சி.சரவணக் கார்த்திகேயன் முகநூலில் எழுதிய இக்குறிப்பை வாட்ஸப்பில் கண்டேன்.
இரண்டு முக்கியமான விழிப்புணர்வுகள்:
ஜெயமோகன் அன்று கலைஞரை வசை பாடவில்லை. கலைஞர் எழுதுவது இலக்கியம் அல்ல என்றுதான் சொன்னார். அதாவது கலைஞர் எழுத்தாளர், ஆனால் இலக்கியவாதி அல்ல என்றே அதற்குப் பொருள் வருகிறது.
ஜெயமோகன் இன்று கலைஞரைப் புகழ்ந்து பேசவில்லை. எழுத்தாளராக இருக்கும் ஒருவர் ஆட்சியில் இருப்பது என்ற காலம் மலையேறி விட்டது என்கிறார். அதாவது கலைஞரை எழுத்தாளர் என்று சொல்கிறார்; இலக்கிய அந்தஸ்து பெற்று விட்டதாக அல்ல.
ஆக, ஜெயமோகன் பேச்சில் எந்தப் பிறழ்வும் இல்லை. நாம்தான் சாதகம் பொறுத்து detailsக்கு முக்கியத்துவம் தர மறுக்கிறோம்.
சி.சரவணக் கார்த்திகேயன்
என் எதிர்வினை
சென்ற ஆண்டு கோலார் வரை ஒரு பயணம் சென்றோம். அங்கே கொரோனாவால் இடங்கள் மூடப்பட்டிருந்தமையால் வேறுவழியில்லாமல் ஒரு விடுதியிலேயே இருக்கவேண்டியிருந்தது. சரி, ஓர் உரையாடலை நடத்துவோம் என்றார் ஈரோடு கிருஷ்ணன். தலைப்பு அவருடையது. ஈ.வெ.ரா அவர்களைப் பற்றிய ஒரு மதிப்பீடு. நான் ஒன்றரை மணிநேரம் ஓர் உரையாற்றினேன். மேலும் ஒன்றரை மணிநேரம் உரையாடல் நிகழ்ந்தது.
உரையில் நான் ஈ.வெ.ரா அவர்களின் சமூக சீர்திருத்தப் பங்களிப்பு, அறிவியக்கக் கொடை ஆகியவற்றை பற்றி ஒருமணிநேரம் பேசி அதன் பின் அவர்மீதான என் விமர்சனங்கள் பற்றி அரைமணிநேரம் பேசினேன். வந்திருந்தவர்களில் சிலர் எங்கள் குழுவுக்குப் புதியவர்கள். அவர்கள் அதிர்ச்சி அடைந்து ஈ.வெ.ரா பற்றி நான் இத்தனை மதிப்பு வைத்திருப்பது தெரியாது என்றார்கள். ஒருவர் ‘அப்டியே பிளேட்டை திருப்பிட்டீங்க’ என்றார். நல்லவேளை என் தொடர்நண்பர்கள் எவரும் அப்படி எண்ணவில்லை.
நான் என் அணுகுமுறையை விளக்கவேண்டியிருந்தது. அறிவியக்கத்திலுள்ள எதையும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பது என் வழிமுறை அல்ல. எவரையும், எதையும். மிக அரிதாக அப்படிச் சில இருக்கலாம். உதாரணமாக கோட்ஸேக்கு ஒரு நியாயமான தரப்பு உண்டு என ஒருவர் சொன்னால் மேற்கொண்டு அவரை நேரில் பார்க்கவோ, ஒரு மரியாதைக்காக புன்னகைக்கவோ கூட விரும்ப மாட்டேன்.
