எம்.வேதசகாய குமார் படத்திறப்பு

சற்றுத் தாமதமாகத்தான் எம்.வேதசகாயகுமார் படத்திறப்பு செய்தியை அறிந்துகொண்டேன். மாத்ருபூமி பாலக்காடு பதிப்பில் சிற்றூர் கல்லூரியில் வேதசகாயகுமார் நிகழ்வு செய்தி படங்களுடன் வந்திருந்தது. நாஞ்சில்நாடனின் உரை குறித்த செய்தியும். நிறைவாக இருந்தது.  வேதசகாயகுமார் மறைந்து ஓராண்டு கடந்துவிட்டது. இனி அவர் அவருடைய மாணவர்கள் நினைவிலும், இலக்கிய விமர்சனங்களிலும் வாழ்வார்.

பொதுவான கல்லூரி ஆசிரியர் போன்றவரல்ல வேதசகாய குமார். தன் மாணவர்கள்மேல் பெரும் பற்று கொண்டவர். அவர்களுக்கு ஓயாமல் கற்பித்தவர். அவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர். அது அவர் அவருடைய ஆசிரியர் பேரா.ஜேசுதாசனுக்கு அளிக்கும் கடன்திருப்பல் என்று சொல்வார். அவருடைய மாணவர்கள் இன்று கேரளத்தில் பல்வேறு கல்லூரிகளில் பணியிலிருக்கிறார்கள்.

(கேரளத்தில் இன்றும் அரசுக் கல்லூரிகளில் முழுக்க முழுக்க தகுதியின் அடிப்படையிலேயே ஆசிரியர் நியமனம் நடைபெறுகிறது. ஆகவே அவருடைய மாணவர்கள் எளிதில் பணி அடைய முடிகிறது.இங்கே என்றால் தனியார் கல்லூரிகளில் மிகக்குறைந்த கூலிக்கு அவதிப்பட்டிருப்பார்கள்)

அவருடைய மாணவர்கள் மனோகரன், உமா மகேஸ்வரி ஆகியோரின் பெயர்களை அழைப்பிதழில் கண்டேன். வேதசகாயகுமாரின் அரைநூற்றாண்டுக்கால நண்பர் நாஞ்சில்நாடன் அவருக்கு முதல் சிறப்புரை ஆற்றியது நன்று.

நான் பார்த்துக்கொண்டே இருக்கும் ஒன்று உண்டு. அறிஞர்கள், ஆசிரியர்கள் எழுத்தாளர்கள் மிகமிக விரைவில் அவர்களின் குடும்பத்தினரின் நினைவில் இருந்து அகன்றுவிடுவார்கள். குடும்பத்தினர் நினைவில் நீடிப்பவர்கள் பெரும்பாலும் தொழில்கள், வணிகங்களை நிறுவி அடுத்த தலைமுறையினருக்கு அளித்துச் செல்பவர்கள். ஆனால் அதுகூட மிஞ்சிப்போனால் இரண்டு தலைமுறைக்கு. காலத்தை கடந்துசெல்பவர்கள் அறிஞர்கள், ஆசிரியர்கள் எழுத்தாளர்கள்தான். தங்கள் மாணவர்கள் வாசகர்கள் வழியாக.

வேதசகாயகுமார் அவருடைய மாணவர்கள் நின்றிருக்க படமாக தோற்றமளிக்கும் காட்சி நெகிழ்வூட்டியது. அவர் மறையவில்லை என்னும் எண்ணத்தை உருவாக்கியது.

எம்.வேதசகாயகுமார் அஞ்சலிக்கூட்டம்,கோவை

அஞ்சலி- எம்.வேதசகாயகுமார்

வேதசகாயகுமாரின் இலக்கியவிமர்சனக் குறுங்கலைக்களஞ்சியம்

வேதசகாய குமார் நினைவில்…

வேதசகாயகுமார்- கமல்ஹாசன் அஞ்சலி

வேதசகாயகுமார்- ஒரு நூல்

முந்தைய கட்டுரைமு.க -கூச்சல்களுக்கு அப்பால்
அடுத்த கட்டுரைமு.க- கடிதம்