நெல்லை புத்தகக் கண்காட்சிக்கு அழைப்பு வந்தபோது ஒரு சின்ன தயக்கம் இருந்தது. என்னால் திறந்த அரங்குகளில் பேச முடியாது. மக்கள் வந்து அமர்வார்கள், எழுந்து செல்வார்கள், பொரி சாப்பிடுவார்கள். நடுவே விஐபிக்கள் வந்தமர எழுந்துசெல்ல என இருப்பார்கள். சின்னப்பிள்ளைகள் ஊடாக ஓடும். எனக்கு கவனமாக கேட்கும் முன்வரிசையாவது தேவை. ஈரோட்டில் நடந்த அனுபவத்திற்குப்பின் திறந்த அரங்கென்றால் ஒப்புக்கொள்வதில்லை.
ஆனால் நண்பர் ராயகிரி சங்கர் அழைத்தார். சமாளிப்போம் என ஒரு தைரியத்தில் ஒத்துக் கொண்டேன். நெல்லைக்கு ஒரு சின்ன பயணமாகச் சென்றுவரலாம் என்று அருண்மொழியும் சொன்னாள். யுவன் சந்திரசேகர் வருவதனால் அவள் வர விரும்பினாள்.
25 ஆம் தேதி காலையிலேயே கிளம்பி நெல்லை சென்றோம். நண்பர் ஷாகுல் ஹமீது காரை ஓட்டினார். என் நண்பரும் வாசகருமான சிவமீனாட்சி செல்லையாவின் டிவிகே ரீஜன்ஸி என்னும் விடுதியில் நான் எப்போது நெல்லை சென்றாலும் தங்க ஓர் அறை அளிப்பார்கள். அங்கே சென்றபின்னர்தான் தெரிந்தது அங்குதான் அனைவருக்குமே தங்க இடம் பதிவுசெய்திருந்தார்கள் என்று. ஏற்கனவே யுவன் வந்து அங்கே தங்கியிருந்தான்.
ஈரோடு, திருப்பூர் நாமக்கல் வட்டாரத்திலிருந்து 18 நண்பர்கள் காரில் கிளம்பி சங்கரன் கோயில் அருகே ஏதோ குடைவரைக்கோயிலை எல்லாம் பார்த்துக்கொண்டு வந்துகொண்டிருந்தார்கள். யுவனிடம் ஒரு வெடிச்சிரிப்பு உரையாடல். விடுதி உரிமையாளர் சிவமீனாட்சி செல்லையாவும், செல்லையாவும் வந்தனர். நெல்லையின் முதன்மையான கேக் தயாரிப்பாளர்கள். என்னை வரவேற்று ஒரு கேக் கொண்டுவந்திருந்தனர். அதை வெட்டினேன்.
அங்கேயே நல்ல ஓட்டல் இருந்தது. சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டித்தூக்கம் போட்டேன், இருபது நிமிடம். அது தொண்டையைச் சீரமைத்து தந்துவிடும். நான்கரை மணிக்கு புத்தகக் கண்காட்சி சென்றேன். நிகழ்ச்சி நிரலில் இல்லாமல் திடீரென்று நெல்லை கண்ணன் பேசுவதாக அறிவித்து அவசரப் போஸ்டர் ஒட்டி அவரை மேடையேற்றிவிட்டனர். ஆகவே எங்கள் நிகழ்ச்சி ஏழரைக்குத்தான் ஆரம்பம் ஆகியது. பல நண்பர்கள் என்னிடம் “சாரி, நான் வந்தப்ப உங்க நிகழ்ச்சி முடிஞ்சிருச்சு. பேச்ச கேக்க முடியல்லை” என்றார்கள். நிகழ்வதை விளக்கினேன். நாலைந்துபேர் ஏழரைக்கு திரும்பிச் சென்றுவிட்டதாக மின்னஞ்சல் செய்திருந்தார்கள்.
அரங்கிலும் சூழலிலும் பல நண்பர்களைப் பார்த்தேன். கார்த்திக் புகழேந்தி அவருடைய சிறுகதைத் தொகுதியை அளித்தார். கால சுப்ரமணியம், தேவதேவன், உளவியல் டாக்டரும் புல்லாங்குழல்கலைஞருமான டாக்டர் ராமானுஜம், எழுத்தாளர் ருஃபினா ராஜ்குமார், என் பழைய பி.எஸ்.என்.எல் தோழர்கள், கவிஞர் மதார், எழுத்தாளர் பிகு என பலரைச் சந்தித்தேன். நெல்லையின் அடையாளம் என்றே சொல்லப்படும் எழுத்தாளரும் நெல்லைவரலாற்றாளருமான நாறும்பூநாதனையும் சந்தித்தேன்.