மற்றபடி எந்த தரப்பிலும் என் ஏற்பு மறுப்பு இரண்டையும் முன்வைப்பேன். காந்தியிலும் ஈவெராவிலும் ஏற்பும் மறுப்பும் உண்டு. காந்தியில் ஏற்பு மிகுதி, மறுப்பு குறைவு. மறுப்புகளை விரிவாக எழுதியிருக்கிறேன். காந்தியின் மதம் சார்ந்த பார்வை, ஒழுக்கப்பார்வை, அழகியல்பார்வை போன்றவை என்னால் முழுக்க நிராகரிக்கப்படுபவை. ஈவெராவிடம் ஏற்பு உண்டு, அதைவிட மறுப்பு கூடுதல். என்னால் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு எதிரான காழ்ப்பை உருவாக்குவதை, எதிர்மறையாகவே அனைத்தையும் பார்க்கும் கசப்புகொண்ட அணுகுமுறையை ஏற்க முடியாது. அதன் அடிப்படை எதுவாக இருப்பினும் அது ஒருவரை கசப்பானவராக, அழகுணர்வு ஆன்மிகம் எனும் இரு தளங்களிலும் மிகக்குன்றியவராக ஆக்கிவிடுமென எண்ணுகிறேன். இவ்வளவே வேறுபாடு.
இதே அணுகுமுறைதான் சுந்தர ராமசாமி, ஞானி ஆகியோரிடமும் எனக்கு இருந்தது. நித்யா? அது வேறுவகை உறவு. அங்கே கருத்தாடல் என்பதே இல்லை. ஆகவே விமர்சன அணுகுமுறையும் இல்லை. அங்கே அறிதலே இல்லை, அது முற்றிலும் வேறுவகை தொடர்பு.
நம் சூழலில் கருத்துச் செயல்பாடுகளுக்குப் பழகியவர்கள் மிக அரிது. பெரும்பாலானவர்கள் அறிந்தது கட்சியரசியல், சாதியரசியல், மத அரசியல் மட்டுமே. அதில் தரப்பெடுத்து முழுமையாக ஆதரிப்பது, எதிர்த்தரப்பு எனப்படுவதை முழுமையாக எதிர்ப்பது. அந்த எதிர்த்தரப்பு என்பதுகூட தன் தரப்பின் ஒட்டுமொத்தத்தால் எடுக்கப்பட்டதாக இருக்கும், தனிப்பட்டமுறையில் உருவாக்கிக்கொண்டதாக இருக்காது. இந்த வழிபாடு, வசைபாடலும் ஒருவகை கருத்துச்செயல்பாடு என அவர்களால் நம்பப்படுகிறது. அது கும்பல் மனநிலை மட்டுமே.
சென்ற பத்தாண்டுகளுக்கு முன் திமுகவினர் இடதுசாரிகளை எப்படி வசைபாடினர், இடதுசாரியான லீலாவதி எப்படி கொல்லப்பட்டார் என்றெல்லாம் தெரிந்தால் இன்றைய திமுகவின் இடதுசாரி ஆதரவு ஆச்சரியமூட்டும். இடதுசாரிகள் லீலாவதியை மறந்தது மேலும் ஆச்சரியமூட்டும். ஆச்சரியப்படவேண்டியதில்லை, அதுதான் கும்பல் மனநிலை. நாளை அவர்கள் ஒருவரை ஒருவர் பல்லாலும் நகத்தாலும் கிழிக்கவும்கூடும்.
அவர்களுக்கு ஏற்பும் மறுப்புமான அறிவார்ந்த அணுகுமுறை புரிவதில்லை. ‘நீ எங்காளா, எதிரியா, சொல்லு’ என்கிறார்கள். இது அறிவியக்கத்தில் செயல்படும் எவருக்கும் பெரிய சிக்கல். இதை ஜே.ஜே.சில குறிப்புகளில் சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார். பொதுமக்களுக்கு உண்மையின் சிக்கல், அதை அறிவதன் வழிகள் புரிவதில்லை. ‘ஒன்றைச் சொல்லு’ என்கிறார்கள். ஒன்றை மட்டும் ஓங்கிச்சொல்பவர்களை ஏற்கிறார்கள் என்கிறார் சுந்தர ராமசாமி.
முப்பதாண்டுகளாக என் இலக்கியவிமர்சனமும் இப்படி ஏற்பு-மறுப்பு தர்க்கம் கொண்டதுதான். ஆகவே ஒருவரை நான் போற்றுகிறேனா தூற்றுகிறேனா என தெரியாமல் எளியவாசகர்கள் குழம்பி வசைபாடியதுண்டு. போற்றல் தூற்றல் என் வழி அல்ல, அறியமுயல்தலே என் வழி. பின்தொடரும் நிழலின் குரல் நாவல் வெளிவந்தபோது சிற்றிதழ் சார்ந்த எழுத்தாளர்களே அந்நாவல் இடதுசாரி எதிர்ப்பு இடதுசாரி ஆதரவு இரண்டையும் சம அளவில் சொல்லி குழப்பிய படைப்பு என சொன்னார்கள்.
