அன்புள்ள ஜெ.,
மு.க. ஒரு இலக்கியவாதி இல்லை என்று நீங்கள் கூறிய போதுதான் உங்களைப் பற்றி முதன் முதலில் அறிந்தேன்.
இலக்கியம் என்றால் கருணாநிதி, அறிவாளி என்றால் அண்ணா, தத்துவம், சமூக சீர்திருத்தம் என்றால் ஈ .வே.ரா – இதுதான் என் பெரும்பாலான நண்பர்களின் கருத்து. அதுவரை என் நண்பர்களிடம் மூச்சைத் தொலைத்துக் கொண்டிருந்த எனக்கு உங்கள் கருத்து பெரும் ஆசுவாசமாக இருந்தது.
ஆச்சரியமாக, திராவிட அரசியல் மேல் எனக்கு சிறிதேனும் மதிப்பு வந்ததும் உங்கள் மூலமாகத்தான். இப்போது கூட “எழுத்தாளர்-அரசியல்வாதி” வகையில் கருணாநிதியே கடைசி என்று நீங்கள் சொன்னபோது எனக்கும் ஒரு ஏக்கம் வரத்தான் செய்தது. எழுத்து ஊடகத்தைக் காட்சி ஊடகம் முழுவதுமாக வென்று வருவதன் மௌன சாட்சி அது.
நன்றி
ரத்தன்
***
அன்புள்ள ரத்தன்,
உண்மை. ஆனால் நாம் ஒன்றைக் கவனிக்கவேண்டும். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை எழுத்து ஊடகம் மிகச்சிறிய வட்டத்திற்குள்தான் இருந்தது. நிகழ்கலைகள்தான் முதன்மையாக மக்களிடையே கருத்துருவாக்கம் செய்தன. இலக்கியம், தத்துவம் ஆகியவை அந்த பொதுமக்கள் கலைகளை பாதிக்கும் மையவிசைகளாக மட்டுமே இருந்தன. அச்சு வந்தபின்னரே எழுத்தும் வாசிப்பும் பொதுமக்களுக்கான ஊடகமாக ஆயின. அறிவுருவாக்கத்தில் மட்டுமல்லாமல் பரப்புவதிலும் பங்களித்தன. பத்தொன்பது, இருபது நூற்றாண்டுகள் எழுத்து-வாசிப்பு ஊடகத்திற்குரியவையாக இருந்தன.
எழுத்துக்கு அந்த பேருருவம் எப்படி வந்தது? ஏனென்றால் அச்சு வடிவம் வழியாக எழுத்து தன்னைத்தானே நகலெடுத்து பெருகி எழமுடிந்தது. மற்ற நிகழ்த்துகலைகளால் அது இயலவில்லை. ஓர் இதழில் கதை எழுதுபவன் ஒரு நாடகக்கலைஞனை விட ஆயிரம் மடங்கு மக்களிடம் செல்ல முடிந்தது. யார் வேண்டுமென்றாலும் எழுதலாம், பரப்பலாம் என்னும் நிலை எழுத்து- வாசிப்பை பெரும் சமூக இயக்கமாக ஆகியது. அச்சு ஊடகம் உருவான தொடக்க காலத்திலேயே செவ்வியல்நூல்கள் முதல் மிகக்கீழ்த்தரமான நூல்கள் வரை எழுத்தின் அத்தனை வடிவங்களும் வந்து குவிந்துவிட்டன. இன்று நூலகப்பதிவுகளைப் பார்க்கையில் எத்தனை ஆயிரம் நூல்கள் எத்தனை நூறு தலைப்புகளில் வெளிவந்துள்ளன என்னும் பிரமிப்பே எஞ்சுகிறது. எழுத்து மதமறுமலர்ச்சியை உருவாக்கியது. அரசியல் மாற்றத்தை உருவாக்கியது. சமூக சீர்திருத்தங்களை நிகழ்த்தியது. விளம்பரங்கள் வழியாக வணிகத்திலேயே பெரும் புரட்சியை உருவாக்கியது.
