பெரும்பான்மைவாதமும் அறிவுஜீவிகளும்-கடிதம்

அன்புள்ள ஜெ,

நீங்கள் ஆனந்தவிகடன் பேட்டியில் கீழடி பற்றி பேசியிருந்ததை ஒட்டி எழுந்த எதிர்வினைகளை வாசித்தேன். நீங்கள் ஒரு அதிருஷ்டசாலி என்று தோன்றும். நீங்கள் ஒருவிஷயத்தைச் சும்மா சொன்னாலே போதும், கூட்டமாக வந்து நீங்கள் சொன்னதெல்லாம் உண்மை என்று உங்கள் எதிரிகளே நிரூபித்துவிட்டுச் செல்வார்கள். அதுதான் இங்கேயும் நடக்கிறது.

எதிர்வினைகளில் ஒன்று தெரிந்தது. லோத்தல், காளிபங்கன் முதலிய ராஜஸ்தான் தொல்நகர்கள் பற்றி எவருக்கும் எதுவும் தெரியவில்லை. சாமானியர்களை விடுங்கள், பேராசிரியர்களுக்குக் கூட. அதெல்லாம் நீங்கள் ஏதோ அடித்துவிடுவது, அல்லது பாரதிய ஜனதாவின் புளுகு என்ற அளவிலேயே உரையாடல்கள் இருந்தன. எனக்கு உண்மையாகவே பெரும் திகைப்பு அது. ஒரு வயசான பேராசிரியர் சிந்துசமவெளி நாகரீகம் என்பது திராவிட நாகரீகம் என்று எட்டாம் வகுப்பு பாடத்தை வகுப்பெடுக்கிறார். எந்த காலத்தில் வாழ்கிறார்கள்? வரலாற்று ஊகங்களுக்கும் வரலாற்று முடிவுகளுக்கும் இவர்களுக்கு யாராவது வேறுபாடு கற்பிக்க முடியாதா?

இன்று சிந்துசமவெளி நாகரீகம் என்ற சொல்லாட்சி இல்லை. ஏனென்றால் அந்நாகரீகம் சிந்துவில் இருந்து கட்ச் வரை பரந்து கிடக்கும் ஒன்று. ஹரப்பன் நாகரீகம் என்றே சொல்லப்படுகிறது. அது இன்றைக்கு அதிகபட்சம் ஆறாயிரமாண்டுகள் முதல் குறைந்தபட்சம் நான்காயிரமாண்டுகள் தொன்மை கொண்டது. சில ஆயிரமாண்டுகள் நீடித்தது. தொடர்ச்சியான சூழலியல் அழிவால் இடம்பெயர்ந்துகொண்டே இருந்து படிப்படியாக அழிந்தது. இதெல்லாம்தான் இன்றைய பொதுப்புரிதல்கள்.

ஹரப்பன் நாகரீகம் பற்றி இன்றுவரை ஊகங்களே உள்ளன. அது திராவிடநாகரீகம் என்பது ஒருபக்கம். அது வேதநாகரீகம் என்பது மறுபக்கம். அங்கே ஸ்தம்பம் (கல்தூண்) கிடைத்துள்ளது, வேள்விக்குண்டங்கள் கிடைத்துள்ளன, ஆகவே அதுதான் வேதநாகரீகம் என வாதிடும் அறிஞர்கள் பலர் உள்ளனர். அந்த எழுத்துக்களுக்கும் குறியீடுகளுக்கும்  அர்த்தம் அளித்து திராவிட நாகரீகம், தமிழ் நாகரீகம் என்பவர்கள் இங்கே உள்ளனர். ஆனால் எல்லாமே ஊகங்கள். எதற்கும் அறுதியான சான்றுகள் இல்லை.

கீழடியின் காலகட்டம் பற்றி நீங்களே ஏதோ சொல்லிவிட்டீர்கள் என்றுதான் பாதிப்பேர் கொந்தளிக்கிறார்கள். நீங்கள் சொல்லியிருப்பது கீழடி ஆய்வாளர்கள் சொல்கிற அதே காலக்கணக்கை. கீழடி பற்றி தமிழக அரசு வெளியிட்டிருக்கிற அதே கணக்கைச் சொல்கிறீர்கள். அதை  அப்படியே எடுத்துக் கொண்டால்கூட கீழடியின் காலம் பொதுயுகத்துக்கு முன் ஒன்றாம் நூற்றாண்டுதானே என்கிறீர்கள். இவர்கள் அதைக்கூட படித்ததில்லை. இவர்கள் பார்த்ததெல்லாம் யூடியூப் வீடியோக்கள்தான்.கீழடி பத்தாயிரமாண்டு பழமையானது என்கிறார் ஒரு பேராசிரியர்.