(பின்னாளில் எளிய அறிவுத்தளம் கொண்ட மார்க்சியச் சார்பாளர்கள் அதிலுள்ள மார்க்ஸிய ஆதரவுப் பேச்சுகளை அப்படியே விட்டுவிட்டு, ரஷ்ய மார்க்சியம் மீதான விமர்சனங்களை அப்படியே எடுத்துக்கொண்டு, அதை மார்க்ஸிய எதிர்ப்பு நாவல் என வகுத்துக்கொண்டு நிம்மதி அடைந்து என்னை வசைபாடலாயினர். ‘நீ ஒன்றை மட்டும் சொல்லாவிட்டாலென்ன, நாங்கள் ஒன்றைத்தான் எடுத்துக்கொள்வோம்’ என்னும் நிலைபாடு. அதுதான் அவர்களால் முடியும்.)
மு.க. மறைந்தபோது நான் அஞ்சலிக் குறிப்பு எழுதவில்லை. மு.கவின் ஆதரவாளர்களும் என் நெருக்கமான நண்பர்களுமான பலர் அதைப்பற்றி கேட்டார்கள். நான் சொன்னேன், எனக்கு மிக நெருக்கமான தமிழ்ப் பிரபலங்கள் பலர் மறைந்தபோது நான் அஞ்சலி எழுதவில்லை. ஏனென்றால் இங்கே நிகழும் அந்த ’அய்யோ அம்மா’ கூச்சல்கள் மேல் ஒவ்வாமை உண்டு எனக்கு. அந்த கூட்டு மிகையுணர்ச்சிகள் மீதான ஒவ்வாமையே என்னை எழுத்தாளனாக ஆக்குகிறது. அதில் சேராமலிருக்கும்வரைத்தான் இச்சமூகம் பற்றி என்னிடம் விமர்சனம் இருக்கும். அதுவே நவீன இலக்கியத்தின் அடிப்படை. ’எழுந்துவா தலைவா!’ எல்லாம் எனக்குச் சரிப்படாது. சம்பிரதாய அஞ்சலி என்பது எழுத்தாளன் செய்யக்கூடாதது. அது அவனை வெற்றுச்சொற்கள் சொல்பவனாக ஆக்கிவிடும்.
மு.க என் வரையில் ஓர் எழுத்தாளர். ஓர் எழுத்தாளருக்கான அஞ்சலி என்பது அவருடைய பங்களிப்பை ஒட்டுமொத்தமாக மதிப்பிடுவதே . அதுவே சுந்தர ராமசாமி, க.நா.சு, புதுமைப்பித்தன் என இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கும் அறிவியக்கத்தின் வழி. இது இங்கே மிகமிகச் சிறு வட்டத்தில் மட்டுமே அந்த நுண்ணுணர்வும் தர்க்கநோக்கும் உள்ளது. வெளியே பெருந்திரள் அதற்கு நேர் எதிரானது. ஆகவே அந்த அணுகுமுறை ஒவ்வொரு முறையும் சீற்றத்துடனேயே பொதுச்சூழலால் எதிர்கொள்ளப்படுகிறது. திருமதி பர்வீன் சுல்தானா பேட்டியில் கேள்வியே அதன் அடிப்படையில்தான் என்பதைக் காணலாம் ‘ஏன் விமர்சிக்கிறீர்கள்?’ என்றுதான் திரும்பத் திரும்ப சாமானியன் கேட்டுக்கொண்டிருக்கிறான்.
