தீவிர இலக்கியம் மற்றும் வெகுமக்கள் தளம் இரண்டும் யுவால் நோவா ஹராரி அளவே இணையாக அறிந்து வைத்திருக்கவேண்டிய மற்றொரு பெயர் ருட்கர் பிரெக்மன். கடந்த ஆண்டு யுவால் நேர்காணல்கள் காணொளிகள் வழியே பயணிக்கையில் தற்செயலாக ருட்கர் அவர்களின் நேர்காணல் ஒன்று காணக் கிடைத்தது. மானுட குலத்தின் நடத்தை சார்ந்து யுவால் கூறிய சிலவற்றை அவர் அதில் மறுத்திருந்தார். மேலும் அவரது சில காணொளிக்களை தேடிப்பார்த்தேன். ஜெயகாந்தன் ஒரு பேட்டியில் “எந்நிலையிலும் நான் நம்பிக்கைவாதி” என்று பிரகடனம் செய்திருப்பார். அவரது வகையராவை சேர்ந்தவர் ருட்கர். அங்கே துவங்கி அவரையும் அவரது நூல்களையும் விக்கி வழியே அறிந்தேன்.
https://en.wikipedia.org/wiki/Rutger_Bregman
அவரது நூல்களில் ஒன்றான – மனிதகுலம்: ஒரு நம்பிக்கையூட்டும் வரலாறு – எனும் நூல் இவ்வாண்டு தமிழாக்கம் கண்டுள்ளது. யுவால் அவர்களை தமிழுக்கு கொண்டு வந்த அதே மஞ்சுள் பப்ளிகேஷன், சிறப்பாக மொழியாக்கம் செய்த நாகலட்சுமி சண்முகம் கூட்டணியே ருட்கர் அவர்களையும் தமிழ் நிலத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.
அழகான பிரிட்டிஷ் நகைச்சுவை ஒன்றுடன் துவங்குகிறது நூலின் முதல் அத்தியாயம். உலகப்போரின் துவக்கம். லண்டன் நகரில் குண்டு போட்டு அப்பாவிகளை பலி போட்டு, சிவில் மனநிலையை குலைப்பதன் வழியே அரசின் மோனோதிடத்தை உடைக்கும் திட்டத்துடன் ஜெர்மனி வான் படையை அனுப்புகிறது.
லண்டனில் அப்போது ஒரு உளவியலாளர் இந்த சூழலை கண்காணித்து ஆய்வு செய்ய முடிவு செய்கிறார். போர் மனித நடத்தையை என்ன செய்யும்? மனிதர்கள் மீண்டும் காட்டு மிராண்டிகள் ஆகி ஒருவரை ஒருவர் கொன்றுணத் துவங்கி விடுவார்களா? கேள்விகளுடன் குண்டு விழும் நகரில் முதல் நாள் சுற்றி அலைந்து கண்காணிக்கிறார். சில நாட்கள் மட்டுமே இழப்பின் துயர், மரண பீதி எல்லாம். கடந்து மொத்த சிவில் சமூகமும் கூட்டு வாழ்க்கைக்கு திரும்பி விடுகிறது.
குண்டு விழுந்து தகர்ந்து விழுந்த தனது கடையில் எஞ்சிய பொருட்களை ஒரு மேஜையில் சேகரித்து வைத்து அந்த மேஜையில் கடைக்காரர் இப்படி ஒரு பலகை எழுதி வைத்திருக்கிறார்.
” ஜெர்மன் தொழில்நுட்பத்தின் உதவியுடன் நல்ல ஒளி நல்ல காற்றோட்டம் என இப்போது கடையை மேலும் பொலிவு செய்திருக்கிறேன். வாடிக்கையாளர்கள் விரைந்து வந்து சூழலை அனுபவித்து பொருட்களை வாங்கி செல்லவும்”. (எனது நடையில் எழுதி இருக்கிறேன். வாசகர்கள் நூலில் இந்த ஜோக் ‘இப்படி’ இல்லையே என்று அழுகாச்சி வைக்கக்கூடாது.)