சினிமா வந்து எழுத்தை முந்தியது. ஆயினும் சினிமா பதிவுசெய்யப்பட்ட காட்சி ஊடகமே ஒழிய அச்சுவடிவ எழுத்துபோல தன்னைத்தானே பெருக்கிக் கொள்ளக்கூடியது அல்ல. அது பெருமுதலீடு கொண்டது. ஆகவே அனைவரும் ஈடுபடத்தக்கதும் அல்ல. அது ஓர் உருப்பெருக்கி ஊடகம், அது ஓரு சமூக இயக்கமாக ஆகவே இல்லை. ஆனால் மின்னணு தொழில்நுட்பம் காட்சியூடகத்தையே சமூக இயக்கமாக ஆக்கிவிட்டது. நடிப்பு பாட்டு எல்லாமே பல்லாயிரம் கோடியென நகலெடுக்கப்படுகின்றன. கட்டற்றுப் பரவுகின்றன. எவரும் காணொளிகளை எடுக்கலாம், எவரும் அதைப் பரப்பலாம் என்னும் நிலை வந்துள்ளது. அச்சு ஊடகம் எழுத்துக்கு 1900ங்களில் அளித்த வாய்ப்பு இன்று காணொளிக்கு வந்துள்ளது.
இன்று எழுத்தும் வாசிப்பும் வேறொரு வடிவை அடைகின்றன. எழுத்துக்கு இருந்துகொண்டிருந்த நிலைத்த தன்மை மறைந்துவருகிறது. பேச்சு போல அது நிகழ்ந்து அப்படியே மறைவதாக ஆகிவருகிறது. அன்றாட அரட்டையே எழுத்தில்-வாசிப்பில் நிகழ்கிறது. ‘பிரசுரமான’ ஒரு எழுத்து மிகமிகச் சிலரால் மட்டுமே வாசிக்கப்பட்டு ஓரிரு மணிநேரத்தில் மறைவது எவ்வளவு பெரிய விந்தை என கொஞ்சம் விலகி நின்று பார்த்தால் தெரியும். என்னுடைய தலைமுறையில் அச்சில் வந்த ஒரு விஷயம் உலகுமுன் வைக்கப்பட்டுவிட்டது, அது ஒருவகையான நிரந்தரத்தன்மையை அடைந்துவிட்டது என்றே எண்ணியிருந்தோம்.
இன்று மின்னூடக வெளியில் பிரசுரமாகும் எழுத்துக்களை பழைய அச்சு எழுத்துக்கள் போல கொள்ளக்கூடாது. அவை கண்ணால் பார்க்கப்பட்டு பகிரப்படும் அன்றாட அரட்டைகள் மட்டுமே. மெல்லமெல்ல அதுவும் மறைந்து குரல், படம் ஆகியவையே அரட்டைக்குரியவையாக ஆகிவருகின்றன. எழுத்தில் வாசிப்பது அடுத்த தலைமுறையில் மிகமிகக் குறைவாகிக்கொண்டிருக்கிறது. சூழலில் இன்று பேசப்படுவனவற்றில் மிகப்பெரும்பாலான உரையாடல்கள் காட்சியூடகம் சார்ந்தவை. நூல்கள் சார்ந்த உரையாடல்கள் அரிதினும் அரிதாகிக் கொண்டிருக்கின்றன. (என் இந்த தளம் பிடிவாதமாக அச்சு ஊடகத்தின் தன்மையை தக்கவைக்க முயல்கிறது)
மெல்லமெல்ல மீண்டும் எழுத்து- வாசிப்பு என்னும் வடிவம் முன்புபோல மிகச்சிறிய வட்டத்துக்குரியதாக ஆகிக்கொண்டிருக்கிறது. மீண்டும் அது ‘கற்றோர்’ மட்டுமே புழங்கும் உலகைச்சார்ந்ததாக ஆகும். மற்றோர் காட்சியூடகங்களில் உரையாடி, கருத்துப்பரிமாற்றம் செய்து வாழ்வார்கள். ஒரு வகை யுகமுடிவுதான். ஏக்கம் வரவழைக்கும் ஓர் இழப்புதான். ஆனால் வேறு வழியில்லை உலகம் அத்திசை நோக்கியே செல்கிறது. நான் முகநூலே அரட்டையின் எழுத்துவடிவம் என எண்ணுகிறேன். இளைஞர்களுக்கு அதுவே சலிப்பூட்டும் வாசிப்புக்களமாக, காலாவதியானதாக தோன்றுகிறது.