இன்று சட்டென்று ஒரு புதுச்சூழல் உருவாகியிருக்கிறது. புதுமைப்பித்தன் முதல் சுந்தர ராமசாமி வரையிலான நவீன அறிவியக்கம் சந்திக்காதது அது. அவர்கள் தங்கள் தர்க்கபூர்வமான, மிகையுணர்ச்சி மறுப்பு கொண்ட அணுகுமுறையுடன் தங்கள் வாசகர்களின் வட்டத்திற்குள் மட்டும் செயல்பட்டனர். இன்று இணையம் சம்பந்தமே இல்லாத பெருந்திரள் நவீனஇலக்கியவாதிகளை ஓரிரு வரிகள் வழியாக மேலோட்டமாக அறிந்துகொள்ள வழிவகுக்கிறது. அரசியல்வாதிகள் எழுத்தாளர்களை பெயர் தெரிந்துவைக்க வாய்ப்பமைக்கிறது. அரசியல் காழ்ப்பாளர்கள் வசைபாட வாய்ப்பளிக்கிறது.
எழுத்தாளனைக் கவனிக்கும் இந்த மூர்க்கப்பெருந்திரளிடம் அறிவியக்கத்தின் அணுகுமுறையை நாம் கொண்டுசெல்ல முடியாது. ஏனென்றால் அந்த திரள் பற்றுகள், மிகையுணர்ச்சிகள், கும்பல் மனநிலை ஆகியவற்றால் இயக்கப்படுவது. அதிலிருந்து கடும் சீற்றம், எதிர்ப்பு ஆகியவையே எழுந்து வரும். வெறுப்புகளும் வன்முறைத் தாக்குதல்களும் வரும். எழுத்தாளன் தனிமனிதன், அவன் இந்த கூட்டத்தின் எதிர்ப்பை, அமைப்புசார்ந்த தாக்குதலை எதிர்கொள்ள முடியாது.
கும்பல் அணுகுமுறை மூர்க்கமான ஒற்றைப்படைத்தன்மை கொண்டது. ’என்னைப்போல் நீயும் இரு, இல்லையேல் நீ என் எதிரி’ என அது சொல்கிறது. இல்லையேல் அழிக்க முயல்கிறது. ஆனாலும் வேறு வழியில்லை. சிலரேனும் இதைச் சொல்லிக்கொண்டிருக்கத்தான் வேண்டும். இந்தியாவின் ஜனநாயகத்தை நம்பி சொல்ல வேண்டியதுதான்.
இதன் இன்னொரு பக்கம் உள்ளது. அறிவியக்கத்தின் மேல் பெருந்திரளின், அமைப்புகளின் பார்வை விழுந்ததுமே இங்குள்ள சிலர் அதிலுள்ள லாபங்களை கணக்கிட்டுக்கொள்கிறார்கள். அதுவரை பேசிவந்த அனைத்தையும் அப்படியே உதறிவிட்டு , அதிகாரம் நோக்கிச் சென்று அப்படியே கரைந்துவிட முயல்கிறார்கள். அதன் நலன்களை அறுவடை செய்ய முயல்கிறார்கள். நேற்றுவரை அவர்கள் பேசிய நவீன இலக்கிய அணுகுமுறையை அப்படியே எந்த விளக்கமும் இல்லாமல் சட்டைபோல கழற்றிவீசிவிட்டு மேலே பாய்கிறார்கள். கும்பல் மனநிலையை கொள்கையாக ஏற்றுக்கொண்டு, கும்பலைவிட கும்பல்மனநிலையை வெளிப்படுத்துகிறார்கள். அதற்குரிய கொள்கைகள், கோட்பாடுகள், வரலாற்றுப்பார்வை எல்லாவற்றையும் சமைத்துக் கொள்கிறார்கள்
ஆகவே கும்பலின் பார்வையில் தங்கள் தரப்பை ஏற்ற ‘நல்ல’ அறிவுஜீவி – ஏற்காத ’கெட்ட’ அறிவுஜீவி என ஒரு இருமை உருவாகிவிடுகிறது. அந்த நல்ல அறிவுஜீவி அவனுடைய நலனுக்காக கும்பலுக்கு மற்ற அறிவியக்கத்தை திரிக்க, ஏளனம் செய்ய முன்மாதிரிகளையும் உருவாக்கி அளிக்கிறான். இந்த அறிவுஜீவிகள் செய்வது கும்பலைப்போல இயல்பான உணர்ச்சிகளால் அல்ல, திட்டமிட்டு தர்க்கபூர்வமாக தன்னலநோக்குடன். ஆகவே இவர்களின் போற்றிப்பாடல்களும் கும்பிடுகளும் உப்பைவிட உப்புக்கரிப்பவை.
