இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அக்காதமி ஃபெலோஷிப்

இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அக்காதமி ஃபெலோஷிப் வழங்கும் விழா சென்னையில் 29-3-2022 அன்று நிகழ்ந்தது. சாகித்ய அக்காதமி செயலர் கே.சீனிவாசராவ், சாகித்ய அக்காதமி தலைவர் சந்திரசேகர கம்பார், சாகித்ய அக்காதமி துணைத்தலைவர் மாதவ் கௌஷிக் ஆகியோர் கலந்துகொண்ட விழாவில் விருது வழங்கப்பட்டது. கவிஞர் சிற்பி, ம.ராஜேந்திரன், திருப்பூர் கிருஷ்ணன் ஆகியோர் விழாவில் கருத்துரையாற்றினர். தமிழிலக்கியத்தின் மூத்த பெரும்படைப்பாளிக்கு அளிக்கப்பட்ட இந்த கௌரவம் நிறைவளிப்பது.

இ.பா அதைப்பற்றி அனுப்பிய வாட்ஸப்பில் ‘யாண்டு பலவாகியும் இருந்துகொண்டிருப்பதற்கான் கௌரவம்’ என சுயநையாண்டியுடன் எழுதியிருந்தார். முன்பு பஷீர் உள்ளிட்டவர்களுக்கு சாகித்ய அக்காதமி ஃபெல்லோஷிப் வழங்கப்பட்ட விழாவில் வி.கடன் “ I am here to congratulate these fellows..” என்று ஆரம்பித்தார். அது நினைவுக்கு வந்து புன்னகை செய்துகொண்டேன். யாண்டு பலவாக நிறைவுற்றிருப்பதற்கு இ.பா கண்டுகொண்ட வழி என்பது என்றும் மாறாத அந்தப் புன்னகைதான்.

இது ஒரு தருணம். இபாவின் புன்னகைக்க வைக்கும் கசப்பு கொண்ட புகழ்பெற்ற நாவல்களை நினைத்துக்கொள்ள. சுதந்திரபூமி, தந்திரபூமி. ரமணி தான் தங்கியிருக்கும் வீட்டம்மணியின் இடையை சுற்றிப் பிடிக்கிறான். “அய்யோ என்ன இது, உள்ள அவர் இருக்கார்” என்று அவள் சீற “அதுதான் உன் ஆட்சேபணையா?”என்று ரமணி கேட்க அறைவிழுகிறது.

மண்டைக்குள் மூளைநிறைந்த கதாபாத்திரங்களை உருவாக்கியவர் இந்திரா பார்த்தசாரதி. மண்டை நிறைந்து அந்த மூளைகள் கொஞ்சம் நசுங்கி கோணலாகின்றன. ஆகவே நையாண்டி நிறைந்தவையாகின்றன. தங்கள் அகங்காரத்துடனும் விலகலுடனும் அதிகாரத்தை பார்த்துக்கொண்டிருக்கின்றன.

முந்தைய கட்டுரைஆய்வும் சழக்கும்
அடுத்த கட்டுரைபெரும்பான்மைவாதமும் அறிவுஜீவிகளும்-கடிதம்