இந்திரா பார்த்தசாரதி-கடிதங்கள்

இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அக்காதமி ஃபெலோஷிப்

அன்புள்ள ஜெ,

இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அக்காதமி ஃபெல்லோஷிப் வழங்கும் செய்தியை உங்கள் இணையதளத்தில் பார்த்தேன். இ.பா எனக்குப் பிடித்த படைப்பாளி. இலக்கியத்தில் பலவகை உண்டு. ஒரு எல்லை வானிலே பறக்கிறது. உதாரணம் லா.ச.ரா. இன்னொரு பக்கம் தரையில் ஊன்றியிருக்கிறது. உதாரணம் ஆதவன், இந்திரா பார்த்தசாரதி. எந்த மனமயக்கமும், எந்த உணர்ச்சிகரமும் இல்லாத மேட்டர் ஆஃப் பேக்ட் எழுத்து என்று சொல்லலாம். இங்கே நடந்துகொண்டிருக்கும் வாழ்க்கையை உண்மையிலே என்ன மிச்சம் என்று பார்க்கும் கதைகள் அவை. மயிர்சுட்டுக் கரியாவதில்லை என்பது போல ஒன்றும் மிஞ்சுவதில்லை என்பது உண்மை. ஆனால் என்ன மிஞ்சுகிறது என்று பார்ப்பதற்கும் ஒரு எழுத்து தேவைதானே?

செல்வராஜ் ஆறுமுகம்

அன்புள்ள ஜெ,

இந்திரா பார்த்தசாரதிக்குச் சாகித்ய அக்காதமி ஃபெலோஷிப் வழங்கும் நிகழ்வை பார்த்தேன். இவ்வாண்டாவது அவருக்கு ஞானபீடம் கிடைக்கும் என்றால் தமிழ் அதைப்பற்றி பெருமிதம் அடைய முடியும். இன்று நம்மிடையே இருக்கும் பெரிய படைப்பாளி. மூத்த படைப்பாளி அவர். நம்முடைய கனவுகளை காற்று பிடுங்கிவிடும் எழுத்துக்கள் அவருடையவை. முழுக்கமுழுக்க அர்பன் எழுத்து. அவர் வேர்ப்பற்று என்ற பேரில் கிராமப்பின்னணியில் எழுதியிருந்தாலும் பெரும்பாலான எழுத்துக்களை தூய அர்பன் எழுத்து என்று சொல்லிவிடலாம். நூறாண்டு நெருங்கும் இபாவுக்கு வணக்கம்.

ஆ. ரங்கநாதன்

முந்தைய கட்டுரைஅழகியல் விமர்சனமும் பிறரும் – கடிதம்
அடுத்த கட்டுரைமௌனகுருவின் மாணவர்கள்