ஆகவேதான் ’தெற்கிலிருந்து சூரியன்’, ’உலகத்துக்கோர் ஒளி’ என்றெல்லாம் எழும் மிகையுணர்ச்சிகள், வழிபாட்டுப் பாடல்கள் அறிவியக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு முற்றிலும் ஒவ்வாதவையாக உள்ளன. மு.க பற்றி தமிழ் இந்து வெளியிட்ட நூலுக்கான என் ஒவ்வாமை என்பது எழுபதாண்டுகளுக்கு முன்பு ராஜாஜி பற்றி புதுமைப்பித்தன் வெளிப்படுத்தியதுதான். அதன் மரபு என்றுமிருக்கும்.
மு.க மறைந்தபோது நான் சொன்னேன். ‘இந்த டமாரக்கூச்சல்களில் எனக்கு ஆர்வமில்லை. ஓர் எழுத்தாளராக அவரை அணுகி விமர்சகனாக என் பார்வையை முன்வைத்து என்றாவது எழுதுகிறேன்’. அதன்பின் ஒரு நண்பர் கூடுகையில் அவரைப்பற்றிய என் மதிப்பீட்டின் ஒரு வரைகோட்டுச் சித்திரத்தை அளித்தேன். அதையே எழுதலாம் என்றனர். எழுதலாம். ஆனால் அது வரிக்கு வரி திரிக்கப்படும். அதையும் எண்ணியே எழுதவேண்டும்.
மு.க மீது மதிப்பில்லை என நான் என்றுமே சொன்னதில்லை. அவர் தரப்பு என்னை வசைபாடிய காலங்களிலும் சொன்னதில்லை. நான் அவரை அரசியல்ரீதியாக அவ்வளவு தீவிரமாக மதிப்பிடவில்லை. ஏனென்றால் எனக்கு அரசியல் அந்த அளவுக்கு முக்கியம் அல்ல. ஒருவரின் முழுப்பங்களிப்பையும் கருத்தில்கொண்டு மதிப்பீடுகளை உருவாக்குவதற்கு எனக்கு பொழுதுமில்லை, ஆர்வமும் இல்லை. அவ்வப்போது சில கசப்புகளும் கோபங்களும் வரும், மறைந்தும் போகும். ஏனென்றால் என்னுடையது பற்றுறுதியும் நிலைபாடும் கொண்ட அரசியல் அல்ல. அதில் எனக்கு நம்பிக்கையில்லை. அன்றாடம் சார்ந்த சாமானியனின் அரசியலே என்னுடையது
நான் மு.கவின் அரசியலின் ஆதரவாளனாக என்றுமே இருந்ததில்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை. 2009ல் ஆஸ்திரேலியா சென்றபோது இலங்கை அரசியலின் உட்பக்கங்களை அறிந்தவர்களிடமிருந்து அவர் ஈழப்பேரழிவை முன்னுணர்ந்து அதை தடுக்க எடுத்த முயற்சிகளை அறிந்து மதிப்பு கொண்டேன். ஆனால் அதைச் சொன்னவர்களே அதை பொதுவில் பதிவுசெய்யாதபோது நான் சொல்வதற்கொன்றுமில்லை.
மு.க எழுத்தாளனே அல்ல என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. நான் சொன்னவை வரிக்கு வரி பதிவாகி அப்படியே எவருக்கும் கிடைக்கும்படி உள்ளன. இருந்தும் திட்டமிட்ட திரிபுகள், ஆனால் அந்த அபத்தமும் ஆபாசமும் இங்கே அரசியல்சூழலில் என்றுமுள்ளதுதான். நான் மு.கவை நவீன இலக்கியவாதியாக ஏற்கவியலாது என்று மட்டுமே சொன்னேன். அன்று மேடையில் அவரை நவீன இலக்கியத்தின் தலைமகன் என்ற அளவில் போற்றிப்புகழ்ந்த (கலாப்ரியா, வண்ணதாசன், ஞானக்கூத்தன் போன்ற) சிலருக்கான பதிலாக அதைச் சொன்னேன். அவர்கள் சொன்னால் மட்டும் நவீன இலக்கியச் சூழல் தன் நீண்ட விமர்சன விவாதம் வழியாக உருவாக்கிக் கொண்டிருக்கும் அந்த மதிப்பீடு மாறிவிடாது என்றேன்.
