வெண்முரசில் மரவுரி- லோகமாதேவி

மரப்பட்டை சேகரிக்கும் பகுண்டாக்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

சமீபத்தில் யானைப்பலா மரங்களை குறித்து வாசித்துக் கொண்டிருந்தேன். பலகை வேர்களை கொண்டிருக்கும் மரங்களை தேடத் துவங்கித்தான் யானைப்பலாவிற்கு வந்திருந்தேன். யானைப்பலாவின் மரப்பட்டையிலிருந்து எடுக்கப்படும் மரவுரியை இந்தோனேசிய மூரத் மற்றும் டயாக் பழங்குடியினர் வெகுவாக உபயோகப்படுத்துவதை வாசித்தபோது, பலகை வேர்களிலிருந்து விலகி மரவுரிக்குத் தேடல் சென்றுவிட்டது. Artocarpus Tamaran என்னும் இந்த யானைப்பலா மட்டுமல்லாது பலாவின் பல வகைகளில் இருந்தும் மரவுரி எடுக்கப்படுகிறது.

பிறகு பழங்குடியினரின் மரவுரி பயன்பாட்டைக்குறித்து விரிவாக வாசித்தேன். உகாண்டா பழங்குடியினரின் மரவுரிகளுக்கு 2005ல் யுனெஸ்கோவின் கலாச்சார அந்தஸ்தும் கிடைத்திருக்கிறது. அது தொடர்பான காணொளிகளையும் பார்க்கையில் வெண்முரசில் மரவுரி பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருப்பது நினைவுக்கு வந்தது. பண்டைய இந்தியாவில் பட்டு, கம்பளி, பருத்தி, மற்றும் லினன் துணிகள் பயன்பாட்டில் இருந்தன. மரவுரியும் அவற்றிற்கிணையாகவே பயன்பாட்டில் இருந்திருக்கிறது என்பதை வெண்முரசை மீள வாசிக்கையில் அறிய முடிந்தது.

வெண்முரசு வாசிப்புக்கு முன்பு வரை மரவுரி என்பது மரப்பட்டையின் நிறத்தில் உடுத்துக்கொள்ளும் ஆடை மட்டுமே என்று நினைத்திருந்தேன். ஆடையாகவும், போர்வையாகவும், பாயாகவும் இன்னும் பலவிதங்களிலும் மரவுரி பயன்பட்டதும் அவை பலவண்ணங்களில் சாயமேற்றப்பட்டிருந்ததையும் வெண்முரசின் இந்த மீள் வாசிப்பின் போதுதான் அறிந்துகொண்டேன்.

ஆடைகளுக்கென்றும், குதிரைகளின் உடலை உருவிவிடவென்றும், உடல் துவட்டிக்கொள்ளவும், போர்த்திக்கொள்ளவும், பாயாக, மெத்தையாக படுத்துக்கொள்ளவும், சிகிச்சையளிக்கையில் பஞ்சைப்போலவும், திரைச்சீலைகளாகவும் என பல மரவுரி பயன்பாடுகள் இருந்திருக்கின்றன.

மரவுரி உடை. பகுண்டாக்கள்

மரவுரி குவியல்களுக்கடியிலிருந்து விரைந்து மறைகிறது நாகமொன்று, வெய்யோன் மகனை கருவிலேயே அழிக்க வந்தவளை மரவுரிக்குள் மறைந்திருந்து தீண்டுகிறது மற்றுமொரு அரசநாகம், மரவுரிப்பொதிகள் வண்டிகளில் வருகின்றன, விடுதிகளில் பயணிகளுக்களிக்கவென்று மரவுரிப்பாய்கள் சேமித்து வைக்கப் பட்டிருக்கின்றன. அரசவாழ்வை துறந்து கானேகுகையிலும், நாடு நீங்குகையிலும் மரவுரியாடை அணிந்து கொள்ளப்படுகிறது. பிறந்த குழந்தைகள் மரவுரியில் சுற்றிக் கொண்டு வரப்படுகின்றன. வெண்முரசில் பற்பல இடங்களில் பலவித மரவுரி பயன்பாடுகள் உணர்வுபூர்வமான பல நிகழ்வுகளுடன் இடம்பெற்றிருக்கின்றது.

முதற்கனலில் புஷ்கரவனத்தில் இருந்து மரவுரியாடை அணிந்து புறப்படும் ஆஸ்திகன், ஜனமேஜயனின் வேளிவிச்சாலையில் வலப்பக்கம் வாழைப்பூ போல செந்நிற மரவுரியாடை அணிந்த முனிவர்கள் அமர்ந்திருப்பதை காண்பதிலிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் மரவுரி, இறுதியில் முதலா விண்ணில் இளவரசர் ப்ரீஷித் நீர்க்கலமொன்றில் எடுத்து வரப்படுவதை சொல்லும் அஸ்தினபுரியின் பெருவணிகன் மிருத்திகன் குளித்து விட்டு மரவுரியால் தலை துவட்டி கொள்ளுவது வரை வெண்முரசின் அனைத்து நூல்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது

அரச ஆடைகளை துறந்து மரவுரி அணிந்து நாடுவிட்டு செல்லும் உணர்வுபூர்வமான காட்சிகள் வெண்முரசில் பல இருக்கின்றன.

பிரயாகையில் கோசலத்தை இளையோனாகவே அரியணை அமர்ந்து ஆண்ட இக்ஷ்வாகு குலத்து மன்னன் பகீரதன், தந்தை இறந்து குரல்கள் கேட்க துவங்கிய பின்னர் ஒருநாள் காலை தன் அரசைத் துறந்து, தனது இளையோனை அரசனாக்கிவிட்டு மரவுரி அணிந்து தன்னந்தனியனாக காடேகுகிறான்

நீர்க்கோலத்தில் சூதுக்களத்திற்கு பின்னர் நகர் நீங்குகையில் அணிகள் களையபட்டு அரச உடைகளும் நீக்கபட்டு இறுதிச் சிற்றாடையுடன் நிற்கும் புஷ்கரனுக்கு ஒரு முதியவரிடமிருந்து மரவுரியை வாங்கி அளிக்கிறான் சுதீரன்.

