மு.இளங்கோவன்

முப்பதாண்டுகளுக்கு முன் சுந்தர ராமசாமியிடம் பேசும்போது அவர் அடிக்கடிச் சொல்லும் குற்றச்சாட்டு கல்வித்துறையில் நவீன இலக்கியத்திற்கான இடமே இல்லாமல் இருப்பதைப் பற்றி. அன்று புதுமைப்பித்தன் பற்றிய ஓர் ஆய்வை பல்கலைக் கழகம் ஏற்கவே போராடவேண்டியிருந்தது. பேராசிரியர் ஜேசுதாசன் அப்போராட்டத்தின் களவீரர்.

முப்பதாண்டுகளுக்குப் பின் இன்று கல்வித்துறை வட்டாரங்களில் தமிழறிஞர்கள் இல்லாமலாகிக் கொண்டிருக்கிறார்கள். ப.சரவணன், ஆறுமுகத்தமிழன் என ஓரிரு பெயர்களே உடனடியாக நினைவுக்கு வருகின்றன. ஏனென்றால் பழந்தமிழ் கற்பது கடினம். நீண்டகால உழைப்பின்றி அதில் முறையாக எதையும் செய்துவிட முடியாது.

இன்று தமிழறிஞர்களின் ஒரு தலைமுறையே மறைந்துகொண்டிருக்கிறது. அலை பின்வாங்குவதுபோல ஒரு யுகம் மறைகிறது. அவர்களை ஆவணப்படுத்துவது, சென்று சந்தித்து உரையாடலை பதிவுசெய்வது என்பது இக்காலகட்டத்திற்குரிய பெரும்பணி.

நண்பர் மு.இளங்கோவன் தன் தனிப்பட்ட ஆர்வத்தால் அப்பணியைச் செய்துகொண்டிருக்கிறார். அவருடைய இணையப்பக்கம் ஒரு சிறு கலைக்களஞ்சியம் போல் இருக்கிறது. மறக்கப்பட்டுவிட்ட தமிழறிஞர்களை அங்கே முறையாகப் பதிவுசெய்கிறார்.

இளங்கோவன் 2009 ல் என்னை வந்து சந்தித்தார். இங்கே ஒரு சுற்றுப்பயணத்தில் அப்போது இருந்தார். அவருடைய மாணவி ஒருவர் என்னுடைய கொற்றவை நாவல் பற்றி முனைவர் பட்ட ஆய்வு செய்திருக்கிறார்.

மு.இளங்கோவனுடன் 2009

கங்கைகொண்ட சோழபுரம் சென்றுவந்தபோது இளங்கோவன் ஒரு மின்னஞ்சல் அனுப்பி அதற்கு அருகே உள்ள இடைக்கட்டு என்னும் ஊர்தான் அவருடையது என்று தெரிவித்தார். அங்கே 1967ல் சி. முருகேசன் மு. அசோதை அம்மாள் தம்பதிகளுக்கு பிறந்த இளங்கோவன் மேல்நிலைக் கல்விக்குப்பின் வறுமையால் விவசாய வேலைக்குச் சென்றார். புலவர் ந.சுந்தரேசன் என்னும் ஆசிரியர் அவருடைய வாசிப்பார்வத்தை கண்டு திருப்பனந்தாள் காசி திருமடத்திற்கு ஒரு பரிந்துரைக் கடிதம் கொடுக்க அங்குசென்று அவர்களின் உதவியுடன் தமிழிலக்கியத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பயின்றார் தமிழ்க்கல்வியில் கொண்ட ஆர்வம் காரணமாக கல்லூரியில் முதலிடம் பெற்றார்

புதுவைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் க.ப. அறவாணன் தலைமையில் இயங்கிய தமிழியல்துறையில் “மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து எம்.ஃபில் பட்டம் பெற்றார். திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக நிதியுதவியுடன் முனைவர்பட்ட ஆய்வை  நிறைவு செய்தார். முனைவர் பட்டத்திற்கு இவர் “பாரதிதாசன் பரம்பரை’ என்ற தலைப்பில் ஆய்வு செய்தார்.

மு.இளங்கோவனின் பணி ஆவணங்களை பார்க்கையில் சுவாரசியமாக இருக்கிறது. 1998 – இல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இசையறிஞர் வீ.ப.கா. சுந்தரம் அவர்களின் தமிழிசைக் கலைக்களஞ்சியம் எனும் நூல் எழு அவரின் உதவியாளராக ஓராண்டு பணிபுரிந்து களஞ்சியத்தின் நான்காம் தொகுதி வெளிவர உதவியிருக்கிறார்.  2005 இல் பாண்டிச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் இணைந்தார்.

