பழியை கோசர் குலமும் ஈட்டிக் கொள்கிறது. இப்படிப் பல சுவாரஸ்யங்கள் இந்த நூலில் உண்டு.

நீதி வேண்டி கோபுரம் ஏறி விழுந்து மரணிப்போர் துயரக் கதையோ சுசீந்திரம், திருவரங்கம், சிதம்பரம் என பேராலயம் தோறும் வரலாறு நெடுக நிகழ்கிறது. மதுவுக்கு எதிராக தொலைபேசி கோபுரம் ஏறி மாய்ந்த சசி பெருமாள் வரை.

சதி குறித்த கட்டுரை இன்னும் சுவாரஸ்யம். மபாரத காலம் தொட்டு நாயக்க மன்னர் காலம் வரை, சதி எவ்வாறெல்லாம் பரிணமித்து வளர்ந்தது என்று விவரிக்கும் கட்டுரை பல திடுக்கிடும் உண்மைகளை பேசுகிறது. 16 ஆம் நூற்றாண்டில் மதுராவில் ஒரு மன்னர் இறந்தபோது, அவரது 700 மனைவிகளும் அவருடன் உடன்கட்டை ஏறி இருக்கிறார்கள். பல உடன் கட்டைகள் கைம்பெண் வாழ்வு எனும் நித்திய நெருப்புக்கு சதியே மேல் எனும் நிலையில் நிகழ்ந்தவையே. பொதுவாக சதிக்கு எதிரான முதல் குரலாக ராஜாராம் மோகன்ராய் அறியப்பட்டாலும் உண்மை அதுவல்ல, அவர்க்கு முன்பே சட்டம் இயற்றி இதை தடுக்க முனைந்த மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக முஸ்லீம் மன்னர்கள். ராஜா ராம் மோகன் ராய் கதைக்கு வரும்போது ராஜா ராம் உடன் இணைத்து பேசப்பட வேண்டிய பெயர் வில்லியம் பெண்டிங் பிரபு. இவரது உதவி கொண்டே ராஜாராம் மோகன்ராயால் சதிக்கு எதிரான சட்டங்களை கொண்டு வர முடிந்திருக்கிறது. இப்படிப்பட்ட சதியின் வரலாறு 2008 வரை தொடர்ந்திருக்கிரது என்று சொல்கிறது இந்த நூல்.

அகத்தியர் தொன்மம் குறித்த கட்டுரையும் மிகுந்த சுவாரசியம் கொண்டது. அகத்தியர் காவிரியை கொண்டுவந்த கதையை வாசிக்கையில், பகீரதன் கங்கையை கொண்டு வந்த கதையை இணைத்து யோசித்தேன். கேரள நிலத்தை அதன் கதையை பரசுராமருடன் இணைத்து துவங்குவது போல, தமிழ் நிலத்தின் கதையை அகத்தியர் முதலாக துவங்க முடியும். அத்தனை வலுவாக உள்ளது நூல் ஆய்வு செய்யும் அகத்தியர் கதைகள்.

கண்ணகி குறித்த கட்டுரை, ஜெயமோகன் மொழியாக்கம் செய்த சந்திரன் அவர்களின் கொடுங்கோளூர் கண்ணகி நூலுடன் இணைத்து கொற்றவைக்கு துணை நூலாக வாசிக்க ஏற்றது. கட்டுரையில் என்னை துனுக்குற வைத்தது 16 ஆம் நூற்றாண்டில் ஒரு பிராமணன் இக் கண்ணகி கோயிலை, அது சமண கோயில் என்று அந்த பகுதி பக்கமே வராமல் சுற்றி போகிறான் எனும் குறிப்பு. கண்ணகியை சமண மரபில் வைத்து யோசிக்கவே முடியவில்லை.

மேல்நிலையாக்கம் கண்ட தெய்வங்களின் இலக்கணத்தை விளக்கி, அதிலிருந்து வேறுபட்டு திகழும் நாட்டார் தெய்வங்களை விவரிக்கும் கட்டுரையில் என்னை திடுக்கிடட வைத்தது. பெருமாள் சாமி. எனும் நாட்டுப்புற தெய்வம். அமர்ந்த கோலம் கொண்ட அந்த பெருமாள் சாட்சாத் பெருந்தெய்வ பெருமாளேதான். ஒரே வித்யாசம் வருட திருவிழாவில் இந்த பெருமாளுக்கு விசேஷம் என்பது, கிடா வெட்டு.

நாட்டார் கலைகள் குறித்து  வேலன் வெறியாட்டு துவங்கி, குறவைக் கூத்து முதல் கரகம் வில்லுப்பாட்டு தோல்பாவை கூத்து வரை, பண்டைய காலம் தொட்டு இன்றுவரை அதன் மாற்றங்களை கலைஞர்கள் நிலையை பேசுகிறது இந்நூல்.

நூலின் இறுதிக் கட்டுரை கன்யாகுமரி மாவட்டம், அகதீஸ்வரம் அருகே தெற்கு புதூர் கிராமத்தில் உள்ள நாடார் வகையராவுக்கு சொந்தமான பெருமாள் கோயில் குறித்தும் அங்கே புழங்கும் குருமக்கள் கதை எனும் மகாபாரத கதை குறித்தும் பேசுகிறது. ( இந்த கதையை பின்னர் அ. கா பெருமாள் அச்சுக்கு கொண்டு வந்து விட்டார்) அந்த கிராம வர்ணனையும், அதில் அமைந்த கோயிலும், அதற்கு உள்ளே சுவர் முழுக்க ஓவியங்களாக அமைந்த குருமக்கள் கதையும் என அந்த நிலத்தையும் கோயிலையும் உடனே காண வேண்டி ஆவல் எழுகிறது.

அந்த குருமக்கள் கதை பேசும் பாரத கதையின் முக்கிய பாத்திரம் ஒன்று அண்ணன் தங்கைக்கு இடையே பிறக்கிறது. அந்த பாரதத்தில் பீமனே நாயகன். காந்தாரி வில்லி. முற்றிலும் வியாச பாரதத்துக்கு நேர் எதிர் கதை கட்டுமானம்.

அ.கா பெருமாள் அவர்கள் பணியின் தனித்தன்மை என்று நாக்கினை சொல்வேன்.

  1. மரபார்ந்த தமிழக வரலாற்று வரைவை, அதனுடன்மாவட்ட வரலாறு கொண்டு இணைத்து அதனை விரிவும்  ஆழமும் கொள்ளச் செய்தது.
  1. மாவட்ட வரலாற்றை மைய வரலாற்று வாதத்திலிருந்து விலகி, நாட்டார் வரலாற்றியல் வழியே நிலை நிறுத்தியது.
  2. அந்த நாட்டாரியல் ஆய்வினை மேலை முறைமை விடுத்து நமதே ஆன முறைமை வழியே அணுகியமை.
  1. இதன் வழியே ஒருங்கு கூடிய மைய வரலாற்று ஊடுக்கு இணையாக  பன்மைத்தன்மை கொண்ட வரலாற்று பாவினை நெய்தது.

இந்த தனிதன்மைகள் அனைத்தும் தொழிற்படும் பேராசிரியர் அ கா பெருமாள் அவர்களின் மற்றொரு முக்கிய நூலே இந்த – பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ – நூல்.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைஅம்பை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைபின்தொடரும் நிழலின் குரல் –கடிதம்