மௌனகுருவின் மாணவர்கள்

இலங்கைப் பேராசிரியர் மௌனகுரு கூத்துக்காக தன் வாழ்க்கையை அளித்தவர். மிகமிக எதிர்மறையான சூழல்களிலும் விடாப்பிடியாக அக்கலையை வாழச்செய்தவர். கூத்துஆய்வாளர், கூத்து எழுத்தாளர், கூத்தரங்க நடிகர் என முழுமையாகவே அதில் வாழ்பவர்.

அண்மையில் மௌனகுரு தன் மாணவர்கள் பற்றி ஒரு குறிப்பை அனுப்பியிருந்தார்

இவர்களின்றிச்   சாத்தியமில்லை

கூத்தை அறிதல், பயில்தல், ஆக்கல் எனும் நோக்கை அடிப்படையாகக் கொண்டு நோர்வே நுண்கலைக்கழகம் கூத்துக் கருத்தரங்கம், கூத்துப்பயிற்சி எனத் தனது நோக்கின் மிக முக்கிய இரு பகுதியினை வெற்றிகரமாக முடித்துள்ளது. அப்பயிற்சி நெறி 51 வது வாரத்தைத் தாண்டி அடுத்தவாரம் 52 வது வாரத்தை முடித்து ஒரு வருட நிறைவு காண்கிறது.

இதுவும் ஓர் நெடும் பயணமே. உணர்ச்சிகரமாக அன்றி அறிவு பூர்வமாகவும் வரலாற்று ரீதியாகவும் கோட்பாட்டு ரீதியாகவும் சமூகவியல் மானிடவியல் ரீதியாகவும் அழகியல் ரீதியாகவும் பிற நாட்டின் கூத்துக்களுடன் ஒப்பிட்டும் விமர்சன ரீதியாகவும் கூத்தின் ஆழ அகலங்கள் மாணவர்க்குக் கற்பிக்கப்பட்டன, உரையாடப்பட்டன. இருவழிப்பாதையில் இவை நடந்தேறின.

இதில் வேலை செய்துகொண்டிருப்போர்கள் கூத்து ஆய்வறிஞர்கள். உரை அரங்கிற்கு அழைக்கவும் பட்டார்கள். அவர் உரைகளை மாணவர் செவிமடுத்தனர். அவர்களுடன் உரையாடினர். இன்னும் சிலரை அழைத்து அவர்களின் கருத்துகளையும் மாணவர் அறியும் வாய்ப்பை ஏற்படுத்தவும் நினைத்திருந்தோம். நினைத்ததை எல்லாம் செய்ய முடியுமா? இன்னொரு போது அவர்களை அழைத்து அவர்களுடனும் மாணவரை ஊடாட விடுவோம். அது நடைபெறும்.

இந்த 50 வாரமும் எம்மோடு உடன் ஓடி வந்து இந்நிகழ்வு வெற்றி பெறக்காலாக இருந்தோர் பலர். முக்கியமானவர்கள் எமது வளவாளர்கள்தான். அவர்கள் ஏற்கனவே பயிற்சி பெற்றிருந்தவர்கள் தாம் பெற்ற பயிற்சிகளை மீட்கவும் பயிலவும் மீண்டும் பயிற்சி பண்ணிப் பார்க்கவும் இது அவர்கட்கு உதவியாக இருந்திருக்கும். பின் வருவோர் வளவாளராக அமைந்து மாணாக்கருக்குப் பயிற்சி தந்தனர்.

இவர்கள் இக்கூத்துபயிற்சியினை அரங்க ஆய்வு கூடத்தில் மாத்திரமல்ல தம் தேடலினாலும் கல்வி பயிலலினாலும் வேறு இடங்களிலும் கற்றுக்கொண்டவர்கள் சிலர், தொடர்ந்தும் கூத்தில் இயங்குபவர்கள் இவர்களின் பணி இரு வகையானது.

