அன்புள்ள ஜெ,
மு.க பற்றி எழுதியிருந்தீர்கள். என்னுடைய கேள்வி இப்படி ஓர் எழுத்தாளரை அறுதியாக வகைப்படுத்தி முடித்துவிட முடியுமா என்றுதான். இதை தீர்ப்பு சொல்வது என்றுதானே சொல்லவேண்டும்? இதைச் சொல்பவரை நான் ஏன் ஏற்றுக்கொள்ளவேண்டும்? தமிழ்ச்சூழலில் இப்படி எல்லாவற்றையும் வகுத்துரைப்பதற்கு எவருக்கு அதிகாரம் உள்ளது? ஒரு சிலரை இருட்டடிப்பு செய்வது சரியா? நான் கேட்பது பிழையாக இருந்தால் மன்னித்துவிடவும்.
ஆர்.கே.தமிழ்ச்செல்வன்
அன்புள்ள தமிழ்ச்செல்வன்,
இந்த வகையான கேள்விக்கு இந்தத் தளத்தில் 2008ல் பதில் சொல்ல ஆரம்பித்தேன். சொல்லிக்கொண்டே இருக்கிறேன். இலக்கியத்துள் நுழையும் ஒவ்வொருவருக்கும் இந்தக் கேள்வி இருக்கும். இதற்கு சூழலில் முதன்மையாக தெரியும் ஆளுமை பதில் சொல்வார்.
இலக்கிய விமர்சனம் என்பது ஒவ்வொரு விமர்சகரும் அவரவர் அளவுகோலில் இலக்கியப்படைப்புக்களை, இலக்கியவாதிகளை ஆராய்ந்து, மதிப்பிட்டு, வரையறைசெய்து சொல்வதுதான். ஆனால் அதைச்செய்யாத வாசகரே இல்லை. நீங்கள் வாசித்த நூல்களையும் ஆசிரியர்களையும் பற்றி கருத்தும், மதிப்பீடும் சொல்கிறீர்கள் அல்லவா? அதுதான் இலக்கிய விமர்சனம், இலக்கியவிமர்சகன் என்பவன் அவற்றை சீராக தொடர்ந்து வெளிப்படுத்துபவன், அவ்வளவுதான் வேறுபாடு. எவரும் வாசித்தவற்றை மதிப்பிட்டு ஒன்றும் சொல்லக்கூடாது என்று அரசு சட்டம்கொண்டுவர முடியுமா என்ன?
இந்த விமர்சனத்தில் சிந்தனைப் பள்ளிகள் சார்ந்து வெவ்வேறு தரப்புகள் உண்டு. தமிழ்ச்சூழலில் புகழ்பெற்றிருப்பவை இரு தரப்புகள். ஒன்று, நவீன இலக்கியத்தின் அழகியல் விமர்சனத்தரப்பு. வ.வெ.சு.ஐயர், ஏ.வி.சுப்ரமணிய ஐயர், ஆ.முத்துசிவன், க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா, சுந்தர ராமசாமி என நீளும் ஒரு விமர்சகர் வரிசை அதற்குண்டு. இன்னொரு தரப்பு முற்போக்கு விமர்சனத் தரப்பு. ரகுநாதன், எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ஆர்.கே) கே.கைலாசபதி, கா.சிவத்தம்பி, சி.கனகசபாபதி, நா.வானமாமலை,கே.முத்தையா, ஞானி என ஒரு வரிசை அவர்களுக்கும் உண்டு.
மூன்றாவதாக ஒரு தரப்பாக திராவிட இயக்க விமர்சகர்கள் .அதில் சி.என்.அண்ணாத்துரை, மு.வரதராசனார், ஆ.இரா.வேங்கடாசலபதி போன்ற சிலரைச் சொல்லலாம். ஆனால் அவர்கள் நவீன இலக்கிய விமர்சனத்திற்குள் பெரும்பாலும் வரவில்லை. அவர்கள் ஒட்டுமொத்த தமிழிலக்கியத்தையும் கருத்தில்கொண்டு முழுமையாக விமர்சனப்பார்வையை முன்வைக்கவுமில்லை. தங்களில் சிலரை விதந்தோதி முன்வைப்பதை மட்டுமே செய்தனர்.