அச்சு வடிவுக்கு முன்பு வரை எல்லா காலத்திலும் எழுத்தும் வாசிப்பும் மையக்கருத்தாக்கம் சார்ந்தவையாகவே இருந்துள்ளன. அதாவது அறிஞர்களிடம் ஆழ்ந்த பாதிப்பைச் செலுத்தி, மெல்லமெல்ல பரவி, நிகழ்கலைகளை அடைந்து, அதனூடாக மக்களை சென்றடைந்து தங்கள் பாதிப்பை நிகழ்த்தின. வியாசனையும் கம்பனையும் வாசித்தோர் மிகமிகச் சிலர். கதைகளாகக் கேட்டறிந்தோர், நாடகங்களும் கூத்துகளுமாகக் கண்டறிந்தோர் பலகோடி. அவ்வாறு இனியும் நிகழும். ஒரு நாவலை வாசிக்க பத்துபேர் என்றால் அதன் காட்சிவடிவுக்கு எளிதாக பத்துலட்சம்பேர் வந்துவிடுகிறார்கள்.
ஆனாலும் சிந்தனையின் மையம் எழுத்தாகவே இருக்கும். ஏனென்றால் இங்குதான் தனிநபர் சார்ந்த வெளிப்பாடுக்கு இத்தனை இடம் உள்ளது. இங்குதான் அனைத்தையும் இணைத்துக்கொண்டு முழுமைப்பார்வையை முன்வைக்க முடிகிறது. இங்குதான் ஒன்றை அறியும் ஆவலும் தகுதியும் கொண்டவர்கள் மட்டுமே வந்து அதை அறிகிறார்கள். இங்குதான் ஒட்டுமொத்தமான அறிதல் என்பது ஒரு நிபந்தனையாக உள்ளது. பதினேழாம் நூற்றாண்டுக்கு முன்பு சிறிய குருகுலங்களில், ஜிம்னேஷியங்களில், செமினாரிகளில் அறிவியக்கம் நிகழ்ந்ததுபோல நாளை இலக்கியமும் தத்துவமும் வேறுவகை சிறுவட்டங்களில் நிகழும். அவை இணையச்சிறுவட்டங்களாக இருக்கலாம். உலகளாவிய உறுப்பினர் கொண்ட சிறு குமிழிகளாகச் செயல்படலாம்.
இப்போதே அமெரிக்காவில் தத்துவம், கலை ஆகியவற்றுக்கு தேர்ந்த பங்களிப்பாளர்களின் சிறு குழுக்களே களமாக உள்ளன. இலக்கியம் அத்திசை நோக்கிச் செல்கிறது. பொதுக்களத்தில் இன்று இலக்கியங்கள் அவற்றின் தரத்தால் மதிப்பிடப்படுவது அருகி, விற்பனையாலும் செல்வாக்காலும் மதிப்பிடப்படுவது நிகழ்கிறது. அந்த விற்பனையை பெருநிறுவனங்கள் தங்கள் வணிகஉத்திகள் வழியாக நிகழ்த்தவும் முடிகிறது. விளைவாக ஓர் இலக்கியப்பபடைப்பு முதன்மைப்பட இலக்கியமதிப்பே தேவையில்லை என ஆகிறது. அது அடிப்படையில் இலக்கியமென்னும் செயல்பாட்டுக்கே எதிரானது. இதன் விளைவாக தீவிர இலக்கியம் மீண்டும் சிறுவட்டங்கள் நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
ஆனால் அதனால் ஒன்றும் இழப்பில்லை. இலக்கியத்துக்கும் தத்துவத்துக்கும் பெரிய பொதுவட்டங்கள் தேவையில்லை. ஆர்வமும் அறிவும் கொண்டவர்களின் சிறுவட்டங்களே போதும். இலக்கியமும் தத்துவமும் பரப்பால் அல்ல, தீவிரத்தால் நிலைகொள்பவை. வருங்காலத்திலும் அவ்வண்ணமே நிகழுமென எண்ணலாம்.