பிரதான உரை நிகழ்த்தியமை

பயிற்சியளித்தமை

வசந்தன் கூத்து, ஜப்பானிய நொஹ் கபுகி மலையகத்தின் அருச்சுனன் தபசு காமன் கூத்து ,பொன்னர் சங்கர் பற்றியெல்லாம் இவர்கள் உரை நிகழ்த்தினர். அவர்களின்புலமையினை மாணவரும் ஏனையோரும் இதனால் அறிந்தனர். புதிய புதிய முறைகளைக் கண்டு பிடித்துப் புதிய புதிய உத்திகளோடு பயிற்சிகளும் அளித்தனர். இன்னொரு விதமான தலைமுறைக்கு இக்கூத்தைக் கடத்தினர்.

இணைய வழியில் அவர்களுக்கென பயிற்சி அளிக்க ஒதுக்கப்பட்டிருந்த அறைகளுக்கு நானும் வாசுகியும் சென்று பயிற்சியில் அவர்களுக்கு உதவினோம். ஒரு விதமான இணைய வழி யாத்திரை இது. இவர்களோடு எம்முடன் இடையிடையே இணைந்து பயிற்சி தந்தோரும் உள்ளனர். அவர்கள் பற்றியும் அடுத்துப் பதிவேன்.

இதனை ஒழுங்கமைத்து நடத்திய வாசுகி மிக மிக முக்கியமானவர். அழைத்ததும் உடனே வந்து உதவிய ஏனை வளவாளர்கள் முக்கியமானவர்கள் அனைவர் பற்றியும் கலையுலகம் அறிய வேண்டும்.

முதலில் இந்த அர்ப்பணிப்பு மிகுந்த வளவாளர்கட்கு எனது நன்றிகள். இவர்கள் அனைவரும் இன்றி இந்த ஒரு வருடப்பயிற்சி சாத்தியமில்லை. கற்பிக்கும் போதுதான் ஆசிரியரும் கற்றுகொள்கின்றார்.

மௌனகுரு

*

துஜ்யந்தி

கிழக்குப்பல்கலைக்கழக விரிவுரையாளர். நடனமும் கூத்தும் பயின்றவர். கிழக்கிசை, லயம், இராவ ணேசன் கூத்தின் அழகியல், இன்னிய அணி முதலான நாம் தயாரித்த நிகழ்வுகளில் பங்குகொண்டவர். அரங்க ஆய்வுக் கூடத்திலும் கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் கூத்துப் பயிற்சி பெற்றவர்,  அரங்க ஆய்வுகூடத்தின் உறுப்பினர்.

துஜன்

நாடகமும் அரங்கியலிலும் சிறப்புபட்டம் பெற்றவர். வவுனியாவில் இன்று அரச உத்தியோகஸ்தர். இராவணேசன், அப்பா முதலான மேடை நிகழ்வுகளில் பங்கு கொண்டவர். அரங்க ஆய்வு கூடத்தில் கூத்துப் பயிற்சி பெற்றவர் அரங்க ஆய்வுக்கூட உறுப்பினர்.

சுதர்சன்

நாடகமும் அரங்கியலிலும் சிறப்புப்பட்டம் பெற்றவர். இன்று நாடக அரங்கியல் ஆசிரியர். இராவணேசன் காண்டவதகனம் ஆகிய மேடை நிகழ்வுகளில் பங்கு கொண்டவர். அரங்க ஆய்வு கூடத்தில் கூத்துப் பயிற்சி பெற்றவர். அரங்க ஆய்வுக்கூடத்தின் உறுப்பினர்.

கேதீஸ்வரன்

நாடகமும் அரங்கியலும் சிறப்புப் பட்டம் பெற்றவர். இன்று யாழ்பாணத்தில் அரச உத்தியோகஸ்தர் வானவில்லின் வர்ணங்கள், மண்ணோக்கிய வேர்களும் விண்ணோக்கிய கிளைகளும் காண்டவ தகனம் முதலாம் ஆற்றுகைகளில் பங்குகொண்டவர். அரங்க ஆய்வுக்கூடத்தில் கூத்துபயிற்சி பெற்றவர். அரங்க ஆய்வுகூடத்தின் உறுப்பினர்.