பல முக்கிய ஆளுமைகள் நாடு நீங்குகையில் மரவுரி அணிந்தே செல்கின்றனர். க்ருத்ஸமதர் தன் இரு துணைவியரையும் சென்னிசூடி வணங்கிவிட்டு. மரவுரி அணிந்து, இரந்துண்டு, நாட்டை நடந்து நீங்குகிறார். அம்மரவுரியையும் களைந்துவிட்டு காட்டுக்குள் நுழைகிறார்.

பிருஹத்ரதனும் அரசுப்பொறுப்பை தலைமை அமைச்சர் பத்மரிடம் அளித்துவிட்டு மரவுரி அணிந்து வெறும்கோல் ஒன்றை கைக்கொண்டு நகர்நீங்குகிறார்.

நீர்க்கோலத்தில் அரங்கு நீங்குகையில் தமயந்திக்கும் அவல் மகலுக்கும் மாலினி மரவுரியடையை அளிக்க உத்தரவிடுகிறாள். ஒற்றை மரவுரி ஆடை அணிந்து தமயந்தி வெளியே வரும் தமயந்திக்கு அவ்வாடை பழக்கமில்லாததனால் அதை மார்புடன் இரு கைகளாலும் அள்ளிப் பற்றியிருப்பாள். அவளுடைய குதிகால்கள் வரைதான் அந்த ஆடை இருக்கும்.

புஷ்கரனும் நளனிடம் “நீ அணிந்திருக்கும் ஆடையும் இவ்வரசுக்குரியது. இங்குள்ள எவரிடமேனும் ஒரு மரவுரியை இரந்து பெற்று அணியலாம்” எனும்போது. கருணாகரர் அருகே நின்ற ஒருவனிடமிருந்து மரவுரியை வாங்கி ஒரு வீரனிடம் கொடுத்து நளனுக்கு அளிக்கச் சொல்கிறார். நளன் அதை அங்கே நின்றபடியே உடுத்துக்கொள்கிறான்.

உத்தாலகரிடம் இறுதிக்கணத்தில் இருக்கும் அயோததௌம்யர் ’இளமையில் எந்தையும் ஆசிரியருமான அசிதர் அவருக்கு தூய காயத்ரியையும் மரவுரியையும் அளித்ததை சொல்லி தான் அதுவரை ஆடையென்றும் அணியென்றும் கொண்ட அப்போது எஞ்சியிருக்கும் அதையும் அகற்ற சொல்லுகிறார். அதன்பின்னரே விழிமூடி மறைகிறார். தேவாபி துறவு பூண்டு வனம் செல்கையில் மரவுரியை அணிந்துகொண்ட பின்பே புறப்படுகிறான்.

அரிஷ்டநேமி அர்ஜுனனுடன் புறப்படுகையில் கையில் வைத்திருக்கும் சிறிய மரவுரி மூட்டையை திருப்பி குகைக்குள் வீசிவிட்டு அவனிடம் திரும்பி புன்னகையுடன் “எத்தனை எளிய உயிர்கள் மனிதர்கள்! நான் நாடாளச் செல்கிறேன். இக்குகையிலிருந்து இந்த மரவுரியையும் திருவோட்டையும் கொப்பரையையும் கொண்டு செல்வதனால் என்ன பொருள்?” என்பார்

காண்டீபத்தில் மாலினி மரவுரிச் சுருள் ஒன்றைச் சுருட்டி கைகளில் எடுத்துக்கொண்டு காத்திருக்கும் ஊர்தியில் ஏறி நகர் நீங்குகிறாள்.வெண்முரசில் முதியவர்களும் முனிவர்களும் ஆடையென பெரும்பாலும் மரவுரியைத்தான் அணிந்திருக்கின்றனர்.

வெய்யோனில் கர்ணன் திருதிராஷ்டிரரின் இசைக்கூடத்தில் இசை கேட்டுக்கொண்டிருக்கும் இளைய கெளரவர்களை காணச்செல்லுகையில் வழியில் இடையில் செம்மரவுரி அணிந்த முனிவர் நின்றிருப்பார். அக்காட்சியில் அந்தியின் செவ்வொளி விழுந்து பொன்னுருகி நிறைந்த கலமென மாறியிருக்கும் திருதிராஷ்டிரரின் நீள்வட்ட இசைகூடத்தின் நடுவே இருந்த தடித்த மரவுரிமெத்தை.வெய்யொன் கர்ணனின் கனவிலும் மரவுரி உடுத்த கொழுத்த உடலுடன் ஒரு பார்வையற்ற முதியவர் வருவார்.

பன்னிரு படைக்களத்தில் ஜராசந்தனுக்கும் பீமனுக்குமான போர் இடைவேளையில் நடுவர்கள் இருபக்கமிருந்தும் ஓடிச்சென்று ஜராசந்தனையும் பீமனையும் பீடங்களில் அமரச்செய்து இன்னீர் அளித்து அவர்களின் உடல்வியர்வையை மரவுரியால் ஒற்றுகிறார்கள். இப்படி மரவுரித்துணி துண்டுபோல உடல் துடைக்கவும் வியர்வை ஒற்றவும் பயன்படுவது வெண்முரசில் பலமுறை குறிப்பிடப்பட்டிருக்கிறது

துரோணரும் இன்னும் பலரும் நீராடி முடித்து மரவுரியால் துவட்டிக்கொள்ளுகின்றனர். கிராதத்தில் சண்டனும் ஜைமினியும், சுமந்துவும் வைசம்பாயனனும் பைலனும் மரவுரி ஆடைகளை நனைத்து பிழிந்து காய வைக்கிறார்கள். திரௌபதி மரவுரியை முகத்தின்மேல் போட்டுக்கொண்டு துயில்கிறாள், இடையில் அணிந்த மரவுரியுடன் நீரில் இறங்கி குளிக்கிறாள்

நீர் கோலத்தில் பீமன் கரிய கம்பளி ஆடையால் உடலை மூடி மரவுரியை தலையில் சுற்றி கட்டி ஊர்களுக்குள் நுழைந்து கொடை அளிக்கும் படி கேட்கிறான்

இன்னும் சில அரிய நிகழ்வுகளின் போதும் மரவுரி இருக்கிறது மழைப்பாடலில் குழந்தை துரியனுக்கு காந்தாரி அளித்த முலைப்பால் பெருகி குளம்போல தரையில் தேங்கிக்கிடக்கையில் சுஸ்ரவையின் கண்ணில் படாமல் மறைக்க அதில் மரவுரி போட்டு மூடுகிறாள் சத்யசேனை.

