அழகியல் விமர்சனமும் பிறரும் – கடிதம்

விமர்சனங்களின் வழி

அன்புள்ள ஜெ,

விமர்சனங்களின் வழி வாசித்தபோதுதான் உண்மையிலேயே ஒரு திகைப்பு உருவானது. நான் இந்தக் கோணத்தில் யோசித்ததே இல்லை. பாரதிதாசன் முதல் கு.சின்னப்பபாரதி, சு.சமுத்திரம் உட்பட திராவிட இயக்க எழுத்தாளர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள் பலரை நவீன இலக்கிய விமர்சனம் ஏற்றுக்கொண்டு பேசியிருக்கிறது. கூர்மையான ஆய்வுக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஆனால் மறுபக்கம் திராவிட இயக்கத்தின் தரப்பிலிருந்தும், மார்க்ஸிய இயக்கத்தின் தரப்பில் இருந்தும் நவீன இலக்கியவாதிகள்மேல் வசைகளும் அவதூறுகளும் மட்டுமே வந்திருக்கின்றன. ஒரே ஒருவருக்குக்கூட ஒருவகை அங்கீகாரமும் வந்ததில்லை.

நவீன எழுத்தாளர்கள் வறுமையில் வாடியபோது கல்வித்துறையோ அரசோ ஆதரவு அளித்ததில்லை. நியாயப்படி நவீன இலக்கியத்திற்காக அவர்களுக்கு அளிக்கப்படவேண்டிய விருதுகள் திராவிட இயக்கத்தவர்களாலும் முற்போக்கு முகாமாலும் கொண்டு செல்லப்பட்டன. அவர்கள் செத்தபோது ஓர் அஞ்சலி வரிகூட திராவிட இயக்கத்தவரோ முற்போக்கினரோ சொன்னதில்லை. இலக்கியத்தரப்பில் இருந்து அடையாளம் பெற்று அதன்பின் அங்கே போய் சரணடைந்து கும்பிட்டவர்களை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இன்றைக்கு அந்த எண்ணிக்கை பெருகி வருகிறது. ஆனால் அவர்களைக்கூட ஓரமாக உட்காரவே வைத்தார்கள். ஒரு மேதைக்குக்கூட எளிமையான அங்கீகாரம்கூட கிடைத்ததில்லை.

புதுமைப்பித்தனை நச்சிலக்கியவாதி என்று வசைபாடினர் இடதுசாரிகள். மௌனியை, கு,ப.ராஜகோபாலனை ஆபாச எழுத்தாளர்கள் என்றார்கள். திராவிடத்தரப்பினர் பார்ப்பன எழுத்தாளர் என ஒரே வரியில் அத்தனை இலக்கியமேதைகளையும் புறக்கணித்தனர். அத்தனை விருதுகளும், கல்வித்துறைப் பதவிகளும், அரசாங்க அங்கீகாரங்களும் அவர்களுக்கே அளிக்கப்பட்டன. முற்போக்கு முகாமினர் சுந்தர ராமசாமி மேல் வன்கொடுமைச் சட்டப்படி வழக்கு தொடுப்பதாக மிரட்டினார்கள். கி.ராஜநாராயணனை வழக்கு தொடுத்து அலைக்கழித்தார்கள். சுந்தர ராமசாமி மறைந்தபோது செலுத்தப்பட்ட அஞ்சலிகளை கண்டித்து அவர்கள் கட்டுரைகள் எழுதினார். நகுலன் மறைவின்போது சவண்டிபிராமணன் என்று, செத்தபிணம் என்றும் எழுதியது அவர்களின் இதழ்,

ஆனாலும் நவீன இலக்கியத் தரப்பு அவர்களை கரிசனத்துடன்தான் பார்த்தது. கந்தர்வன் முதல் சு.வெங்கடேசன் வரை அவர்களில் எவரெல்லாம் நன்றாக எழுதினார்களோ அவர்களை உடனே அங்கீகரித்தது. நவீன இலக்கியவிமர்சனத் தரப்பில் இருந்து அவர்களை பற்றி அவமரியாதையாகவோ அவதூறாகவோ ஒரு வார்த்தை நான் கண்டதில்லை. இன்றைக்கும் சின்னப்ப பாரதி பற்றியோ கந்தர்வன் பற்றியோ ஒரு நல்ல கட்டுரை இருக்கிறதென்றால் அது நவீன எழுத்தாளர்கள் எழுதியதுதான்.

இவ்வளவுக்கும் பிறகு திராவிட எழுத்தாளர்களும் முற்போக்கு முகாமினரும் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக நினைத்துக்கொண்டு கண்ணீர் விடுகிறார்கள். ஐயய்யோ எங்களை புறக்கணிக்கிறார்கள் என்று கூச்சலிடுகிறார்கள். இலக்கியபீடம், இலக்கிய மடம் என்றெல்லாம் பிலாக்காணம் வைக்கிறார்கள். இடைவிடாத இந்த பிலாக்காணம் வழியாகவே இவர்கள் சொல்வதில் ஏதோ உண்மை இருக்கிறது போல என்று சாமானிய வாசகனை நம்பவைத்துவிட்டிருக்கிறார்கள். உண்மை என்ன என்று உங்களைப் போன்றவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது.