ஞானசேகரன்

நாடகமும் அரங்கியலிலும் சிறப்புப் பட்டம் பெற்றவர், இன்று நாடக அரங்கியல் ஆசிரியராகப் பணி புரிகிறார். இராவணேசன் காண்டவதகனம், மண்ணோக்கிய வேர்களும் விண்ணோக்கிய கிளைகளும், ஆகிய ஆற்றுகைகளில் பங்கு கொண்டவர் அரங்க ஆய்வுக்கூடத்தில் கூத்துப்பயிற்சி பெற்றவர் அரங்க ஆய்வுக்கூட உறுப்பினர்.

விஜயகுமார்

நாடகமும் அரங்கியலிலும் சிறப்புப் பட்டம் பெற்றவர். இன்று அரச உத்தியோகஸ்தராக பணிபுரிகிறார். அருளக நிறுவகத்தில் மாணவர்க்கு கூத்து பழக்கி அரங்கேற்றுகிறார். அரங்க ஆய்வு கூட உறுப்பினர் அங்கு கூத்துபயிற்சி பெற்றவர்.

அமல்ராஜ்

நாடகமும் அரங்கியலிலும் சிறப்புப் பட்டம் பெற்றவர். இன்று அரச உத்தியோகஸ்தராகப் பணிபுரிகிறார். மண்ணோக்கிய வேர்களும் விண்ணோக்கிய களைகளும், காண்டவதகனம் வானவில்லின் வர்ணங்கள் ஆகிய ஆற்றுகைகளில் பங்கு கொண்டவர். இராவணேசன், காண்டவதகனம் மேடை முகாமையாளர். அரங்க ஆய்வுகூடத்தில் கூத்துப்பயிற்சி பெற்றவர்.

சஜீவன்

நாடகமும் அரங்கியலிலும் சிறப்புப் பட்டம் பெற்றவர். இன்று ஆசிரியராகப் பணி புரிகிறார் மண்ணோக்கிய வேர்களும் விண்ணோக்கிய கிளைகளும், வானவில்லின் வர்ணங்கள் இராவணேசன் ஆகிய ஆற்றுகைகளில் பங்கு கொண்டவர். அரங்க ஆய்வுkகூடத்தில் கூத்துபயிற்சி பெற்றவர்.

ரமேஸ் அரவிந்தன்

நாடகமும் அரங்கியல் படிப்பை மேற்கொண்டிருக்கிறார். வயதில் அனைவரிலும் இளையர். இன்று ஆசிரியராகப் பணிபுரிகிறார் புதியதொரு வீடு, இராவணேசன் ஆகிய ஆற்றுகைகளில் பங்கு கொண்டவர் .அரங்க ஆய்வுக்கூடத்தில் கூத்துப்பயிற்சி பெற்றவர்.

ரஜீவ் 

நாடகமும் அரங்கியலிலும் சிறப்புப் பட்டம் பெற்றவர், இன்று நாடக அரங்கியல் ஆசிரியராகப் பணிபுரிகிறார். இராவணேசன், காண்டவதகனம், மண்ணோக்கிய வேர்களும் விண்ணோக்கிய கிளைகளும், ஆகிய ஆற்றுகைகளில் பங்கு கொண்டவர் அரங்க ஆய்வுக்கூட உறுப்பினர் அரங்க ஆய்வுக்கூடத்தில் கூத்துப்பயிற்சி பெற்றவர்.

முந்தைய கட்டுரைஇந்திரா பார்த்தசாரதி-கடிதங்கள்
அடுத்த கட்டுரைநெல்லை புத்தகக் கண்காட்சியில் ஒருநாள்