களத்தில் பீஷ்மரின் அனைத்து மாணவர்களும் இறந்த பின்னர் அவருக்கு தேரோட்டும் பொருட்டு வரும் துண்டிகன் அவரை காண செல்லுகையில் பீஷ்மர் மரவுரியால் தன் உடலை துடைத்துக்கொண்டு மரப்பெட்டியில் இருந்து புதிய மரவுரியை உடுத்திக்கொள்கிறார். அதுவே அவரின் கடைசி மரவுரியாடை.

பிருதைக்கு கருக்கலைக்க வரும் கிழவி மரவுரிக்குள்ளிருந்த நாகத்தால் தீண்டப்படுகிறாள். வண்ணக்கடலில் பிருதையிடம் விடைபெறும் நாளில் துர்வாசர் “நீ இளம்பெண். இளவரசி. நானோ மரவுரி அணிந்த கிழவன். என்னுடன் விளையாடி நீ தோற்றுவிட்டாய்” என்கிறார். அதன் பிறகே பிருதைக்கு அந்த வரம் கிடைக்கிறது களிற்றியானை நிறையில் ராஜசூய வேள்விக்கான திசைக்குதிரைகளின் கொட்டிலை சுதமன் பார்வையிடச் செல்லுகையில் மரவுரி குவையினடியில் இருந்து சீறி எழுந்து படமெடுக்கிறது அரச நாகம்

பாரத்வாஜர் குருநிலையில் மரவுரியால் துரோணன் கண்களைக் கட்டிய பின்னரே அவனிடம் தர்ப்பை பீடத்திலிருந்து ஏதேனும் ஒரு தர்ப்பையை எடுக்கும்படி சொல்லப்படுகிறது.

அஸ்வத அருமணியை காணாது தேடுகையில் சித்தம் தடுமாறி இருக்கும் விதுரர், கையிலிருந்து அகல் சுடர் சரிந்து தரையில் பற்றிய நெருப்பின் மீது மரவுரியை எடுத்துப் போடுகிறார், அனல் அம்மரவுரியை உண்டு புகை எழுப்பும்.

அஸ்வத்தாமன் பிறந்த போது இன்கிழங்கு போல சிவந்த சிற்றுடல் கொண்டிருந்த குழந்தையை மரவுரியில் சுற்றி எடுத்துவந்து துரோணரிடம் காட்டுவார்கள்

மழைப்பாடலில் மாத்ரி மணம் புரிந்து வந்த முதல் நாளில் குஹ்யமானஸத்துக்கு செல்லுகையில் சத்யவதி கந்தர்வனின் சிலைப்பதிட்டை முன்னால் விரிக்கப்பட்டிருந்த மரவுரி இருக்கையில் அமர்கிறாள்.

வண்ணக்கடலில் ஓரிரவில் கிருதகட்டத்தின் முன்றிலில் மரவுரி போர்வைகளை போர்த்தியபடி கூடிய நிஷாதர்கள் நடுவே அமர்ந்து தன் குறுமுழவை இரு விரல்களால் மீட்டி மிருண்மயர் பாட்டுடன் கதை சொல்கிறார்.

இந்த அத்தியாயத்தில் தான் மரவுரி தயாரிப்பும் வணிகமும் விளக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது. நிஷாத நாடு முழுக்க பெருந்தொழிலாக இருப்பது மரவுரியாடை அமைத்தலே. சர்மாவதியின் இருகரைகளிலும் நூற்றுக்கணக்கான சிற்றூர்களின் படித்துறைகளில் இருந்து படகுகள் மரவுரிப் பொதிகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றன என்கிறார் மிருண்மயர்

பன்னிருபடைக்களத்தின் சூதுக்களத்தின் நடுவே பலகைகளால் அமைக்கப்பட்ட வட்ட வடிவ ஆடுகளத்தின் மீதும் செந்நிற மரவுரி விரிக்கப்பட்டிருக்கிறது. அந்த அவைக்களம் முழுக்க தரைமேல் அழுத்தமான மரவுரி மெத்தை மூடியிருந்தது. அங்கு நுழைபவர்களும் மரவுரி காலணி அணிந்து மட்டுமே நுழைய வேண்டும் என்றும் வகுக்கப்பட்டிருந்தது.

சூதுக்கு முந்தைய நாள் துயில் நீத்திருந்த தருமர்மரப்பட்டை கூரை குடிலும், நீர் வைக்க ஒரு கலம். உணவு சமைக்க பிறிதொரு கலம். மரவுரி பாய் ஒன்று. ஒரு மாற்றாடை உணவு திரட்ட கூர்முனை கொண்ட கழி ஒன்று. அதற்கப்பால் இப்புவியிலிருந்து அவர் பெறுவதற்கொன்றுமில்லை’ என்று நினைக்கிறார்..

நிஷதகுடியின் மூத்த இளவரசர் நளனுக்கும் அவர் இளவலும் அரசருமாகிய புஷ்கரனுக்கும் நடக்கும் நாற்களமாடலும் மரவுரி விரித்த மேடையில் போடப்பட்ட நாற்களப் பலகையில்தான் நடக்கிறது.

பல அரசவை கூடங்களில் அவைகளில் அரசகுடியினர் அமர்வதற்கான மேடை மரவுரி விரிக்கப்பட்டு அதன்மேல் அரியணையும், மயிலணையும், அணியணைகளும் போடப்பட்டு இருக்கும். செந்நிற மரவுரித் திரைச்சீலைகள் பல கூடங்களில் அசைந்து கொண்டிருந்தன.

மழைப்பாடலில் கௌந்தவனத்தின் முகவாயிலை வசுதேவன் கடக்கையில் அங்கிருந்த காவலர்கள் தோலாடைகளைக் கழற்றி வைத்துவிட்டு குளிருக்கு மரவுரி போர்த்தியபடி குவிந்து அமர்ந்திருக்கின்றனர். ஈர உடைகளை உதறியபடி குடிலுக்குள் நுழைந்த வசுதேவனுக்கு பிருதை உலர்ந்த மரவுரியாடை எடுத்துவந்து பீடத்தில் வைக்கிறாள்

நீர்க்கோலத்தில் விராடபுரியின் அரண்மணியில் தனக்கான தனியறைக்குள் நுழைந்ததும் பாஞ்சாலி பிரீதையிடம் அவளுடைய மரவுரிகளும் தலையணைகளும் எங்கே என்று கேட்கையில் சேடிப்பெண் ஒருத்தி அவற்றைக் கொண்டு வந்து சீராக விரித்து அமைக்கிறாள்

பயணவழியில் ஆளில்லா விடுதியொன்றில் இருந்த மூங்கில் பெட்டிகளிலிருந்து பீமன். மரவுரிகள் மற்றும் ஈச்சைப்பாய்களையும் எடுத்து தருமன் அமர விரிக்கிறான்.

