மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் அற்புதப்படைப்புகளில் ஒன்றான பனிமனிதன் நாவலை இணையம் வழியாக படித்து மகிழ்ந்தேன். தர்மஸ்தலத்திற்கு சென்று திரும்பிய பின் கிம்முக்குள்ளும் பாண்டியனுக்குள்ளும் டாக்டர் திவாகருக்குள்ளும் ஒரு அற்புதமான மாற்றம் நிகழ்ந்தது போல் இந்த நாவலைப் படித்த பின் என்னுள்ளும் ஓர் மாற்றம் நிகழ்ந்ததை உணர்ந்தேன்.
பௌத்த மதத்தின் கொள்கைகளை மிகவும் நுட்பமாக தங்களின் எழுத்துக்களின் மூலம் என்னால் அறிய முடிந்தது. என்னுள்ளும் ஓர் இறையாற்றல் இருப்பதை உணர முடிந்தது. என்னுள் இருக்கும் அந்த இறையாற்றல் எல்லோரிடத்திலும் எல்லாவற்றிலும் கலந்து இருப்பதையும் என்னால் கவனிக்க முடிந்தது
நாகரீகத்தின் பெயர் கூறி உண்மையான மகிழ்ச்சியையும் நம்முள் இருந்த புனிதமான குழந்தை மனதையும் அத்துடன் இயற்கை வளத்தையும் நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை தங்களின் நாவல் எனக்கு மேலும் புரிய வைத்தது. அக்கருத்தை என்னுள் ஆழமாக பதிய வைத்தது.
பாண்டியன் தனது பூதாகர பிம்பத்தைக் கண்டு மெய்மறந்து மயங்குவதும். கீழே வந்த பிறகு அவர் கூறும் வார்த்தைகளும், ஒரு மனிதன் எந்த அளவிற்கு “நான்” என்ற சுயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறான் என்பதை தெளிவாக வாசகர்களுக்கு சென்று சேர்க்கும் வகையில் அமைந்திருந்தது.
புத்தகங்களை வாசிப்பதால் மட்டுமே பிறப்பது ஞானம் என்றெண்ணியிருந்தேன். ஆனால் புத்தகங்கள் வெறும் வழிகாட்டிகளே, ஞானத்தை அடைய நாம் வாசித்ததைச் சரியான முறையில் நன்கு புரிந்து கொள்ளுதலும் அவ்வாறு புரிந்து கொண்ட கருத்துக்களை வாழ்வில் பின்பற்றுதலும் அவசியம் என்பதை எனக்கு அழகாக புரிய வைத்தது.
இந்தப்புத்தகம் அந்த வகையில் என்னுள் ஒரு ஒளிச்சுடரை ஏற்றி வைத்துள்ளதாக நான் உணர்கிறேன். இந்த ஒளிச்சுடர் ஓர் ஒளிப்பிழம்பாக மாறும் என்று நம்புகிறேன். இத்தகைய ஓர் அருமையான புத்தகத்தை என் போன்ற வாசகர்களுக்கு தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்படிக்கு
மீ. அ. மகிழ்நிலா
எட்டாம் வகுப்பு
ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி
கூத்தூர்
திருச்சி -621216
***
அன்புள்ள மகிழ்நிலா
சிறப்பான மதிப்புரை. தமிழ்நடை மிகநேர்த்தியாக உள்ளது. நினைத்ததை சொல்லிவிட முடிகிறது. இந்த வயதில் இது ஓர் அபூர்வமான திறன். இளமையிலேயே மொழிநடை கைகூடுபவர்களே பின்னாளில் எழுத்தாளர்களாக மலர்கிறார்கள். எதிர்காலத் தமிழின் முக்கியமான ஓர் எழுத்தாளரை அடையாளம் கண்டுகொள்கிறேன்.
தொடர்ந்து எழுது, எழுதுவது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்காக மட்டும் அல்ல, நம்மைநாமே தொகுத்துக் கொள்வதற்காகவும்தான். எழுதும்போது எப்போதுமே எல்லாரும் சொல்லும் சொற்றொடர்கள், பாடப்புத்தகச் சொற்றொடர்கள் இல்லாமல் பார்த்துக்கொண்டால் போதும். நாமே யோசிக்க ஆரம்பித்துவிடுவோம் (இந்தக்கடிதத்தில் அப்படி எந்த வழக்கமான வரிகளும் இல்லை என்பது மிக ஆச்சரியமானது)
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்
ஜெ