மனிதர்கள் மாறலாம், வழிவழியாக வாசகர்களும் விமர்சகர்களும் வந்துகொண்டிருப்பார்கள், மதிப்பீடுகள் வளர்ந்து சென்றுகொண்டுதான் இருக்கும் என்றேன். சிற்றிதழ் சார்ந்த நவீன இலக்கிய மரபின் மதிப்பீட்டின் பிரதிநிதியாக நின்று என் கருத்தை அன்று முன்வைத்தேன். இன்றும் அதையே சொல்கிறேன். மு.க நவீன எழுத்தாளர் அல்ல, அவர் எழுத்துக்கள் நவீன இலக்கிய அளவுகோலில் இலக்கிய ஆக்கங்கள் அல்ல, அவை பிரச்சார எழுத்துக்கள் மட்டுமே. அன்று என்னை ஆதரித்த நவீன எழுத்தாளர்களே மிகுதி என்றாலும் வெளிப்படையாக என்னுடன் உறுதியாக நிலைகொண்டவர்கள் மனுஷ்யபுத்திரனும், எம்.வேதசகாயகுமாரும். அன்று மனுஷ்யபுத்திரன் மிகக்கடுமையான சொற்களால் மு.கவுக்கு எதிர்வினையாற்றியிருந்தார்.
மு.க வை பற்றி 2003ல் வைத்த விமர்சனம் என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல, தமிழ் நவீன இலக்கியச் சூழலில் இன்றுவரை அவர் எழுத்தைப்பற்றி பொதுவாக உள்ள மதிப்பீடுதான் அது. மேலோட்டமாக இலக்கிய உரையாடல்களை கவனிப்பவர்களுக்கே அது தெரியும். இன்றுவரை தமிழிலக்கிய விவாதங்களில் மு.க எங்கே எப்படி மேற்கோளாக்கப் பட்டிருக்கிறார்? கட்சிசார்ந்தவர்கள் அடிக்கும் மேளம் அன்றி அவரை எவர் இலக்கியவாதியாக முன்வைத்திருக்கிறார்கள்? அடுத்த தலைமுறையில் எந்த எழுத்தாளர் அவரை முன்னுதாரணமாகக் கொண்டிருக்கிறார்? அவருடைய எந்த நூல் தொடர்வாசிப்பில் உள்ளது? கட்சிசார்புடன் கூச்சலிட்டால் அவரை நிலைநிறுத்திவிட முடியுமா என்ன? இருபதாண்டுகள் ஆகப்போகின்றன, அவருடைய இலக்கியம் பற்றி பொருட்படுத்தும்படி எந்த இலக்கிய விமர்சனமாவது எழுதப்பட்டுள்ளதா? அரசியல் பிழைப்பாத்மாக்கள் நாலுபேர் கூடி போற்றிப் பாமாலைகளை எழுதினால் மட்டும் அதற்கு மதிப்பு வந்துவிடுமா என்ன?
ஏனென்றால் அது பிரச்சார எழுத்து. எந்த பிரச்சார எழுத்தும் அதற்குரிய இலக்கு கொண்டது. அதற்குரிய பேசுதளம், அதற்குரிய காலம் கொண்டது. அதற்கு வெளியே அவ்வெழுத்து நிலைகொள்ளாது. என்றென்றுக்குமான வாழ்க்கைச்சிக்கல்களை, தத்துவக்கேள்விகளை, கவித்துவங்களை, மெய்நிலைகளைச் சுட்டும் எழுத்துக்களே இலக்கியங்கள். ஆகவே அவை காலம் கடந்து என்றும் புதியவை என நின்றுள்ளன. புதுமைப்பித்தன் வாழ்கிறான், வ.ரா வெறுமே இலக்கியவரலாற்றில் நீடிக்கிறார். இதுவே வேறுபாடு. இது கண்முன் மலைபோல அப்பட்டமான உண்மை. இதை அறியாத எவருக்கும் இலக்கிய அடிப்படையே புரியவில்லை என்றுதான் பொருள். வார்த்தைக் கழைக்கூத்துக்களை நிகழ்த்தி இந்த உண்மையை நல்ல வாசகன் முன் மறைக்க முடியாது.