இப்படித் துவங்கும் இந்த நூல், உன்னால் முடியும் தம்பி என்று கிளுகிளுப்பூட்டும் தன்னம்பிக்கை கதைகள் கொண்ட நூலோ,அல்லது முழு தீமை என ஒன்றில்லை மையத்தில் நன்மை உண்டு வகையில் டாக்சிக் குட்னஸ் மீது மையம் கொள்ளும் நூலோ அல்ல. கற்காலம் துவங்கி, நிலவுடைமை காலம் தொட்டு, காலனியாதிக்க காலம் தொடர்ந்து, இன்றைய சிரியா யுத்தம் வரை நமது மானுட குல நடத்தையை, “மனிதர்கள் அடிப்படையில் இப்படிப்பப்பட்டவர்கள்தான்” என்று வரையறை செய்யும் எதிர்நிலை கருத்தியல் அனைத்தையும் அதற்கு காரணமாக அவை காட்டும் சூழலையும் கேள்விக்கு உட்படுத்தும் நூல். மானுட அடிப்படை இயல்பு குறித்து இது வரை பேசப்பட்ட அனைத்து எதிர்நிலைக் கூறுகளையும் தீஸிஸ் எனக் கொண்டு அதற்கு இணையாக (விதி விலக்கு ஒன்று இரண்டு இருக்கலாம் எனும் வாதகதியில் புறம்தள்ளப்பட்ட) அதே சமயம் செயல்பாட்டில் இருந்த நேர்நிலை விஷயங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சி அவற்றை ஆண்ட்டி தீஸிஸ் என முன்வைக்கும் நூல். இனி வரும் காலம் இந்த தீஸிஸ் ஆண்ட்டி தீஸிஸ் வழியாக முரண் இயக்கம் கொண்டே மானுட நடத்தையை வரையறை செய்ய வேண்டும் என்னும் வகையில் வலிமையான தரவுகளுடன் தனது ஆண்ட்டி தீஸிஸ் ஆன நேர்நிலைப் பண்பை அதன் வாதகதிகளை சுவாரஸ்யமான உதாரணங்களுடன் முன்வைக்கும் நூல்.
பொதுவாக மானுட நடத்தை விதிகளை அதன் எதிர்நிலைப் பண்புகளை சிம்பன்சி யின் தனி நடத்தை, சமூக நடத்தை இவற்றைக் கொண்டு இணை சொல்வது வழக்கம். ஜீன் குடாலும் சிம்பன்சி மரபணுவுக்கும் மனித மரபணுவுக்கும் உள்ள ஒற்றுமை இந்த இரண்டும் கூடி நிகழ்த்திய கருத்தியல் தாக்கம் அது. அதனை சிம்பன்சி போலவே இருக்கும் போனபோ குரங்குகள் வழியே எதிர்கொள்கிறார் ருட்கர். சிம்பன்சி உலகில் உள்ள மேலோர் கீழோர் சமூக அமைப்போ, உளவு அமைப்போ, குறிப்பாக கற்பழிப்போ இங்கே போனபோ சமூகத்தில் இல்லை. ஒவ்வொரு போனபோவும் தனியே மிகுந்த விளையாட்டு உணர்வும் தோழமையும் கொண்டது. அதன் சமுக வாழ்வு என்பது கூட்டுறவு செயல்பாட்டில் கிடைப்பதை பகிர்ந்துண்டு இணையுடன் இறுதி வரை காதல் வாழ்வில் திளைத்திருக்கிறது. குறிப்பாக ரேப்புகள் இல்லை. சிம்பன்சிக்கும் மனிதனுக்கும் உள்ள ஒற்றுமை என்ன என்று அறிவியல் சொல்கிறதோ கொஞ்சம் கூட குறைய அத்தனையும் கொண்டது போனபோ. எளிய கேள்விதான். சிம்பன்சி மட்டும் என்பதில் இருந்து வெளியேறி நாம் ஏன் போனபோகளையும் இணைத்து அதன் வழியே மனித நடத்தை விதிகளை மறு பரிசீலனை செய்யயக்கூடாது? (நூலைத் தொடர்ந்து போனபோவின் கலவி கொண்டாட்ட காணொளி ஒன்று கண்டேன். மனிதனுக்கு இணையாக காம சூத்திர பொசிஷன்கள் அனைத்தையும் அவை கைக்கொள்ளுகிறது).
