ஜே.சைதன்யாவின் சிந்தனை மரபு வாங்க
அன்புள்ள ஜெ
குழந்தை தன் பிரியத்தால் இந்த உலகை அறிந்து கொள்கிறது. விருப்பமென்று வளரும் அன்பு ஒவ்வொன்றாய் அறிந்து இணைத்து கொள்ளும் செயல் அது. அந்த அன்பெனும் அறிவை, அறிவெனும் அன்பை தன் குழந்தையின் மீதான பெருங்காதல் வழியாக காணும் எழுத்தாளனின் கண்களே ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு. தந்தையெனும் மகன் அன்னையை கண்டுகொள்வதில் தொடங்கி அன்னையெனும் மகள் மகனை பெறுவதில் நிறைவு கொள்கிறது.
ஒரு புன்னகையுடன் வாசிக்க தொடங்கும் நூல், சித்திரமென அதை நம் முகத்தில் தங்க செய்தபடி நிறைவு கொள்கிறது. இது ஜெ.சைதன்யா என்ற குழந்தையின் லீலைகளை சொல்லும் காவியமே. அவளுக்கு ஆயிரம் நாமங்கள். உண்மையில் ஆயிரமாயிரம் சைதன்யாக்களை பாடும் காவியம் இது, “ஆனால் கூர்ந்து பார்த்தபோது மலையின் கரையாத துணுக்குகள் சில காணக்கிடைக்கவே ஜெ.சைதன்யா அவர்கள் ”அப்பா, அழுவாதே மலய ஒண்ணுமே தூக்கிட்டு போவலை. மல பொகயா ஆயிட்டுது” என்றார்.” என்ற வரிகளை வாசிக்கையில் “மலை என விழி துயில்வளரும் மாமுகில்” என்னும் கம்பனின் வரிகள் நினைவிலாடின. விழிப்புறக்கம் கொண்டிருக்கும் விண்ணளந்தோனின் விழி மலையான முகிலாக காட்சி தருகிறது. இந்த கற்பனை ஜெ.சைதன்யாவின் சொல்லில் திகழ்கையில் சிலிர்ப்படைய செய்கிறது. குழந்தை என்பது காலமின்மையா என்ன! காலத்தை கடந்து செல்பவை பேரிலக்கியம். அது நிகழ்ந்துள்ளது.
எண்ணிலா சேஷ்டைகள் அடங்கியது குழந்தையின் உலகம். சைதன்யாவின் உலகம் வியப்புகளாலும் வினோதங்களாலும் நிரம்பியது. எல்லா நாளும் ஓரே போல் இருக்கையில் ஏன் பெயர்கள் மாறுகின்றன ? பிள்ளையார் அண்ணாவுடன் கிரிக்கெட் ஆடுவார். பந்துபிடிக்க தும்பிக்கை வசதியானது. டைல்ஸ் தரை என்பது ஆயி போவதற்காகவே. அது பிள்ளையானாலும் பிள்ளையாரானாலும். சொற்கள் என்பவை நம் இஷ்டம் போல் வளைப்பதற்குரியவை. ட்ரேஸ் டெஜ் ஆக, சைக்கிள் ஜவிக்கிளாக என ஒவ்வொன்றும் அவரது அந்தந்த தருணங்களின் உணர்வுகளுக்கேற்ப உருமாறும். இதே போல் இன்னொரு விதி, எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே போல் எல்லா பொருளும் உண்ணப்பட வேண்டியவையே என்பதே அது. அதற்காக அவர் தன் தேயா பற்களில் ஒவ்வொன்றயையும் கரம்பி பார்ப்பதுண்டு. அப்புறம் அவருக்கு அவர் என்பது தன் வயிறென்பது நன்றாக தெரியும்.
எல்லாவற்றையும் தானாக்கி கொள்ள உண்ணும் குழந்தையை தான் வேளி மலை வெட்டப்படும்போது வருந்தும் குழந்தையிலும் காண முடிகிறது. எல்லாவற்றையும் தனக்குள்ளாக்க விரும்பி எல்லாமும் தானே உணர்ந்து கொள்ளும் ஒரு ஞானம். ஆகப்பெரிய அத்தனை ஞானங்களும் பூவிதழ்களில் தோன்றி மறைகின்றன. “உன் வீட்டில் ஒரு குரு பிறந்திருக்கிறார், பெற்றுக் கொள்ள நீ திறந்திருக்க வேண்டும்” என்ற நித்யாவின் சொற்களை அனுபவமாக்கிய எழுத்தாளன் காலத்தில் நிறுத்திவிட்டும் செல்லும் ஞானமிது. ஞானம் ஒரு மலர்; குழந்தையெனும் பேராவல் பெருங்கதிரோன் எழுகையில் மலர்வது.
தீராக்குழந்தை
எப்படிப்
படைத்தாலும் குழந்தைகள்
வளர்ந்துவிடுகின்றன என்று
கடவுள் நினைத்திருக்க வேண்டும்
வளராத குழந்தைகளையே
ஒரு சமூகமாகப் படைத்தாலென்ன
என்ற விபரீத ஆசைக்கு
அதுவன்றி வேறேது காரணம் ?
நாமும் கண்டுகொண்டோம்
நமது குழந்தைகளையும்
அவரது குழந்தைகளையும்
ஒன்றாக்கும் ஒரு கதையுலகு
தேவதேவன்
அன்புடன்
சக்திவேல்