மு.க.வை நான் ஒரு நவீன இலக்கியவாதியாக எண்ணவில்லை. காந்திய இயக்கம் முதல் இடதுசாரி இயக்கம், திராவிட இயக்கம் வரை நீளும் பிரச்சார எழுத்தின் ஓர் ஆளுமையாகவே காண்கிறேன். தமிழ் சமூகஅரசியல் களத்தில் பிரச்சார எழுத்தாளர்களின் பங்களிப்பு முக்கியமானது. இதை மு.க பற்றி 2003ல் எழுந்த அந்த விவாதத்திலேயே சொல்லியிருக்கிறேன். அன்றும் அவரை வ.ராவுடன் ஒப்பிட்டே சொல்லியிருந்தேன். மு.கவும் ‘அக்ரஹாரத்து அதிசயப்பிறவி வ.ரா எழுதியது எப்படி இலக்கியமல்லாமலாகும்?’ என்றுதான் சீறியிருந்தார். (அக்காலகட்டத்தில் ‘வ.ராவை சொன்னதுதான் இவருக்கு கோபம்னு தோணுதே’ என்று சுந்தர ராமசாமி புன்னகைத்தது நினைவிலிருக்கிறது.)
பிரச்சார எழுத்து மரபில் வ.வே.சு. ஐயர், வ.ரா, கு.ராஜவேலு, நாரண துரைக்கண்ணன் என தேசிய- காந்தியவாதிகளின் ஒரு வரிசை உண்டு. தொ.மு.சி.ரகுநாதன், டி.செல்வராஜ், செ.கணேசலிங்கன், கு.சின்னப்ப பாரதி, கே.முத்தையா, கே.டானியல், மேலாண்மை பொன்னுச்சாமி என ஓர் இடதுசாரி வரிசை உண்டு. மறைமலையடிகள், பாரதிதாசன், மூவாலூர் ராமாமிர்தத்தம்மையார், சி.என்.அண்ணாத்துரை, மு.வரதராசனார் என இன்னொரு தமிழியக்க- திராவிட இயக்க வரிசை உண்டு. மூன்றாவது வரிசையைச் சேர்ந்தவர் மு.க. அவர் நம்பியதை பிரச்சாரம் செய்தவர். அவருடைய அரசியலை மட்டும் முன்வைத்தவர். அதன்பொருட்டு புனைவை உருவாக்கியவர். உலக அளவில் அரசியல்வாதிகளான எழுத்தாளர்கள் பெரும்பாலானவர்கள் அப்படித்தான்.
மு.கவின் எழுத்தின் காலகட்டங்கள் மூன்று. நாடகத்தின் அழகியல் கொண்ட கதைகளாலான முதற்காலகட்டம். உதாரணமான படைப்பு வெள்ளிக்கிழமை. விரிந்த தமிழ்த்தேசியப் பார்வை கொண்ட இரண்டாவது காலகட்டம். ரோமாபுரிப் பாண்டியன் உதாரணம். தமிழ்த்தேசியத்தின் உள்மரபுகளை கவனம் கொண்டது மூன்றாம் காலகட்டம், உதாரணம் பொன்னர் சங்கர். மூன்றாம் காலகட்டத்தின் இன்னொரு வடிவமே ராமானுஜர். ராமானுஜர் அவருடைய ‘சமரசம்’ அல்ல. தமிழ்ப்பண்பாடு என்பதன் உட்கூறுகள் எல்லாவற்றையும் இணைத்து ஒன்றாக்கிக் கொள்ளமுடியுமா என அவர் முயன்றதுதான்.
இந்தப் பகுப்புடன் அவருடைய ஒட்டுமொத்த ஆக்கங்களையும் கருத்தில்கொண்டு ‘அய்யய்யோ, அடாடா’ எல்லாம் இல்லாமல், சுயநலம் சார்ந்த நோக்கங்கள் இல்லாமல், இலக்கியப்பார்வையுடன் எழுதப்படும் இலக்கிய ஆய்வுகளே ஓர் எழுத்தாளராக மு.கவுக்கு செய்யப்படும் மெய்யான அஞ்சலி. ஆனால் அவர் மறைந்து இத்தனை ஆண்டுகளாகியும் அப்படி ஒன்று எழுதப்படவில்லை. ஒரு சிறு குறிப்புகூட அவரை ஓர் எழுத்தாளராக அணுகி எழுதப்படவில்லை. அவர் எழுதியவற்றை அவரை கொண்டாடுபவர்கள் எவரேனும் படித்திருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகளே இல்லை. உண்மையில் வாழ்நாளெல்லாம் எழுத்தாளராக தன்னை முன்வைத்த ஒருவருக்கு இழைக்கப்படும் அநீதி, அவமதிப்பு என்பது இதுதான்.
