சந்தையில் சுவிசேஷம்

க.நா.சுப்ரமணியம்

புதுமைப்பித்தன்

அன்புள்ள ஜெ,

உங்களுக்கு ஆலோசனை சொல்ல நான் யாருமல்ல, இருந்தாலும் இதைச் சொல்லியாகவேண்டும். இங்கே உங்கள் மேல் பெரும் ஈடுபாடு கொண்ட வாசகர்கள் பலர் இருக்கிறோம். உங்களிடமிருந்து கற்றுக்கொள்பவர்கள் நாங்கள். தொடர்ந்து உங்களுடன் ஒரு மானசீகமான உரையாடலில் இருக்கிறோம். ஆகவே உங்களை மிக நெருக்கமாக உணர்கிறோம்.

இந்நிலையில் நீங்கள் இந்த ஆனந்த விகடன் – பர்வீன் சுல்தானா பேட்டி போன்றவற்றை இங்கே பகிர்வது மிகுந்த சங்கடத்தை உருவாக்குகிறது. அந்த பேட்டியே முறையாக எடுக்கப்படவில்லை. நீங்கள் எதையுமே முழுமையாக ஒரு ஃப்ரேம்வொர்க்குடன் பேசுபவர். அவர் எதையுமே முழுமையாகச் சொல்ல விடவில்லை. உடனே அடுத்ததுக்குச் செல்கிறார். அந்தப் பேட்டியின் கேள்விகளெல்லாமே இங்கே உள்ள ஒன்றும் தெரியாதவர்கள் உங்கள்மேல் கேட்பது. விஷ்ணுபுரம் விருது பெற்றவர்களின் பட்டியலை பார்த்தவர்கள் எவருமே அந்த விருது விஷ்ணுபுரம் வட்டத்தினருக்கு அளிக்கப்படுகிறது என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் அதற்கெல்லாம் பதில் சொல்கிறீர்கள்.

மிக அடிப்படையான கேள்விகளுக்குக் கூட நிதானமாக பதில் சொல்கிறீர்கள். இங்கே பலருக்கு இலக்கியவிமர்சனம் என்னும் அறிவுத்துறை இருக்கும் சமாச்சாரமே தெரியாது. கூசக்கூச ஒருவர் மற்றொருவரைப் பாராட்டுவதையே இங்கே செய்துகொண்டிருக்கிறார்கள். விமர்சனம் என்றால் அது அரகியலோ அழகியலோ ஏதோ ஓர் அளவுகோலின்படி இருக்கும் என்றும், அதில் சிலர் தேறினால் பலர் தேறமாட்டார்கள் என்றும் தெரியாது. ஏன் சிலரை மறுக்கவேண்டும், ஏன் எல்லாரையும் பாராட்டக்கூடாது, கருத்து சொல்ல இவர் யார் என்றுதான் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அதற்கு பதில் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்

ஆனால் அங்கே உள்ள மிகப்பெரிய சிக்கலென்பது அங்கே கீழே பின்னூட்டங்களில் வரும் வசைகளும் அவதூறுகளும்தான். மிரட்டல்வரை எழுதுகிறார்கள். நான் கொஞ்சம் அறிஞர் என நினைத்த பேராசிரியர் ஒருவர் எட்டாம்கிளாஸ் பாடப்புத்தகத் தகவல் உங்களுக்கு தெரியவில்லை என எழுதுகிறார். ஒரு இயற்கை வேளாண்மைக்காரர் அந்தப்பேட்டியில் நீங்கள் சொல்லாததை தானே கற்பனையால் கேட்டு எழுதுகிறார். பெரும்பாலானவர்களுக்கு எதுவுமே புரியவில்லை. கீழடி ஆய்வுகள் பற்றி அரசு வெளியீட்டில் இருக்கும் காலக்கணிப்பையே நீங்கள் சொல்கிறீர்கள். அது உங்கள் கணிப்பு என்று கொப்பளிக்கிறார்கள்.

உங்கள் வாசகர்களுக்கு அவை மிகுந்த கசப்பையும் சோர்வையும் அளிக்கின்றன. இவர்கள் பின்னூட்டங்களை மட்டுறுத்துவதில்லை. அவை வந்தால் ஹிட் கூடும் என நினைக்கிறார்கள். அதாவது உங்களை வசைபாடச் செய்து தங்கள் ஹிட் அளவை கூட்டிக்கொண்டு லாபம் பார்க்கிறார்கள். உலகம் முழுக்கவே எல்லா பின்னூட்டங்களிலும் அநாகரீகமான பின்னூட்டங்கள் தவிர்க்கப்படும் என்றும் அறிவிப்பு இருக்கும். கறாராகவே அதையெல்லாம் நடைமுறைப்படுத்துவார்கள். இவர்கள் எதையுமே செய்வதில்லை.