நீங்கள் திராவிட இயக்க எழுத்தாளர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள் அனைவரையும் வாசித்து, மதிப்பிட்டு, வரிசைப்படுத்தி முறையான விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள். அதை வன்மத்தை கக்குதல் என்கிறார்கள். என்ன வன்மம் என்று கேட்டால் சிலரை மட்டும் ஏற்றுக்கொண்டு மிச்சபேரை புறக்கணிக்கிறீர்களாம். இவர்கள் அத்தனைபேரையும் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டுமாம்.

ஜெயமோகன் கலைஞர் மேல் வன்மத்தை கக்குகிறார் என்றார் ஒருவர். என்ன சொன்னார் என்று கேட்டேன். நவீன இலக்கியவாதி அல்ல, பிரச்சார எழுத்து என்று சொல்லிவிட்டார், அது வன்மம் என்றார்கள். ’சரி, பார்ப்பான் என்றும் வசைபாடுவதும், அத்தனை இடங்களிலும் புறக்கணிப்பதும் செத்தால் ஒருவரி அஞ்சலிகூட செலுத்தாமலிருப்பதும், செத்தவர்களை ஏளனம் செய்து கீழ்த்தரமாக வசைபாடுவதும் வன்மம் இல்லை, ஜனநாயகம் இல்லையா?’ என்று கேட்டேன். அது வன்மம் இல்லையாம். அரசியல்தேவையாம்.

உண்மையாகவே அப்படி நம்பிச் சொல்கிறார். திராவிட இயக்க எழுத்தாளர் எவர்மீதும் எந்த எதிர்மறை விமர்சனம் வந்தாலும் அது வன்மத்தாக்குதலாம். எப்படி மென்மையாக, அறிவுபூர்வமாகச் சொன்னாலும் வன்மம்தான். அறிவுபூர்வமாக மென்மையாகச் சொன்னால் அது ‘பூடகமான வன்மம். அவாள் அப்படித்தான் சொல்லுவார்கள்’ என்கிறார். கலைஞரும் மாபெரும் எழுத்தாளர். சென்பாலனும் இலக்கியப்பிதாமகர். அதை ஏற்காதவர் எல்லாம் வன்மக்குடோன்களாம். இந்த மனச்சிக்கலுக்கு என்ன மருந்து?

ஆனால் இவர்கள் முன்னோடிகளான மேதைகள் முதல் அத்தனை நவீன எழுத்தாளர்களையும் அவமரியாதையுடன் பேசி, இழிவுபடுத்துவது கருத்துச்செயல்பாடு என்கிறார்கள். உங்களை கீழ்த்தரமாகப் பேசி அவதூறுசெய்துகொண்டே இருப்பதும், ஒரு ரவுடி உங்களை தாக்கியபோது மகிழ்ந்து கொண்டாடியதும் வன்மம் அல்ல, பரந்துபட்ட ஜனநாயகப் பார்வை என்கிறார்கள். ஆச்சரியமான மூர்க்கம். இதை ஒருவகையான மனச்சிக்கல் என்று மட்டும்தான் சொல்லத் தோன்றுகிறது.

சங்கர் மாரிமுத்து

அன்புள்ள ஜெ,

மனுஷ்யபுத்திரன் உங்களைப் பற்றி எழுதியிருந்ததை வாசித்தேன். உங்கள் விரிவான பதில்களையும் வாசித்தேன். ஒன்று மட்டும் சொல்லத்தோன்றியது. அவர் ஒரு தந்திரம் செய்கிறார். ஒரு காழ்ப்பு நிறைந்த பதிவை போடுகிறார். அதன்கீழே அவருடைய அல்லைகள் வந்து மிகமிக கீழ்த்தரமான வசைகளை உங்கள்மேல் எழுதும்போது அதை வரவேற்று ரசிக்கிறார். கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். விவாதிக்கலாம். ஆனால் ஒரு கவிஞன் இந்தக் கீழ்நிலைக்கு இறங்கவே கூடாது.

நான் இன்றும் அவர் கவிதைகளின் ரசிகன். அவருடைய இந்தக் கீழ்மை எனக்கு அளிக்கும் கூச்சமும் துக்கமும் கொஞ்சம் அல்ல. ஒரு பெரிய தனிப்பட்ட இழப்பு போலவே உணர்கிறேன். அந்த அல்லக்கைகள் அவருக்கு இன்று தேவைப்படலாம். ஆனால் அவரை இன்னமும் கவிஞர் என்று நம்பும் கொஞ்சபேர் இருக்கிறோம். மனுஷ் கீழிறங்குவதற்கும் ஒர் எல்லை உண்டு. வெற்றிகொண்டானும் தீப்பொரியும் உங்கள் ஆதர்சங்கள் ஆகக்கூடாது.

ராஜ்கண்ணன்

முந்தைய கட்டுரைதிருப்பத்தூர் இலக்கிய விழாவில் நான்
அடுத்த கட்டுரைஇந்திரா பார்த்தசாரதி-கடிதங்கள்