*
மு.க எழுத்தும் வாசிப்பும் மையப்பேரியக்கமாக இருந்த யுகத்தின் மனிதர். இ.எம்.எஸ்சும் அப்படித்தான். பிணராய் வாசிக்க மாட்டார். பிரகாஷ் காரத்துக்கு அறிவுஜீவி, எழுத்தாளர் பிம்பம் இல்லை. அவர் ஒரு கார்ப்பரேட் நிர்வாகி போலிருக்கிறார். 1999ல் நான் அவரை நேரில் பார்த்தபோது அன்று மிக அரிதான மடிக்கணினி வைத்திருந்தார்.
இனி நமக்கு உயர்தொழில்நுட்பம் அறிந்த, நிர்வாகவியலில் பயின்ற (அல்லது அவ்வாறு தோற்றமளிக்கிற) ஆளுமைகளே தலைவர்கள். நம் குழந்தைகளிடம் பேசிப்பாருங்கள். அவர்கள் எவருக்கும் அறிவுஜீவிகள், இலக்கியவாதிகள் ஆதர்சபுருஷர்கள் அல்ல. புத்தகக் கண்காட்சிகளில் பாருங்கள். ஸ்டீவ் ஜாப், பில்கேட்ஸ், மார்க் ஸுக்கர்பெர்க், எலன் மஸ்க்,சுந்தர் பிச்சை வாழ்க்கை வரலாறுகள்தான் உள்ளன. எந்தக் கலாச்சார அமைப்பின் வரலாறும் இல்லை, கூகிள் வென்றகதை, டொயோட்டா அமைந்த கதைகளே கிடைக்கின்றன.
இவர்களின் வாழ்க்கை வரலாறுகள், மேற்கோள்கள், புகைப்படங்கள், ஆளுமைச்சித்திரங்கள் எல்லாமே தேர்ந்த நிபுணர்களால் புனையப்படுபவை. இப்போது இந்தியத் தொழில் பெரும்புள்ளிகள் பற்றியே புனைவுகள் தொடங்கிவிட்டன. மிகச்சிறந்த நிபுணர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். மங்கலான பழைய பழுப்படித்த கறுப்புவெள்ளை புகைப்படங்களை காண்கையில் எனக்கு ஒரு பரபரப்பு ஏற்படுகிறது. வரலாறு வரலாறு என மூளை விழிப்பு கொள்கிறது. இந்த உயர்தர புகைப்படங்கள் ஆழ்ந்த ஒவ்வாமையை உருவாக்குகின்றன. ஆனால் அடுத்த தலைமுறைக்கு நான் சேமிக்கும் படங்கள் காலக்குப்பைகள் மட்டுமே.
எப்போது சேகுவேரா நூல்கள் மறைந்து ஸ்டீவ் ஜாப்ஸ் நூல்கள் வர ஆரம்பித்தன? உண்மையில் உலகம் முழுக்க இந்தே ’டிரெண்ட்’தான் என நான் புத்தகக்கடைகளில் உலவும்போது காண்கிறேன். ஜப்பான் முதல் அமெரிக்கா வரை ஒரே அலைதான். உலகம் செல்லும் திசை அதுதான்.
நான் கல்லூரியில் படிக்கையில் தலைகலைந்து, கசங்கிய சட்டையுடன் வரும் அறிவுஜீவிதான் கவற்சியான ஆளுமை. அறிவுஜீவி ஆசிரியர்களும் அறிவுஜீவி மாணவர்களும் உண்டு. கதர் உடுத்து, தனித்தமிழில் மட்டுமே பேசும் சகமாணவர்கள் எனக்கிருந்தனர். அந்த வம்சமே இன்றில்லை. இன்றைய கல்லூரிகளில் ‘ஹை-டெக்’ மாணவர்கள் ‘ஹை-ஃபேஷன்’ மாணவர்கள்தான் முதன்மை நட்சத்திரங்கள். நேரடியாக அமெரிக்கா பறந்துவிடப்போகிறவர்கள்.
அந்த தலைமுறையின் அரசியல்வாதி அப்படிப்பட்ட ‘சூப்பர் சி.இ.ஓ’ ஆகத்தான் இருக்கமுடியும். மு.கவின் ஆளுமை அவரே எழுதி எழுதி உண்டுபண்ணிக் கொண்டது. இனி வரும் அரசியல்வாதிகளின் ஆளுமைகளை மாபெரும் விளம்பர நிறுவனங்கள் உருவாக்கி முன்வைக்கும். அவர்கள் ஆளுமைகள் அல்ல, ‘பிராண்ட்’கள்.