பொதுவாக புழக்கத்தில் இருக்கும் மற்றொரு கருத்தாக்கம் ஹோமோ சேபியன்ஸ் ஆகிய நாம் நியாண்டர்தால் எனும் பிறனை கொன்றொழித்தோம். நானும் அவ்வாறே நம்பி இருந்தேன் பில் ப்ரைசன் வரும் வரை. இதுவரை உலகம் நமக்கு கிடைத்த மானுட வகைமை எலும்புகளில் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் தகுதி கொண்டவை என்பது 400 கிலோ கூட தேறாது. (அதாவது வெறும் 4 மனிதன் அளவு) என்று ப்ரைசன் சொல்லுகிறார். அதை வைத்துக் கொண்டு நாம் வளர்த்துக்கொண்ட பல யூகங்களில் ஒன்றே இந்த நியாண்டர்த்தால் ஹாலோகாஸ்ட். நூல் எழுப்பும் கேள்வி, நியாண்டர்தால், அறிவில் சிறந்த ஆனால் சமூகத்தில் வாழ முடியாத ஆட்டிசம் போன்ற குறைபாடு கொண்டிருந்திருக்கலாம் என்று நம்மால் ஏன் யோசிக்க முடியவில்லை என்பது. நியாண்டர்தாலுக்கு கொம்பு வாத்தியம் ஒலிக்கத் தெரியும். மனித மரபணுவில் நியாண்டர்தால் மரபணுவும் கண்டுபிடிக்க பட்டிருக்கிறது. ஆக அவர்கள் நம்மிலும் அறிவாளிகள் நாமும் அவர்களும் கூடி வாழ எண்ணிய முயற்சிக்கான ஆதாரம் மட்டுமே நம்மிடம் உள்ளது.
இப்படி வளரும் இந்த நூலை இரண்டு தத்துவவாதியர் நோக்கை அடிப்படையாகக் கொண்டு பின்னி விரித்திருக்கிறார் நூலாசிரியர். ஒருவர் ஹாப்ஸ். அடிப்படையில் மனிதன் காட்டுமிராண்டி. குடிமையியல் முறையே அவனை கட்டுப்படுத்தி நாகரீகமானவனாக வைத்திருக்கிறது என்பது இவர் தரப்பு. மற்றவர் ரூஸோ. மனிதன் அடிப்படையில் கூடி வாழும் இயல்பினன். விவசாயமும் நிலவுடமையும் அதன் விளைவாக உருவான குடிமையலும் தான் மனிதனை அவன் இயல்பிலிருந்து திரிபடைய வைத்தது என்பது இவர் தரப்பு. இந்த இரண்டு தரப்பில் இப்போது மையத்தில் இருக்கும் ஹாப்ஸ் தரப்பால் விளிம்புக்கு தள்ளிவிடப்பட்ட ரூஸோ தரப்பை பின்தொடர்கிறார் ருட்கர்.
நிலவுடைமை சமுதாயம் இல்லையேல் உபரி இல்லை. கலைகள் இல்லை. பேராலயங்கள் இல்லை. மதம் இல்லை. இப்படி மனிதனை மனிதனாக இன்று வைத்திருக்கும் எல்லாமே நிலவுடைமை சமூகம் வழியே அடைந்தது எனும் ஹாப்சியர் தரப்பு வாதத்தை, 12,000 ஆண்டுகளுக்கு முன்பு வேட்டையாடி மனிதர்களால் கட்டப்பட்ட கொபக்லி தபே பேராலயம் கொண்டு மறுக்கிறார். ஆதி வாசிகள் எதிர் எதிர் குழுக்களாக ஒருவரை ஒருவர் கொன்று ஒழித்தனர் எனும் வாதத்தை, அப்படி வாழ்ந்த குடியினர் மிக சிலர் மட்டுமே, மாறாக ஐரோப்பியர் கப்பல் கப்பலாக பிடித்து சென்று அடிமைகளாக விற்ற ஆதிவாசிகள் பல லட்சம். இவர்களில் எவருக்கும் வன்முறை என்றால் எதிரிகள் என்றால் என்னவென்றே தெரியாது என்று இந்த நூலில் நிறுவும் ருட்கர் நிலவுடைமை சமூகம் தோன்றுவதற்கு முன்பான எந்த குகை ஓவியத்திலும் மனிதரை மனிதர் கொல்லும் சித்திரம் என ஏதும் இல்லை என்கிறார்.