பயணங்களில் விடுதிகளில் பலர் மரவுரி ஆடையணிந்தும் மரவுரி போர்த்தியும் அமர்ந்திருக்கின்றனர். அர்ஜுனனுக்கு வணிகனொருவன் வெள்ளியை வாங்கிக்கொண்டு அளித்த மரவுரியை சருகுகள் மீது விரித்து, வணிகர்கள் பேசிக் கொண்டிருப்பதையும் வெளியே மழை பெய்வதையும் கேட்டுக்கொண்டே அர்ஜுனன் படுத்துக்கொள்ளுகிறான். கர்ணன் சம்பாபுரிக்கு வந்த புதிதில் அவனைக்குறித்து குடிகள் பேசிக்கொள்வதை கேட்க ஒரு விடுதியில் கரிய மரவுரியால் உடலை போர்த்திக்கொண்டு அமர்ந்திருப்பான்.

காயங்களுக்கான சிகிச்சையில் இப்போது பயனாகும் பருத்திப்பஞ்சைபோல அப்போது மரவுரி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கார்கடலில் போர்க்களத்தில் காயம்பட்ட திருஷ்டத்துய்மனனின் காயங்கள் தேன் மெழுகிலும் கந்தக கலந்த நீரிலும் முக்கி எடுக்கப்பட்ட மரவுரியால் துடைத்து சுத்தம் செய்யப்படுகின்றன.

சிகிச்சையின் போது கவசங்கள் தசைகள் மீது வலுவுடன் அறையாமலிருக்கும் பொருட்டு உள்ளே அழுத்தப்பட்டு தகடுகளாக மாறிய மரவுரி சுருள்களை உரிய இடங்களில் வைத்து இறுக்கப்படுகின்றது.

பிரயாகையில் திரௌபதியும் மாயையும் அணிகளேதுமின்றி இடைசுற்றி எடுத்து மார்பில் போடப்பட்ட செந்நிற மரவுரி ஆடை மட்டும் அணிந்திருந்து அன்னைபூசனைக்கு செல்கிறார்கள். செந்நிறமான மரவுரி ஆடையின் மடிப்புகள் உலைய திரௌபதி இறங்கி தரையில் நின்றதும் வாழ்த்தொலிகள் எழுகின்றன.

செந்நா வேங்கையில் மரவுரி மேலாடைகளும், கயிற்றுக்கட்டிலில் மரவுரியும் நார்த் தலையணையும் சொல்லப்பட்டிருக்கும்

பிரேமை மரவுரி மேலாடையை அணிந்திருப்பாள். சரத்வான் மரவுரி அணிந்து புலித்தோல் மேலாடை அணிந்திருப்பார். முதிய குலத்தலைவர்கள் மரவுரித் தலைப்பாகைகளுடன் இடையில் மரவுரி ஆடை மட்டும் சுற்றி நின்றிருப்பார்கள். இடையில் கைக்குழந்தை ஏந்திய மூதாய்ச்சியர் மரவுரியால் தோள்போர்த்து வந்தமர்ந்திருப்பார்கள்.

துரோணரும் கிருபியும் மணமான புதிதில் பயணிக்கையில் கிருபி தன் மரவுரியில் இருந்து மெல்லிய நூலை பிரித்தெடுத்து அதை ஒன்றுடனொன்று சேர்த்து முடிந்து நீளமாக்கி நாணலின் நுனியில் கட்டி அதில் இருவரும் தேன் சேகரிப்பார்கள்.

குருதிச்சாரலிலும் இப்படி ஓரிடம் வருகிறது. சகுனி விழிகளைத் தாழ்த்தி தாடியை நீவி கொண்டிருக்க கணிகர் தான் அமர்ந்திருந்த சேக்கையிலிருந்த மரவுரியின் ஒரு நூலை மெல்ல பிரித்து எடுத்துக் கொண்டிருப்பார்

பாஞ்சால இளவரசியின் மணத்தன்னேற்புக்கு மரவுரி ஆடையுடன் இருக்கும் நம்மை உள்ளே விடமாட்டார்கள் என்று இளையவர்கள் சொல்லுவார்கள். மணத்தன்னேற்பரங்கிலும் மரவுரி விரிக்கப்பட்ட பீடங்கள் போடப்பட்டிருக்கும். நிகழ்வைக் காண வந்தவர்கள் இப்போது பேருந்தில் இடம்பிடிக்க ஜன்னல் வழியே துண்டு போடுவதுபோல இருக்கைகளில் மரவுரி போட்டு இடம்பிடித்து அமர்கிறார்கள். மண முற்றத்திலும் செந்நிறத்தில் மரவுரிக் கம்பளம் விரிக்கப்பட்டு இருக்கும்

அன்னைவிழியில் காலபைரவியின் கருவறைக்குள் கருங்கல் பீடத்தில் மரத்தாலத்தில் மரவுரியில் வண்ணமிட்டு ஐந்து புரிகளாக பின்னப்பட்டிருக்கும் கேசம் இருக்கும். மரவுரிகளால் ஆன சேலைகளும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மரவுரி படுக்கையில் மரவுரி அணையில் தலை வைத்து இளைய யாதவர் மல்லாந்து துயின்றுகொண்டிருக்கிறார்.

தரையில் போடப்பட்ட மஞ்சப்பலகையில் மரவுரி விரித்து அதன்மேல் படுத்திருக்கும் துரோணரின் காலடியில் அமர்ந்து அஸ்வத்தாமன் காலடியில் அமர்ந்து அவர் கால்களை பிடித்துக் கொண்டிருப்பான்.

பூரிசிரவஸ் குதிரை மேல் இருந்த மூங்கில் படுக்கை கூடைக்குள் உடலை ஒடுக்கிச் சுருண்டு உறங்கும் பால்ஹிக பிதாமகரை பார்க்கையில் கருவறைத் தசைபோலவே இருந்த செந்நிறமான மரவுரி மெத்தையில் கருக்குழந்தை போல அவர் துயின்று கொண்டிருப்பதாக நினைக்கிறான்.

