வால்டேராகத் தோன்றும் கதைசொல்லியின் பார்வையில், சோர்பா நிலத்தில் ஊறும் பாம்பாக தெரிந்தாலும், காலால் மட்டுமே பூமியுடன் தொடர்பு கொள்ளும் தன்னைவிட இப்பூமியைப் பற்றி நன்கு தெரிந்தவர் என்பதையும் உணர்ந்தவராக இருக்கிறார். ரூஸோவாகத் தோன்றும் சோர்பாவின் பார்வையில், கதைசொல்லி ஒரு புத்தகப் புழுவாகத் தெரிந்தாலும், நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் நவீன சமூகம் நிர்பந்தித்த சில ஒழுக்கங்களை அவர் போல் நானும் ஏற்றிருந்தால் தன் வாழ்க்கை ஒரு ஒழுங்குக்குள் இருந்திருக்கும் என்றும் எண்ணுகிறார். இப்படி, இருவரும் ஒருவரையொருவர் மிக இயல்பாக நிரவிக் கொள்கிறார்கள்.