நான், யுவன், போகன் சங்கர், மு.முருகேஷ் ஆகியோர் பேசினோம். போகன் நேர்ப்பேச்சில் வாய்க்குள் முனகுவார். ஆனால் மேடையில் நல்ல உச்சரிப்புடன் தெளிவாகப் பேசினார். பலநூறு மருத்துவ முகாம்களில் பேசிய அனுபவம். மு.முருகேஷ் அரசியல்பின்புலம் கொண்ட, அறியப்பட்ட பேச்சாளர்.
மு.முருகேஷ் குழந்தையிலக்கியம் ஏன் தேவை என்று பேசினார். இன்று குழந்தைகளை போட்டிக்காகவே தயாரிக்கிறோம், அவர்களின் உள்ளே அமைந்த தனித்திறன்கள் வெளிவராமலேயே ஆகிவிடுகின்றன. கதை அவற்றை வெளியே கொண்டுவருகிறது என்றார்.
போகனின் உரை அறிவியல் தகவல்களை சொல்லி அவற்றிலிருந்து ஒரு மெல்லிய கவித்துவத் தாவலை நிகழ்த்துவதாக இருந்தது. மனிதப்பரிணாமத்தில் மூளைசார்ந்த இருப்பாக அவன் அடையாளப்படுத்தப்படும் ஒரு நிலையே இறுதியானது என விளக்கி வாசிப்பின் படிநிலைகளைச் சொல்லி அதன் சிறந்த நிலை என்பது ஆசிரியனுடனான உரையாடலாக வாசிப்பை ஆரம்பிப்பது என்றார்.
யுவன் உரையில் அவன் எழுதவந்த பாதையைச் சொன்னான். அவனுக்கு ஊக்கமாக அமைந்தவர்கள் என அவன் சொன்ன மூவருமே இலக்கியவாதிகள் அல்ல. ராபர்ட் ஃபிர்சிக் (ஜென்னும் மோட்டார் சைக்கிள் பராமரிப்புக் கலையும்) கார்லோஸ் கஸ்டநாடா (டான் யுவானின் கற்பித்தல்கள்) இயற்பியலாளர் ரோஜர் பென்ரோஸ். புதியவகை எழுத்துமுறைகள், இலக்கியக்கோட்பாடுகள், அரசியல் சித்தாந்தங்கள், சமூகவியல் ஆய்வுகள் ஆகியவற்றால் தூண்டப்பட்டு எழுதவருபவர்களே மிகுதி. தன் வாழ்க்கையனுபவங்களில் இருந்து தனக்குரிய கேள்விகளை உருவாக்கித் கொண்டு அதற்குரிய ஆசிரியர்கள் வழியாக வந்த ஒரு பயணம் யுவன் சொன்னது.
நான் தமிழில் தமிழியக்கமும் நவீன இலக்கிய இயக்கமும் இரண்டு தனிப்போக்குகளாக ஒன்றையொன்று மறுத்தபடி, பெரும்பாலும் ஒன்றையொன்று அறியாமல் எப்படி இதுகாறும் வந்தடைந்துள்ளன என்று பேசினேன். அதன் விளைவான இழப்புகளைப் பற்றி.
சென்றநாட்களில் நாஞ்சில்நாடன், எம்.கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் பேசியபோது சுருதிடிவி பதிவுசெய்து வலையேற்றியது. நாங்கள் பேசியநாளில் அவர்கள் வேறெங்கோ சென்றுவிட்டனர். ஆகவே உரைகள் பதிவாகவில்லை என தெரிகிறது. பொதுவான ஒரு விழாப்பதிவும் நேரடி ஒளிபரப்பும் இருந்தது. அதன் தரம் சரியில்லை, எந்தப்பேச்சுமே கேட்டுப்புரிந்துகொள்ளும்படி இருக்கவில்லை என்றனர்.
அன்று இரவு இரண்டு மணி ஆகியது படுக்க. மறுநாள் காலை எழுந்தபோது எட்டரை மணி. கீழே வந்தபோது யுவன் கிளம்பி சாப்பிட்டுக்கொண்டிருந்தான். தேவதச்சனைப் பார்க்கப்போவதாகச் சொன்னான். ஒன்பது மணிக்கு கிளம்பி திரும்ப நாகர்கோயில்.