பாண்டவர்களும் திரெளபதியும் காத்யாயனர் குடிலில் அமர்ந்திருக்கையில் மாணவர்கள் ஒவ்வொருவராக மரவுரி அசையும் ஒலி மட்டும் கேட்க மெல்ல வந்து அவர்களுக்குரிய புல்லிருக்கைகளில் அமர்கின்றனர். மாணவர்களுக்குரியது மரவுரி என்பது பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கும். இப்போது பள்ளிச்சீருடை போல் அப்போதெல்லாம் எளிமையான மரவுரி இருந்திருக்கிறது.

பீதர் நாட்டிலிருந்து அஸ்தினபுரிக்கு கொண்டுவரப்பட்ட ஒவ்வொரு பளிங்குப் பாளத்திற்கு மேலும் கீழும் மரவுரி மெத்தைகள் வைக்கப்பட்டிருந்தன.

குருஷேத்திர போரில் மரவுரியின் பயன்பாடு பலமுறை சொல்லப்பட்டிருக்கிறது. கெளரவப்படைகளின் காவல் மாடத்தில் சிறுத்தையின் சிறுநீரில் நனைக்கப்பட்ட மரவுரிகள் தொங்குகின்றன. போர்க்களத்தில் மருத்துவ நிலைகளில் அனைத்துப் பலகைகளும் நிரம்ப, வெளியே திறந்தவெளியில் நிலத்தில் மரவுரிப்பாய்களை விரித்து புண்பட்டவர்கள் படுக்க வைக்கப்பட்டிருந்தனர்.

போர் ஓய்ந்து களம் அடங்கிக் கொண்டிருந்த ஒரு அந்திப்பொழுதில் சிகண்டியின் இரு மைந்தர்களுடன் சதானீகன் வருகையில் பாண்டவப்படைகளில் ஒருவன் யுதிஷ்டிரரைப் போல மரவுரி சூடி, தோளில் மரவுரியை சால்வையாக அணிந்து, உடைந்த வேலொன்றை தொடைகளால் கவ்வி அதை அசைத்து நடனமிடுகிறான்

மரவுரியை ஐந்து புரிக்கூந்தலாக தலையில் கட்டியிருந்த பிறிதொருவன் திரௌபதி போல இடை ஒசித்து கையில் மரவுரி சால்வை ஒன்றை மாலையாக கொண்டு வந்து, அதை அந்த வேலுக்கு அணிவித்து தொழுகிறான். வெடிச்சிரிப்புடன் பலர் கவசங்களையும் மரவுரிகளையும் வானில் தூக்கி எறிந்து கூச்சலிடுகின்றனர்.

அந்தக் களத்தில் எவருமே புத்தாடை அணிந்திருக்கவில்லை. மாமன்னர் யுதிஷ்டிரர்கூட மீண்டும் மீண்டும் போருக்கணிந்த, குருதி நனைந்து இறுகி மரக்கட்டை போலாகிவிட்ட மரவுரியையே அணிந்திருந்தார். ஒவ்வொரு உடலிலும் மரவுரியால் துடைத்து நீவி எடுத்த பின்னும் எஞ்சும் குருதி உலர்ந்த கரும்பசையாலான வரிகள் நிறைந்திருந்தன.

மருத்துவ நிலைகளை நோக்கித் தொடர்ந்து வண்டிகளில் தேன்மெழுகும் அரக்கும் மரவுரியும் சென்றுகொண்டிருந்தன. போரில் உயிரிழந்த வீரர்களை மரவுரி விரிப்பில் புரட்டிப் போட்டு தூக்கிச் செல்கின்றனர்.

கர்ணன் களம்பட்ட பின்னர் மரவுரி விரித்து அதன்மேல் கர்ணனின் உடலை சரித்து படுக்க வைக்கின்றனர்.

பல பழங்குடியினத்தவர்கள் இறப்பு சடங்குகளில் மரவுரி ஆடைகள் இடம்பெற்றிருக்கும். பல ஆண்டுகள் உடலை மரவுரி பாதுகாக்கும் என்பதால் புதைக்கப்படும் சவங்கள் மரவுரியால் சுற்றப்படும். எகிப்திலும் மம்மிகள் லினன் துணியால் பலமுறை சுற்றப்பட்டிருக்கின்றன. அத்துணிகள் இப்போதும் பெரிய சேதமில்லாமல் கிடைத்திருக்கின்றன.

ஃபல்குனை சித்ராங்கதனுக்கு சிகிச்சை அளிக்கையில் புதிய மரவுரி துணி நான்கு சுருள்கள் கேட்கிறாள். சிறுநீரில் நனைத்த அம்மரவுரியில் உருகும் மெழுகு விழுதை தோய்த்து காயத்துக்கு சிகிச்சை அளிக்கிறாள்

மேலும் பல இடங்களில் காயமடைந்தவர்களுக்கு புண் வாயில் கந்தகமும் மெழுகும் கலந்து அழுத்தி மரவுரியால் கட்டப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சொல்வளர்காட்டில் அனைவரும் மரவுரியின் நிறத்திலேயே அமைந்த பருத்தியாடை அணிந்திருப்பது சொல்லப்பட்டிருக்கும். இப்போது பருத்தியில் தடிமனாக மரவுரியைபோல ஆடைகளை செய்கிறார்கள்.

1960களிலிருந்து பருத்தி மரவுரி எனும் பெயரில் மிக அடர்த்தியாக நெய்யப்பட்ட பருத்தி துணிகள் (cotton bark cloth) பயன்பாட்டில் இருக்கின்றன. இவைகள் மேசை மற்றும் படுக்கை விரிப்பிற்கும், திரைச்சீலைகளாவும் பயன்படுகிறது.

குடி மக்களும் அரசகுடியினரும் மரவுரி சேக்கையில் அமர்கிறார்கள் சேற்றுக் கலங்கல் மரவுரியில் வடிகட்டி அருந்தப்படுகிறது.

காவலர்கள் மரவுரி மூட்டையை பரண் வீடுகளில் அடுக்கி வைக்கின்றனர். காவலரண்களின் கீழே நெருப்பிட்டு எரிவெம்மையில் புகை சூழ மரவுரியும் கம்பளியும் போர்த்தி அமர்ந்து தாயமும் பகடையும் சொல்மாற்றும் விளையாடுகின்றனர்.

