வெண்முரசு வாசிப்பவர்கள்…

அன்புள்ள ஜெ

நான் இன்று தொழில் சம்பந்தமாக தொழில் அதிபர் ஒருவரை சந்தித்தேன். அவருடைய அறையில் எனக்கு மிக அணுக்கமான கோவையின ஒரு பிரமுகரின் படம் இருந்தது அதிலிருந்து ஆரம்பித்த நட்பான பேச்சு நிறைய தளங்களில் நீண்டது. குறிப்பாக வாசிப்பு என்று வந்தபோது அவர் என்னிடம் சொன்னது நான் நிறைய பேரை வாசிப்பேன் என்றார். எப்போதும் என்னிடம் தொக்கி நிற்கும் கேள்வி வழக்கம் போலவே நீங்கள் ஜெயமோகனை வாசிப்பது உண்டா என்று.

அதற்கு அவர் மாடன் மோட்சம் கதையின் ஒரு லிங்க் எங்கேயோ பார்த்து அந்தக் கதையை வாசித்த பின் உங்களிடம் வந்தடைந்தார் என்று சொன்னார். அவர் அது ஒரு கிளாசிக் கதை என ஆரம்பித்தார். இதில் மிக ஆச்சரியம் என்னவென்றால் அவருடைய அறை, அவருடைய தொழிற்சாலை அவர் தோற்றம் அவருடைய பேச்சு எங்கேயும் ஒரு இலக்கிய வாசிப்புக்கு உண்டான ஒரு சிறு முகாந்திரமும் இல்லாமல் பேசிய சில நொடிகளில் உங்களுடைய வழக்கமான வாசகர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் மூலம் சட்டென மொத்த சூழலையும் மாற்றினார்.

வெண்முரசு போன்ற ஒரு மாபெரும் நாவலை இரண்டு முறை படித்து விட்டேன் ஒருவரைப் பார்க்கும் பொழுது எனக்கு மிகுந்த பிரமிப்பு ஏற்பட்டது, எனக்குத் தெரிந்து இவ்வளவு பெரிய ஒரு வாசிப்பனுபவத்தை அவரைப் போன்ற வாசகருக்கு வேறு எந்த ஒரு எழுத்தாளனும் கொடுத்திருக்க முடியாது என்பது மட்டுமே நான் உணர முடிந்தது

மேலும் அவர் இன்றைய காந்தி படித்த உடன் ஒரு காந்தி படத்தை வீட்டில் வாங்கி கொண்டு வந்து மாட்டி அதற்குக் கீழே அந்த புத்தகத்தை வைத்தார் என்று கேட்டவுடன் நான் நெகிழ்ந்து கரைந்து போனேன்

ரொம்ப அபூர்வமாக நான் கண்ட ஒரு விஷயம் பல வாசகர்கள் தற்செயலாகத்தான் உங்களை வந்தடைகிறார்கள். நான் உணர்வது ஒன்றுதான், ஒரு சத்தியமான எழுத்து ஒரு தவம் அத்தகைய ஒரு தவம் அடைய வேண்டிய இடத்தை அடைந்தே தீரும்

சிலிர்ப்பான நெகிழ்வான அனுபவங்கள் குறைந்துபோன ஒரு காலகட்டத்தில் நெகிழ்ந்து கரைந்து போன ஒரு தருணம்

நன்றி

தங்கள் அன்புள்ள

S. நடராஜன்

கோவை

***

அன்புள்ள நடராஜன்

உண்மையில் மனநிறைவூட்டும் செய்தி அது. எழுத்து என்பது கைவிடு படை. கையில் இருந்து எழுந்தபின் தனக்கான வழியை தானே தேர்வது, தனக்கான வரலாற்றை தானே உருவாக்கிக்கொள்வது.

வெண்முரசு யாருக்கானது என்று என்னிடம் பலர் கேட்பதுண்டு. சாதாரணமான வாழ்க்கையில், பெரும்பாலான நேரத்தை வெறும் அரட்டைகளில் செலவழிப்பவர்கள், நேரமில்லை என்பார்கள். நான் அவர்களுக்குச் சொல்லும் பதில் நேரம் என்பது ஒரு பொருட்டே அல்ல என்பதே. நானறிந்தே பெருந்தொழிலில், பெரிய பதவிகளில் முழுநேரமும் உழைப்பவர்கள் வெண்முரசு படித்து முடித்திருக்கிறார்கள்.

ஏனென்றால் அதை வாசிக்கத் தேவையானது முனைப்பு, ஒருமுகப்பட்ட கவனம் ஆகியவை. ஒரு தொழிலின் மையவிசையாக இருந்து செயல்படுபவர் ஏற்கனவே முனைப்பும் கவனமும் கொண்டவர். அவருக்கு இது பெரிய விஷயம் அல்ல. வாசிக்கமுடியாதவர்கள் பெரும்பாலும் ஏதாவது மாதச்சம்பளத்தில் வழக்கமான வேலையை வழக்கம்போலச் செய்துகொண்டிருப்பவர்கள். எல்லா களங்களிலும் தளர்வான உள்ளம் கொண்டவர்கள்.

நான் சொல்வது இதுவே. சலிப்புற்றவர்கள் சலிப்பு நீங்க படிக்கவேண்டியது அல்ல வெண்முரசு. அது கூரிய உள்ளமும் தீவிரமும் கொண்டவர்களுக்குரியது

ஜெ

முந்தைய கட்டுரைஇன்று நெல்லையில்…
அடுத்த கட்டுரைஹிஜாபும் கல்வியும்- கடிதம்