முதற்கனலில் தொடங்குதல்

செம்மணிக்கவசம்

அன்பு ஜெ சார்.

எரிமலரும் செம்மணிக் கவசமும் (சிறிய கையேட்டு வடிவங்கள்) படித்து விட்டேன். திருதராஷ்டின் கதை பாக்கி.

அறங்கள் பற்றிய ஆர்வமும் உணர்ச்சி கொந்தளிப்புகளால் இழுக்கப்படும் குணமும் இழிவுபடுத்தப் படுவோர் மேல் மிகுந்த பச்சாதாபமும் கொண்டவன்.

முதற்கனல் போக இப்போதைக்கு வேறு எந்தப் பகுதிகள் நான் வாங்க பரிந்துரைப்பீர்கள்? போர்ப் பகுதிகளும் விண்ணேறுதல் பகுதிகளும் வாங்க ஆர்வம்.

கோவையில் உங்கள் பதிப்பகத்திலிருந்த இரண்டு கிமீ தொலைவில், ஒரு உறவினர் வீட்டில் இன்னும் நான்கைந்து நாட்கள் இருப்பேன். உங்கள் நிறுவனத்திலேயே வாங்க விருப்பம்.

அன்புடன்

ரகுநாதன்.

***

அன்புள்ள ரகுநாதன்

வெண்முரசை வாசிப்பதற்கான தூண்டுதலை அளிப்பவை என்றவகையில் எரிமலர், செம்மணிக்கவசம் போன்ற சிறு நூல்கள் உதவியானவை. ஆனால் தொடங்குவதற்குரியது முதற்கனலேதான். வெண்முரசு நாவல்களில் எளியது, நேரடியானது, உடனடியாக ஈர்ப்பதும் முதற்கனலே. வெண்முரசு நாவல்தொடரின் அமைப்பென்ன என்று அது காட்டிவிடும். அதன் விரிவாக்கங்களே மற்றநாவல்கள்.

வெண்முரசு நாவல்களை தனித்தனியாகவும் படிக்கலாம். நீலம், இந்திரநீலம் ஆகியவை தனிநாவல்களுக்குரிய கதைக்கட்டமைப்பும் கொண்டவை. இமைக்கணம், சொல்வளர்காடு ஆகியவை தனிநாவல்களுக்குரிய தத்துவக்கட்டமைப்பு கொண்டவை.

ஆனால் அடிப்படையான குறியீடுகள் வளர்ந்து வரும் தன்மை, தத்துவதரிசனத்தின் மலர்வு ஆகியவற்றை உணர முதற்கனலில் இருந்து தொடராக வாசிப்பதே சரியான வழி.

மேலும் தொடக்கம் முதல் வாசிக்கையில் மெல்ல நாவலின் மொழிநடை பழகிவிடுகிறது. தொடர்ந்து வாசிப்பவர்கள் இரண்டு நாவல்களுக்குப்பின் அதுவரையிலான வாசிப்பினாலேயே பயிற்சிபெற்றவர்களாக முழுமையாக வாசிப்பதைக் கண்டிருக்கிறேன்

26000 பக்கங்கள் கொண்ட வெண்முரசின் இரண்டாவது வாசிப்பை முழுமைசெய்த இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் என் அறிதலிலேயே இருக்கிறார்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைதிருப்பூரில் பேசுவது…
அடுத்த கட்டுரைதிருப்பத்தூர் இலக்கிய விழாவில் நான்