அன்றைய புனைவுகள் பல, காலனிய ஆதிக்கம் தனது மேலாண்மையை சொந்த மண்ணில் அதன் சிவில் மனம் ஒப்புக்கொள்ள வைக்க புனையப்பட்டவை என்பது இன்று வெளிப்படை. இப்படி புனைவுகள் உருவாக்கிய கருத்தியல் தாக்கத்தை கோல்டிங் எழுதிய லார்ட் ஒப் தி பிலைஸ் நாவலை முன்வைத்து விவாதிக்கிறார் ருட்கர். நாவல் சில சிறுவர்கள் தனியே தீவில் மாட்டிக்கொண்டு மீட்கப்படும் வரை எவ்விதம் ‘காட்டுமிராண்டி’ வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதை மையம் கொண்டது. ருட்கர் 1966 இல் இவ்வாறே நடந்த உண்மை சம்பவம் ஒன்றில் அதன் பாத்திரங்களை இன்று நேரில் கண்டு நேர்காணல் செய்கிறார். கொல்டிங் புனைந்து போல இல்லை யதார்த்தம். தீவில் சிக்கிய அந்த இரண்டு வருடமும் அவர்கள் ஒரே ஒரு பிணக்கு கூட இன்றி, கூடி வாழ்ந்து, சூழலை அனுசரித்து தகவமைத்து, அதன் பயனாக மீண்டிருக்கிறார்கள்.
இப்படி தத்துவாதிகள், இலக்கியவாதிகள் உருவாக்கிய கருத்தியல் தாக்கம் அளவே உளவியலாளர்கள் (குறிப்பாக அமெரிக்கா) உருவாக்கிய தாக்கம் அளப்பரியது. அதையும் பரிசீலிக்கிறது இந்த நூல்.
சில மாதங்கள் முன்பு ஜெயமோகன் எழுதிய பத்துலட்சம் காலடிகள் சிறுகதையை கட்டுடைத்து அக் கதையை எழுதியவர் ஒரு பாசிஸ்ட். சிறுபான்மையினருக்கு எதிரி என்று நிறுவினார் ராஜன் குறை என்றொரு சமூக அறிவியல் ஆய்வாளர். அதைத் தொடர்ந்து ராஜன் குறை தலித்துகளின் சமூக நடத்தை குறித்து கீழ்மை தொனிக்கும் வண்ணம் எழுதிய ஆய்வு கட்டுரை விவாதத்துக்கு வந்தது.
https://www.jeyamohan.in/133952/
இந்த ராஜன் குறை போன்றவர்களை வடிவமைக்கும் ‘உடைந்த ஜன்னல்’ போன்ற பல அறிவியல் பூர்வமான சமூக ஆய்வுகள் அமெரிக்காவில் நடந்திருக்கிறது. (ராஜன் குறை அமெரிக்காவில் கற்றவர்) .
https://en.wikipedia.org/wiki/Broken_windows_theory
என்னால் மூச்சு விட முடியவில்லை என்பதை இறுதி சொல்லாக விட்டு விட்டு காவல்துறை கால்களால் செத்துப்போனாரே ஒரு ஒடுக்கப்பட்டவர், அந்த நிலைக்கு இந்த ஆய்வேடுகள் போன்றவை காவல் நீதி துறை இவற்றில் செலுத்திய தாக்கமே முக்கிய காரணி.இத்தகு மனித நடத்தைகள் சார்ந்த பல ஆய்வுகளை அறிமுகம் செய்து , அதில் விவாதிக்கப்படாமலே உள்ள கோணல் பலவற்றை அம்பலப்படுத்துகிறது இந்த நூல்.