இந்த ஒவ்வொரு தரப்புக்கும் அவர்களுக்குரிய பார்வை உண்டு. முற்போக்குத் தரப்புக்கும் திராவிட இயக்கத்தரப்புக்கும் அவர்களின் அரசியலே முதன்மை அளவுகோல். அழகியல் என்று ஏதுமில்லை. புறவயமாக முன்வைக்கப்படுவது அவர்களின் கோட்பாட்டு அரசியல் மட்டுமே. அன்றாட அரசியல் சார்ந்து முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
நவீன இலக்கியத்தின் விமர்சனத்தரப்புக்கு அழகியல் அளவுகோல்கள் உள்ளன. அந்த அழகியல் அளவுகோல்கள் தமிழில் இதுவரை எழுதப்பட்ட நவீன இலக்கியப் படைப்புகள், சர்வதேச அளவில் எழுதப்பட்ட நவீனப் பேரிலக்கியங்கள், அவற்றில் இருந்து உருவாகி வந்த இலக்கியக் கொள்கைகள் ஆகியவை சார்ந்தவை. அதாவது நவீன இலக்கியம் தொடர்ந்து பேசிப்பேசி, விவாதித்து விவாதித்து ஒரு ‘மூலநூல்தொகை’ (Canon) உருவாக்கிக்கொண்டிருக்கிறது. அதனடிப்படையிலேயே புதிய படைப்புகளை விமர்சிக்கிறது, மதிப்பிடுகிறது.
அழகியல்தரப்பின் மதிப்பீடுகளே எப்போதும் ஒன்றல்ல. அவை விமர்சகர்களின் பார்வைக்கு இணங்க சற்றே வேறுபடுகின்றன.இன்று நவீனத்தமிழிலக்கியத்தின் மூலநூல்தொகை எனப்படும் முக்கியமான ஆக்கங்கள் பெரும்பாலும் க.நா.சு, சி.சு.செல்லப்பா இருவரின் பார்வையை ஒட்டி உருவானவை. ஆனால் க.நா.சு முன்வைத்த ஷண்முகசுப்பையாவையோ, சி.சு.செல்லப்பா வாழ்நாளெல்லாம் தூக்கிப்பிடித்த பி.எஸ்.ராமையாவையோ இச்சூழல் ஏற்றுக்கொண்டதில்லை. மாறாக அவர்களால் ஏற்கப்படாத ப.சிங்காரம் முதன்மைப்பட்டிருக்கிறார்.
நான் நவீனத் தமிழிலக்கியத்தின் அழகியல் தரப்பில் நின்று பேசுபவன். எனக்கு அதில் எவர் முன்னோடிகள் என முன்வைத்திருக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவரிடமும் எனக்குள்ள ஏற்பையும் மறுப்பையும் எழுதியிருக்கிறேன். தமிழிலுள்ள முன்னோடி எழுத்தாளர் பெரும்பாலும் அனைவரைப் பற்றியும் விரிவாக விவாதித்திருக்கிறேன். மொத்தமாகப் பார்த்தால் ஓர் ஐந்தாயிரம் பக்கம் அளவுக்கு இலக்கிய விமர்சனம் எழுதியிருக்கிறேன். தமிழில் எழுதிய விமர்சகர்களில் மிக அதிகமான பக்கங்கள் எழுதியவன் நான்.
நீங்கள் என் கருத்துக்களை இந்த அழகியல் விமர்சன மரபின் நீட்சியில் வைத்தும், என்னுடைய இதுவரையிலான விமர்சனங்களின் தொடர்ச்சியாகவும் பார்க்கவேண்டும். இது ஒரு தரப்பு. ஒரு பார்வை. இது முழுமையாக முன்வைக்கப்பட்டுள்ளது. இதை எவரும் கடைசியான பார்வை என கொள்ளவேண்டியதில்லை. இதை சிந்திப்பதற்கான ஒரு வாய்ப்பென மட்டுமே கொண்டால்போதும்.இதேபோல மற்ற விமர்சனத் தரப்புகளும் தங்கள் கருத்தையும் முடிவையும் முன்வைத்துக்கொண்டேதான் இருக்கின்றன. எதை ஏற்கவும் வாசகனுக்கு உரிமை உண்டு.
இடதுசாரித் தரப்புக்கு கட்சி இருக்கிறது, கட்சிசார்ந்த அமைப்புகள் இருக்கின்றன, இதழ்கள் இருக்கின்றன, ஏராளமாக நிதி இருக்கிறது. திராவிடத் தரப்புக்கு கட்சி, இதழ்கள், நிதிவளம் இருக்கிறது. அரசாங்கமே இருக்கிறது. அவர்கள் தங்கள் தரப்பு எழுத்தாளர்களுக்கு சிலைகள் வைக்கிறார்கள், சாலைகளுக்கு பெயர்கள் போடுகிறார்கள், மணிமண்டபம் கட்டுகிறார்கள்.