உங்கள் வாசகர்கள் இந்த எலிமெண்டரி பேட்டிகளில் இருந்து தெரிந்துகொள்ள ஏதுமில்லை. இந்த வசைகளை கேட்டு மனக்கசப்படைய வேண்டியதில்லை. ஆகவே இந்தவகையான பேட்டிகளை ஒப்புக்கொள்ளவேண்டாம். குறைந்தபட்சம் அவற்றை இந்தத் தளத்தில் பகிர்வதையாவது நிறுத்தலாம்.

அர்விந்த் குமார்

***

அன்புள்ள அர்விந்த்,

என் வாசகர்கள் தலைமுறை தலைமுறையாக வந்துகொண்டிருக்கிறார்கள். புதியவாசகர் சந்திப்புகளில் கலந்துகொள்பவர்கள் இன்று 25 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்கள். விஷ்ணுபுரம் நிகழ்வுகளில் முக்கால்வாசிப்பேர் 25 நிறையாதவர்கள். இவர்களில் பெரும்பகுதியினர் இந்த வசைகள் வழியாக என்னைப்பற்றி அறிபவர்கள். அவற்றை கவனிப்பவர்கள் என் பதிலை கவனிக்கிறார்கள். நான் சொல்லும் விஷயங்களுக்கும் வசைகளுக்கும் இடையேயான வேறுபாட்டை பார்க்கிறார்கள். இயல்பான நுண்ணுணர்வு கொண்ட எவரும் அந்த வசைபாடும் தரப்புடன் ஓர் அருவருப்புணர்வை அடைவார்கள். அவர்களே என் வாசகர்கள். ஒருசாரார் உற்சாகமாக அங்கே போய் சேர்ந்துகொள்வார்கள். அவர்கள் என்னுடைய வாசகர்களாக எந்நிலையிலும் மாறுபவர்கள் அல்ல, அதற்கான அறிவுத்தகுதியோ நுண்ணுணர்வோ அற்றவர்கள்.

அந்தக் களத்தை நான் தவிர்க்க முடியாது. ஏனென்றால் அதுவே பொதுத்தளம். பிரம்மாண்டமான ஊடகவல்லமையுடன் ஒவ்வொரு இளம்வாசகனையும் அதுவே சென்றடைகிறது. அது ஒரு பொதுமாயையை கட்டமைக்கிறது. அதன்மேல் அரசியலதிகாரம் அமைக்கப்படுகிறது. அதில்  பத்தாயிரத்தில் ஒருவர் ஒவ்வாமை கொள்கிறார். அவர்தான் இலக்கியவாசகர். அறிவியக்கவாதி. அவருக்காக அங்கே சென்று பேசிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். நவீன இலக்கியத்தின் விமர்சனத்தன்மையை, அதிகாரத்தையும் கட்டமைப்புகளையும் சீண்டும் அதன் அடிப்படை சுதந்திரத்தன்மையைச் சொல்லவேண்டும். நவீன இலக்கிய முன்னோடிகளை முதன்மைப்படுத்தியாகவேண்டும். மார்ட்டின் லூதர் சொன்னார், சுவிசேஷம் சந்தையில்தான் சொல்லப்படவேண்டும் என்று. அங்கே கேட்பவர்கள் குறைவுதான், ஆனால் அங்குதான் அதற்கான தேவை உள்ளது.

உண்மையில் அது தனிப்பட்ட முறையில் இழப்பு. வசைகள் வந்து குவியும். அவதூறுகளாலும் திரிபுகளாலும் என் எழுத்துக்கள் மறைக்கப்படும். அவற்றை விலக்கி என்னை வாசிக்க அபாரமான ஒரு தேடலும் நுண்ணுணர்வும் தேவை. ஆனாலும் தலைமுறைக்கு ஒருவராவது தீவிர இலக்கியத் தளத்தில் இருந்து இதைச் செய்துதான் ஆகவேண்டும். புதுமைப்பித்தனும், க.நா.சுவும் செல்லப்பாவும் சுந்தர ராமசாமியும் செய்ததுதான். இன்று இன்னொருவர் அதைச் செய்வதை நான் காணவில்லை. உண்மையில் நான் சலிப்புற்றிருக்கிறேன். இன்னொருவர் இன்று இதைச் செய்வாரென்றால் நான் ஒதுங்கிக்கொள்வேன்.

ஜெ

முந்தைய கட்டுரைதிருப்பத்தூரில் நான்…கடிதம்
அடுத்த கட்டுரைவெய்யோனின் கர்ணன்