இப்படி, பொதுவில் ஒரு மனிதன் கொலை செய்யப் படுகையில் அங்கே இருந்தும் உதவி எதுவும் செய்யாமல் இருக்கும் சக மனிதர்கள் எனும் நிலை துவங்கி, யூதப் படுகொலைகள் வரை பல்வேறு சமூகவியல் ஆய்வுகள் வழியே மனிதன் அடிப்படையில் தீயவன் என்று நிறுவப்பட்டு விட்டதாக இன்றுவரை நாம் நம்பிக்கொண்டிருக்கும் பல கூறுகளை உடைத்துப் பரிசீலிக்கிறது இந்த நூல்.
ஹிட்லர்,ஸ்டாலின், போல்பால்ட் இவர்களால் மட்டுமே ஆனதல்ல வரலாறு. இவர்கள் அத்தனை பேருக்கும் எதிர் நிலை வகிக்கும் நெல்சன் மண்டேலா போன்றவர்களே வரலாறை முன்செலுத்துபவர்கள் என்கிறார் ருட்கர். விடுதலை பெறுகிறார் மண்டேலா. மிகப்பெரிய போர் ஒன்று மூளும் சூழல். மண்டேலா மீண்டும் ஆயுதம் தூக்குவாரா? அல்லது எதிர் தரப்பின் ராணுவ தளபதி வசம் போரை தவிர்த்து அரசை ஒப்படைப்பாரா? உலகம் எதிர்பார்த்த இந்த இரண்டுமே நிகழவில்லை. மாறாக ராணுவ தளபதி ஆயுதங்களை கைவிட்டார். மண்டேலா தேர்தல் வழியே அதிபர் ஆனார். ராணுவ தளபதி பின்னர் சொன்னது ” மண்டேலா என் கைகளை விடவே இல்லை. நூறு சதவீதம் அவர் என்னை நம்பினார்”.
போரில் துவங்கி போரில் நிறையும் இந்த நூல் நமது கண் முன்னால் இருந்தும் குருட்டுப் புள்ளியில் விழுந்து காணாமல் போகும் பொருட்களை போல போரில் நாம் காணாமல் விட்ட பல விஷயங்களை முன்வைக்கிறது. ஒரு குறிப்பிட்ட நகரத்தில் இருந்து சிரியாவுக்கு ஜிகாதியாக செல்ல பல இளைஞர்கள் முடிவு செய்கிறார்கள். ஊரே கூடி அதை நேர்நிலை பண்புடன் அணுகுகிறது. விளைவு. 2013 இல் அங்கிருந்து ஜிகாதி ஆக சென்றோர் 300 பேர். 2014 அந்த எண்ணிக்கை வெறும் மூன்று பேர்.
ஒரு சமயம் ஒரு அமெரிக்க உள்நாட்டு போர். அது இழுத்துக்கொண்டே போகிறது. எல்லாம் முடிந்த பின்னர், பரிசோதிக்கையில் ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள் சுடப்படாமலே இருந்திருக்கிறது. எதிரிகள் தம்மை கொன்றாலும் பரவாயில்லை என்று சுடாமல் இருந்திருக்கிறார்கள். இதே போல மற்றொரு போர். துவங்கி இரண்டு மணி நேரமாக ஒரே ஒரு உயிர் பலி கூட இல்லை. காரணம் இரு தரப்புமே எதிரிகள் தலைக்கு அரை அடி மேலே சுட்டுக்கொண்டு இருந்திருக்கிறார்கள். முதல் உலகப்போர். பல தேச எல்லைகளில் கிரிஸ்துமஸ் இரவில், அதுவரை சண்டை போட்டுக்கொண்டு இருந்தவர்கள் எந்த தலைவனது உத்தரவுக்கும் கீழ்பாடியாமல் எல்லா நாட்டு வீரர்களும் கூடி தேவ மைந்தன் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்கள். இப்படிப் பற்பல நேர்நிலை அம்சங்களை கடந்து வந்தே லிட்டில்பாய் பூமி மீது விழுந்திருக்கிறது.