பாருங்கள், இங்கே பாரதிதாசன் பேரில் பல்கலைக் கழகம் உள்ளது. தேவநேயப் பாவாணருக்கு மையநூலகம் உள்ளது. சுரதாவுக்குக் கூட சிலை உள்ளது. தமிழ் நவீன இலக்கியத்தின் தலைமகனாகிய புதுமைப்பித்தனுக்கு என்ன சமூகமதிப்பு உள்ளது? ஒரு நினைவுச்சின்னமாவது உண்டா? இருட்டடிப்பு எங்கே நிகழ்கிறது? எவர் செய்வது?
ஆனால் புதுமைப்பித்தன் நவீன தமிழிலக்கியத்தால் வாழச்செய்யப்படுகிறார். இந்த புத்தகக் கண்காட்சியில் அலையலையாக விற்றுத் தீர்ந்தவை அவருடைய படைப்புகள்தான். க.நா.சுப்ரமணியம், சுந்தர ராமசாமி, எம்.வேதசகாயகுமார் நான் என தலைமுறை தலைமுறையாக விமர்சகர்கள் அவரைப் பற்றிப் பேசியபடி வந்துகொண்டே இருக்கிறோம். அவ்வாறுதான் அத்தனை நவீன இலக்கிய முன்னோடிகளையும் நிலைநிறுத்துகிறோம்.
வேடிக்கை ஒன்றுண்டு. ‘ஜெயமோகன் ஒரு ஃபாசிஸ்ட், சுந்தர ராமசாமி ஒரு பார்ப்பான். க.நா.சு ஒரு சி.ஐ.ஏ ஏஜெண்ட்’ என்று தொண்டைபுடைக்க கூவுகிறார்கள். இந்தக்கூச்சல் மூன்று தலைமுறையாக ஓயாமல் எழுகிறது. அதே மூச்சில் நவீன இலக்கிய விமர்சனம் தங்களை எதிர்மறையாக விமர்சிக்கிறது, குறுக்குகிறது, அப்படிச் செய்ய எவருக்கு உரிமை இருக்கிறது, அது என்ன நியாயம் என்று கூறவும் செய்கிறார்கள்.
நான் மு.க பற்றி அல்லது எவரைப்பற்றியாவது ஏதாவது சொன்னால் ‘இவர்யர் இதெல்லாம் சொல்ல? இப்படியெல்லாம் சொல்ல என்ன உரிமை?’ என்று சொல்லும் கும்பலை பாருங்கள். அவர்கள் என்னைப்பற்றி என்ன சொல்கிறார்கள். சுந்தர ராமசாமி பற்றி என்ன சொல்கிறார்கள்? வெறும் வசை, அவதூறு. எதையும் வாசிக்காமல், தெரிந்துகொள்ளாமல் அவ்வாறெல்லாம் சொல்ல அவர்களுக்கு உரிமை உண்டு, ஆழ்ந்த வாசிப்பின் அடிப்படையில் விமர்சனக் கருத்து சொல்ல இலக்கியவாதிகளுக்கு உரிமை இல்லை – இதுதான் இவர்களின் தரப்பு இல்லையா?
நவீன இலக்கிய விமர்சனம் இங்குள்ள இடதுசாரி எழுத்தாளர்கள், திராவிட இயக்க எழுத்தாளர்கள் எவரையும் அவ்வாறு ஒற்றைவரியில் நிராகரித்ததில்லை. எவரையும் அவதூறு செய்ததில்லை. அவமதித்ததில்லை. நவீன இலக்கிய அழகியல் மரபின் மையம் என்று சொல்லத்தக்க மணிக்கொடி இலக்கிய இதழ் பாரதிதாசனின் படைப்புகளை வெளியிட்டது. க.நா.சு பாரதிதாசனையும் கம்பதாசனையும் மிகுந்த நல்லெண்ணத்துடன் அணுகி அவருடைய அழகியல் கூறுகளை அடையாளப்படுத்தி எழுதினார்.