துச்சாதனன் கையில் ஒரு மரவுரிப்பை வைத்திருக்கிறான். போர் முடிந்து மைந்தர்களை இழந்து சவம் போலிருக்கும் தேவிகையை பூர்ணை கைபற்றி அழைத்துச் சென்று மரவுரியை குடில் சுவரிலிருந்து இழுத்துக்கட்டி சிறிய மறைப்பை உருவாக்கி சிறிய மூங்கில் பீடத்தில் அமர செய்வாள்.

குருதிச்சாரலில் கலங்கள் மரவுரிகளால் உறையிடப்படுகின்றன. செந்நிறமும் நீலநிறமும் ஏற்றப்பட்ட மரவுரிநார்கள் சொல்லப்படுகின்றன.

மாத்ரி நகர் நுழையும் காட்சியில் மரவுரி விரிப்பது கொங்கு திருமணங்களில் நடைபெறும் ஒரு சடங்கை நினைவூட்டியது. மணமக்கள் நடக்கும் வழியெங்கும் உபயோகப்படுத்திய ஆடைகளை ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் விரித்து போட்டுக்கொண்டே வருவார்கள், மணமக்கள் மிதித்து கடந்த துணிகளை மீண்டும் எடுத்து முன்னே விரிப்பார்கள்.

பத்து மங்கலங்களை ஏந்தியபடி மூன்று சேடியர் சென்றனர். சேடிகள் தரையில் விரித்த மரவுரிமேல் கால்களைத் தூக்கி வைத்து மாத்ரி நடந்தாள். அவளுக்குப்பின்னால் இரு சேடியர் அந்த மரவுரியை எடுத்து மீண்டும் விரித்தனர்

களிற்றியானை நிரையில் படகுகளில் நடப்பட்டிருந்த. மூங்கில்களில் முடையப்பட்ட மரவுரிப்பாய்கள் கட்டப்பட்டிருந்தன. மாவுரியின் இந்த பயன்பாடு மிகுந்த வியப்பளித்தது. முன்பு லினன் துணிகளில் இப்படி பாய்மரக் கப்பல்களின் பாய்கள் செய்யப்பட்டன.

குளிக்கவைக்கபட்ட புரவிகளின் தோல் பளபளப்பாக ஆனபின்னர் மரவுரியை நீரில் தோய்த்து ஒருமுறை நீவித்துடைத்துவிட்டு மீண்டும் நாய்த்தோலால் நீவப்படுகிறது.

வெண்முரசில் மரவுரிகள் சில இடங்களில் உவமையாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இளைய யாதவர் நக்னஜித்தையை மணக்கும் பொருட்டு களிறுகளை வெல்லும் கள நிகழ்வின் போது வாடிவாசலில் இருந்து களம் புகுந்த முதல் காளையின் கழுத்துச் சதை மரவுரித் திரைச்சீலையின் அடிநெளிவுகளென உலைகிறது.

யுயுத்ஸுவின் புரவி சிறு இடைவெளிகளில் புகுந்து, வழி உருவாக்கி ஊடுருவி முன் செல்வதை மரவுரிக்குள் நுழைந்து செல்லும் ஊசிபோல ஊடுருவுவதாக அவன் எண்ணுகிரான்.

ஒற்றையடிப்பாதை கரிய காட்டுக்குள் கம்பளியை தைத்த மரவுரி சரடென ஊடுருவிச் சென்றது என இமைக்கணத்திலும் இப்படி ஒரு விவரிப்பு வருகிறது.

’மரவுரியில் ஓடிய தையல் நூல் என புதர்களை ஊடுருவிச் சென்ற சிறு பாதையின் ஓரம் நின்றிருந்த மரத்தின் பட்டையில் ஒரு செதுக்கடையாளத்தைக் காண்பது’ என்னும் மற்றொரு உவமையும் மிக அழகாக இருக்கும்.

உறங்குகையில் நனைந்த மரவுரி கோழிக்குஞ்சை என துயில் அவனை மூடி அழுத்திகொண்டது என்னும் ஒரு வரி உறங்குபவருக்கு அந்த உறக்கம் அப்போது எத்தனை தேவை, எத்தனை பாதுகாப்பை அது அளிக்கிறது என்பதை உணரச்செய்யும். அதைப்போலவே ‘இங்கு அரியணை அமர்ந்திருக்கிறேன். ஆனால் என் உள்ளம் குளிர்ந்து நீரிலூறிய மரவுரியென கிடக்கிறது’ என்னும் இன்னோரு வரியும் நீரிலூறிய மரவுரி அளிப்பது போன்ற பாதுகாப்புணர்வைச் சொல்லும்

பிரபாச க்ஷேத்திரத்தின் பெருநாணலின் நாரிலிருந்தும் மக்கள் மரவுரி ஆடைகளை நெய்து அணிகின்றனர்.

கிராதத்தில் தொல்வேதம் அசுரர்களிடமிருந்து வந்ததை சொல்லுகையில் ஜைமினி //மரப்பட்டை நூறாயிரம் முறை அறைவாங்கி நூறுநாள் நீரிலூறி சக்கை களைந்து ஒளிகொண்ட சரடென மட்டுமே எஞ்சும்போதுதான் அது மரவுரியாகிறது. வேள்விக்கு இனிய தேன் தேனீக்களின் மிச்சிலே. ஆனால் அது மலர்களில் ஊறியதென்பதே மெய்.// என்கிறான்.

மலைக்கு வருவதில் முதன்மையானதாகிய உப்பும் செல்வதில் முதன்மையானதாகிய மரவுரியும் மழைக்கு வீணாகிப்போகின்றவை என்னும் குறிப்பும் வெண்முரசில் வருகிறது

மனிதர்கள் முதன்முதலில் உருவாக்கிய இயற்கை இழை மரவுரிதான். ஆப்பிரிக்காவில் இவை முதன்முதலில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டிருக்கலாம். என்று கருதப்படுகிறது. குறிப்பிட்ட வகை மரங்களின் உள்மரப்பட்டையை நீளமாக உரித்தெடுத்து, கொதிநீரில் இட்டு, கட்டைகளால் அடித்து மென்மையாக்கி, பின்னர் ஆடை நெய்ய அவை பயன்படுத்தபட்டது. ஆப்பிரிக்க பழங்குடியினர் மரவுரிகளை திரைச்சீலைகள், இடையாடை, உள்ளாடை, மற்றும் சுவர் மறைப்புக்களாக பயன்படுத்தினர். கெட்டியான மரவுரிகள் படுக்கைகளாக பயன்பட்டன.