கீழடியின் காலம் பொமு ஒன்றாம் நூற்றாண்டு என்பதைக்கூட இன்னும் சர்வதேச அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு கரித்துண்டின் கார்பன் டேட்டிங்கைக் கொண்டு இங்கே அப்படிச் சொல்கிறார்கள். ஆனால் அந்த கார்பன் டேட்டிங் இன்னும் பொதுவாக முன்வைக்கப்படவில்லை. அந்த கரித்துண்டு எந்த மண்ணடுக்கில் கிடைத்தது, மற்ற பொருட்கள் கிடைத்த மண் அடுக்கு என்ன என்பதெல்லாம் முக்கிய்மானவை. இவர்களின் கூற்றுகள் இன்னும் இந்திய அளவில், உலக அளவில் தொல்லியலாளர்களால் ஏற்கப்படவில்லை. வருங்காலத்தில் ஏற்கப்படலாம், ஆனால் அதற்கு நீடித்த ஆய்வும் விவாதமும் தேவை. இன்றுவரை உறுதியான சான்றுகள் எதுவும் சர்வதேச ஆய்வாளர்கள் முன்பாகக் காட்டப்படவில்லை. இங்கே யூடியூபில் கூச்சலிட்டால் போதாது. நீங்கள் கீழடி ஆதரவாளர் சொல்லும் காலத்தையே ஏற்றுக்கொள்கிறீர்கள். அதற்கும் வசை.

நான் ஆச்சரியப்படுவது ஒன்று உண்டு. இங்கே தொல்லியல் நிபுணர்கள், தர்க்கவல்லுநர்கள் மாதிரி பேசும் ஒரு பெருங்கூட்டம் உண்டு. உதாரணமாக அ.மார்க்ஸ். அவரைப்போல பலர். முன்பு ஹரப்பன் நாகரீகத்தில் குதிரைச் சின்னம் உண்டு என்று ராஜாராம் என்பவர் (மோசடியாக) ஒன்றைச் சொன்னபோது எவ்வளவு  பேச்சு பேசினார்கள். இன்று இங்கே உள்ளவர்கள் கீழடியின் காலம் பத்தாயிரமாண்டு என்றெல்லாம் பேசும் அபத்தமான பழமைப்பெருமைக்கு எதிராக கீழடி பற்றி அறிவியல்பூர்வமாக அவர்கள் பேசலாமே. அதுதானே அவர்களின் கடமை? அறிவியல்முறைமை என்ன என்று அவர்கள் மக்களிடம் சொல்லலாமே?

சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு தெரியும், அப்படிச் சொன்னால் அடிவிழும் என. இங்கே  ‘கலகம்’ ‘எதிர்ப்பரசியல்’ என்றெல்லாம் பாவலா செய்தபடி முன்வைக்கப்படுவது பெரும்பான்மைவாதம்தான். பெரும்பான்மையினர் எந்த முட்டாள்தனத்தைச் சொன்னாலும் அதை அப்படியே ஆதரிப்பவர்கள்தான் தங்களை எதிர்ப்பரசியல் செய்பவர்களாகச் சொல்லிக் கொள்கிறார்கள். மெய்யான அறிவுநேர்மையுடன் உண்மையை பொதுவில் சொல்பவர் நீங்கள். இதில் அல்ல, எதிலும்.

நீங்கள்தான்  இங்கே உண்மையான கலகக்காரர். உண்மையைச் சொல்லி எதிர்ப்பையும் வசையையும் வாங்கிக் கொள்பவர். ஆனால் உங்களை பழமைவாதி என்கிறார்கள். நான் யோசிக்கிறேன். அ.மார்க்ஸோ, தொ.பரமசிவனோ அவரைப்போன்றவர்களோ என்றாவது பொதுநம்பிக்கையிலுள்ள பிழைகளுக்கு எதிராக எதையாவது சொல்லி ஏதாவது எதிர்ப்பைச் சம்பாதித்திருக்கிறார்களா? இல்லவே இல்லை. பொதுநம்பிக்கையை ஒட்டியே பேசுவார்கள்.

சில மாதங்கள் முன்பு அயோத்திதாசரின் வாய்மொழி வரலாறு பற்றி விவாதம் வந்தபோது நீங்கள் ’அப்படியென்றால் இங்கே இன்று நிறுவப்பட்டுள்ள பல இடைநிலைச்சாதி வரலாற்று நாயகர்களுக்கு என்ன தொல்லியல் சான்று உள்ளது? அவர்கள் அனைவருமே வாய்மொழிப்பாடல்களை நம்பி உருவாக்கப்பட்ட ஆளுமைகள்தானே?” என்று சொல்லியிருந்தீர்கள். அப்படியே விவாதம் அடங்கிவிட்டது. நான் அ.மார்க்ஸ் உட்பட இடைநிலைச்சாதி அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்று அவர்களின் எழுத்துக்களை தொடர்ச்சியாக கவனித்தேன். ஆழ்ந்த மௌனம்.

பெரும்பான்மைவாதம்தான் நம் அறிவுச்சூழலின் பெரிய சாபம். கூட்டமாக முன்வைக்கப்படும் அறிவின்மை அப்படியே நிறுவப்படுகிறது. அதற்கு எதிராக பேசாத எவருக்கும் அறிவியக்கத் தகுதியே இல்லை.

எம்.மகேந்திரன்

முந்தைய கட்டுரைஇந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அக்காதமி ஃபெலோஷிப்
அடுத்த கட்டுரைநெல்லையில்…கடிதம்