சென்ற தலைமுறை தமிழறிஞர்களின் தமிழேவாழ்வு என்னும் தீவிரம் கொண்டவர் இளங்கோவன். இளங்கோவனின் மனைவியின் பெயர் இ.பொன்மொழி. குழந்தைகளின் பெயர் கானல்வரி, தமிழ்க்குடிமகன், கண்ணகி. எல்லா வகையிலும் மரபிலக்கியம் ஊறிய உள்ளம் அவருடையது. மாணவப்பருவத்திலேயே மாணவராற்றுப்படை, அச்சக ஆற்றுப்படை உள்ளிட்ட மரபு இலக்கியங்களை எழுதி வெளியிட்டார். அதற்காக திருப்பனந்தாள் ஆதீனத்தின் பரிசை பெற்றிருக்கிறார்.

பழைய பதிப்பியக்கத்தின் தொடர்ச்சி பெரும்பாலான தமிழறிஞர்களிடம் உண்டு. கவிஞர் சுரதா, நாரா.நாச்சியப்பன், சாமி. பழநியப்பன் உள்ளிட்ட பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களிடம் பழகி, திராவிட இயக்க இதழான பொன்னியை ஆராய்ந்து பொன்னியின் ஆசிரியவுரைகள், பொன்னி பாரதிதாசன் பரம்பரை, பொன்னி சிறுகதைகள் உள்ளிட்ட நூல்களை பதிப்பித்திருக்கிறார்.

மு.இளங்கோவன், எம்.வேதசகாயகுமார், செந்தீ நடராசன்

ஆனால் இரண்டு துறைகளில் இளங்கோவன் தமிழறிஞர்களின் எல்லைகளை கடந்தவர். ஒன்று, நாட்டாரிலக்கியம். இன்னொன்று இணையம். நாட்டார் குழந்தைப்பாடல்கள் உட்பட ஏராளமான வாய்மொழி இலக்கியங்களை சேகரித்திருக்கிறார். இணையம் வழிக் கல்வியை பரப்பும்பொருட்டு கல்லூரிகள் தோறும் பயிற்சி வகுப்புகள் நடத்தியிருக்கிறார். இணையம் கற்போம் என்ற நூல் கோவை பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளில் பாடமாக உள்ளது. தமிழ் நாட்டுப்புறக் கலைகள் என்னும் தலைப்பில் இவர் எழுதிய பாட நூல் சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் பாடமாக உள்ளது.

நான் மு. இளங்கோவனின் பணிகளில் முதன்மையாக நினைப்பது அவர் தொடர்ச்சியாக தமிழறிஞர்களை ஆவணப்படுத்துவதைத் தான். நான் தமிழியக்கத்தில் தீவிர ஆர்வம் கொண்டவன். பெரும்பாலும் எல்லா தமிழறிஞர்களையும் தேடி வாசித்திருப்பவன். ஆனால் மு.இளங்கோவனின் பக்கத்தில் நான் கேள்விப்பட்டே இராத தமிழறிஞர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். தமிழறிஞர்களின் வாழ்வு பணிகளையும் குறித்து ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதினார்.பலநூறு புகைப்படங்களை இணையத்தில் பதிவுசெய்திருக்கிறார் அண்மையில்  விபுலானந்தர் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக்கியிருக்கிறார். தொடர்ச்சியாக தமிழறிஞர்களைத் தேடி பயணம் செய்துகொண்டே இருக்கிறார்.

மு.இளங்கோவனைப் போன்றவர்கள் நம் சென்றகாலத்தில் திகழ்ந்த மாபெரும் அறிவியக்கம் ஒன்றின் இன்றைய தொடர்ச்சிகள். அவர்கள் ஒவ்வொருவரையும் கவனப்படுத்தி, அந்த வரிசை தழைக்கவேண்டியவற்றை செய்யவேண்டிய சூழல் இன்று உருவாகியிருக்கிறது.

மு.இளங்கோவன் இணையப்பக்கம்

https://muelangovan.blogspot.com.


மு.இளங்கோவன் ஜெயமோகனைச் சந்தித்தேன்

முந்தைய கட்டுரைஅண்ணாமலையின் வாசிப்பு- விவாதம்
அடுத்த கட்டுரைஇன்று நெல்லையில்…