பழங்குடியினரின் சமயச் சடங்குகளில் மரவுரிகள் முக்கியமான இடம்பெற்றிருந்தன போர்னியோ தீவு கூட்டங்களின் பழங்குடியினர் ஒரு துண்டு மரவுரியை துக்க காரியங்களின் போது கைகளில் வைத்திருப்பார்கள். கொங்குப்பகுதி துக்க நிகழ்வுகளிலும் இம்முறை நெடுங்காலமாக வழக்கத்தில் இருக்கிறது. துக்க வீடுகளில் கைகளில் ஒரு துண்டு வைத்திருப்பார்கள், அந்த துண்டைக் கைகளில் தொட்டுக்கொண்டு வணங்குவதே துக்க விசாரிப்பு இங்கெல்லாம். தொல்குடி சடங்குகளின் நீட்சிகளாகத்தான் பல சடங்குகள் இன்னும் நம்மிடையே நீடித்திருக்கின்றன.

தென்கிழக்காசியாவின் பழங்குடியினத்தவரகளின் பெண் குழந்தைகளுக்கான முதலுடையாக மரவுரி ஆடையே அணிவிக்கப்படும். உகாண்டாவின் பெரும்பாலான பழங்குடியினரின் இறப்பு சடங்குகளில் மரவுரி மிக முக்கியமான பொருளாக இருக்கிறது. அங்கு முதுவா எனப்படும் அத்தி வகை மரத்தின் பட்டைகளிலிருந்தே மரவுரி பெறப்படுகிறது (Mutuba -Ficus Natalensis). லத்தீன் மொழியில் நட்டாலன்ஸிஸ் என்றால் ‘அந்த பகுதிக்கு சொந்தமான’ என்று பொருள். இவற்றுடன் மரவுரிகள் அளிக்கும் ஏராளமான பிற மரங்களும் இருக்கின்றன. சாய அத்தி எனப்படும் Ficus Tinctoria, (தாவரவியலில் டிங்டோரியா என்னும் சிற்றினப் பெயரைக்கொண்ட அனைத்துமே சாயம் அளிப்பவை) காகித முசுக்கொட்டை மரமான (Paper Mulberry) Broussonetia Papyrifera ஆகியவற்றின் மரப்பட்டைகளும் மரவுரி நார்கள் அளிக்கின்றன. நியூசிலாந்தில் மாவோரி (Māori) பழங்குடியினரும் காகித முசுக்கொட்டை மரப்பட்டையிலிருந்தே மரவுரியை எடுக்கின்றனர்.

துவக்கத்தில் குறிப்பிட்டிருந்தது போல பலாவின் பலவகைகளும் (Artocarpus Altilis, Artocarpus Tamaran Artocarpus Mariannensis) மரவுரியை அளிக்கின்றன. பெரும்பாலான மரவுரி மரங்கள் மல்பெரி குடும்பமான மோரேசியை சேர்ந்தவை.

மரவுரிகள் டாபா, இங்கட்டு, ஆட்டே, உஹா மற்றும் ஹிபோ என்னும் பெயர்களில் அவை உருவாகும் மரங்களின் பெயருடன் இணைத்து அழைக்கப்படுகின்றன(Tapa, Ngatu, Aute, Uha, Hiapo). ஹிபோ என்பது காகித முசுக்கொட்டை மரங்களின் பெயர். மரவுரியை பொதுவாக ஒலுபுகோ என்கிறர்கள் (olubugo)

டாபா என்பது பட்டையான ஆடை என்னும் பொருள் கொண்ட சொல். (border or strip) அகலமான துணிகளை பட்டைகளை தைத்தும் ஒட்டியும் உருவாக்க தெரிந்து கொள்வதற்கு முன்பு நீளமான பட்டைகளாகவே மரவுரி துணிகள் உருவாக்கப்பட்டன அப்போது வழங்கிய பெயரே டாபா. தென்கிழக்கு சீனா மற்றும் வியட்நாமில் மரவுரி ஆடைகள் புழக்கத்தில் இருக்கிறது

ஹவாய் தீவில் மரவுரியாடைகள் காபா (kaapa) எனவும் ஃப்யூஜி தீவில் மாஸி எனவும் அழைக்கப்டுகின்றன (masi) டாபாவை அடித்து அகலமும் மிருதுவும் ஆக்கிய பின்னர் அவற்றை புகையிட்டு சாயமேற்றி அலங்கரிக்கப்படுகின்றது. மர அச்சுக்கள் மூலம் பல இயற்கை வடிவங்கள் அதில் தீட்டப்படுகின்றன. வடிவங்களில் அதிகமாக மரங்களும் மீன்களும் இருக்கும்.

அனைத்து இயற்கை வண்ணங்களும் உபயோகப்படுத்தப்படுகிறது என்றாலும் மிக அதிகமாக கருப்பும் மண் நிறமும் இருக்கும்.

இப்போது பழங்குடியினர் வசிக்கும் பல தீவுகளில் பருத்தியாடைகளும் கிடைக்கிறதென்றாலும் விழாக்களிலும் முக்கிய நிகழ்வுகளிலும் சமயச்சடங்குகளின் போதும் புல்லாடைகளும் மரவுரியாடைகளுமே பழங்குடியினரால் அணியப்படுகிறது. பலவிதமான முகமூடிகளை உருவாக்கவும் காகிதங்களாகவும், புனித பொருட்களை சுற்றிவைக்கவும் மரவுரி பயன்படுத்தப்படுகின்றது

பட்டையான டாபா துணிகளை தலையில் பழங்குடியினர்கள் வழக்கமாக கட்டிக்கொள்ளுகிறார்கள். திருமணமாகாத பெண்களும் துறவிகளும் அரசகுடியினருக்கும் தனித்தனியே பட்டைகள் இருக்கின்றன. பட்டைத்துணியின் குறுக்கே ஒரு வண்ணக்கோடு இருந்தால் அது மணமான பெண்களையும் வண்ணக்கோடு இல்லாத நெற்றி பட்டைகள் திருமணமாகாத பெண்களையும் குறிக்கும். விளையாட்டு வீரர்கள் மரவுரி துணிப்பட்டைகளை மார்பின் குறுக்கில் அணிந்துகொள்கிறார்கள்.

