பழையகுரல்-கடிதம்

அன்புள்ள ஜெ

பழைய குரல் உரையை கேட்டேன். இருபதாண்டுகளுக்கு முந்தைய உரை. குரல் இளமையாக உள்ளது. அஜி அண்ணாவின் குரலின் சாயல் நன்றாக தெரிகிறது. நிறைய மலையாள மணமும் கூட. ஆங்கில சொற்களின் கலப்பும் மிகுதி. அங்கங்கே வார்த்தைகளின் இறுதி காற்றில் கரைந்துவிடுகிறது. சில இடங்களில் சொல்ல வரும் விஷயம் தெளிவாக இருந்தாலும் சொல்லுகையில் ஏற்படும் தயக்கம்.(இந்த தயக்கத்தை இளம் எழுத்தாளர்களில் காணமுடிகிறது. ஒருவேளை இது எழுத்தாளர்களுக்கான பொதுக்கூறாக இருக்கலாம். இதை தயக்கம் என்று சொல்வது கூட சரியில்லை. தான் சொல்ல நினைப்பதை மிக தெளிவாக சொல்லிவிட்டோமா என்பதில் ஏற்படும் நிறைவின்மை என்று வேண்டுமானால் சொல்லலாம். என்ன இருந்தாலும் இந்த இடத்திலும் நீங்கள் ஒருபடி மேல் தான் ஜெ. இந்த உரையிலேயே அப்படிப்பட்ட இடமென்றால் ஒன்று அல்லது இரண்டு தவிர சுட்டி காட்ட இயலாது.)

இந்த இருபதாண்டு காலப்பயணத்தில் பேசிப்பேசி வெகுவாக விடுப்பட்டு விட்டிருக்கிறீர்கள். இன்று குரலில் உறுதியும் சீர்மையான தமிழோட்டமும் கருத்துகளில் முன்னிலும் வரையறை தன்மையும் வந்துள்ளது.

பேட்டி கண்டவரால் முன்வைக்கப்படும் பல கேள்விகள் அப்படியே தான் உள்ளது. சமீபத்திய பர்வீன் சுல்தானா வரை அந்த உதாரணம் தொடர்கிறது. நீங்கள் மட்டுந்தான் அன்றைய அடிப்படைகளில் இருந்து விரிவாகியுள்ளீர்கள். இந்த நீண்ட காலத்தில் தமிழ்ச் சூழல் ஒருபுறம் மாறியும் இன்னொருபுறம் மாறாமலும் உள்ளது. ஆனால் உங்களுடைய விசை இந்த மாற்றத்தின் முக்கியமான தூண்களில் ஒன்று.

அன்புடன்

சக்திவேல்

ஹாய் ஜெயமோகன், அந்தப் பேட்டியை எடுத்தது பெ.அய்யனார் (முன்பு பௌத்த அய்யனார் என அறியப்பட்டவர்). அனேகமாக உங்கள் முதல் விரிவான நேர்காணல் அதுவாக இருக்கலாம். சில தினம் முன் சுரா பற்றி நீங்கள் பேசியதாகச் சொன்னது இதில்தான்.

சி.சரவணக் கார்த்திகேயன்

முந்தைய கட்டுரைசிறகு- கடிதம்
அடுத்த கட்டுரைஅனுபவங்களை விலக்கும் கலை -பி. கே. பாலகிருஷ்ணன்