எழுதும் எண்ணம் எனக்கு உண்டு. ஏனென்றால் நான் அவ்வளவையும் வாசித்திருக்கிறேன். நினைவிலும் வைத்திருக்கிறேன். தனியுரையாடல்களில் பேசிய முன்வரைவும் கையில் உள்ளது. அப்போது வெண்முரசு எழுதிக்கொண்டிருந்தமையால் எழுதவில்லை. இனி எழுதலாம். ஆனால் அதையும் படிக்காமல் ஒற்றைவரிகளை எடுத்துக்கொண்டு மூர்க்கமான கூச்சல்களால் சூழலை நிறைக்கும் கும்பல் ஒரு தயக்கத்தை உருவாக்குகிறது. அந்தக் கும்பல்தான் மு.கவின் தீயூழ். அவரைப் பற்றி எந்த பேச்சும் எழாமலாக்கிவிடுவார்கள். ஒப்புக்கு புகழ்மாலையுடன் அவரை அப்படியே மறக்கடிக்க வைத்துவிடுவார்கள்.
இன்று மனுஷ்யபுத்திரனின் அவதூறுக்கு கீழே வந்து கூச்சலிடும் கும்பலைப் பாருங்கள். அவர்களிடம் என்ன பேசுவது? ஒரு சிறுசாரார் அதிகார விழைவுகொண்ட மோசடிக்காரர்கள். எஞ்சியவர்கள் ஒன்றுமறியாத பிள்ளைகள். அவர்களுக்கு நான் ஆரம்பப்பாடம் தொடங்கவேண்டும். முதல்வகையினர் எனக்கு எந்தவகையிலும் பொருட்டல்ல, இரண்டாம் வகையினருக்குச் செலவழிக்க அதிக நேரமில்லை.
*
இப்போது திமுக ஆட்சிக்கு வந்ததும் கடந்தகாலத்தில் திமுகவை ஆதரித்து கோஷமிட்ட ‘டிராக் ரெக்கார்ட்’ ஐ கையில் வைத்துக்கொண்டு எதிர்பார்ப்புடன் இருப்பவர்களுக்கு பதற்றம் இருக்கிறது. மு.க. அல்லது திமுக பற்றி எவரேனும் ஏதேனும் சொல்லிவிட்டால் உடனே திருவிளையாடல் தருமி மாதிரி ஒரு பதற்றம், இவனும் பங்குக்கு வருகிறானா என்று. சந்தேகமே வேண்டாம் நண்பர்களே, இந்த அரசிடமிருந்தல்ல எந்த அரசிடமிருந்தும் எதையும், ஒரு குன்றிமணிகூட, பெற்றுக்கொள்ளப் போவதில்லை. நீங்களே முண்டியடிக்கலாம், சிந்தாமல் சிதறாமல் பெற்றுக்கொள்ளலாம்.
மு.க தரப்பின் நல்லெண்ணத்தைப் பெறுவது நோக்கமெனில் நான் அதை அவர் இருந்தபோதே செய்திருக்கலாம், அவரிடமே பெற்றிருக்கலாம். அதற்கு எத்தனை வாய்ப்புகள் வந்தன என அறிந்த பலர் இன்றும் உள்ளனர்.
என்னுடையது இலக்கிய அணுகுமுறைதான். நான் செயல்படும் அறிவுக்களத்தை எனக்குரிய அழகியல் சார்ந்த அளவுகோல்களுடன் தொடர்ந்து வகுத்துக்கொண்டே இருக்கிறேன். அது என் செயல்பாடுகளுக்கும் நான் உருவாக்க நினைக்கும் அறிவியக்கத் தொடர்ச்சிக்கும் இன்றியமையாதது.
ஜெ