இப்படி பள்ளிக்கல்வி, காவல் அமைப்பு, சிறை அமைப்பு, பொருளாதார அமைப்பு, ஜனநாயக அமைப்பு, வணிக அமைப்பு என ஒவ்வொன்றிலும் ‘மனித நடத்தை இத்தகையதுதான்’ என்ற எதிர்நிலை கருத்தியல் முன் முடிவுடன் உருவாக்கப்பட்ட அமைப்புகளின் நவீன வரலாறு முழுமையையும் அதற்கு இணையான நேர் நிலை பண்பு கொண்ட அதே அமைப்பின் வெற்றிகரமான வேறு வகை முன்மாதிரியை கொண்டு விவாதிக்கும் இந்த நூலாசிரியர் இறுதியாக மனிதன் ‘யதார்த்தமாக’ இருக்க செய்ய வேண்டியவை என்ன என்று ஒரு பத்து வரையறையை அளிக்கிறார். நூலாசிரியர்க்கு அசாத்தியத்தை சாத்தியமாகும் மண்டேலாவின் முன்மாதிரி காந்தி என்பதை தாண்டி காந்தி குறித்து ஏதும் தெரியும் என்பதற்கு அந்த நூலில் சாட்சியங்கள் இல்லை. ஆனால் நூலாசிரியர் வகுத்து வைத்த பத்து வரையரையும் சற்றே முன் பின்னாக இருந்தாலும் புற வாழ்வில் அப்படியே கடைபிடித்தவர் காந்தி என்பதை இதை வாசிக்கையில் வாசகர் அறியலாம்.
இத்தனை விவாதித்த பிறகும் இந்த நூல் மானுட நடத்தையின் நேர்நிலை தரப்புக்கான அவ்வளவு வலுவான நூல் இல்லை என்றும் பலருக்குத் தோன்றலாம் காரணம். ராணுவ எறும்புகள் சிக்கிக்கொள்ளும் மரண வளையம் போன்ற நிலையில் நாம் இருக்கிறோம் என்பதே உண்மை. கூடி வாழும் இயல்பு கொண்ட எறும்புக் கூட்டம் அது. முன்னால் சென்ற எறும்பின் ரசாயன தடத்தை நுகர்ந்தே அடுத்த எறும்பு செல்லும் இப்படி அடுத்தடுத்த எறும்புகள். இந்த வரிசையில் முதல் எறும்பு திசை விட்டு ஒரு ரசாயன வளையத்தை உருவாக்கி விடும் என்றால், ஒட்டுமொத்த எறும்புப் படையும் அந்த வளையத்தில் சுற்றி சுற்றி வரும். எது வரை? சாகும் வரை.
முதல் உலகப்போர் துவங்கிய பிறகே முன் சென்ற கருத்தியல் எறும்பு வட்டம் போட துவங்கியது
இப்படி ஒரு வளையத்தை உண்டாக்கி விட்ட முதல் எறும்பாகத்தான் இந்த மனித நடத்தை விதி குறித்த எதிர்நிலை கருத்தியலாளர்களை குறிப்பிடுகிறார் ருட்கர்.
நாம் மீள இயலாமல் சிக்கிக்கொண்ட அந்த மரண வளைய சிந்தனை ரசாயணத்தை அழிக்கவேண்டிய காலம் இது. அந்த முயற்சிக்கான தாக்கத்தை உருவாக்குவதில் மிக பலவீனமான ஒன்றாக கூட இந்த நூல் இருக்கலாம்.ஆனால் இந்த நூல் அந்த முயற்சியை துவங்கிய முதல் நூல் என்றவகையில் முக்கியமானது. 10 ஆம் வகுப்புக்கு மேல், வாசிக்க மாட்டார்கள் என்று தெரிந்தும் பரிசாக அளிக்கப்படும் அப்துல் கலாமுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்து விட்டு பள்ளிகள் இந்த நூலை பரிசளிக்கலாம். முதல் அத்தியாயத்தை வாசித்துவிட்டால் உள்ள 500 பக்கத்தில் எதையுமே விட்டு விடாமல் வாசிக்க வைத்து விடும் இந்த நூல். மற்றபடி நான் எப்போதும் சொல்வதே இப்போதும். தமிழறிந்தோர் அனைவரும் தவறாமல் வாசிக்க வேண்டிய மற்றொரு நூல் இந்த மனிதகுலம் ஒரு நம்பிக்கையியூட்டும் வரலாறு.
கடலூர் சீனு