உகாண்டாவின் பகாண்டா பழங்குடியினர் (Baganda) உருவாக்கும் மரவுரியாடை மனிதகுலத்தின் மிகப்பழைய மரவுரியாக கருதப்படுகிறது. பல பண்டைய நாகரிகங்களில் பயன்பாட்டில் இருந்த மரவுரிகள் இப்போது தடயமின்றி அழிந்துவிட்டன. உகாண்டாவில் 18, 19 நூற்றாண்டுகளில் சரிந்திருந்த மரவுரித்தொழில் இப்போது கலாச்சார அந்தஸ்து அளிககப்டபின்னர் மிகவும் வேகமெடுத்திருக்கிறது

மழைக்காலங்களில் நனைந்திருக்கும் முதுபா மரங்களின்(Ficus Natalensis) பட்டைகள் உரித்தெடுத்துகொண்டு வரப்பட்டு கொதி நீரில் வேகவைத்து, பலமுறை அடித்து அவை அகலமாகி மண் நிறம் வந்தபின்பு உலர்த்தப்படுகிறது பட்டைகள் விரைவாக உலர்ந்து அவற்றின் இழுவைத்தன்மை இழந்துவிடாமல் மெதுவாக உலரும்படி கவனமாக பாதுகாக்க படுகிறது. மரத்தின் பட்டையை உரித்தபின்னர் வாழையிலைகளால் சுற்றிக்கட்டி மூடி மரத்தை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கின்றனர். ஒரு வருடத்திற்கு பிறகு அம்மரங்கள் மீண்டும் உரித்தெடுக்க பட்டையை அளிக்கின்றன.

ஆண்கள் இடையாடைகளும் பெண்கள் இடையாடையும் மேலாடையும் மரவுரியில் அணிகின்றனர். உயர்/அரச குடியினர் கருப்பு சாயமிட்ட ஆடைகளையும் பிறர் சாயமேற்றப்படாத ஆடைகளையும் அணிகின்றனர். உடையணியும் விதங்களிலும் இவர்களின் குடியை அடையாளம் காணமுடியும். ஆடைகளாக மட்டுமல்லாது கொசுவலைகளாக, பாய்களாக, திரைச்சீலைகள் மெத்தைகள் போர்வைகளாகவும் இவை பயன்படுகின்றன.

யுனெஸ்கோவின் கலாச்சார அந்தஸ்து பெற்றிருக்கும் உகாண்டா மரவுரியாடைகள் 1374 – 1404 வரை உகாண்டாவை ஆண்ட கிமிரா வம்சத்தினரால் அரசகுடும்பத்திற்கான ஆடைகளுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டவை.

இப்போது உகாண்டாவில் சுமார் 4 லட்சம் விவசாயிகள் இதில் ஈடுபட்டு இருக்கிறார்கள். உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப்பயணிகள் உகாண்டாவின் மரவுரி கருத்தரங்குகளுக்கும், பயிற்சி வகுப்புகளுக்கும் செல்கின்றனர். மரவுரிப்பயன்பாட்டை அறிந்து கொள்ளுகையில் அப்போது மனிதர்களுகும் இயற்கைக்கும் இருந்த மிக நெருக்கமான தொடர்பும் தெரிய வருகிறது. இன்று பத்து செடிகளின் பெயரைக்கூட தெரிந்திருக்காத தலைமுறையினரை நினைத்தால்தான் வருத்தமாயிருக்கிறது.

தீயின் எடையில் கோட்டைக்குள் நகுலன் நுழைந்து சம்வகையை முதன்முதலில் காணும் அத்தியாயத்தில் குருதி மழை போல் பொழியும். நனைந்த தரையின் ஈரத்தை. பெண்கள் மரவுரியை நீரில் நனைத்து தரையைத் துடைத்தபடியே வருவார்கள். ஈரம்பட்டதுமே புழுதி குருதியாக மாறி, வளைந்த குருதிக்கோடுகள் விரிந்து விரிந்து அலையாக மாறி கூடத்தை மூடும்.

அம்மையப்பத்திலும் கிளி சொன்ன கதையிலும் இதுபோலவே காட்சிகள் வரும்.

அம்மா எருமைக்குப் பால்கறக்கும் ஒலி போல தொரப்பை உரசிச் சீற கூட்டினாள். ஈரத்தரையில் ஈர்க்கின் நுனிகள் வரிவரியாக வரைந்து சென்றன. அனந்தன் ஓடிப்போய் அந்த வரிகள் மீது தன் கால்களை பதித்து தடம் வைத்தான். அங்கே நின்று பார்த்தபோது அரைவட்ட அடுக்குகளாக தொரப்பைத்தடம் பதிந்த முற்றம் கையால் வீசி வீசிச் சாணிமெழுகிய களமுற்றம்போல தெரிந்தது

கோழிக்கு அவ்வப்போது சற்று பிய்த்து வீசினேன். வாரியல்தடங்கள் வளையம்வளையமாகப் படிந்த மணல்விரிந்த முற்றத்தில் நெடுந்தொலைவுக்கு அதைத் தூக்கி வீசினேன்

பலகை வேர்கள் குறித்து தேடத்துவங்கி மரவுரிகளுக்குள் புகுந்து கிளிப்பேச்சு கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

இன்னும் இன்னும் என வெண்முரசு புதிது புதிதாக விரிந்து கொண்டே இருக்கிறது ஒவ்வொரு முறையும். தீர்வதேயில்லை வெண்முரசு எனக்கு.

வெண்முரசில் சொல்லப்பட்டிருக்கும் மது வகைகள் குறித்து இப்போது வாசிக்க துவங்கி இருக்கிறேன் அதுவும் விரிந்து கொண்டே செல்கிறது

அன்புடன்

லோகமாதேவி

***

பண்டைய இந்தியாவில் மரவுரி ஆடைகள் துக்குலா எனப்பட்டன. பண்டைய இந்தியாவின் ஆடைவகைகள் குறித்த  கட்டுரை; https://indianculture.gov.in/node/2730142

உகாண்டாவில் மரவுரி தயாரிக்கும் காணொளி: https://www.dw.com/en/the-unique-bark-cloth-from-uganda/av-57605159

முந்தைய கட்டுரைநெல்லை புத்தகக் கண்காட்சியில் ஒருநாள்
அடுத்த கட்டுரைசோர்பா – முத்து