(பாரதிதாசன் ‘சொறிபிடித்த பார்ப்பான்’ என்றெல்லாம் எழுதியது க.நா.சுவின் அளவுகோலை பாதிக்கவே இல்லை. நேர் தலைகீழாக நடந்திருந்தா என்ன ஆகும்?. க.நா.சு பாரதிதாசனின் சாதியை அவ்வாறு ஒரு வார்த்தை எழுதியிருந்தால் மொத்த திராவிடக்கோஷ்டியே என்ன செய்திருக்கும்? பாரதிதாசன் என்ன எழுதியிருப்பார்? க.நா.சுவால் அப்படி கனவிலும் எழுத முடியாதென இவர்கள் அனைவருக்குமே தெரியும்)
நவீன இலக்கிய அழகியல் விமர்சனம் இடதுசாரி மரபிலும், திராவிட இயக்க மரபிலும் எவரெல்லாம் தங்கள் அழகியல் நோக்கின்படி முக்கியமானவர்கள் என்று தெரிகிறார்களோ அத்தனைபேரையும் எந்தப் பாகுபாடும் இல்லாமல் முன்வைத்திருக்கிறது. அவற்றை எழுதியவர்கள் கொண்டிருந்த தனிப்பட்ட சாதிக்காழ்ப்புகளையும் மதக்காழ்ப்புகளையும் அரசியல் காழ்ப்புகளையும் அது கருத்தில்கொண்டதில்லை.
அதேசமயம் நவீன எழுத்தாளர்கள் தங்களால் தலைமேல் ஏற்றி வழிபடப்பட்ட ஆளுமைகள் பலர் எழுதிய இலக்கியப்படைப்புகள் பலவற்றை பொருட்படுத்தியதே இல்லை. வ.ராமசாமி ஐயங்கார் என்னும் வ.ரா மணிக்கொடி இதழின் ஆசிரியர். மணிக்கொடி குழுவின் எழுத்தாளர்கள் அனைவருக்கும் புரவலர். ஆனால் இன்றுவரை அவரை நவீன தமிழிலக்கிய அழகியல் மரபு இலக்கியவாதியாக ஏற்றுக்கொண்டதே இல்லை. அவர் பிரச்சார எழுத்தாளர் என்றுதான் சொல்லிவருகிறது.
ஒவ்வொரு தரப்பும் தன் கோணத்தை தர்க்கபூர்வமாக முழுமையாக முன்வைப்பதுதான் ஒரு விவாதக்களம் உருவாவதற்கான அடிப்படைத்தேவை. அழகியல் விமர்சனம் இதுவரை அதைத்தான் செய்து வந்துள்ளது. அந்த நேர்மையும் நல்லெண்ணமும் மறுதரப்புகளில் இருந்து இன்றுவரை இருந்ததில்லை. சும்மா சுற்றி ஒருமுறை வாசித்துப் பாருங்கள், வாடா, போடா என்றெல்லாம் எழுதும் ஆசாமிகளே முற்போக்கு- திராவிடத் தரப்புகளாக ஒலிக்கிறார்கள். விமர்சனமே இல்லை, சும்மா வவ்வவ்வே காட்டுவதுதான் இங்கே நிகழ்கிறது. பாரதி முதல் ஜெயமோகன் வரை அவ்வாறுதான் இவர்களால் எதிர்கொள்ளப்படுகிறார்கள்.
இவர்களால் அதிகபட்சம் என் மேல் சொல்லப்படும் ’விமர்சனம்’ என்பது எல்லா இடத்திலும் போய் ‘புளிச்சமாவு’ என எழுதி வைப்பது மட்டுமே. நானோ என் முன்னோடிகளோ எந்நிலையிலும் எவர் மேலும் அதைச் செய்ததில்லை. எந்த அழகியல் விமர்சகனும் அந்த மொழியில் எழுத மாட்டான். அவன் தன்னுடைய நுண்ணுணர்வை, தன்மதிப்பை விட்டுத்தரவே மாட்டான். இதுதான் வேறுபாடு.
நீங்கள் ஒரு வாசகனாக எல்லா தரப்பையும் கவனிக்கலாம். எது சரி என உங்கள் ரசனைக்கும் அறிவுக்கும் படுகிறதோ அதை ஏற்கலாம். அதுதான் அறிவுச்செயல்பாடு.
ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் தெரியுமா? மற்றதரப்பினர் செய்யும் கீழ்த்தரமான அவதூறுகள் வசைகள் ஆகியவற்றை இயல்பாக எடுத்துக் கொள்கிறீர்கள். இலக்கிய அழகியல் தரப்பில் இருந்து நேர்மையாகவும் தர்க்கபூர்வமாகவும் முன்வைக்கப்படும் விமர்சனக்கருத்து தவறானது என்கிறீர்கள். அவர்களால் அவ்வளவுதான் முடியும், அதுவே அவர்களின் இயல்பு என முடிவுகட்டிவிட்டீர்களா?
ஜெ